இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!


கல்லூரி வாழ்க்கைக்கும், பணி வாழ்க்கைக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. கல்லூரித் தேர்வில் நீங்கள் வெற்றி பெற பாடப் புத்தகத்தைக் கற்பது அவசியம். அதேபோல, வாழ்க்கைத் தேர்வில் வெற்றியடைய நீங்கள் உங்களைச் சுற்றி இருக்கும் மனிதர்களை புரிந்துகொள்வது அவசியம்.

நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்தி ருந்தால் நீங்கள் படிப்பறிவில் சூப்பர் ஸ்டார்; அதேபோல உங்களுக்கு நிறைய மனிதர் களைத் தெரிந்திருந்தால் நீங்கள் பட்டறிவில் சூப்பர் ஸ்டார். நிஜ உலகில் முன்னேற உங்களுக்கு என்ன தெரிந்திருக் கிறது என்பதைவிட, யாரை தெரிந்திருக்கிறது என்பதே முக்கியம். நீங்கள் அறிவில் தீபத்தைப் போல பிரகாசமானவராக இருந்தாலும், சரியான நபர்களின் மத்தியில் சரியான நேரத்தில் உங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வருவதன் மூலம் அவை குன்றின் மேலிட்ட விளக்காக எல்லோராலும் போற்றப்படும்.
எடுத்துக்காட்டாக, நல்ல கல்லூரியில் பயில்வதன் மூலம் உங்கள் அறிவுக்கூர்மை அதிகரித்து திறன்கள் மெருகேறும். அதோடு மட்டுமல்லாமல், அக்கல்லூரியில் பயின்று தற்போது நல்ல நிலையில் உள்ள முன்னாள் மாணவர்களின் மூலம், நல்ல நிறுவனங்கள் கேம்பஸ் மாணவர் தேர்வுக்கு வரவும் வாய்ப்புண்டு. இதன் மூலம் உங்கள் வேலைவாய்ப்புகளும் பெருகும். எனவேதான், நல்ல வேலையைப் பெற அறிவுக்கூர்மையோடு, நல்ல பெயரும் தரமும் உடைய கல்லூரியில் படிப்பதும் அவசியம்.
##~## |
இதில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், பிறரை காக்காய் பிடிக்கும் திறமை அல்ல. உங்கள் உண்மையான திறன்களையும், குணநலன்களையும் வைத்து பிறரை நட்பாக்கிக் கொள்வது. ஏனெனில், நல்லவர் போல போலியாக நடித்து, பிறர் சொல்வதற்கெல்லாம் ஆமாம் போட்டு யாரையும் நட்பாக்கிக் கொள்ள முடியாது. அப்படி நடந்தாலும் அந்த உறவு நீண்டநாள் நீடிக்காது. எனவே, உங்கள் வளர்ச்சிக்கு உதவக்கூடிய நட்பு வட்டத்தை உறுதியாக்கிக் கொள்ள சில நேர்மையான வழிமுறைகள் இனி:

