Published:Updated:

கேள்வி - பதில்: அப்பார்ட்மென்ட்டின் மொட்டை மாடியில் வீடு கட்டலாமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கேள்வி - பதில்: அப்பார்ட்மென்ட்டின் மொட்டை மாடியில் வீடு கட்டலாமா?
கேள்வி - பதில்: அப்பார்ட்மென்ட்டின் மொட்டை மாடியில் வீடு கட்டலாமா?

கேள்வி - பதில்: அப்பார்ட்மென்ட்டின் மொட்டை மாடியில் வீடு கட்டலாமா?

பிரீமியம் ஸ்டோரி

எங்கள் அப்பார்ட்மென்ட்டில் தரைத்தளத்தில் இரண்டு வீடுகள், முதல் தளத்தில் இரண்டு வீடுகள் உள்ளன. இரண்டாவது தளத்தில் எனது வீடு மட்டும் உள்ளது. வீட்டின் பின்புறம் உள்ள 900 ச.அடி மொட்டைமாடியை நாங்கள் மட்டுமே பயன்படுத்திக்கொள்ளலாம்.  ஆனால், அதில் வீடு கட்டக்கூடாது என்று அப்பார்ட்மென்ட் பில்டர் அக்ரிமென்ட்டில் குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த இடத்தில் நாங்கள் வீடு கட்டுவதற்கு என்ன செய்யவேண்டும்?

கேள்வி - பதில்: அப்பார்ட்மென்ட்டின் மொட்டை மாடியில் வீடு கட்டலாமா?-செங்குட்டுவன், விழுப்புரம்

அழகுராமன், சட்ட ஆலோசகர்


‘‘இரண்டாவது தளத்தில் உள்ள உங்கள் வீட்டுக்காகப் பதிவுசெய்து கொடுத்துள்ள கிரயப் பத்திரத்தில் எவ்வளவு பாக நிலப்பரப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும். அதில் 900 ச.அடி மொட்டைமாடிக்கான விகிதாச்சார நிலம் (proportionate share of land) வழங்கப்படாத நிலையில், அதில் நீங்கள் கட்டுமானம் எதையும் மேற்கொள்ள இயலாது.

மேலும், அக்ரிமென்ட்டில் குறிப்பாக விவரிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நீங்கள் அங்கு வீடு கட்டுவது  பில்டருக்கும் உங்களுக்குமான அக்ரிமென்ட்டை மீறும் செயலாகவே கருதப்படும்.’’

மிரே அஸெட் இந்தியா ஈக்விட்டி ஃபண்டில் ரூ.4,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் புளூசிப் ஃபண்ட், டாடா இந்தியா டாக்ஸ் சேவிங்ஸ் ஃபண்ட் ஆகியவற்றில் தலா ரூ.3,000, மிரே அஸெட் டாக்ஸ் சேவர் ஃபண்ட், மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ஆகியவற்றில் தலா ரூ.2,000, ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட், எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் ஆகியவற்றில் தலா ரூ.1,000 என முதலீடு செய்துவருகிறேன். என்னால் மீடியம் ரிஸ்க் எடுக்க இயலும். இன்னும் 12 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் சேர்க்க இந்த முதலீடுகள் சரியாக இருக்குமா?

-இளமாறன், மதுரை

ஸ்ரீகாந்த் மீனாட்சி, துணை நிறுவனர், ஃபண்ட்ஸ் இந்தியா,


‘‘12 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் சேர்க்க, மாதம் சுமார் ரூ.32,000 முதலீடு செய்ய வேண்டியிருக்கும். இப்போது நீங்கள் அதில் சரிபாதி முதலீடு செய்கிறீர்கள். ஆகையால், உங்கள் முதல் நோக்கம், உங்களின் மாதாந்தர முதலீட்டை அதிகரிப்பதாக இருக்க வேண்டும். மற்றபடி, உங்கள் ஃபண்ட் தேர்வுகளில் பழுதில்லை. இதே ஃபண்டுகளில் முதலீட்டை அதிகரித்து வந்தால், உங்கள் இலக்கை அடைவது சாத்தியமே.’’

டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா ஸ்டீல்ஸ் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்திருந்தேன். டாடா ஸ்டீல்ஸ் ஓரளவு இறக்கத்திலும், டாடா மோட்டார்ஸ் பங்குகள் கிட்டத்தட்ட 50% அளவுக்கு இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. இந்த இரண்டு பங்குகளிலிருந்தும் வெளியேறலாமா?

கிருஷ்ணவேணி, கோயம்புத்தூர்

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்


‘‘டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகளை அடுத்த ஆறு மாத காலத்துக்கு வைத்திருக்கவும்.  அடுத்து வரும் அதன் காலாண்டு நிதி நிலை முடிவுகளைப் பார்க்கவேண்டும்.  நான்காவது காலாண்டு முடிவின்படி, இந்த நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.640 கோடியாக உள்ளது. இ.பி.எஸ் 46 ரூபாயாக உள்ளது. நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டு முடிவைப் பார்த்தபிறகு வெளியேறுவது குறித்து முடிவெடுக்கலாம். 

கேள்வி - பதில்: அப்பார்ட்மென்ட்டின் மொட்டை மாடியில் வீடு கட்டலாமா?

டாடா ஸ்டீல்ஸ் பங்குகளில் ஒரு பகுதியை நீங்கள் விற்கலாம். நிதியாண்டுக் கணக்கில் ஒப்பிடும்போது நான்காவது காலாண்டில் வரிக்குப் பிந்தைய லாபம் 70% குறைந்துள்ளது. இந்தப் பங்கு தற்போது ரூ.475 - 518 என்கிற வரம்பில் வர்த்தகமாகிறது. இந்த வரம்பை உடைத்து, 544 ரூபாய் என்ற அளவுக்கு உயர்ந்தால் மட்டுமே விலை உயர வாய்ப்புண்டு என்பதே தற்போதைய நிலை.’’

நான் (53 வயது), பொதுப்பணித் துறையில் இன்ஜினீயராகப் பணிபுரிகிறேன். இன்ஷூரன்ஸ்  பாலிசி முதிர்வுத்தொகை ரூ.12 லட்சத்தை ஐந்து வருடங்களுக்கு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்புகிறேன். மூன்று வருடங்கள் கழித்து என் மகளின் மேற்படிப்புக்காக ரூ.5 லட்சத்தை இதிலிருந்து எடுக்க விரும்புகிறேன். பேங்கிங் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் துறை சார்ந்த ஃபண்டுகளில் அதிக வருமானம் கிடைக்கும் என்பதால், இவற்றில் நான் முதலீடு செய்யலாமா?

ஆ.சண்முகவேலாயுதம், தென்காசி

எஸ்.ராமலிங்கம், நிதி ஆலோசகர்


‘‘கடந்த ஓரிரு ஆண்டுகளில் இந்தத் துறை சார்ந்த ஃபண்டுகளின் செயல்பாட்டைப் பார்த்து, முழு முதலீட்டுத் தொகையையும் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர், பேங்கிங் போன்ற அதிக ரிஸ்க் கொண்ட ஃபண்டுகளில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமானதல்ல. உயர்கல்விச் செலவுக்கு ரூ.4 லட்சத்தை தலா ரூ.2 லட்சம் வீதம் ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் ஷார்ட் டேர்ம் பிளான், டி.எஸ்.பி ஷார்ட் டேர்ம் பிளான் ஃபண்டுகளில் மூன்றாண்டு காலத்துக்கு முதலீடு செய்யவும். ஆண்டு வருமானம் 9-10% எதிர்பார்க்கலாம்.

மீதமுள்ள ரூ.8 லட்சத்தில் ரூ.2 லட்சம் வீதம், ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு அட்வான்டேஜ், கனரா ராபிகோ ஈக்விட்டி ஹைபிரீட், மிரே அஸெட் ஹைபிரீட் ஈக்விட்டி மற்றும் ரிலையன்ஸ் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகளில் ஐந்து வருடங்களுக்கு முதலீடு செய்யவும். ஆண்டு வருமானம் 10-12% எதிர்பார்க்கலாம்.

பிரிக்கால் (Pricol) மற்றும் லக்‌ஷ்மி மெஷின் வொர்க்ஸ் பங்குகளை தற்போதைய விலைக்கு வாங்கலாமா?

க.பாஸ்கரன், உடுமலைப்பேட்டை 

எம்.எஸ்.ஓ.அண்ணாமலை, பங்குச் சந்தை ஆலோசகர்


‘‘லக்‌ஷ்மி மெஷின் வொர்க்ஸ் நிறுவனத்தின் பங்குகளை நீண்டகால முதலீட்டு நோக்கில் தற்போது வாங்கலாம். வாங்கிய பங்குகளை ஓராண்டு காலத்துக்கு வைத்திருக்கவும். பிரிக்கால் நிறுவனத்தின் பங்குகளை இப்போது வாங்க வேண்டாம். அடுத்த காலாண்டு முடிவுகள் வெளியான  பின்பு, அப்போதுள்ள நிலைமையை ஆராய்ந்து பார்த்துவிட்டு முடிவெடுக்கலாம்.’’ 

கேள்வி - பதில்: அப்பார்ட்மென்ட்டின் மொட்டை மாடியில் வீடு கட்டலாமா?

வாடகைக்கு வீடு விடும்போது 10 மாத வாடகையை முன்பணமாகத் தரவேண்டும் என்று வீட்டு உரிமையாளர் கட்டாயப் படுத்துகிறார். இது சட்டப்படி சரியா?, வருமான வரித் தாக்கலில் இதைக் காட்டவேண்டுமா?

நெல்சன், மதுரை

கோபால்கிருஷ்ண ராஜு, ஆடிட்டர்

‘`தமிழ்நாடு வீட்டு வாடகைச் சட்டம் 2017’ பிரிவு 11-ன்படி, வீட்டு வாடகைக்கான டெபாசிட்டாக மூன்று மாத வாடகைக்கான தொகை வரை அக்ரிமென்ட் இல்லாமல் வாங்கிக்கொள்ளலாம். அதற்குக் கூடுதலாக டெபாசிட் வாங்குவதாக இருந்தால், வீட்டு வாடகைதாரருடன் ஒப்பந்தம் செய்து கொண்டுதான் வாங்கவேண்டும். அதேபோல், வாடகைதாரர் வீட்டைக் காலி செய்வதாக இருந்தால், அதற்கு முன்பாக டெபாசிட் தொகையைத் திருப்பித் தரவேண்டும் அல்லது அதிகபட்சம் ஒரு மாத காலத்துக்குள் கொடுக்க வேண்டும்.

வருமான வரியைப் பொறுத்தவரை, வீட்டு வாடகையை மட்டும்தான் வீட்டு உரிமையாளர் கணக்கில் காட்டு வார். ஏனெனில், அந்த டெபாசிட் தொகையானது திரும்பத் தரக்கூடிய ஒன்று. எனவே, அது வருமானத்தில் சேராது.

வாடகைதாரர்கள் தரப்பில் பார்க்கும்போது, மாத வாடகையாக 50,000 ரூபாய்க்குமேல் கொடுத்தால் அதற்கு 5% டி.டி.எஸ் பிடித்தம் செய்யப் பட வேண்டும்.

வாடகைக்கு எடுக்கப்பட்ட கட்டடம், வணிக நோக்கில் பயன்படுத்தப்படுமானால் டெபாசிட் தொகையை வருமான வரி செலுத்தும் போது கணக்கில் காட்ட வேண்டும். ஆனால், வணிக நோக்கில் இல்லாத வீட்டுக்கான டெபாசிட்டை வருமான வரிக் கணக்கில் காட்டத் தேவை இல்லை.’’

என்னால் மாதந்தோறும் ரூ.1,000 எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய முடியும். முதலீட்டில் லாபம் தரக்கூடிய சிறந்த ஃபண்டினைச் சொல்லுங்களேன். 

நிஜாமுதீன், இணையம் வழியாக...

த.முத்துகிருஷ்ணன், நிதி ஆலோசகர்


“நீங்கள் மல்டிகேப் ஃபண்டில் பத்தாண்டு காலத்துக்கு முதலீடு செய்வது நல்லது. எஸ்.பி.ஐ மேக்னம் மல்டிகேப் ஃபண்ட் உங்களுக்கேற்ற தேர்வாக இருக்கும்.”
 
தொகுப்பு : தெ.சு.கவுதமன்

கேள்விகளை அனுப்புகிறவர்கள்  தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
கேள்வி-பதில் பகுதி,  நாணயம் விகடன், 757,  அண்ணாசாலை, சென்னை-2.  nav@vikatan.com 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு