மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!
இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

''புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை; வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை''. வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு அறிவுக்கூர்மை மட்டுமே போதாது என்பதைச் சொல்லும் கண்ணதாசனின் அற்புதமான வரிகள் இவை.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

றிவு ஒரு அற்புதமான ஆயுதம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், அந்த ஆயுதத்தை சரியானபடி பயன்படுத்த மனஉறுதி, ஊக்கம், அறிவு முதிர்ச்சி போன்ற உளம் சார்ந்த விஷயங்கள் அவசியம். இதைத்தான் வள்ளுவர் சுருக்க மாக ''உள்ளத் தனையது உயர்வு'' என்று சொல்கிறார்.

உலகில் உள்ள அனைவருமே வெற்றிக் கோட்டை நோக்கியே ஓட விரும்புகிறோம். ஆனால், நாம் அடைய நினைக்கும் வெற்றிக்கோடு என்ன? அதை அடைவதன் மூலம் நமக்கு முழுமையான மகிழ்ச்சி கிடைக்குமா என்பது போன்ற அடிப்படை கேள்விகளை கேட்காமலேயே பெரும் பான்மையினர் ஓடும் திசை நோக்கியே நாமும் ஓடிக் கொண்டிருக்கிறோம். எனவே முதலில், மந்தை மனப்பான்மையில் இருந்து விலகி நின்று, உங்களைப் பொறுத்தவரை வெற்றி என்றால் என்ன? நீங்கள் எதைச் சாதிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டுக் கொள்ளுங்கள். வாழ்க்கை என்பது நூறு மீட்டர் ஓட்டப் பந்தயமா அல்லது                        40 கி.மீ. மாரத்தான் போட்டியா? என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் இவற்றில் வெற்றி பெற வெவ்வேறு வகையான திறன்கள் தேவை.

##~##
100 மீட்டர் போட்டியில் நீங்கள் மற்றவர்களோடு போட்டியிடுகிறீர்கள். ஆனால், மாரத்தான் போட்டியில் நீங்கள் உங்கள் மனஉறுதியோடு போட்டியிடுகிறீர்கள். எனவே, அது உங்கள் மனஉறுதிக்கான சவால். பணம், பதவி, அதிகாரம் போன்றவற்றை லட்சியங்களாக கொள்வதில் தவறில்லை. ஆனால், வாழ்க்கை முழுவதும் அவற்றை நோக்கி மட்டுமே ஓடுவது உங்களை குறுகிய வட்டத்துக்குள் அடக்கிவிடும். செய்யும் செயலில் புதுமை, நேர்த்தி, ஏற்றுக்கொண்ட பொறுப்பில் முழு அர்ப்பணிப்போடு செயல்படுதல், உங்களை சுற்றியிருப்பவர்கள் மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்தல் போன்றவற்றை குறிக்கோள்களாகக் கொள்ளும் போது பணம், பதவி, அதிகாரம் போன்றவை தானாக உங்களை வந்து சேரும்.

சுருக்கமாகச் சொல்வதென் றால், உங்கள் வாழ்க்கையை வெற்றி, தோல்வி என்று அணுகாமல், அதை முழுமை நோக்கிய பயணமாக கருதுங் கள். ஏனெனில், வாழ்க்கையை வெற்றி-தோல்வி என்று அணுகி னால் போட்டி மனப்பான்மை, பதற்றம், பொறாமை, வெற்றியில் கர்வம், தோல்வியில் தாழ்வு மனப்பான்மை போன்ற மனம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும். வாழ்க்கையை முழுமை நோக்கிய பயணமாக கருதும்போது மற்றவர்களை போட்டியாளர்களாக கருதாமல் சக பயணிகளாக கருதுவீர்கள். இதனால் அமைதி, மகிழ்ச்சி, கூட்டுறவு, பதற்றம் இன்மையால் செய்யும் செயலில் நேர்த்தி, இன்ப-துன்பங்களில் சலனப்படாத மனநிலை என பல நன்மைகள் ஏற்படும்.

