Published:Updated:

தொழில் விரிவாக்கம்... முத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும்?

விகடன் விமர்சனக்குழு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தொழில் விரிவாக்கம்... முத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும்?
தொழில் விரிவாக்கம்... முத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும்?

பிசினஸ் கிளினிக்...

பிரீமியம் ஸ்டோரி

முத்ரா கடன் திட்டத்தில் உள்ள கிஷோர் திட்டத்தின்கீழ் ரூ.5 லட்சம் வரை வாங்கி, அதனைக் கட்டிமுடிக்கும் நிலையில் இருக்கிறேன். இனி தரூன் திட்டத்தின்கீழ் ரூ.10 லட்சம் வரை வாங்கத் திட்டமிட்டிருக் கிறேன். இந்தக் கடனைப் பெற நான் எந்த வகையில் என்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்?

தொழில் விரிவாக்கம்... முத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும்?வி.எல்.மகேஷ், திருப்பூர்


ஆர்.சுகுமார், உதவிப் பொது மேலாளர், சிட்பி  (SIDBI)


‘‘பொதுவாக, முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு வங்கிகளிலிருந்து கடன் பெறுவது ஒரு சவாலாகவே இருக்கும். ஆனால், ஒருமுறை பெற்ற கடனை நல்ல முறையில் திருப்பிச் செலுத்திய வாடிக்கையாளரை எந்தவொரு வங்கியும் இழக்க விரும்பாது. நீங்கள் பெற்ற கடனின் வரலாறு (track record) சம்பந்தப்பட்ட வங்கியிலேயே இருப்பதால், உங்கள் தொழிலை விரிவாக்கம் செய்யத் தேவைப்படும் கடனை அதே வங்கியிலிருந்து முத்ரா திட்டத்தின்கீழ் நிச்சயமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

தொழில் விரிவாக்கம்... முத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும்?

உங்களுடைய தற்போதைய தொழில் விரிவாக்கத்திற்கான அவசியம், கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் உங்கள் நிறுவனம் நிறைவேற்றிய ஆர்டர்கள், பெற்ற வெற்றிகள், நிறுவனத்தின் நிதி அறிக்கைகள், ஈட்டிய லாபம் போன்ற தகவல்களுடன் உங்கள் கையிருப்பில் ஏற்கெனவே இருக்கக்கூடிய மற்றும் இந்த வருடத்தில் புதிதாகப் பெறவிருக்கும் ஆர்டர்கள், அவற்றை நிறைவேற்ற உங்களுக்குத் தேவைப்படும் கடன் தொகை, பெறக்கூடிய கடனை எவ்வாறு செலவழிக்கப் போகிறீர்கள் - அதாவது, என்னென்ன இயந்திரங்கள் மற்றும் உபகரணங் களை யாரிடமிருந்து என்ன விலைக்கு வாங்க விருக்கிறீர்கள் என்ற விவரங்களுடன் வங்கியை அணுகினால், உங்கள் விண்ணப்பத்தின்மீது சாதகமான முடிவை வங்கி எடுக்க வசதியாக இருக்கும்.’’    

கடந்த ஆண்டில் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்து முடித்தேன். கார்கள் இயங்கத் தேவையான பேட்டரியை உருவாக்கும் வேலையில் முதல்கட்ட வேலையை முடித்திருக்கிறேன். இதனை இன்னும் நன்றாக வளர்த்தெடுக்க வேண்டுமெனில், நான் யாருடைய உதவியை நாடலாம்?

சா.விவேக் ராஜன், கிருஷ்ணகிரி.

ராஜாராம் வெங்கட்ராமன், சி.இ.ஓ, வேல்டெக் டி.பி.ஐ (TBI).


“இனிவரும் காலத்தில் பெட்ரோல், டீசல்களில் இயங்கும் கார்களின் எண்ணிக்கை குறைந்து, பேட்டரியால் அதிக எண்ணிக்கையிலான கார்கள் இயங்கவிருக் கின்றன. இந்தப் போக்கினைச் சரியாகப் புரிந்து கொண்டு, கார்களுக்குத் தேவையான பேட்டரியை உருவாக்கும் உங்களுக்கு என் பாராட்டுகள்.

