Published:Updated:

ருச்சி சோயா நிறுவன டீலிங் - அதானியை வென்ற ராம்தேவ்!

ருச்சி சோயா நிறுவன டீலிங் - அதானியை வென்ற ராம்தேவ்!
ருச்சி சோயா நிறுவன டீலிங் - அதானியை வென்ற ராம்தேவ்!

ருச்சி சோயா நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக வாராக்கடன் பிரச்னையில் சிக்கித்தவித்து வருகிறது. ஐ.டி.பி.ஐ வங்கி மற்றும் எஸ்.பி.ஐ வங்கிகளின் வாராக்கடன் பட்டியலில் இந்த நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனத்தை விலைக்கு வாங்குவதில், பாபா ராம்தேவ்வின் பதஞ்சலியும் அதானி குழுமத்தின் அதானி வில்மர் நிறுவனமும் கடுமையாகப் போட்டியிட்டன. இறுதியில் பதஞ்சலி நிறுவனத்துக்கு சாதகமாக இந்த டீலிங் முடிந்திருக்கிறது. இந்த மாதத்திலேயே இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகக்கூடும்.

ருச்சி சோயா நிறுவனத்தை ரூ.4,350 கோடிக்கு பதஞ்சலி நிறுவனம் வாங்குவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ருச்சி சோயாவை அதானி வில்மர் ரூ.4,100 கோடிக்கு வாங்க முன்வந்திருந்த சூழலில் அதைவிட 250 கோடி அதிகமாகக் கொடுத்து இந்த டீலிங்கை பதஞ்சலி முடிக்கவுள்ளது. இந்த 4,350 கோடி ரூபாயில், வங்கிகளின் வாராக்கடன் உள்ளிட்ட கடன் தொகைகளுக்காக ரூ.4,235 கோடி கொடுத்ததுபோக மீதமுள்ள தொகைக்கு பங்குகளை வாங்கவுள்ளது. முன்னதாக, ருச்சி சோயாவை 6,000 கோடி ரூபாய்க்கு அதானி வில்மர் நிறுவனம் வாக்குவதாக இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த டீலிங் தாமதப்பட்டதால் மீண்டும் மறுஏலத்துக்கு விடப்பட்டு தற்போது பதஞ்சலி வென்றுள்ளது. 

அதானி குழுமம் ருச்சி சோயாவை வாங்க முடியாமல் போனாலும், ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கம் மற்றும் ரயிவே உள்கட்டமைப்புப் பணிகளுக்கான ஒப்புதலைப் பெறுவதில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கார்மிக்கேல் நிலக்கரிச் சுரங்கத்தை அமைப்பதற்கு தற்போது குயின்ஸ்லாந்து அரசின் இறுதிக்கட்ட ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. ஒப்புதல் பெறப்பட்டவுடன் அந்தப் பணியில் தீவிரமாக இறங்கிவிடும். கடந்த ஐந்தாண்டுகளில் பெரிய வளர்ச்சிகண்ட முக்கிய தொழிலதிபர்களான ராம்தேவ், அதானிக்கு இடையே ருச்சி சோயா நிறுவனத்திற்கான போட்டி ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.