மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!
இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

திருமண வாழ்வில் மிக முக்கியமான காலகட்டம் எது தெரியுமா? முதல் மூன்று வருடங்கள்தான். ஏனெனில் தம்பதிகளுக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளாலும் புரிந்து கொள்ளுதலில் உள்ள பிரச்னைகளாலும் விவாகரத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு இந்த மூன்று வருடங்களில்தான் அதிகம் என உளவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

து மணவாழ்வுக்கு மட்டுமல்ல, பணி வாழ்வுக்கும் பொருந்தும். ஏனெனில், முதல் நிறுவனத்தில் மூன்று வருடத்திற்குமேல் பணியில் தொடரும் இளைஞர் களின் எண்ணிக்கை சமீப காலமாக குறைந்து கொண்டே வருவது நிதர்சனமான உண்மை. இதற்கு அத்தாட்சி பல மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் மூன்று வருடத்திற்கு மேல் பணியில் தொடரும் பணியாளர்களுக்கு 'நீண்ட நாள் சேவை’ விருது தருகின்றன!

பணி வாழ்வில் புதிதாக காலடி எடுத்து வைக்கும் இளைஞர்கள் தங்கள் முதல் வேலையின் சூட்சுமங்களையும், பணிச் சூழலின் நெளிவுசுளிவு களையும் அறிந்து கொண்டு தங்கள் நிறுவனத்தில் வேர்விடத் தொடங்க குறைந்தபட்சம் இரண்டு வருடங்களாவது ஆகும். இந்த காலகட்டத்தில் அவர்கள் பணி இடத்தோடு ஒன்றிணைந்து செல்லும்பட்சத்தில் மூன்று வருடத்தில் அவர்கள் தங்கள் முழுமையான செயல்திறனை எட்ட முடியும்.

##~##
அதேசமயம், அவர்கள் எதிர்பார்ப்புகளும், திறமைகளும் நிறுவனச் சூழலோடு ஒன்றிணைந்து செல்லாதபட்சத்தில் இந்த காலகட்டத்துக்குள் அவர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாற நேரிடலாம். பெரும்பாலானவர்கள் பணி மாறுவதற்கு முக்கியமான காரணம் வேறு நிறுவனங்களில் கிடைக்கும் ஊதிய உயர்வு என்ற போதும், பணம் மட்டுமே பணியாளர்களை வேறு நிறுவனங்களை நோக்கி இழுப்பதில்லை. மனஅழுத்தம் தரும் பணிச் சூழல், பணி உயர்வுக்கான வாய்ப்பின்மை, தகுதி திறன்களுக்கு ஏற்பில்லாத வேலை போன்ற காரணங்களும் பணியாளர்களை வேறு நிறுவனங்களை நோக்கி தள்ளுகின்றன.

வேலையிடத்திலோ, செய்யும் பணியிலோ வெளிப்படையான பெரிய பிரச்னைகள் இல்லாதபோதும் சிலருக்கு ஒரு மேலோட்டமான சலிப்புத்தன்மையோ, மாறுதல் நோக்கும் மனப்பான்மையோ ஏற்படுவது உண்டு. சில சமயங்களில் இந்த மேலோட்டமான உணர்வுகளுக்கு பின்னால் பிரித்துணர முடியாத சில ஆழமான காரணங்களும் இருக்கலாம். எனவே, இப்படிப்பட்ட உணர்வுகள் ஏற்படும்போது அவற்றை உதாசீனப்படுத்தாமல் அவற்றுக்கான உண்மையான காரணங்களை உங்களுக்குள் தேடுங்கள்.

குறிப்பாக, உங்கள் அதிருப்திக்குக் காரணம் நீங்கள் செய்யும் பணியா? அல்லது பணிபுரியும் இடமா? என்பதில் தெளிவு அவசியம். ஏனெனில், உங்கள் அதிருப்திக்குக் காரணம் நீங்கள் செய்யும் பணியின் தன்மையாக இருக்கும் பட்சத்தில் எத்தனை நிறுவனங்கள் மாறினாலும் அது பயன் தராது. இதை புரிந்து கொள்ளாத இளைஞர்கள் பலர் தங்கள் பணியில் சலிப்படைந்த போது, புதிய நிறுவனத்தில் அதிக சம்பளத்துக்கு வேலை மாறுவதின் மூலம் இந்த சலிப்பு போய்விடும் என்று நினைத்து நிறுவனத்துக்கு நிறுவனம் அடிக்கடி தாவுகின்றனர். நீங்கள் செய்யும் பணியோ அல்லது துறையோ உங்கள் ஆளுமைக்கும் குணத்திற்கும் ஏற்பில்லாதபட்சத்தில் நீங்கள் உங்கள் பணி வாழ்வின் பாதையை மாற்றுவது குறித்து சீரியஸாக யோசிக்க வேண்டும்.

பணிப் பாதை மாற்றம் (Career Change) குறித்து யோசிப்பவர்கள் மனதில் முதலில் தோன்றும் வழி, மேற்படிப்புக்குச் செல்வது. குறிப்பாக, மேலாண்மை சார்ந்த எம்.பி.ஏ. போன்ற படிப்புகளுக்கான மவுசு இன்றைய இளைஞர்களிடையே அதிகமாகி வருகிறது. எம்.பி.ஏ. வில் சேர முடிவெடுப்பதற்கு முன் நீங்கள் சில விஷயங்களில் தெளிவாக இருப்பது அவசியம். அவை:

1. நீங்கள் எம்.பி.ஏ. சேர்வதற்கான காரணம், தற்போதைய துறையில் உங்கள் வளர்ச்சியின் வேகத்தை அதிகப் படுத்தவா? அல்லது வேறு துறைகளில் கால் பதிக்கவா?

2. நீங்கள் எந்த துறையில் எம்.பி.ஏ. படிக்கப் போகிறீர்கள் (Specialisation), அதற்கான காரணம் அந்தத் துறையில் உங்களுக்குள்ள ஆர்வமா? அல்லது அதிக வருமானத்துக்கு வாய்ப்பு தரும் துறை என்பதாலா?

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

3. நீங்கள் எந்தக் கல்வி நிறுவனத்தில் சேர விரும்புகிறீர்கள்? ஏனெனில், தரமற்ற நிறுவனத்தில் எம்.பி.ஏ. பயில்வதால் எந்தப் பயனும் இல்லை. அதே சமயம் நல்ல கல்வி நிறுவனங்களில் நுழைவுத்தேர்வு அல்லது அதிக கல்விக் கட்டணம் போன்ற தடைகள்தான் இருக்க வாய்ப்புண்டு.

4. நீங்கள் முழுநேர எம்.பி.ஏ. சேரப் போகிறீர்களா? அல்லது தொலைதூரக் கல்வி, பகுதி நேர எம்.பி.ஏ.வில் சேர விருப்பமா? முழுநேர எம்.பி.ஏ. சேரும்பட்சத்தில் வேலை இல்லாததால் ஏற்படும் பொருளாதாரச் சுமையை உங்களால் ஏற்க முடியுமா? பகுதி நேர எம்.பி.ஏ. என்னும் பட்சத்தில் வேலைப்பளுவை சமாளிக்கும் திறன் உங்களுக்கு உண்டா?

அறிவியல் தொழில்நுட்பத் துறையில் வேகமாக முன்னேற நினைப்பவர்களுக்கும் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையில் நுழைய நினைப்பவர்களும் MS (Mastor of Science) அல்லது பிஹெச்.டி. போன்ற உயர் படிப்புகளிலும் கவனம் செலுத்தலாம். முன்பு சொன்னது போலவே, எந்த கல்வி நிறுவனம், பகுதி நேரமா, முழு நேரமா போன்ற கேள்விகளுக்கான பதில் இதிலும் முக்கியம். எம்.பி.ஏ. அல்லது ஆராய்ச்சி பட்ட மேற்படிப்புகள் தவிர, பகுதி நேர பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளும் பணிப் பாதை மாற்றத்துக்கு உதவும்.

சில சமயங்களில் உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால்கூட குடும்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைச் சார்ந்த சூழல் களால் பணிப் பாதை மாற்றம் ஏற்படலாம். குறிப்பாக, கணவன், மனைவிக்கு ஏற்படும் பணி மாறுதல், பிள்ளைப்பேறு, வயதான பெற்றோர்களை கவனிக்க வேண்டிய அவசியம், உடல்நலக் குறைவு போன்ற காரணங்களால் சிலருக்கு வேலைப் பளு குறைவான அல்லது நெகிழ்வான வேலை களில் சேரும் நிர்ப்பந்தங்கள் ஏற்படக்கூடும். இத்தகையச் சூழ்நிலை உங்களுக்கு ஏற்பட் டால் நீங்கள் மனம் தளர வேண்டாம்.

ஏனெனில், மேலை நாடு களைப் போல் இந்தியாவிலும், பகுதி நேர வேலைவாய்ப்புகள், தற்காலிக புராஜெக்ட்கள், தன்னிச்சையாக வேலை செய்யக் கூடிய வாய்ப்புகள் (Freelancing) போன்றவை அதிகரித்து வருகின்றன.

இது தவிர, சிலருக்குச் சொந்தமாக தொழில் முனையும் ஆர்வமும், லட்சியமும் பணி மாற்றத்துக்கான காரணமாக மாறலாம். தொழில் முனைவர் கள் அனைவருமே வெற்றியும் அடைவதில்லை. வேகமாக வளர்வதற்கான வாய்ப்பு, சொந்தமாக ஒன்றை நிறுவி அதை வளர்ப்பதில் உள்ள மனநிறைவு, சுயமாகச் செயலாற்றக்கூடிய சுதந்திரம் என பல நிறைகள் இருந்தாலும், நீங்கள் தொழில்முனைவராக முடிவு எடுக்கும்பட்சத்தில் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். குறிப்பாக, பெரும்பாலான புதிய தொழில் முயற்சிகள் முதல் ஒரு வருடத்துக்குள்ளேயே தோல்வியைத் தழுவுகின்றன என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

எனவே, அந்த காலகட்டத்தில் சரியான திட்டமிடுதலோடும், தோல்வியைத் தாங்கும் மனஉறுதியோடும், விடாமுயற்சியோடும் நீங்கள் செயலாற்ற வேண்டியது அவசியம். மேலும், பணிப் பாதை மாற்றம் குறித்து நீங்கள் முடிவு எடுக்கும்போது உங்கள் குடும்பத்தினரையும் கலந்து ஆலோசனை பெறுங்கள். ஏனெனில், பிரச்னைகள் ஏற்படும் போது குடும்பத்தினரின் உணர்வு ரீதியான ஊக்கம் மிகவும் அவசியம். எல்லாவற்றுக்கும் மேலாக, உங்கள் மனம் சொல்வதைக் கேட்கும் உறுதியையும் அதை அறிவுப்பூர்வமாக, நடுநிலையோடு அணுகும் தெளிவையும் வளர்த்துக் கொள்ளுங் கள். ஏனெனில், குறிக்கோள்களில் தெளிவும் உறுதியும் இருந்தால் உங்களால் வள்ளுவர் சொன்னபடி இடும்பைக்கே இடும்பை தரமுடியும்.

(அடுத்த இதழுடன் நிறைவடைகிறது)

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!


மருத்துவப் படிப்புகள்!

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

ந்தியாவில் அதிவேகமாக வளர்ந்துவரும் துறைகளில் ஒன்று மருத்துவத் துறை. மருத்துவத் துறையில் டாக்டர் மற்றும் செவிலியர் படிப்பு மட்டுமே படிக்க நினைக்கிறார்கள் பலர். இதில்லாமல் பல சின்ன சின்ன படிப்புகளும், அதற்குத் தகுந்த வேலைகளும் கொட்டிக் கிடக்கின்றன. லேப் டெக்னீஷியன், டிப்ளமோ இன் டயாலிசிஸ் டெக்னாலஜி, எக்ஸ்-ரே டெக்னாலஜி, டிப்ளமோ இன் ரேடியாலஜி போன்ற பல படிப்புகள் இருக்கின்றன. பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் இந்த படிப்புகளைப் படிக்கலாம். அதிகபட்சமாக இந்த படிப்புகள் படிக்க ஒரு வருடம் ஆகும்.

வேலைவாய்ப்பு?

அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் பல கார்ப்பரேட் தனியார் மருத்துவமனைகள் இன்று வரத் தொடங்கிவிட்டன. இந்த மருத்துவமனைகளில் எல்லாம் லேப் டெக்னீஷியன் போன்ற பணிகளுக்கு நல்ல சம்பளத்துடன் வேலைக்கு எடுக்கிறார்கள். மேலும், நன்கு அனுபவம் கிடைத்த பின்பு சொந்தமாக லேப் தொடங்கவும் வாய்ப்புண்டு. எக்ஸ்-ரே டெக்னீஷியனாகப் பணிபுரிய மாதம் 8,000 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். இங்கு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

-பானுமதி அருணாசலம்

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!