Published:Updated:

நீங்களும் செய்யலாம்: ஹெர்பல் நாப்கின் தயாரிப்பு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நீங்களும் செய்யலாம்: ஹெர்பல் நாப்கின் தயாரிப்பு
நீங்களும் செய்யலாம்: ஹெர்பல் நாப்கின் தயாரிப்பு

சங்கரி

பிரீமியம் ஸ்டோரி

பெண்களுக்கு மாதாந்தர அவதி ஒருவகையான சித்ரவதை என்றால், அந்த நாள்களில் பயன்படுத்தும் நாப்கின்கள் தரும் அலர்ஜி அவதி அதைவிட மோசமான சித்ரவதை. அரிப்பில் தொடங்கி, சருமம் தடித்துப்போவது, சிவந்து போவது, எரிச்சல் என மாதவிடாய் முடிந்த பிறகும் சில நாள்களுக்கு நாப்கின்களின் பக்கவிளைவுகள் தொடரும். முற்றிலும் குணமாவதற்குள் அடுத்த மாதவிடாய் வந்துவிடும். இந்த அலர்ஜியிலிருந்து விடுபட ஆறுதலான யோசனை சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சுயதொழில்முனைவோர் சங்கரி.

நீங்களும் செய்யலாம்: ஹெர்பல் நாப்கின் தயாரிப்பு

``பி.காம் படிச்சிருக்கேன். 20 வருஷங்கள் ஒரு கம்பெனியில வேலை பார்த்தேன். பர்சனல் காரணங்களுக்காக அசிஸ்டென்ட் மேனேஜர் வேலையை ரிசைன் பண்ணினேன். ஒருமுறை கொடைக்கானல் போனபோது ஒரு நோட்டீஸ் போர்டில் எந்தெந்தப் பொருள்களெல்லாம் மக்காதுங்கிற பட்டியல் கண்களில் பட்டது. அதில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின் மக்கிப்போகப் பல வருஷங்களாகும்னு போட்டிருந்தது. வருஷம் முழுக்க இப்படி அப்புறப்படுத்தப்படற நாப்கின்கள் எந்தளவுக்குச் சூழல்மாசை ஏற்படுத்தும், கடல்நீரை அசுத்தப்படுத்தும்னு யோசிச்சேன்.

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை பற்றிய பேச்சு ஆரம்பமானபோது, இந்த விஷயமும் சேர்ந்து எனக்குள்ளே உறுத்திக்கிட்டே இருந்தது. ரெண்டையும் இணைச்சுப் பார்த்தபோது, `சூழலுக்கு ஆபத்தில்லாத, ஆரோக்கியமான சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கிறதைப் பத்தி ஏன் யோசிக்கக் கூடாது'னு தோணுச்சு. சானிட்டரி நாப்கின்கள் அலர்ஜியால அவதிப்படற பெண்கள் அநேகமா எல்லா வீடுகளிலும் இருப்பாங்க. அரிப்பு, எரிச்சல், சருமம் சிவந்து போறதுனு அது தரும் அவதிகள் ஏராளம். கெட்ட ரத்தம்தான் காரணம்னு பலரும் அந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தறாங்க. ஆனா, சானிட்டரி நாப்கின்களில் சேர்க்கப்படற கெமிக்கலும் பிளாஸ்டிக்கும்தான் காரணம்னு பலருக்கும் விழிப்புணர்வு இல்லை. இதுக்கெல்லாம் என்ன தீர்வுனு பார்த்தா, செயற்கையாகத் தயாரிக்கப்படும் நாப்கின்களைத் தவிர்த்துட்டு, துணிகளையே நாப்கின்களா மாற்றிப் பயன்படுத்தறதுதான். ஆனா, மாணவிகளுக்கும் வேலைக்குப் போறவங்களுக்கும் இது நடைமுறையில் சாத்தியமில்லை. அப்பார்ட்மென்ட்டுகளில் வசிக்கிறவங்களுக்குத் துணிகளை அலசி உலரவைக்கவும் வசதியிருக்காது. யூஸ் அண்டு த்ரோ கலாசாரத்துக்குப் பழகின நமக்கு துணிகள் உபயோகிக்கிறது சரிவராது.

இந்த நிலையிலதான் திருச்சியில் இயற்கையான முறையில் மூலிகை நாப்கின்கள் தயாரிக்கிற வள்ளியின் அறிமுகம் கிடைச்சது. அவங்ககிட்ட பயிற்சி எடுத்துக்கிட்டேன். இந்த நாப்கின்களை உபயோகிச்சவங்க, மறுபடி கடைகளில் விற்கிற நாப்கின்களை வாங்கறதில்லைங்கிறதை என் அனுபவத்தில் பார்த்திட்டிருக்கேன்'' என்கிறார் சங்கரி. மூலிகை நாப்கின்கள் தயாரித்து விற்பனை செய்வதில் ஆர்வமுள்ளோருக்கு அவர் தரும் ஆலோசனைகள்...

நீங்களும் செய்யலாம்: ஹெர்பல் நாப்கின் தயாரிப்பு

என்னென்ன தேவை... எவ்வளவு முதலீடு?

வேப்பிலை, கற்றாழை, துளசி இந்த மூன்று மூலிகைகளும் அடிப்படை. கற்றாழை புண்களை ஆற்றும்; குளிர்ச்சியைத் தரும். வேப்பிலை கிருமிநாசினியாகச் செயல்படும். துளசி, கர்ப்பப்பையைச் சூடாகாமல் பார்த்துக்கொள்ளும். பருத்திப் பஞ்சு, மேல் துணி, பேக் செய்ய க்ளாத்திங், அண்டர் பேடு... ஓரம் அடிக்க தையல் மெஷின் தேவை. மூலிகைப் பொருள்கள் எல்லாமே நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். பஞ்சை கிலோ கணக்கில் வாங்க வேண்டும். ஆரம்ப முதலீடு 10,000 ரூபாய் இருந்தால் போதுமானது. எக்ஸ் எல் மற்றும் டபுள் எக்ஸ் எல் என இரண்டு அளவுகளில் தயாரிக்கலாம். தேவைக்கேற்ப ட்ரிபுள் எக்ஸ் எல் அளவிலும் தயாரிக்கலாம்.

பிசினஸ் வாய்ப்பு? லாபம்?

கடைகளில் விற்கும் நாப்கின்களில் அவரவர்க்கு விருப்பமான பிராண்டுகளை வாங்கி உபயோகித்துப் பல வருடங்களாகப் பழகியிருப்பார்கள் பெண்கள். அவர்களை ஒரே இரவில் இயற்கையான நாப்கின்களுக்குத் திருப்புவது சற்று சிரமம்தான். எனவே முதலில் அக்கம்பக்கத்து வீட்டுப் பெண்கள், தெரிந்தவர்களுக்கு சாம்பிள் கொடுத்து உபயோகித்துப் பார்க்கச் சொல்லலாம். இதை ஒருமுறை உபயோகித்தவர்கள் மறுமுறை வேண்டாம் என மறுக்க மாட்டார்கள்.

ரூபாய் 5,000 முதலீட்டிலும் இந்த பிசினஸை ஆரம்பிக்கலாம். அந்த முதலீட்டில் 2,000 ரூபாய் லாபம் நிற்கும். ஒரு பாக்கெட்டில் எட்டு நாப்கின்கள் இருக்கும். அதுபோல 100 பாக்கெட்டுகள் தயாரிக்கலாம். எக்ஸ் எல் அளவென்றால் ஒரு பாக்கெட் 125 ரூபாய்க்கும், டபுள் எக்ஸ் எல் அளவை 150 ரூபாய்க்கும் விற்கலாம். இது கடைகளில் கிடைப்பதைவிட காஸ்ட்லிதான். பருத்திப் பஞ்சில் தயாரிப்பது தான் காரணம். அலர்ஜியையும் பக்க விளைவு களையும் முற்றிலும் தவிர்க்க முடியும் என்பதை வாடிக்கையாளர்களுக்குச் சொல்லிப் புரியவைக்க வேண்டும். ஒருநாளைக்கு ஒருவர் மட்டுமே 200 நாப்கின்கள் செய்துவிட முடியும்.

எதில் கவனம் தேவை?

தேர்ந்தெடுக்கும் பஞ்சு மற்றும் மூலிகைகளின் தரம் மிக முக்கியம். மட்டரக பஞ்சு மொத்த பிசினஸையும் காலியாக்கிவிடும். அதேபோல மூலிகைகளையும் சரியான பக்குவத்தில் பதப்படுத்தவும், சரியான அளவில் பயன்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும்.

பயிற்சி?

ஒரே நாள் பயிற்சியில் மூலிகை நாப்கின்கள் தயாரிக்கக் கற்றுக்கொள்ளலாம். பயிற்சிக்கான மெட்டீரியல்களுடன் சேர்த்துக் கட்டணம் 2,000 ரூபாய்.

-சாஹா 

படங்கள் : வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு