Published:Updated:

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!
இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

ஒரு புத்தகத்தின் தரத்தை அதன் அட்டையை வைத்து எடைபோடக் கூடாது என்பது உண்மைதான்! ஆனால், அட்டைப்படமே அட்டகாசமாக இருந்தால் பார்த்த மாத்திரத்திலேயே வாங்க வேண்டும் என யார் வேண்டுமானாலும் நினைக்கத்தானே செய்வார்கள்? அதேபோல்தான் இன்டெர்வியூவும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##
ன்டெர்வியூவில் ஜெயிக்க உங்கள் வெளித்தோற்றம், நீங்கள் பேசும் பேச்சு, நடந்துகொள்ளும் முறை போன்றவை மூலம் இன்டெர்வியூ செய்பவரை கவர்ந்திழுப்பது அவசியம். மற்றவர்களை கவர்ந்திழுப்பது ஒரு தனித்திறன். இதைத்தான் உளவியல் அறிஞர்கள் கவர்ந்திழுக்கும் மேலாண்மை யுக்திகள் (Impression management techniques) என்கிறார்கள்.

இது போலித்தனமாக நடிப்பது போலில்லையா? என்று நீங்கள் கேட்கலாம். உங்கள் நிஜகுணத்தை மறைத்து மற்றவர்களை ஏமாற்ற நல்லவர்கள்போல் நடித்தால்தான் அது தவறு. உங்கள் நற்குணங்களை, பண்புகளை வெளிக்கொண்டு வந்து அவற்றை மெருகேற்றி காட்டுவது நிச்சயமாக போலித்தனம் இல்லை. விருந்தினர்களைச் சந்திக்கும்போது நல்ல உடையணிந்து நாம் டிப்-டாப்பாக நடந்து கொள்வதில்லையா? அதுபோலத்தான் இதுவும்.

முதன்முறையாகச் சந்திக்கும் நபர் நம்மை எடைபோட சராசரியாக எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வார் தெரியுமா? முப்பதே விநாடிகள்! இந்த குறைந்த நேரத்தில் உருவாகும் அபிப்பிராயம்தான் நம்மைப் பற்றி அவர்களது பார்வையைத் தீர்மானிக்கிறது. எனவே, நாம் இந்நேரத்தில் மற்றவர்கள் மீது உருவாக்குகிற தாக்கம் மிகவும் முக்கியமானது. மிடுக்கான வெளித்தோற்றம், போலித்தனமில்லாத இயல்பான புன்னகை, தன்னம்பிக்கை ததும்பும் பேச்சுத்தொனி போன்றவை ஒரு நல்ல முதல் தாக்கத்தை உருவாக்கும்.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

உங்கள் உடல் அமைப்பு, நிறம் மற்றும் உயரத்திற்கு ஏற்ற ஆடைகளை அணிவது மிடுக்கான வெளித்தோற்றத்தைத் தரும். தரமான, சுத்தமான காலணிகளை அணிவது உங்கள் மீதான பிறரது மதிப்பீட்டை உயர்த்தும். நேரான தோள்களும், நிமிர்ந்த முகமும், சுருக்கங்கள் இல்லாத ரிலாக்ஸான நெற்றியும் நீங்கள் படபடப்பில்லாமல் இருப்பதை உணர்த்தும்.

பயப்படாமல் இருப்பது துணிவு அல்ல; பயத்தைக் கடந்து வருவதுதான் துணிவு. சரியான தயாரிப்பும், நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையும் இருந்தாலே இன்டெர்வியூ பற்றிய பயம் தானாகவே போய்விடும்.

இன்டெர்வியூ சமயத்தில் படபடப்பும், பயமும் வருவது இயற்கை. ஆனால், படபடப்பினால் உங்கள் பெர்ஃபார்மென்ஸ் பாதிக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். இன்டெர்வியூ சமயத்தில் உங்கள் படபடப்பை கட்டுப்படுத்த எளிதான வழி, உங்கள் சுவாசத்தை சீராக வைத்துக் கொள்வது. இன்டெர்வியூ அறைக்குச் செல்வதற்கு முன் சில நிமிடங்கள் கண்மூடி நிதானமாக ஆழ்ந்து சுவாசியுங்கள். இதனால் உங்கள் இதயத்தின் படபடப்பு குறைவதை உணரலாம். இது உங்கள் பதற்றத்தைக் குறைக்கும். இந்த இன்டெர்வியூ ஒரு வாழ்வா, சாவா சூழ்நிலை அல்ல, உங்கள் திறன்களை காண்பிக்க ஒரு வாய்ப்பு என்பதை உணருங்கள்.

இன்டெர்வியூ அறைக்குள் நுழையும்முன் அனுமதி கேட்பது அவசியம். அறையில் நிறையபேர் இருந்தால் 'குட்மார்னிங் ஆல்’ என தெரிவிக்கலாம். இன்டெர்வியூ நடத்துபவரிடம் கை குலுக்கலாமா, வேண்டாமா என்பது சூழ்நிலையைப் பொறுத்தது.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

மத்திய அரசின் 'ரூரல் எலெக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன்’ நிறுவனத்தின் பல்வேறு பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்ய இருக்கிறார்கள். பிப்ரவரி 18-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்.

ஆந்திரா வங்கி ஓ.பி.சி. பிரிவுக்கான புரபேஷனரி ஆபீஸர்களை நியமிக்க உள்ளது. ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 14. ஆன்லைன் முகவரி: WWW.andhrabank.in

டிப்ளமோ/இளநிலை சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிகல் இன்ஜினீயரிங் முடித்தவர்களுக்குப் பல்வேறு பதவிகளுக்கு 'ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன்’- ஆட்களை தேர்வு செய்ய இருக்கிறது. இதற்கான தேர்வு ஏப்ரல் எட்டாம் தேதி நடைபெறுகிறது. பிப்ரவரி 10-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி.

சில சமயம் உயர்ந்த பதவியில் இருப்பவர்களோ, வயதான வர்களோ சிறிய பதவிக்கு அப்ளை செய்தவர்களிடம் கைகுலுக்க விரும்புவது இல்லை. அதேபோல் மாற்று பாலினரும் (Opposite Gender) இந்திய கலாசாரத்தின் அடிப்படையில் கை குலுக்க தயக்கம் காட்டலாம். கைகுலுக்கும்போது உறுதியாக, அதேசமயம் முரட்டுத்தனம் இல்லாமல் உங்கள் உள்ளங்கை முழுமையாக படும் வகையில் கை குலுக்கவும். விரல்கள் மட்டும் படும் வகையில் கை குலுக்குவது தன்னம்பிக்கையின்மையாக கருதப்படுகிறது.

தன்னம்பிக்கையை பிரதிபலிப்பதில் உடல் மொழிக்கு மிக முக்கிய பங்குள்ளது. நாற்காலியில் உட்காரும்போது உங்கள் அடி முதுகு நாற்காலியில் படும்படி நேராக நிமிர்ந்து அமரவும். நாற்காலியின் நுனியில் அமர்வது உங்கள் பதற்றத்தைக் காண்பிக்கும். அதேபோல கால் நீட்டி பின்னால் சாய்ந்து அமர்வது உங்கள் அக்கறையின்மையை பிரதிபலிக்கும். எதிரே உள்ள டேபிளின் மேல் கைகளை ஊன்றுவதை தவிர்க்கவும். கைகளை உங்கள் நாற்காலியின் கைப்பிடியில் இயல்பாக வைத்திருங்கள். கைகளை கட்டி அமர்வதும் உங்கள் பதற்றத்தைக் காண்பிக்கும்.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

இன்டெர்வியூவில் பதில் தரும்போது எதிரே இருப்பவர் முகத்தைப் பார்த்து பேசுவது அவசியம். முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசும்போது, அவர் கண்களைப் பார்த்து பேசுங்கள். அவர்கள் பேசும்போது இயல்பான புன்னகையோடு தலை அசைத்து கேளுங்கள். எதிரே இருப்பவர் கூறுவது முக்கியமான விஷயமாக இருப்பின் சற்று அவரை நோக்கி முன்புறம் சாய்வது, நீங்கள் அதில் கவனம் செலுத்துகிறீர்கள் என்பதைத் தெரிவிக்கும்.

பதில் தரும்போது கைகளை அதிகம் ஆட்டி பேச வேண்டாம். நகம் கடிப்பதோ, சுவிங்கம் மெல்வதோ கூடவே கூடாது. இன்டெர்வியூக்கு முன் புகைப்பிடிப்பதைத் தவிருங்கள். அதன் நாற்றம் சிலருக்கு உங்கள் மீதான தவறான அபிப்பிராயத்தை உருவாக்கக்கூடும். மொபைல் போனை ஆஃப் செய்வதும் அவசியம்.

