பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக் ஹோம்ஸ்


''என் வீட்டில் மாலை 6 முதல் 8 மணி வரை கரன்ட் கட். எனவே, அந்த நேரத்தில் உம்மை வந்து சந்தித்துவிடுகிறேன்'' என்று நமக்கொரு எஸ்.எம்.எஸ். அனுப்பி இருந்தார் ஷேர்லக். ஓகே சொல்லிவிட்டு, அந்த நேரத்தில் அவருக்காக காத்திருந்தோம். சொன்ன நேரத்திற்கு வந்து சேர்ந்தவருக்கு, ஆனியன் பஜ்ஜி தந்து வரவேற்றோம். ''வந்ததும் வராததுமாக வெங்காய பஜ்ஜியா?'' என்றவர், வெங்காய சட்னியைத் தொட்டு, ரசித்து சாப்பிட்டார்.

##~##
''மீ
ண்டும் சந்தை இறங்குமுகத்திலேயே இருக்கிறதே?'' என்று கேட்டோம்.

''சமீபத்தில் நடந்த திடீர் ஏற்றம் செய்திகளை அடிப்படையாகக் கொண்டது. ஒரே நேரத்தில் பல செய்திகள் அடுத்தடுத்து வந்ததால், சந்தை ஒரேயடியாக ஏறியது. அடிப்படை பெரிய அளவில் மாறாதபோது சந்தையின் நிலை மட்டும் மாறினால் அது செயற்கையானதாகவே இருக்கும். எனவே, சந்தை கொஞ்சம் இறங்கினாலும் ஆச்சரியமில்லை என சில இதழ்களுக்கு முன்பே சொல்லி இருந்தேன். ஏறக்குறைய இப்போது அதுதான்  நடந்துகொண்டிருக்கிறது'' என்று சொன்னவரிடம், ''இன்று வந்த வங்கிப் பங்குகளின் ரிசல்ட் கலவையாக வந்திருக்கிறதே!'' என்று அடுத்த சப்ஜெக்ட்டுக்கு அடி எடுத்துத் தந்தோம்.

''ஆமாம். ஐ.சி.ஐ.சி.ஐ., பஞ்சாப் நேஷனல் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பங்குகளின் காலாண்டு முடிவுகள் இன்று வந்திருக்கிறது. இதில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி நல்ல லாபம் கண்டிருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலாண்டைவிட 30 சதவிகிதம் லாபம் தந்திருக்கிறது. கடந்த ஆண்டில் இதே காலாண்டில் 1,503 கோடி ரூபாய் லாபம் தந்தது. ஆனால், இந்த ஆண்டில் 1,956 கோடி ரூபாய் லாபம் தந்திருக்கிறது. அனலிஸ்ட்டுகள் அதிகபட்சம் 22 சதவிகிதம் லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகமாக வந்தாலும், இன்று சந்தை இறங்குமுகம் என்பதால் 0.81% விலை குறையவே செய்தது.

ஆனால், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு நேர்மாறான ரிசல்ட்டை தந்திருக்கிறது பஞ்சாப் நேஷனல் பேங்க். அதன் நிகர லாபம் கிட்டத்தட்ட 11.5 சதவிகிதம் குறைந்திருக்கிறது. தவிர, ஓராண்டுக்கு முன்பு 0.84 சதவிகிதமாக இருந்த வாராக் கடன் தற்போது 2.69 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இதனால், இந்த பங்கின் விலை 7 சதவிகிதம் அளவுக்கு இன்று குறைந்தது. இதேபோல, ஐ.ஓ.பி. வங்கியின் நிகர லாபமும் 23.6 சதவிகிதம் குறைந்திருக்கிறது. ஓராண்டுக்கு முன்பு 1.21 சதவிகிதமாக இருந்த வாராக் கடன் தற்போது 2.25 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இதனால் அந்த பங்கின் விலையும் கிட்டத்தட்ட 7 சதவிகிதம் வரை குறைந்திருக்கிறது. வங்கிப் பங்குகளின் இண்டெக்ஸ் கடந்த சில மாதங்களாக இறங்குமுகத்திலேயே இருக்கிறது. கடந்த ஓராண்டு காலத்தில் 20.58 சதவிகிதம் லாபம் தந்த பேங்க்பீஸ் கடந்த ஒரு மாதத்தில் 2.32 சதவிகித லாபம் மட்டுமே தந்திருக்கிறது. எனவே, இந்த சமயத்தில் அதில் போய் மாட்டாமல் இருப்பது நல்லது!'' என்றார்.

ஷேர்லக் ஹோம்ஸ்

''ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்கின் ரிசல்ட்டும் இன்று வந்ததில்லையா?'' என்றோம், சுடச்சுட காபியைத் தந்தபடி. அதை ரசித்து குடித்து முடித்தவர், மேற்கொண்டு பேச ஆரம்பித்தார்.

''ஹெச்.யூ.எல்.-ன் நிகர லாபம் 17 சதவிகிதம் அதிகரித்தது. ஆனால், கடந்த ஆண்டைவிட இதன் விற்பனை வால்யூம் ஒன்பதிலிருந்து ஏழு சதவிகிதமாக குறைந்திருக்கிறது. அடுத்த காலாண்டில் விற்பனை வால்யூம் 8 முதல் 8.5 சதவிகிதமாக இருக்கும் என்கிறார்கள். இந்த காலாண்டு பண்டிகைக் காலம் என்பதால், விற்பனை கொஞ்சம் அதிகரித்து லாபத்தின் அளவு அதிகரிக்க வாய்ப்புண்டு. இந்த பங்கிற்கு 8 ரூபாய் டிவிடெண்ட் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் இன்று சந்தை சரிந்ததால் இந்த பங்கின் விலையும் 2 சதவிகிதம் சரியவே செய்தது!'' என்றார்.