• நேர்மையோடும், நம்பகத் தன்மையோடும் பிறரோடு பழகுங்கள். அப்போதுதான் அதே குணமுடைய நபர்களை உங்கள் நண்பர்களாகப் பெற முடியும். ஏனெனில் அத்தகைய நண்பர்களே உங்கள் வளர்ச்சிக்கு சரியான நேரத்தில் உதவுவார்கள்.
• பதவி, அதிகாரம் இவற்றைக் கடந்து அலுவலகத்தில் உள்ள அனைவரிடமும் நட்போடும், மதிப்பளித்துப் பழகுங்கள். இது பணியிடத்தில் உங்களுக்கு நன்மதிப்பை பெற்றுத் தரும். இதனால் தேவையின்போது உங்களுக்கு அனைவரும் உதவிக்கரம் நீட்டுவார்கள்.
• உங்கள் சகபணியாளர்களின் பிரச்னைகளை உண்மையான அக்கறையோடு காது கொடுத்து கேளுங்கள். உங்கள் சக்திக்கு ஏற்ப அவர்களுக்கு உதவுங்கள். உங்களால் முடிந்த அளவு அவர்கள் நலத்தில் அக்கறைச் செலுத்துங்கள். இது உங்களுக்கு ஆழமான நட்பை பெற்றுத் தருவதோடு உங்கள் தேவையில் உதவும் நல்ல நண்பர்களையும் தரும்.
• வேலையில் நேர்த்தி, காலம் தவறாமை, அறிவுத்திறன் போன்ற குணங்களின் மூலம் அலுவலகத்தில் உங்களுக்கென ஒரு நல்ல அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
• ஒரே துறை அல்லது ஊரைச் சார்ந்தவர்கள் என உங்கள் நட்பை சிறிய வட்டத்துக்குள் அடக்கி விடாமல், அலுவலகத்தில் உள்ள எல்லோரிடமும் நட்போடு பழகுங்கள்.
மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் அலுவலகத்திற்குள்ளே நம்பகமான நண்பர்கள் கிடைப்பதோடு, மேலதிகாரி உங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையும் உயரும். ஆனால், உங்கள் நீண்ட பணி வாழ்வின் நீடித்த வளர்ச்சிக்கு இது மட்டுமே போதாது. உங்கள் அலுவலக எல்லைகளை கடந்து பணி சார்ந்த உறவுகளை (Professional Relationships) பெருக்கிக் கொள்வதும் அவசியமானதாகும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை:
• நீங்கள் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்ட போதிலும், உங்கள் பேராசிரியர்களோடும், முன்னாள் வகுப்பு தோழர்களோடும் தொடர்பில் இருங்கள். தொழில் உலகில் உள்ள உங்கள் பழைய வகுப்பு தோழர்கள் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களை பெற முடியும்.
• நீங்கள் புதிய நிறுவனத்திற்கு வேலை மாறும்போது பழைய அலுவலக நண்பர்களோடும், மேலதிகாரிகளோடும் தொடர்பில் இருக்க முயற்சி செய்யுங்கள். இது சில சமயம் உங்கள் துறை அல்லது பணிச் சார்ந்த தகவல்கள் தேவைப் படும்போது உதவியாக இருக்கும். உங்கள் முன்னாள் மேலதிகாரியின் நன்மதிப்பை தக்க வைத்துக் கொள்வது உங்கள் பிற்கால வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

• உங்கள் துறை சார்ந்த பேரவைகளிலும், கூட்டமைப்பு களிலும் உறுப்பினர் ஆவது மற்ற நிறுவனங்களில் உள்ள மேலாளர்களோடு உங்களுக்கு தொடர்பை ஏற்படுத்தும். இது கருத்து பரிமாற்றத்துக்கு மட்டுமின்றி, புதிய வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை பெறவும் உதவும். இத்தகைய கூட்டமைப்புகள் உங்கள் அறிவையும், திறன்களையும் வளர்க்க உதவும் களமாக மட்டுமல்லாமல் அவற்றை (பிறர் கவனிக்கும்படியாக) வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
குறிப்பாக, அத்தகைய அமைப்புகளில் நிர்வாகப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வது, புதிய நிகழ்ச்சி களை ஏற்பாடு செய்வது, நல்ல தலைப்புகளில் உரை நிகழ்த்து வது போன்ற செயல்களின் மூலம் உங்கள் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துங்கள். மேலும், இத்தகைய அமைப்புகளில் உங்கள் மதிப்பீடுகளோடு ஒத்துப் போகிற நபர்களோடு உங்கள் நட்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ளுங்கள்.
• உங்கள் துறை சார்ந்த மாநாடுகள், நிகழ்ச்சிகள், பயிற்சி வகுப்புகள் போன்றவற்றில் வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் கலந்து கொள்ளத் தவறாதீர்கள். இதன் மூலம் உங்கள் துறை சார்ந்த முக்கியமான நபர்களோடு நீங்கள் அறிமுகம் ஆகும் வாய்ப்புகள் கிடைக்கலாம். இந்த அறிமுகம், உறவாக வலுப்பெற்றால் அது உங்கள் உயர்வுக்கு மிகவும் உதவும். அத்தகைய அறிமுக நிகழ்வு களில் நீங்கள் ஏற்படுத்தும் முதல் தாக்கம் (First Impression) மிகவும் முக்கியம்.
நல்ல தாக்கத்தை ஏற்படுத்த நீங்கள் முதலில் செய்ய வேண்டியது:
1. உறுதியான கை குலுக்கல் 2, மிடுக்கான நடையுடை, 3. மலர்ந்த தன்னம்பிக்கை தவழும் முகம். 4. நேர்த்தியான வார்த்தை உச்சரிப்பு, 5. பிறர் கூறுவதைக் கவனத்தோடும் அக்கறையோடும் கேட்கும் திறன்.
நல்ல அறிமுகத் தாக்கத்தை உறவாக மாற்ற நீங்கள் அவர் களோடு தொடர்பில் இருப்பது அவசியம். புதிய நண்பர்களோடு மட்டுமல்ல, பழைய நண்பர்களோடும் தொடர்பில் இருக்க அவர்கள் நலம் அறிய மின்னஞ்சல் செய்யுங்கள். உங்கள் துறை சார்ந்த நல்ல கட்டுரைகளோ, வேலை வாய்ப்பு செய்திகளோ உங்களிடம் இருந்தால் அதை அவர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். குறைந்தபட்சம் பண்டிகை அல்லது பிறந்த நாள் வாழ்த்துக் களையாவது தெரியப் படுத்துங்கள். இது உங்களுக்கிடையே உள்ள உறவு இழை அறுந்துவிடாமல் இருக்க உதவும்.
(தயாராவோம்)