முழுமையை நோக்கிய இந்த பயணத்தில் உங்களுக்கு தேவையான மிக முக்கியமான குணம், நம்பிக்கை. உங்கள் மீதும், மனிதர்களின் மீதும், இயற்கை/கடவுளின் மீது நம்பிக்கை வைப்பது வாழ்கைப் பயணத்தில் ஏற்படும் மேடு பள்ளங்களை அதிக துன்பம் இன்றி கடக்க உதவும். வாழ்க்கைப் பயணத்தில் தோல்விகள், தடைகற்கள், அவமானங்களை சந்திக்கும் போதும், என்னால் இவற்றை கடந்து வரமுடியும்; நான் இதைவிட மேலான நிலைக்கு தகுதியானவன்(ள்) என்ற தன்னம்பிக்கை உணர்வு ஏற்படும்போது, எந்த தடை கற்களையும் எளிதில் கடந்து வர முடியும்.

மேலும், முழுமை யான சுயமதிப்பும் தன்னம்பிக்கையும் உடையவர்களால் மட்டுமே பணம், அதிகாரம் என்ற குறுகிய வட்டத்துக்குள் சிக்கிவிடாமல் பெரிய லட்சியங்களை நோக்கி முன்னேற முடியும். மனிதத்தின் மீது நம்பிக்கை கொள்வது, இந்த வாழ்க்கைப் பயணத்தில் நல்ல நண்பர்களை பெற்றுத் தரும். மனிதத்தின் மீது நம்பிக்கை வைப்பது என்பதை மற்றவர்களை உணர்வு ரீதியாக சார்ந்து இருக்கும் நிலை (Emotional dependence) என்று சிலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். இதனால் தான் நம்பிக்கைத் துரோகங் களை சந்திக்கும்போது உறுதியாக இருந்தவர்கள் பலவீனர்களாகி விடுகிறார்கள். அல்லது மென்மையான உள்ளம் கொண்டவர்கள் கசப்புணர்வினால் மனம் இறுகி விடுகிறார்கள்.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

மனிதத்தின் மீதான உண்மையான நம்பிக்கை என்பது கருணை மற்றும் நன்மையின் மீது கொண்ட பிடிப்பினை அடிப்படையாக கொண்டது. இதன் வெளிப் பாடே 'இன்னா செய்தார்க்கு இனியவை’ செய்யும் குணம். மேலும், மனிதத்தின் மீது அவநம்பிக்கை கொண்டால் அது உங்கள் உடல் மொழியில் வெளிப்படும். அது மற்றவர் களிடம் நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களிடம் உங்கள் மீதான வெறுப்பை உருவாக்கும்.

தன்னம்பிக்கையின் மற்று மொரு வெளிப்பாடே நன்மை யின் மீதான நம்பிக்கை. நன்மை மீதான நம்பிக்கைக்கு (பிஷீஜீமீ) கடவுள் மீதான நம்பிக்கை இருக்க வேண்டும் என அவசியமில்லை. இயற்கையின் சார்பு நன்மையின் பக்கமே என்ற நம்பிக்கையே சமூக வாழ்வின் அடிப்படை. இது தான் 'வாய்மையே வெல்லும்’ என்பதின் அடிப்படையும்கூட. இதில் உறுதியான பிடிப்பு இருந்தால் உங்கள் வாழ்க்கையில் எது பொய்த்தாலும் வாழ்க்கை பயணத்தைத் தொடர்வீர்கள்.

வாழ்க்கைப் பயணத்தில் குழப்பமும் இருளும் சூழும் போது, நீங்கள் நினைவில் நிறுத்தி கடைப்பிடிக்க வேண்டிய விஷயம், 'மதிப்பளித்தல்’. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கண்டிப்பாக மதிப்பளிக்க வேண்டிய நபர் யார் தெரியுமா? அது நீங்களேதான். சுயமதிப்பு இருந்தால் மட்டுமே நீங்கள் உங்கள் உணர்வுகளுக்கும், தேவைகளுக்கும் உண்மையாக இருப்பீர்கள். இந்த தெளிவு உங்கள் பாதையில் ஏற்படும் குழப்பங்களைத் தீர்க்க உதவும். உண்மையில் தன்னை மதிப்பவர்களால் மட்டுமே பிறரை மதிக்க முடியும். பிறரை மதிப்பவர்களால் மட்டுமே நியாய உணர்வோடும், அன்போ டும் நடந்து கொள்ள முடியும்.

மனிதர்களை மதிப்பதின் அடுத்த நிலை மற்ற எல்லா உயிரினங்களையும் மதிப்பது. இந்த பூமிக்கு நாம் மட்டுமே காணும் இயற்கை சீரழிவுகள் மற்ற உயிரினங்களுக்கு அவசியம் இல்லாமல் தீங்கு அளிப்பதைத் தவிர்த்தால் மட்டுமே நாம் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ முடியும்.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

இயற்கையில் நாம் சிறு அங்கம் என்ற உணர்வு தன்னடக்கத் தையும், அன்பு நிலையையும் தரும். மதிப்பளித்தலின் உயர்நிலை உயிரற்ற பொருட்களுக்கும் மதிப்பு அளிப்பது. இது நம் வாழ்வில் பொருட்களின் தேவையற்ற பயன்பாட்டை குறைக்க உதவும். பொருட்களையும், இயற்கை வளங்களையும் வீணடிப்பவர் கள் அந்த பொருளுக்கு தர வேண்டிய உண்மையான மதிப்பை தராத வர்கள். இத்தகையவர் களால்தான் நுகர்வோர் கலாசாரம் பெருகி உலகமே அவர்கள் வீசும் குப்பைக்கான தொட்டியாகி வருகிறது. பொருட்களுக்கு மதிப் பளிப்பதன் மூலம் இயற்கை வளங்களை பாதுகாப்பதோடு உங்கள் பொருள் வளமும் அதிகரிக்கும். இதனால் நீங்கள் வளமோடு வாழ முடியும்.

கடந்த 25 வாரங் களாக சொந்த அனுப வத்தின் மூலமும், புத்தகங்களிலிருந்தும் நான் கற்றுக் கொண்ட விஷயங்களை உங்க ளிடம் பகிர்ந்து கொண் டேன். தன் அனுபவங் களில் இருந்து கற்றுக் கொள்பவர்கள் அறிவாளிகள். பிறர் அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்பவர்கள் மேதைகள். எனவே, வாழ்க்கையின் எத்த கைய உயரத்திற்குச் சென்றாலும் பிறரிட மிருந்து கற்றுக் கொள்ள தவறாதீர்கள். உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களை திறந்த மனதோடு உற்றுக் கவனிக்க கற்றுக் கொண்டால் நீங்கள் முழுமை நோக்கிய வாழ்க்கைப் பயணத் திற்கு ரெடிதான்.

வாழ்த்துக்கள்!

(முற்றும்)

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!


டிப்ளமோ இன் டூரிஸம் அண்ட் மேனேஜ்மென்ட்!

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

ந்தியாவின் சுற்றுலாத்துறை நல்ல வரவேற்பை பெற்றது. தினம் தினம் அதிகளவில் வெளிநாட்டவர்கள் இங்கு வந்து நம் நாட்டின் பெருமைகளையும், கலாசாரத்தையும் ரசித்து செல்கின்றனர். இந்த துறையில் இருக்கும் படிப்புகள் என்னென்ன? வேலைவாய்ப்புகள் எப்படி?

டூரிஸம் தொடர்பான படிப்புக்கு குறைந்தபட்ச தகுதி பத்தாம் வகுப்பே போதுமானது. பதினாறு வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். ஒரு வருடம், ஒன்பது மாதங்கள் என குறிப்பிட்ட மாதங்களில் படித்து முடிக்கும் டிப்ளமோ படிப்புகள் இருக்கின்றன. ஆங்கிலப் புலமை இந்த படிப்புக்கு மிகவும் தேவை. காரணம், வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளிடம் பேசுவதற்கான வாய்ப்பு ஏற்படும். இதற்கு ஆங்கிலப் புலமை தேவைப்படும். முழுவதும் தியரி வகுப்புகளை கொண்டது. மக்களுடன் நன்கு பழகும் குணம் கொண்டவர்கள், ஆங்கிலப் புலமை கொண்டவர்கள் இந்த படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.

வேலைவாய்ப்பு?

2016-ம் ஆண்டில் சுற்றுலாத் துறை 12% வளர்ச்சியை எட்டுமென கூறப்படுகிறது. இதன் மூலம் மட்டும் 25 மில்லியன் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என மத்திய சுற்றுலாத் துறை தெரிவித்திருக்கிறது. தனியார் நிறுவனங்கள் மட்டுமல்லாமல், அரசும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த அதிக கவனம் செலுத்தி வருவதால் இந்த துறையில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கும். நன்கு வளர்ந்து வரும் துறை என்பதால் சம்பளமும் குறைவில்லாமல் கிடைக்கும்.

- பானுமதி அருணாசலம்

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!