''கிங்ஃபிஷர் இன்று 5 சதவிகிதம் அப்பர் சர்க்யூட் அடைந்திருக்கிறதே!'' என்று இழுத்தோம்.  

''மூன்று மாதச் சம்பளத்தை மொத்தமாக சேர்த்து தீபாவளிக்குத் தருகிறேன் என இந்த நிறுவனம் அறிவித்தவுடன் 5 சதவிகிதம் அப்பர் சர்க்யூட்டை தொட்டிருக்கிறது. இதை பார்த்து எந்த முதலீட்டாளரும் அந்த பங்கை வாங்கிவிடக்கூடாது என்பதே என் எச்சரிக்கை! காரணம், இந்த நிறுவனம் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட வேண்டும் எனில் 600 முதல் 700 மில்லியன் டாலர் வேண்டுமாம். இத்தனை பெரிய தொகைக்கு எங்கே போவது? ஆனால், இந்த நிலைமையில் குஷியாகத்தான் இருக்கிறார் மல்லையா. ஃபோர்ப்ஸ் நிறுவனம் இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் கிங்ஃபிஷர் நிறுவனத்தின் மல்லையாவை பட்டியலிலிருந்து எடுத்துவிட்டது. 'அப்பாடா நிம்மதி! இனி யாரும் என்னைப் பொறாமைப்பட்டு வயிறெரிந்து, திட்டித் தீர்க்க மாட்டார்கள்’ என சந்தோஷமாக தன்னுடைய டுவிட்டரில் சொல்லி இருக்கிறார்''.

''ஐ.ஆர்.பி. இன்ஃப்ரா பங்கின் விலை ஒரே நாளில் 16 சதவிகித்துக்கு மேல் இறங்கி உள்ளதே?'' என்று நம் அதிர்ச்சியைக் காட்டினோம்.

''ஐ.ஆர்.பி. குழுமத்தைச் சேர்ந்த குளோபல் சேஃப்டி விஷன் நிறுவனம் பி.ஜே.பி. தலைவர் நிதின் கட்காரிக்கு சுமார் 164 கோடி ரூபாயை கடனாக தந்த தகவல் வெளியானதே இதற்கு காரணம். பங்கின் விலை இவ்வளவு அதிகமாக இறங்கியதால் ஒரு நாளில் மட்டும் முதலீட்டாளர்களின் பங்கின் மதிப்பு 736 கோடி ரூபாய் குறைந்திருக்கிறது. அண்மைக் காலத்தில் இந்த பங்கின் விலை அதன் ஓராண்டு உச்சபட்ச விலையிலிருந்து 43% குறைந்துள்ளது''.

ஷேர்லக் ஹோம்ஸ்

''வேறு என்ன சேதி?'' என்றோம். அடுத்தடுத்து பல செய்திகளைச் சொன்னார் ஷேர்லக்.

''ஹெச்.எஸ்.ஐ.எல். நிறுவனம் முருதேஷ்வர் செராமிக்ஸ் நிறுவனத்தின் மெஜாரிட்டி பங்குகளை வாங்க உள்ளதாம்! இது தெரிந்து சில முதலீட்டாளர்கள் இந்த பங்குகளை சத்தமில்லாமல் வாங்கி வருகிறார்களாம்! இந்த செய்தி வெளியே கசியவே இன்று மட்டும்

14 சதவிகிதம் இந்த பங்கின் விலை உயர்ந்திருக்கிறது. ஹெச்.எஸ்.ஐ.எல். டீல் புத்தக மதிப்பான 75 முதல் 80 ரூபாய்க்குள் முடியும் என்கிறார்கள். எனவே, அதுவரை பங்கின் விலை உயர ஒரு வாய்ப்பு இருப்பதால், ரிஸ்க் எடுக்க விரும்பும் முதலீட்டாளர்கள் இதை வாங்கலாம்.

டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, அசோக் லேலாண்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கான செலவுக் கணக்கை கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது எக்ஸைஸ் டிபார்ட்மென்ட். மூலப்பொருட்களுக்கான அடக்கவிலையைக் குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பு செய்கிறதோ என்கிற சந்தேகத்தின் விளைவுதான் இந்த நோட்டீஸ். இதனால் இப்பங்குகளின் விலை அடுத்துவரும் நாட்களில் கொஞ்சம் குறைய வாய்ப்புண்டு,  உஷார்.

நேஷனல் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் (என்.எம்.டி.சி.) நிறுவனப் பங்கு விற்பனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்நிறுவனத்தில் மத்திய அரசின் பங்கு மூலதனம் 90 சதவிகிதம் உள்ளது. இதில் 10 சதவிகிதம் விலக்கிக் கொள்ளப்படுவது மூலம் சுமார் 39 கோடி பங்குகள் (முக மதிப்பு ரூ.1) விற்பனை செய்யப்பட இருக்கிறது. அமைச்சரவை ஒப்புதல் தந்தாலும், இது எஃப்.பி.ஓ.வுக்கான நேரமில்லை. எனவே, இப்போதைக்கு இந்த செய்தியால் வாசகர்களுக்கு பெரிய பயனில்லை'' என்றவர், ''மார்க்கெட் சென்டிமென்ட் சரியில்லை. எனவே, இந்த வாரம் ஷேர்டிப்ஸ் வேண்டாமே!'' என்றார் கெஞ்சலாக. ஷேர்லக் சொன்னால் சரியாகத்தானே இருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு