Published:Updated:

மோடிக்குத் தலைவலி தரும் நான்கு நிறுவனங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மோடிக்குத் தலைவலி தரும் நான்கு நிறுவனங்கள்!
மோடிக்குத் தலைவலி தரும் நான்கு நிறுவனங்கள்!

பிரச்னைஆர்.மோகனப் பிரபு, CFA

பிரீமியம் ஸ்டோரி

பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி யுள்ளனர் இந்திய மக்கள். ஆனால், அந்த மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க முடியாத அளவிற்குப் பலவிதமான பொருளாதாரப் பிரச்னைகள் பிரதமர் நரேந்திர மோடியை அச்சுறுத்தி வருகின்றன.

மோடிக்குத் தலைவலி தரும் நான்கு நிறுவனங்கள்!

குறிப்பாக, பலவிதமான சிக்கல்களில் சிக்கி, தள்ளாடிவரும் நான்கு பெரிய கார்ப்பரேட் குழுமங்களைப் பிரச்னைகளிலிருந்து  உடனடியாக வெளியே கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடும் அபாயம் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கும் மத்திய அரசுக்கும் தலைவலியைத் தரும் அந்த நான்கு நிறுவனங்கள் பற்றிய சுருக்கமான பின்னணி இனி... 

இந்தியாவின் லேமென் - ஐ.எல்.எஃப்.எஸ் 

ஐ.எல்.எஃப்.எஸ் நிறுவனம், தான் வாங்கியிருக்கும் கடன்களை உரிய தேதியில் திரும்பச் செலுத்தமுடியாமல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தடுமாறியது. இந்தக் குழுமத்தின் தலைமை நிறுவனத்தின்மீதான ரேட்டிங் உச்சபட்ச தரநிலையான             AAA-விலிருந்து திடீரென முதலீட்டிற்கே தகுதியில்லாத தாழ்நிலைக்குக் குறைக்கப்பட்டது. சுமார் ரூ.90,000 கோடிக்குமேல் கடன் பெற்றுள்ள இந்த நிறுவனத்தின் கடன் பத்திரங்களில் பல்வேறு சேமநல நிதித் திட்டங்கள், பென்ஷன் திட்டங்கள் முதலீடு செய்துள்ளன.

மோடிக்குத் தலைவலி தரும் நான்கு நிறுவனங்கள்!இந்த நிறுவனமானது திரும்ப மீட்கமுடியாத அளவுக்கு  மூழ்கிப் போகுமெனில், இந்த நிறுவனத்தில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் மட்டுமல்லாமல், இந்த நிறுவனத்தின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ள பல லட்சக்கணக்கான ஓய்வூதிய சந்தாதாரர்களும் பாதிப்படைவார்கள். 

தேர்தலுக்கு முந்தைய ஆண்டில் வெளிச்சத்துக்குவந்த இந்த விவகாரத்தில் விரைவாகச் செயல்பட்ட மத்திய அரசு, முந்தைய நிர்வாகத் தலைமையை முழுமையாக நீக்கியதுடன், உதய் கோட்டக் தலைமையில் புதிய நிர்வாகக் குழுவினை அமைத்தது. ஆனாலும்,  இந்த விவகாரம் இன்றைக்கும் முழுமையாகத் தீர்ந்தபாடில்லை.

ஐ.எல் அண்டு எஃப்.எஸ் சிக்கலைத் தொடர்ந்து, வங்கிசாரா நிறுவனங்களின்மீதான நம்பிக்கை பெருமளவில் சரிந்ததுடன் உள்நாட்டுக் கடன் சந்தையில் வங்கிசாரா நிறுவனங்களினால் புதிதாக நிதி திரட்ட முடியவில்லை. இதனால், கடன் வழங்குவதைக் குறைத்துக்கொள்ள ஆரம்பித்தன வங்கிசாரா நிதி நிறுவனங்கள். இதன் விளைவாக, நுகர்பொருள் விற்பனையில் பெரும்சரிவு ஏற்பட்டதுடன் பல ஆண்டுகளுக்குப்பிறகு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வெகுவாகச் சரிந்தது.