|

இப்போது வீடுகள் கட்டுவதற்கு அதிகமாகச் செலவு செய்வதைவிட இன்டீரியர் டிசைனுக்கு செலவு செய்வது அதிகமாகிவிட்டது. வீடு மட்டுமல்லாமல் அலுவலகம், ரெஸ்ட்டாரன்ட், நகைக் கடைகள் என அனைத்து இடங்களிலும் இன்டீரியர் டிசைன் செய்வதற்கு அனைவரும் ஆர்வமாக இருக்கிறார்கள். இது தொடர்பான படிப்பு எங்கு, எப்படி படிக்க வேண்டும் என இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன், டீன் மைதிலி விவரமாக கூறுகிறார். ''அடிப்படையில் கற்பனைத் திறன் அதிகமுள்ளவர்கள் இன்டீரியர் டிசைன் படிப்பை படிக்கலாம். இதற்கு குறைந்தபட்ச தகுதி பன்னிரண்டாம் வகுப்பு. இந்த வகுப்பு முடித்தவர்கள் ஒரு வருடம் டிப்ளமோ இன் இன்டீரியர் டிசைன் படிப்பை படிக்கலாம். தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே வகுப்புகள் என்பதால் பணிபுரிபவர்கள்கூட பகுதி நேரமாக இந்த படிப்பை படிக்கலாம். கட்டடத்தின் வரைபடம், பிளானிங் முதல் ஃபர்னிச்சர்களின் வகைகள் அதன் வண்ணங்கள் என அனைத்து அடிப்படை விஷயங்களும் முதல் செமஸ்டரில் கற்றுக் கொடுப்போம். இரண்டாவது, செமஸ்டரில் கட்டடத்தின் வண்ணம், பிளம்பிங், லைட்டிங், செடிகள் அமைப்பது என அனைத்து விஷயங்களும் கற்றுக் கொடுப்பதுடன், மாணவர்கள் புராஜக்ட் செய்து தங்களது கற்பனைத் திறனை வெளிப்படுத்து வார்கள். வீடுகளுக்கு மட்டுமல்லாது நகைக் கடைகள், துணிக்கடைகள், கார்ப்பரேட் அலுவலகங்கள், லேப்டாப் நிறுவனங்கள், எலெக்ட்ரானிக் ஷோரூம்கள் என அனைத்து இடங்களுக்கும் தகுந்த டிசைன்களை எப்படி செய்தால் வாடிக்கையாளர்களை கவரலாம் என கற்றுக் தருகிறோம். ஒரு வருட படிப்பு முடிந்ததும் ஐ.எஸ்.ஐ. அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்குகிறோம்'' என்றார். வேலைவாய்ப்பு? கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனங் கள், பெரிய இன்டீரியர் டிசைன் நிறுவனங்கள் மட்டுமல்லாது, தனியாக பிஸினஸ் செய்யவும் இந்த படிப்பு உதவுகிறது. உள்நாட்டில் மட்டுமல்லாது, வெளிநாட்டிலும் வேலை வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது இந்த படிப்புக்கு. உங்கள் கற்பனைத்திறனைப் பொறுத்து சம்பளம் கிடைக்கும். -பானுமதி அருணாசலம். |