தொழில் விரிவாக்கம்... முத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும்?

முதலில், நீங்கள் ஒரு இன்குபேட்டருடன் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். உங்கள் தயாரிப்பை சிறந்த முறையில் உருவாக்கி, அதை வணிகரீதியில் கொண்டு செல்வதற்கான அனைத்து உதவிகளும் இந்த இன்குபேட்டரில் கிடைக்கும். 

இன்றைக்குத் தமிழகத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட இன்குபேட்டர்கள் இருந்தாலும், அனைத்து வசதிகளுடன் கூடிய இன்குபேட்டர்கள் 15 முதல் 20 மட்டுமே. பல்கலைக்கழகத்துடன் இணைந்த இன்குபேட்டரை நீங்கள் தேர்வு செய்வது பலவகையிலும் உங்களுக்கு நன்மை தருவதாக இருக்கும்.

இந்த இன்குபேட்டரில் லேப் வசதி இருக்கும். உங்கள் தயாரிப்பை வளர்த்தெடுக்கத் தேவையான எக்யூப்மென்ட்டுகள் இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக ஃபண்டிங் வசதியும் கிடைக்கும். உட்காருவதற்கு ஒரு சேர், கம்ப்யூட்டர் வசதியுடன் இலவச இன்டர்நெட்டும் கிடைப்பதால், நீங்கள் தயாரிக்க நினைக்கும் பொருள் பற்றிய அனைத்து விஷயங்களையும் தேடிப் படிக்கலாம். எல்லா வற்றுக்கும் மேலாக ‘மென்ட்டர்ஷிப்’ என்கிற தொழில்வழிகாட்டுதலும் கிடைக்கும்.

தனியார் நிறுவனங்களில் உள்ள இன்குபேட்டர் களை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டு மெனில், அதிக அளவில் கட்டணங்கள் தர வேண்டும். ஆனால், எங்கள் இன்குபேட்டரைப் போன்று கல்வி நிறுவனங்களில் செயல்படும் இன்குபேட்டர்களைப் பயன்படுத்தினால், குறைந்த அளவே செலவாகும். நீங்கள் உருவாக்கும் புதிய பொருளின் காப்புரிமையை (Intellectual patent right) கல்வி நிறுவனத்துடன் இணைந்து பதிவு செய்தால், நீங்கள் எந்தக் கட்டணமும் செலுத்தாமல் இலவசமாகவே இன்குபேட்டர் வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இது நீங்கள் விரும்பினால் மட்டுமே; கட்டாயம் எதுவுமில்லை.

இன்குபேட்டருடன் நீங்கள் இணைந்து செயல்படவேண்டுமெனில், எம்.எஸ்.எம்.இ-யின் கீழ் ஒரு நிறுவனத்தை நீங்கள் தொடங்கவேண்டும்; பிற்பாடு, நீங்கள் எந்த இன்குபேட்டருடன் சேர்ந்து செயல்பட விரும்புகிறீர்களோ, அந்த நிறுவனத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.இப்படிப் பதிவு செய்துகொள்கிறவர்களுக்கு மத்திய அரசின் நிதி பிரயாஸ் (Nidhi Prayas) என்னும் திட்டத்தின்கீழ் ரூ.10 லட்சம் வரை நிதி உதவி கிடைக்கும். இந்தப் பணத்தை நீங்கள் திரும்பத் தரவேண்டியதில்லை என்பது முக்கியமான விஷயம்.’’

தொகுப்பு : ஏ.ஆர்.குமார்

படம்: வீ.நாகமணி

மிழகம் முழுக்க உள்ள லட்சக் கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு இதுமாதிரி பல கேள்விகளும் சந்தேகங்களும் வருவது இயற்கையே. இந்தக் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் உரிய பதிலை நிபுணர்களிடமிருந்து தருவதே இந்தப் பகுதியின் நோக்கம். நீங்கள் செய்துவரும் தொழில் பற்றி உங்களுக்குக் கேள்விகள் ஏதும் இருந்தால், businessclinic@vikatan.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்களுக்கான பதில் நாணயம் விகடன் இதழில் இடம்பெறும்! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு