
டிஜிட்டல் கரன்சியில் மார்க் சக்கர்பெர்க்!
சர்வதேச சந்தையில் தங்கம் மட்டுமல்ல, ஆன்லைன் கரன்சியான பிட்காயினின் விலையும் ஏகத்துக்கும் உயர்ந்திருக்கும் நிலையில், பிட்காயினைப் போன்ற புதியதொரு கிரிப்டோகரன்சியை உருவாக்கி வெளியிட்டிருக்கிறார் ஃபேஸ்புக்கின் மார்க் சக்கர்பெர்க். இதற்குப் பெயர் லிப்ரா (Libra). ஜெமினி என்கிற கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்சில்தான் இந்த லிப்ராவை வாங்கி விற்க முடியும். குறிப்பிட்ட சிலர் மட்டுமே இந்த லிப்ராவை வாங்கி விற்க முடியும் என்கிற நிலையில் வைத்திருக்கிறார் மார்க் சக்கர்பெர்க். இதை டிஜிட்டல் கரன்சி என்று வேண்டுமானாலும் சொல்லலாம்; கிரிப்டோகரன்சி இல்லை என்கிறார்கள் சிலர். எதிர்காலத்தில் எல்லா கிரிப்டோகரன்சியையும் இந்த லிப்ரா தூக்கிச் சாப்பிட்டாலும் ஆச்சர்யமில்லை!
#கரன்சியிலும் கலக்குங்க மார்க்!


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நிதி ஆயோக் தலைவருக்குப் பதவி நீட்டிப்பு!
நிதி ஆயோக் கமிட்டியின் தலைவர் அமிதாப் கந்த்தின் பதவிக்காலம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட் டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் இவர் இந்தப் பதவியினை ஏற்றார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் இவருடைய பதவிக்காலம் முடியவே, 2019 ஜூன் வரை பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. பா.ஜ.க-வின் தீவிர ஆதரவாளரான அமிதாப், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்னைகளில் எல்லாம் தர்மசங்கடம் ஏற்பட்ட போது, அரசுக்கு ஆதாரவாகப் பேசியவர். இவரது விசுவாசமான உழைப்பினைப் பாராட்டி, மேலும் இரண்டாண்டு காலத்துக்கு இவருடைய பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
#மோடிஜி, அடுத்தமுறையாவது ஆளை மாத்துங்க!

பணமதிப்பு நீக்கத்தினால் குறையும் பணச் சுழற்சி!
பணமதிப்பு நீக்கம் பெரிய தோல்வி எனச் சிலர் சொல்லிக்கொண்டிருக்க, அதனால் விளைந்த ஒரு நன்மையைப் பற்றி புள்ளிவிவரமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் புதிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
கடந்த 2016 நவம்பர் 4-ம் தேதி நிலவரப்படி, நம் நாட்டில் சுழற்சியில் இருந்த பணம் ரூ.17,74,187 கோடி. இது 2019 மே 31-ம் தேதியன்று ரூ.21,71,735 கோடியாக உயர்ந்திருக்கிறது. ஆனால், பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்காமல் போயிருந்தால், ரூ.25,12,253 கோடி அளவுக்கு அதிகரித்திருக்குமாம். அந்த வகையில் ரூ.3.4 லட்சம் கோடி அளவுக்குப் பணச் சுழற்சியைக் குறைத்திருக்கிறோம் என்கிறார் நிதி அமைச்சர். மக்கள் அதிக அளவில் ஆன்லைன்மூலம் பணப் பரிமாற்றம் செய்வதே இதற்கு முக்கியக் காரணம்!
#மாற்றம், முன்னேற்றம்..!

அதிகரிக்கும் பி.இ முதலீடு!
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடான பிரைவேட் ஈக்விட்டி முதலீடு 26% அதிகரித்து, ரூ.28,000 கோடியாக இருக்கிறது. ‘ரெரா’ சட்டம் நடைமுறைக்கு வந்தபின்பு, ரியல் எஸ்டேட் விற்பனை சூடுபிடித்திருப்பதைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்துவரும் பிரைவேட் ஈக்விட்டி முதலீடு கணிசமாக அதிகரித்திருக்கிறது. இந்தியாவிலேயே மிக அதிகபட்சமாக புனேவில் மிக அதிகமான பிரைவேட் ஈக்விட்டி முதலீடு வந்திருக்கிறது. 237 மில்லியன் டாலர் அளவுக்கு புனேவில் பி.இ முதலீடு வந்திருக்கிறது!
#முதலீட்டாளர்களே, சென்னைக்கும் வாங்க..!

பங்குச் சந்தை முதலீட்டில் மூன்றாவது இடம் தமிழகத்துக்கு!
பங்குச் சந்தை முதலீட்டை நோக்கிப் பலரும் வந்துகொண்டிருப்பது ஆரோக்கியமான விஷயம்தான். கடந்த ஆண்டில் மட்டும் இந்தியா முழுக்க சுமார் 50 லட்சம் பேர் பங்குச் சந்தை முதலீட்டில் இறங்கியிருக் கிறார்கள்.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்ட்ராவிலிருந்து 10.40 லட்சம் பேரும் குஜராத்திலிருந்து 7.40 லட்சம் பேரும் டீமேட் கணக்கினைத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழகத்திலிருந்து 3.60 லட்சம் புதிய டீமேட் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்துக்கு அடுத்து உத்தரப் பிரதேசத்திலிருந்தும் கர்நாடகத் திலிருந்தும் அதிக டீமேட் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
#தமிழகம் எப்போது முதலிடத்துக்கு வரும்?
ஃப்ளிப்கார்ட்டின் பங்கினை விற்கும் பின்னி பன்சால்!

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பங்குகளை விற்க ஆரம்பித்திருக்கிறார் அந்த நிறுவனத்தைத் தொடங்கிய பின்னி பன்சால். பின்னி பன்சாலிடம் 3.85% அளவுக்கு ஃப்ளிப்கார்ட்டின் பங்குகள் இருந்தது. ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தினை வால்மார்ட் நிறுவனம் வாங்கியபிறகு அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறியவர், தற்போது அந்த நிறுவனத்தின் பங்குகளை விற்கத் தொடங்கியிருக்கிறார். 76.4 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 532 கோடி) அளவுக்கு மதிப்புள்ள 5,39,912 பங்குகளை வால்மார்ட் நிறுவனத்துக்கே விற்றிருக்கிறார் பின்னி.
#பின்னி எடுக்கும் பின்னி!