நாணயம் ஜாப் - ஆட்குறைப்பு... தப்பிக்க என்ன வழி?


''எங்க ஆபீஸ்ல புராஜெக்ட் இல்லை. அதனால் என்னை வேலையிலிருந்து தூக்கிட்டாங்க'', ''எங்க கம்பெனி நஷ்டமாயிடுச்சு; அதனால பத்து பேரை ஒரே நாள்ல வீட்டுக்கு அனுப்பிட்டாங்க'' - இப்படி நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் நம்மில் பலர் சிக்கி சின்னாபின்னமாகி இருப்போம். நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை ஏன் மேற்கொள்கின்றன..? அப்படி மேற்கொள்ளும்போது அதிலிருந்து தப்பிக்க நாம் எப்படி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..? என சென்னை ஐசால்வ் நிறுவனத்தின் ஹெச்.ஆர். பிரிவின் உதவி மேலாளர் ந.பத்மலட்சுமி சொல்கிறார்.
ஏன் ஆட்குறைப்பு?
##~## |
• பொருளாதார வீழ்ச்சி ஏற்படும்போது அதை சமாளிக்க முடியாமல் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்யும்.
• திட்டமிடாமல் வேலைக்கு ஆட்களை எடுத்துவிட்டு, பட்ஜெட் எகிறும்பட்சத்தில் ஆட்குறைப்பு செய்யப்படுகிறது.
• மனிதனின் வேலைப்பளுவை குறைக்கும் விதமாகப் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்படும் சந்தர்ப்பங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை வரலாம்.
எப்படி தப்பிக்கலாம்?
• முதலில் வேலைக்குத் தக்கபடி வளைந்து கொடுக்கும் மனபக்குவம் நமக்கு இருக்க வேண்டும். இந்த குணநலன் மற்ற ஊழியர்களிடமிருந்து நம்மை மேம்படுத்திக் காட்டும்.
• எந்த வேலை தந்தாலும் அதை ஏற்று தன்னார்வத்துடன் செய்து அதை முழுமையாக முடித்துத் தரவேண்டும். வேலை தெரியவில்லை என்றாலும், தட்டிக் கழிக்காமல் சீனியர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டு அந்த வேலையைச் செய்து முடிப்பது நம் மீது நல்ல அபிப்ராயத்தை உருவாக்கும். இந்த அபிப்ராயம் ஆட்குறைப்பு நடவடிக்கையின்போது நம்மை காப்பாற்றும்.
• அவரவர்களின் தலைமைக்கு அன்றாடம் செய்யும் பணிகளைத் தெரியப்படுத்த வேண்டும். தலைமை அதிகாரியுடனான உங்கள் உறவு எப்போதும் நெருக்கமாக இருக்கும்பட்சத்தில், நீங்கள் தவிர்க்க முடியாத ஊழியராக இருப்பீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
• பொதுவாக நாம் செய்யும் ஒவ்வொரு வேலையும் மற்றவர்கள் பாராட்டும் படியாக இருத்தல் அவசியம். கொடுக்கும் வேலைகளை மட்டும் அல்லாமல் பிற வேலைகளையும் செய்து காட்டி நீங்கள் தரும் வேலையைவிட என்னால் அதிகமாக வேலையைச் செய்ய முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும்.

• நாம் செய்யும் பணிச் சூழலை நம்முடையதாக மாற்றிக்கொள்ள வேண்டும். உங்களின் பணியிடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என்கிற மனஓட்டத்தை நிறுவனத்திடம் பதிய வைத்துவிட வேண்டும். எந்த ஒரு நிறுவனமும் திறமையான ஊழியரை வேலையை விட்டு அனுப்பாது.
• அலுவலகங்களில் உள்ள பல துறைப்பட்ட வேலைகளைக் கற்று வைத்திருப்பது நல்லது. ஒரு துறையில் ஆட்குறைப்பு பணிகள் நடக்கும்போது அதில் இருக்கும் ஒருவருக்கு பிற துறை சார்ந்த வேலைகள் தெரிந்திருந்து, திறமையுள்ளவராக இருந்தால் நிறுவனம் அவரை நிறுவனத்திலிருந்து மொத்தமாக விலக்காமல் அவருக்குத் தெரிந்த துறையில் இருக்கும் பணியில் அமர்த்தும்.
• ஆட்குறைப்பு நடவடிக்கையின்போது, தனது வேலை போகப் போகிறது என்கிற தகவலை தெரிந்துகொண்டதும், பலருக்கு செய்யும் வேலையில் ஈடுபாடு குறைந்து சலிப்புத்தன்மை வந்துவிடும். இச்சமயங்களில்தான் வேலையை முழுக் கவனம் செலுத்தி பிழையில்லாமலும், முன்னதாகவும் முடித்துக் கொடுக்க வேண்டும். இதனால் உங்களின் வேலை ஈடுபாட்டை கவனிக்கும் நிர்வாகம் உங்களின் பெயரை ஆட்குறைப்பு பட்டியலிலிருந்தே தூக்கும் வாய்ப்பு உருவாகும்.
• அலுவலகம் சிக்கலில் இருப்பதால்தான் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. நாம் வேலை செய்யும் அலுவலகம் பாதிக்கப்பட்டால் நாமும் பாதிக்கப்படுவோம் என்பதை ஏற்றுக்கொள்பவராக, அந்த பிரச்னையிலிருந்து நிறுவனம் மீண்டுவர உங்களின் சிந்தனைக்கு எட்டும் ஐடியாக்களை நிறுவனத்தின் முன்வைக்க வேண்டும்.
• பெரும்பாலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் சிக்குபவர்கள் ஒரு நிறுவனத்தில் இறுதியாக வேலைக்குச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் மேலே சொன்ன விஷயங்களில் கூடுதல் கருத்தாக இருக்க வேண்டும்.
எந்தவொரு நிறுவனமும் காரண காரியமில்லாமல் யாரையும் வேலையிலிருந்து விலக்காது என்பதை ஊழியர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அப்படியே ஆட்குறைப்பு செய்தாக வேண்டும் என்ற சூழ்நிலையில்கூட, மேலே சொன்ன குணநலன்கள், ஈடுபாடு, ஒழுக்கம் போன்றவைகள் நம்மிடம் இருக்கும்பட்சத்தில் நாம் ஒருபோதும் கவலைப்பட தேவையில்லை.''
- செ.கார்த்திகேயன்,
படம்: ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்.