Published:Updated:

கடந்த ஐந்து ஆண்டுகளில் வீடுகளின் விலை 7% அதிகரிப்பு, விற்பனை 28% குறைவு!

கடந்த ஐந்து ஆண்டுகளில் வீடுகளின் விலை 7% அதிகரிப்பு, விற்பனை 28% குறைவு!
கடந்த ஐந்து ஆண்டுகளில் வீடுகளின் விலை 7% அதிகரிப்பு, விற்பனை 28% குறைவு!

டெல்லி-என்.சி.ஆர், மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் பூனே ஆகிய ஏழு பெருநகரங்களில், கடந்த ஐந்து ஆண்டுகளில், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளின் விலை 7% அதிகரித்திருப்பதும், விற்பனை 28% குறைந்திருப்பதும், புரோகரேஜ் நிறுவனமான அனராக் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இந்த ஏழு நகரங்களில் கடந்த 2018-ல் 2.48 லட்சம் வீடுகள் மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன. இது கடந்த 2014 நிலவரத்துடன் ஒப்பிடும் போது, 3.43 லட்சம் வீடுகளாக இருந்தது. மேலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் புதிய வீடுகள் சப்ளை 64% சரிவடைந்து 1.95 லட்சம் வீடுகளாக உள்ளது. 2014-ம் ஆண்டில் புதிய வீடுகள் சப்ளை 5.45 லட்சமாக இருந்தது.

இந்த ஏழு பெரிய நகரங்களின், கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் அடுக்குமாடி குடியிருப்புகளில் புதிய வீடுகள் சப்ளை 67,850-ஆக உள்ளது. 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 77%  வளர்ச்சியாகும். இதில் டெல்லியில் (என்.சி.ஆர்) அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் சப்ளை அதிகபட்சமாக 16%  உயர்ந்துள்ளது. அடுத்து மும்பை மற்றும் பூனே ஆகிய நகரங்களில் சப்ளை 17% அதிகரித்திருக்கிறது.

வருகிற 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற மத்திய அரசின் திட்டத்தைக் கருத்தில் கொண்டு, சமீபத்தில் நடந்து முடிந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் ரியல் எஸ்டேட் தொடர்பான பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஜி.எஸ்.டி வரி குறைக்கப்படும் என்பதும் ஒன்றாக இருந்தது. இது வருகிற ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலமாக அடுக்குமாடி குடியிருப்புகளின் விலையில் மாற்றம் ஏற்படும் மற்றும் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.