இன்டெர்வியூ நடத்துபவர் உங்கள் கருத்துக்கு முரணான கருத்துகளை தெரிவித்தால் அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபடாமல் பணிவோடு உங்கள் மாற்றுக் கருத்துகளை தெரிவிப்பது உங்கள் துணிவையும், பணிவையும் ஒரே சமயத்தில் பிரதிபலிக்கும். கேள்விகளுக்குப் பதில் தெரியாவிட்டால் தொடர்பே இல்லாதவற்றைப் பதிலாக தரவேண்டாம். நேர்மையுடன், 'எனக்கு பதில் தெரியாது’ என்று சொல்லி கேள்வி தொடர்பான மற்ற கருத்துக்களை தரலாம்.

சில சமயம் இன்டெர்வியூ முடிவில் உங்களுக்கு கேள்வி அல்லது சந்தேகம் ஏதாவது உண்டா என கேட்கப்படலாம். அதற்காக தொடர்பே இல்லாத கேள்விகளை சம்பிரதாயத்திற்காக கேட்க வேண்டாம். வேலை அல்லது நிறுவனம் தொடர்பான உங்கள் கேள்விகளை கேட்கலாம். முடிவில் நன்றி சொல்லி விடைபெற மறக்காதீர்கள்.

(தயாராவோம்)

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

ஆண்டனி செல்வராஜ், நிர்வாக இயக்குநர்,

நிஸ்ட் இன்ஸ்டிடியூட் (NISt Institute)

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

சில படிப்புகளுக்கு இருக்கும் வாய்ப்புகளும், மதிப்புகளும் நமக்கு அவ்வளவாகத் தெரிவதில்லை. சமீப காலங்களில் அதிகரித்து வரும் தீ விபத்துகளால் 'ஃபயர் அண்ட் சேஃப்டி மேனேஜ்மென்ட்’ படிப்புக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. இந்த படிப்புக்கு குறைந்தபட்ச தகுதி என்ன? எங்கு படிக்க வேண்டும்? என்பதுபோன்ற விவரங்களைப் பார்க்கலாம்.

தீ விபத்து ஏற்பட்டால் அதனை எப்படி அணைக்க வேண்டும், கட்டடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் தீயணைப்பு உபகரணங்களை எப்படி பயன்படுத்த வேண்டும், தீ ஏற்படும்போது உள்ளே எந்த பகுதிகளில் சென்று அணைக்க வேண்டும், முதலுதவிகளை செய்வது எப்படி என்பது போன்ற பயிற்சிகள் இந்த படிப்பின் மூலம் அளிக்கப்படுகிறது.

இதற்கு ஏதாவது டிப்ளமோ அல்லது இளநிலை படித்திருந்தால் போதும். சார்ட்டர்டு இன்ஸ்டிடியூட் ஆஃப் என்வைரான்மென்டல் ஹெல்த், நேஷனல் எக்ஸாமினேஷன் போர்டு ஆஃப் ஆக்குபேஷனல் சேஃப்டி அண்ட் ஹெல்த் (NEBOSH), இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆக்குபேஷனல் சேஃப்டி அண்ட் ஹெல்த் (IOSH), பிரிட்டிஷ் சேஃப்டி கவுன்சில், இன்டெர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ரிஸ்க் அண்ட் சேஃப்டி மேனேஜ்மென்ட் போன்ற அமைப்புகள் இந்த படிப்புக்கான சான்றிதழை வழங்குகிறது. ஒரு நாள், ஒரு வாரம் என குறைந்த கால அளவில் இந்த கோர்ஸ்களை படிக்க முடியும்.

வேலைவாய்ப்பு எப்படியிருக்கும்?

இப்போது பெரிய பெரிய நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் சேஃப்டி ஆபீஸர், சேஃப்டி டிரெயினர், சேஃப்டி மேனேஜர்ஸ் போன்ற ஆட்களை நியமிக்கிறார்கள். நிறுவனத்தில் திடீரென ஏற்படும் தீ விபத்துகளின்போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்கவே இந்த பணிக்கு ஆட்களை நியமிக்கிறார்கள். வெளிநாடுகளிலும் இந்த படிப்புக்கு வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. இந்த படிப்பை பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரிவதில்லை. ஆர்வப்பட்டு படிக்கவும் வருவதில்லை. அதனால் வருங்காலத்தில் நல்ல வாய்ப்புகளை வழங்கும் படிப்பு இது.

- பானுமதி அருணாசலம்

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!