மோடிக்குத் தலைவலி தரும் நான்கு நிறுவனங்கள்!

இதனிடையே, ரிசர்வ் வங்கியின் வட்டிக் குறைப்பு மற்றும் பொதுத்துறை வங்கிகளின் கடன் உதவி ஆகியவற்றால் நிலைமை சற்றே சீரானதுபோலத் தோன்றினாலும் மிக வேகமாகச் சரிந்து வரும் வாகன விற்பனை குறித்த விவரங்கள் நிலைமை இன்னும் சீராகவில்லை என்பதையே தெளிவாகக் காட்டுகிறது.

தரையிறங்கிய ஜெட் ஏர்வேஸ்

ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்த ஜெட் விமான நிறுவனம், தொடர் நஷ்டம், எரிபொருள் விலைஉயர்வு போன்ற பல்வேறு அக மற்றும் புறக்காரணிகளால் சரிவைச் சந்தித்தது. இந்த நிறுவனத்தைப் புனரமைக்க வங்கிகள் மேற்கொண்ட பல முயற்சிகள் பலனளிக்காமல் போனதாலும், இந்த நிறுவனத்தை ஏற்று நடத்தப் புதிதாக யாரும் முன்வராத காரணத்தாலும் சட்டரீதியான கடன் தீர்வுக்காகத் தேசிய சட்டத் தீர்வாணையத்தை வங்கிகள் தற்போது அணுகியுள்ளன. 

ஜெட் நிறுவனத்தின் வீழ்ச்சியின் பாதிப்பு வங்கிகளுடன் நின்று விடவில்லை. இந்த நிறுவனத்தில் பல்லாண்டுகளாகப் பணிபுரிந்து வந்த பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் இன்று வேலையின்றி தவிக்கின்றனர். பல உள்நாட்டு விமானப் பயணக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளது.

இந்த நிறுவனம் ஏறக்குறைய ரூ.14,000 கோடியை பல்வேறு வங்கிகள் மற்றும் நிறுவனங்களிடம் கடன் வாங்கியிருக்கிறது. குறைந்தபட்சம் ரூ.5,600 கோடியைப் புதிதாகக் கொண்டுவந்தால் மட்டுமே இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற முடியும் என்பதே தற்போதைய நிலை. இந்த நிறுவனத்தின் பங்கு சமீபகாலத்தில் மிகக் கடுமையாக விழுந்ததால் முதலீட்டாளர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.  

சரிந்துவிழுந்த ரிலையன்ஸ் இன்ஃப்ரா

ரிலையன்ஸ் சகோதரர்களில் மூத்தவரான முகேஷ் அம்பானி பல துறைகளில் வெற்றிக் கொடி நாட்டிவரும் வேளையில், இளையவ ரான அனில் அம்பானியின் குழும நிறுவனங்கள் பல்வேறு நெருக்கடியில் சிக்கித்  தவித்து வருகின்றன.  

மோடிக்குத் தலைவலி தரும் நான்கு நிறுவனங்கள்!

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடன் தீர்வுக்காகக் காத்திருக்கிறது. ஸ்வீடன் நாட்டைச் சார்ந்த எரிக்சன் நிறுவனம், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்மீது தொடர்ந்த வழக்கில் அனில் அம்பானி சிறை செல்வதைத் தவிர்ப்பதற்காக, முகேஷ் அம்பானி சுமார் ரூ.580 கோடி செலுத்த வேண்டியதாயிற்று.

