மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாணயம் ஜாப்: - திங்கள் குழப்பத்திற்குத் தீர்வு!

விடுமுறை ஹேங்க் ஓவர்!

நாணயம் ஜாப்: - திங்கள் குழப்பத்திற்குத் தீர்வு!
நாணயம் ஜாப்: - திங்கள் குழப்பத்திற்குத் தீர்வு!

னி, ஞாயிறு அன்று விடுமுறையை நன்றாக அனுபவித்துவிட்டு, திங்கட்கிழமை காலையில் சரியான நேரத்தில் யாரும் அலுவலகத்திற்கு வருவதில்லை. வந்தாலும் விறுவிறுவென வேலை செய்யத் தொடங்கிவிடுவதில்லை. அப்படியே தொடங்கினாலும், பழைய வேகத்தில் வேலைகள் நடப்பதில்லை. விடுமுறை ஹேங்க் ஓவரினால் இப்படி உருவாகும் பல்வேறு பிரச்னைகளுக்கு என்னதான் தீர்வு என்பதைச் சொல்கிறார் மதுரை தியாகராஜர் மேலாண்மைக் கல்லூரியின் மனித வளத் துறை தலைமை பேராசிரியர் மஞ்சுளா.

'இன்றைய கார்ப்பரேட் உலகில் பல ஊழியர்கள் இந்த பிரச்னையை சந்திக்கிறார்கள். இதை பிரச்னை என்று சொல்வதைவிட நம் அலட்சியம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த அலட்சியப்போக்கு தொடருமானால், வேலை செய்யும் நிறுவனத்தில் நம் மீதுள்ள மதிப்பும், மரியாதையும் பெரிய அளவில் குறையும்.

பெரும்பாலான அலுவலகங்களில் திங்கள் காலையில்தான் அடுத்த வாரப் பணிகளுக்கான கலந்துரையாடல் இருக்கும். மற்ற நாட்களில் நாம் தாமதமாகப் போனாலும் பரவாயில்லை; ஆனால் திங்கள் அன்று நாம் செய்யும் தாமதம் குழுவின் தலைமை வரை தெரியவரும். இது தலைமை அதிகாரிக்கு நம் மீதுள்ள மதிப்பைக் குறைக்கும். சம்பள உயர்வு, புரமோஷன் போன்ற நேரங்களில் காலதாமதம் என்கிற விஷயம் பெரிதும் பாதிக்கும்.

பொதுவாகவே அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு வெள்ளிக்கிழமை மாலையே விடுமுறை குதூகலம் தொடங்கிவிடுகிறது. விடுமுறை நாட்களில் என்ன செய்யலாம் என பக்காவாக பிளான் பண்ணும் அதே நேரத்தில், திங்கட்கிழமை காலையில் மீண்டும் அலுவலக வேலையை உற்சாகமாகச் செய்ய ஆரம்பிப்பதற்குத் திட்டமிட வேண்டும். அப்படி செய்தால், வேலையில் எந்தவித சுணக்கமும் வராது!  

வழக்கமாக அலுவலகம் கிளம்பும் நேரத்தைவிட திங்களன்று பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு முன்பாகவே அலுவலகத்திற்கு கிளம்பினால்தான் டிராஃபிக் நெரிசல் போன்ற பிரச்னையைத் தவிர்க்க முடியும். மற்ற நாட்களில் அலுவலகத்திற்குக் கொஞ்சம் தாமதமாகச் சென்றாலும் திங்களன்று சரியான நேரத்தில் செல்வது அவசியம்.

##~##
திருமணம், புதுமனை புகுவிழா போன்ற சமூக நிகழ்ச்சிகள் பெரும்பாலும் சனி, ஞாயிறுக்கிழமைகளில்தான் நடக்கின்றன. வார இறுதியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தவிர்க்க முடியாதவற்றில் மட்டும் கலந்துகொண்டுவிட்டு, தேவை இல்லாத நிகழ்ச்சிகளை தவிர்த்துவிடுவது நல்லது. வஞ்சனை இல்லாமல் யார், எந்த ஊரில் நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் மறுக்காமல் போய் வருகிறவர்கள் வார ஆரம்பத்திலேயே பல பிரச்னைகளை சந்திப்பார்கள். இதனால் அவர்களின் பெயர் அலுவலகத்தில் பாதிப்படையும்.

அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் திங்கள் காலையில் அதிகாலையிலேயே எழுந்துவிடுவது நல்லது. இதற்கு  ஞாயிற்றுக்கிழமை இரவு குறித்த நேரத்தில் படுக்கைக்குச் செல்வது அவசியம். வாரத்தின் முதல் நாள் காலையில் எழுந்து நீங்கள் தயாரானாலே போதும், அந்த வாரத்தை அதே வேகத்தில் ஓட்டிவிட முடியும். ஐந்து நிமிட உடற்பயிற்சியை திங்கள் காலை செய்தால், அன்று முழுவதும் நீங்கள் உற்சாகமாக இருக்கலாம்.

திங்கள் காலையில் எடுத்தவுடன் பெரிய, பெரிய வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யாமல், சுலபமான, சின்னச் சின்ன வேலைகளை செய்து முடிக்கலாம். பெரிய வேலைகளை செய்ய முடியாமல் மனச்சோர்வு ஏற்படுவதைவிட, சின்னச் சின்ன வேலைகளை சரியாகச் செய்து முடித்து மன தைரியத்தை வரவழைத்துக் கொள்ளலாம்.

அலுவலகம் செல்பவர்கள் வங்கி சார்ந்த பணிகள், மற்ற பொது வேலைகளை சனிக்கிழமைகளிலேயே முடித்துவிட்டால் திங்கள் காலையில் அதற்காக பரபரக்கும் அவசியம் இருக்காது. வங்கிக்குச் சென்றுவர தாமதமாகிவிட்டது என்கிற மாதிரியான காரணங்களை அலுவலகத்தில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படாது.

வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டிய வேலைகளை திங்கட்கிழமைக்குத் தள்ளிப்போடும் வழக்கமும் கூடவே கூடாது. ஒரே நாளில் இருநாள் வேலையைச் செய்வதால், தவறு ஏற்படலாம். இதனால் உயரதிகாரியிடம் திட்டு வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். வார இறுதி நாட்களில் எங்காவது வெளியூருக்குப் போவதைவிட குடும்பத்தினருடன் பொழுதைக் கழிப்பதன் மூலம் அந்த வாரம் முழுக்க குடும்பத்தினரின் அன்புப் பிடியிலிருந்து தப்பிக்க உதவியாக இருக்கும். நமக்குத் தேவையான சக்தியும் ரீசார்ஜ் ஆகும்.

கார்ப்பரேட் உலகில் திட்டமிடுதல் மிகவும் முக்கியம். திங்கள் காலையிலேயே அலுவலகம் செல்லும் முன் அந்த வாரத்திற்கான நம் பணியை திட்டமிட தொடங்கிவிட்டால்  தேவையில்லாத பரபரப்பை தவிர்க்க முடியும். மேலும் வீட்டிலேயே அலுவலக மூடிற்கு வந்துவிட்டால், விடுமுறை ஹேங்க் ஓவர் இருக்காது.  திங்கள் காலை அலுவலகம் போனவுடன் கம்ப்யூட்டர் பாஸ்வேர்டு மறப்பது உள்பட பல குழப்பங்கள் வரும். பாஸ்வேர்டை ரகசியமாக ஒரு இடத்தில் குறித்து வைத்திருப்பது நல்லது.

ஆக மொத்தத்தில், விடுமுறை என ஓவராக ஜாலியாக இருந்துவிடாமல்  அமைதியாகப் பொழுதைக் கழித்தாலே திங்களன்று உற்சாகமாக வேலையைத் தொடங்கலாம்.  

- ரா.அண்ணாமலை
படம்: எஸ்.கேசவசுதன்