மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாணயம் ஜாப்: வேலைக்குச் சேர நல்ல நிறுவனம் எது?

நாணயம் ஜாப்: வேலைக்குச் சேர நல்ல நிறுவனம் எது?

நாணயம் ஜாப்: வேலைக்குச் சேர நல்ல நிறுவனம் எது?

ன்றைய மாணவர்கள் கல்லூரிப் படிப்பை முடிப்பதற்கு முன்பே கல்லூரிகளில் நடக்கும்  நேர்முகத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வேலையுடனேயே வீடு திரும்புகிறார்கள். ஆனால், இந்த அதிர்ஷ்டம் எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை. கலைக் கல்லூரிகளில் படிக்கும் பலர் தங்களுக்கான வேலையை தாங்களே தேடிக்கொள்ள வேண்டிய நிலை. அப்படி தேடும்போது வேலை கிடைக்கிற நிறுவனத்தை தேர்வு செய்வதா அல்லது தனக்கான நிறுவனத்தை தேடி அலைவதா என்பதில் பெருங்குழப்பம். இந்த குழப்பத்தில் சிக்காமல், நமக்கான நிறுவனத்தை தேர்வு செய்யும்போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் மனிதவள மறுமலர்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர். கே.ஜாஃபர் அலி.

பணியிடத்து கலாசாரம்!

நாணயம் ஜாப்: வேலைக்குச் சேர நல்ல நிறுவனம் எது?

ஒரு நிறுவனத்தைத் தேர்வு செய்யும்போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது, 'பணியிடத்து கலாசாரம்’. ஒரு நாளில் எட்டு மணி நேரம் அலுவலகத்தில்தான் கழிக்கிறோம். இன்னும் சில நிறுவனங்களில் இதைவிட அதிக நேரம் செலவிடும்படியாக இருக்கும். அப்படி இருக்கும்போது அந்த பணியிடம் என்பது மிகச் சுதந்திரமாக இருக்க வேண்டும். வேலை செய்கிறோம் என்கிற அலுப்பு தெரியாமல் வேலையைக் கொண்டாடும்படியாக, நிறுவனத்தின் பணிச்சூழல் அமைந்திருக்க வேண்டும்.

சில நிறுவனங்கள் ஊழியர்களின் வசதிக்கு தகுந்தாற்போல உடற்பயிற்சி கூடம், கிளப், விளையாட்டு மைதானம், நூலகம், தொலைக்காட்சி என அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கின்றன. அலுவலக நேரங்களில் பணியை சிறப்பாகச் செய்து முடித்துவிட்டு, இதுமாதிரியான பொழுதுபோக்கு இடங்களை அங்கும் இங்கும் தேடிச் செல்லாமல் அலுவலகத்திலேயே பயன்படுத்துவதன் மூலம் மனதும் உடலும் உற்சாகம்பெறும். அடுத்த நாளைக்கான வேலைகளுக்கு இது சிறப்பானதொரு அடித்தளமாகவும் அமையும். இப்படியான நிறுவனத்தைதான் நாம் வேலை செய்யும் இடமாகத் தேர்வு செய்ய வேண்டும். இந்த பணிச் சூழல் ஒரு நிறுவனத்தில் இருந்துவிட்டால் வேலைகளும் எளிதாகும், வாழ்வும் வளமாகும்.

கற்றுக்கொள்ளும் வாய்ப்பு!

##~##
ஆரம்பத்தில் வேலை செய்யும் அலுவலகத்திற்கு நாம் புதியவர்கள் என்பதால் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் அங்கு ஏராளமாக கொட்டிக்கிடக்கும். கற்றுக்கொள்ளும் திறன் நம்மிடம் இருக்க வேண்டும் என்று ஒரு நிறுவனம் எதிர்பார்ப்பதைப் போல, நாம் தேர்வு செய்யும் நிறுவனத்தில் புதிது புதிதாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும்.

உதாரணத்திற்கு, சில நிறுவனங்கள் ஊழியர்களுக்காக குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைப்பார்கள். அந்த பணத்தைக் கொண்டு அவர்களுக்கு புதிது புதிதான விஷயங்களை கற்றுத் தந்து (டெக்னிக்கல் டெவலெப்மென்ட், புராஜெக்ட் டிரைனிங் போன்ற விஷயங்கள்) மெருகேற்றுவார்கள். இதன் மூலம் ஊழியர்களும் செழுமை அடைகிறார்கள். நிறுவனமும் வேகமாக வளர்ச்சி காணும். இப்படிப்பட்ட நிறுவனத்தை ஆரம்பத்தில் கண்டுபிடித்து வேலைக்குச் சேர்ந்துவிட்டால், நம்மை அந்த நிறுவனமே உயரத்திற்குக் கொண்டுபோகும்.

நிறுவனத்தின் வளர்ச்சி!

'நீர் உயர்ந்தால்தான் நெல் உயரும்’ என்று சொல்வார்கள். நீருக்கும் நெற்கதிர்களுக்கும் உள்ள தொடர்புதான், நிறுவனத்திற்கும் நிறுவன ஊழியர்களுக்கும். நிறுவனம் வளர்ச்சி பெற்றால்தான் ஊழியர்களும் வாழ்வில் வளம்பெற முடியும். சென்ற ஆண்டின் வளர்ச்சி விகிதம் எப்படி இருந்தது, நடப்பு ஆண்டின் வளர்ச்சி விகிதம் எப்படி இருக்கிறது என்பதைக் கவனிக்க மறக்கக் கூடாது.

சில நிறுவனங்களுக்கு வேலை செய்வதற்கான சிறந்த இடம் என்று சில அமைப்புகளில் இருந்து சான்றிதழ்களை கொடுத்திருப்பார்கள். அந்த நிறுவனங்களை தேர்வு செய்தால் தகுதிக்கு ஏற்ற சம்பளம், சரியான வேலை நேரம், மனஅழுத்தம் இல்லாத வேலை மற்றும் மேலே சொன்ன சாராம்சங்கள் அனைத்துமே இருக்கும். அங்கு நமக்குப் பிரச்னைகள் எதுவும் இருக்காது.

இன்னொரு முக்கியமான விஷயம், நல்ல நிறுவனம் என்பதை ஊர்ஜிதப்படுத்த எதையெல்லாம் நிறுவனத்திடம் நாம் எதிர்பார்க்கிறோமோ, அதேபோல நல்ல ஊழியன் என்பதற்கு ஏராளமான விஷயங்களையும் நிறுவனம் நம்மிடம் எதிர்பார்க்கும். அதனால் நாளுக்கு நாள் புதிது புதிதான விஷயங்களை கற்றுத் திறமையுள்ள ஊழியனாக நம்மை நாமே தயார்படுத்திக்கொள்வது அவசியம்'' என்று முடித்தார் ஜாஃபர் அலி.

புதிதாக வேலை தேடும் இளைஞர்கள் இந்த விஷயங்களை மனதில் இருத்திக்கொள்வது நல்லது!

- செ.கார்த்திகேயன்.