அனில் குழுமத்தில் சிறப்பாகச் செயல்பட்டுவந்த ரிலையன்ஸ் கேப்பிட்டல்  மற்றும் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனங்களின்  ரேட்டிங் குறைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் ரேட்டிங், கடன் திரும்பக் கிடைக்கப் பெறாத ‘ஜங்க்’ தரநிலைக்குக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரிலையன்ஸ் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் தணிக்கையில் ஈடுபட்டுவந்த பன்னாட்டுத் தணிக்கை நிறுவனமான ப்ரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர் ராஜினாமா செய்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

அனில் நிறுவனத்தின் நிதி அறிக்கைகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி யுள்ள தணிக்கை நிறுவனம், அவர்களின் சந்தேகத்தைத் தீர்க்க நிர்வாகம் உரிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளது.

தனது சந்தேகம் உறுதிப்பட்டால், ரிலையன்ஸ் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் ஒரு ‘தொடரும் நிறுவனமாகவே’ இருக்க முடியாது என்றும் ஒரு குண்டையும் தூக்கிப்போட்டுள்ளது.

இந்தக் குழுமத்தைச் சார்ந்த மற்றொரு பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் பவர், கடந்த காலாண்டில் ரூ.3,500 கோடிக்கும் மேலான நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இந்த நிறுவனத்தின் தணிக்கையாளர்கள் வெளியேறியது, அதனைத் தொடர்ந்து சில மாற்றங்கள் நடந்தது போன்ற விஷயங்கள் நிகழாமல் போயிருந்தால், நஷ்டம் இன்னும் பெரிதாக இருந்திருக்கும் என்கிறார்கள் சிலர்.

வங்கிகள், முதலீட்டாளர்கள், பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் எனப் பலரது எதிர்காலமும் அனில் அம்பானிக்குச் சொந்தமான பல நிறுவனங்களின் செயல்பாட்டைச் சார்ந்துள்ளது. 

இந்தியாவின் இறக்குமதியில், ராணுவத் தடவாளங் களுக்கு எப்போதுமே பெரிய பங்கு உண்டு. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ், இந்திய ராணுவத்திற்குத் தேவையான தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யவேண்டும் என்பது சென்ற ஆட்சியின் மிகப் பெரிய முழக்கமாக இருந்தது. இந்த முயற்சி வெற்றி பெற்றிருந்தால், கண்டிப்பாக அது மிகப் பெரிய   பொருளாதார மலர்ச்சிக்கு வித்திட்டிருக்கும்.

ஆனால், இந்தத் திட்டத்தின்கீழ் அமைந்த ரஃபேல் ஒப்பந்தத்தில், அடிப்படையாகவே பல பலவீனங்களைக் கொண்ட அனில் அம்பானி குழுமம் பங்கு பெற்றிருந்தது அரசுக்குப் பல தர்மசங்கடங்களை ஏற்படுத்தியது.

மோடிக்குத் தலைவலி தரும் நான்கு நிறுவனங்கள்!

தேர்தல் களத்தில் ரஃபேல் ஒப்பந்தம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் வெற்றிக்காகவாவது, இந்த நிறுவனத்தைக் காப்பாற்றுவது தொடர்பான சில முடிவுகளை மத்திய அரசு எடுக்க வேண்டியிருக்கும்.

என்.பி.எஃப்.சி சிக்கலில் டி.ஹெச்.எஃப்.எல் 

ஐ.எல்.எஃப்.எஸ் சிக்கலைத் தொடர்ந்து ஏற்பட்ட வங்கிசாரா நிதி நிறுவன நெருக்கடியில் பெருமளவு பாதிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் ரேட்டிங் பலமுறை குறைக்கப்பட்டுள்ளது.

சென்ற மாதத்தில், புதிய டெபாசிட்டுகளைப் பெறுவதில்லை என்றும், ஏற்கெனவே உள்ள டெபாசிட்டுகளை முதிர்வுக்குமுன்னர் திருப்பத் தரவியலாது என்றும் இந்த நிறுவனம் முடிவெடுத்தது சந்தையில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

திவான் ஹவுஸிங் நிறுவனம் ரூ.31,000 கோடி அளவிற்குப் பொதுமக்களின் பணத்தை மோசடிக்குள்ளாகி இருப்பதாக கோப்ரா போஸ்ட் புலனாய்வு இதழ் குற்றம்சாட்டியுள்ளது.

