நாணயம் ஜாப்: கூடிச் செய்தால் கோடி நன்மை!

ஒரு கை எப்போதுமே ஓசை எழுப்பாது. பல கைகள் சேர்ந்தால் அது அசைக்க முடியாத சக்தியாக மாறும். குழுவாக இருந்தால் எட்ட முடியாத சிகரங்களையும் எட்டிவிடலாம். இதுதான் குழுவின் சிறப்பு.

பெரும்பாலான நிறுவனங்கள் குழுக்களாக வேலை பார்ப்பதைக் கட்டாயமாக்கியுள்ளது. குழுவாக ஒரு வேலை செய்யும்போது அதை விரைவாகச் செய்து முடிக்க முடியும். வேலை பிழையின்றி, சிறப்பாகவும் செய்து முடிக்க முடியும். குழுவாக வேலை பார்க்கும்போது என்னென்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று விளக்கமாகச் சொல்கிறார் எல் அண்ட் டி இன்ஃபோ டெக் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டாளர் பானு பாலு.
''நான் என்பதை மறந்துவிட்டு, நாம் என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்வதே, குழுவாக வேலை பார்ப்பதற்கான முதல் தகுதி. அதோடு ஜூனியர், சீனியர் என்றில்லாமல் அனைவரும் சமம் என்ற ரீதியில், அனைவருடனும் பழகுவதே சிறப்பாக இருக்கும். குழுவாக வேலை பார்ப்பது குடும்பத்துடன் வேலை பார்ப்பதற்கு சமம். ஒரு குழுவில் இருப்பவர்களின் சிறப்பு என்ன? அவர்களின் தனித்தன்மை என்ன?, யாரிடம் எதை கற்றுக்கொள்ளலாம் என்பதைத் தெரிந்து அதன்படி நமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம். என் குழுதான் இந்த நிறுவனத்தில் சிறந்த குழுவாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தை எப்போதும் மனதில் வைத்திருந்தாலே போதும், உங்கள் குழு சிறப்பான குழுவாக மாறிவிடும்.
##~## |
குழுவாகச் செயல்பட்டாலும் உங்களின் வேலையை பிழையின்றி குறித்த நேரத்தில் முடித்துவிடுவது உங்களை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் செல்லும். எப்போதும் புதிய விஷயங்களை உங்களின் வேலையில் புகுத்த பழகிக் கொள்ளலாம். இந்த பழக்கம் குழுவில் உங்களை தனியாக காண்பிக்கும். புதிய விஷயங்களை செய்யும் முன் உங்கள் குழுவுடன் கலந்து ஆலோசிப்பது புத்திசாலித்தனம். நீங்கள் குழுவாக வேலை பார்த்தாலும் உங்களின் எதிர்கால நோக்கம் என்ன என்பதைத் திட்டமிட்டு, அதற்கேற்ப வேலை பார்க்க வேண்டும்.
ஒரு குழுவில் புதிதாக வேலைக்குச் சேரும்போது, முதலில் குழுவின் நடவடிக்கைகளை கவனியுங்கள். அதன்பிறகு குழுவின் வேலை என்ன, அதில் நம்முடைய பங்கு என்ன என்பதை புரிந்துகொண்டு செயல்படுங்கள். குழுவில் உள்ளவர்கள் உங்களின் கருத்தை ஏற்றுக் கொள்வார்களா என்று தயங்காமல் தைரியமாகச் சொல்ல பழகிக்கொள்ளுங்கள். தைரியம் என்பது எப்போதும் அதிகாரமாக மாறிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதேபோல, குழுவில் இருப்பவர்களும் புதிதாக வருபவர்களின் மீது அதிக வேலைச்சுமையை திணிக்கக்கூடாது. அது வேலையின் மீதும், குழுவின் மீதும் வெறுப்பை ஏற்படுத்தும். புதிதாக வந்தவர் குழுவில் ஒருங்கிணைந்து வேலை செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும். இப்படி செய்யும்போது அவர் தானாக அவருடைய பொறுப்பை உணர்ந்து வேலையை திட்டமிட்டுச் செய்வார்.
புதிதாக வருபவர்களுக்கு குழுவில் இருப்பவர்கள் பற்றியும், குழுவினுடைய வேலை பற்றியும், நிறுவனத்தைப் பற்றியும், மற்ற குழுவில் இருப்பவர்கள் பற்றியும் தெளிவாகச் சொல்ல வேண்டும். அதோடு நீங்கள் ஒருவருக்குப் பயிற்சி அளிக்கும்போது, நீங்கள் அளிக்கும் பயிற்சி சிறப்பாக இருப்பது அவசியம். கடமைக்கு எதையும் செய்யக் கூடாது. குழுவில் இருப்பவர்களுக்கு உங்களின் மீது எந்த தவறான எண்ணமும் உருவாகாதபடிக்கு பார்த்துக்கொள்ளுங்கள்.
நிறுவனம் உங்களின் செயல்பாட்டைவிட குழுவின் செயல்பாட்டைதான் கவனிக்கும். குழுவில் வேலை எப்படி உள்ளது, வேலையின் தரம் எப்படி உள்ளது என்பதைக் கூர்ந்து கவனிக்கும். எனவே, இதில் எந்த தவறும் நிகழாதபடிக்குப் பார்த்துக்கொள்வது உங்கள் கடமை. எக்காரணத்தைக் கொண்டும், குழுவை விட்டு விலகியே அல்லது குழுவிற்கு எதிராகவோ செயல்படக்கூடாது. குழுவில் இருக்கும் யாரும் உங்களை வெறுத்து ஒதுக்காதவாறு உங்களின் செயல்பாடு இருந்தாலே போதும், நீங்கள் எந்த குழுவிலும் வெற்றி பெறும் தகுதி கொண்டவராக மாறிவிடுவீர்கள்'' என்றார் பானு பாலு.
ஜெயிக்கும் வழியைச் சொல்லிவிட்டோம். இனி ஜெயிக்க வேண்டியது நீங்கள்தான்!
- இரா.ரூபாவதி,
படம்: த.ரூபேந்தர்.