முக்கிய முதலீட்டாளரான வாத்வா குடும்பத்தினருக்குச் சொந்தமான லெட்டர்பேட் கம்பெனிகளுக்கு மோசடியான முறையில் கடன் வழங்கியதன்மூலம் இந்தப் பணம் கைமாறி உள்ளதாகவும், கடனாக வழங்கப்பட்ட தொகை பங்கு முதலீடு, அந்நிய நாடுகளில் முதலீடு என பலவகையிலும் கைமாறி யிருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மத்தியில் ஆளும் கட்சிக்கும் நன்கொடை என்ற பெயரில் சட்ட விதிமுறைகளைமீறி பெருமளவு தொகையை, ஆர்.கே.டபிள்யூ டெவலபர்ஸ், ஸ்கில் ரியல்டர்ஸ், தர்ஷன் டெவலப்பர்ஸ் போன்ற வாத்வா குடும்பத்தினருக்குத் தொடர்புடைய நிறுவனங்களின் வழியாக வழங்கியிருப்பதாகவும் கோப்ரா போஸ்ட் தெரிவிக்கிறது.

இந்த விவகாரத்தில் ரேட்டிங் ஏஜென்சிகள், ஒழுங்குமுறை அமைப்புகள், மத்திய அரசு போன்றவற்றின்மீதும் குற்றச்சாட்டுகளை எழுப்பும் கோப்ரா போஸ்ட், ஒட்டுமொத்த நிதி அமைப்பின் மீதான கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளை, திவான் ஹவுஸிங் மறுத்தாலும் முதலீட்டாளர்களின் பார்வை வேறு மாதிரியாகவே உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இந்தப் பங்கின் விலை கிட்டத்தட்ட 90%            வீழ்ந்திருப்பது நிறுவனத்தின் அடிப்படை சரியாக இல்லை என்பதையே சொல்கிறது.

ஏற்கெனவே வேலைவாய்ப்பின்மை,  ஜி.எஸ்.டி. அமலாக்கம், பணமதிப்பு நீக்கம், கட்டுமானப் பொருள்கள் விலையேற்றம் போன்ற  பொருளாதாரப் பிரச்னைகளினால் தள்ளாடிவரும் ரியல் எஸ்டேட் துறைக்கு, வங்கிசாரா நிதி நிறுவனங்களின் தளர்ச்சி அடுத்த பேரிடியாக அமைந்துள்ளது.

குறிப்பு: இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளவை கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளே!

கவனம்  தேவை...

லகிலேயே வேகமாக வளரும் நாடு என்ற அந்தஸ்தை சமீபத்தில் இழந்த இந்தியா தனது பழம்பெருமையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. உறுதியான பொருளாதார மீட்சிக்கு நிதி, ரியல் எஸ்டேட், நுகர்பொருள்கள், அடிப்படைக் கட்டுமானம் போன்ற அத்தியாவசிய துறைகளின் சிறப்பான செயல்பாடுகள் மிகவும் அவசியம். 

ஒரு சில நிறுவனங்களின் மோசமான செயல்பாடு, அவை சார்ந்த துறையின் ஒட்டுமொத்த நம்பகத்தன்மையைப் பாதிப்பதுடன், நிறுவனங்களுக்குக் கடன் வழங்கியுள்ள வங்கிகள், முதலீட்டாளர்கள், பணியாளர்கள், பயனாளிகள் எனப் பலரையும் பாதிக்கிறது. எனவே, இந்த நிறுவனங்களைச் சீர்செய்யும் முயற்சியில் மத்திய அரசும் இதர ஒழுங்குமுறை அமைப்புகளும் உடனடியாக ஈடுபடுவார்கள் என்று நம்புவோமாக! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு