நடப்பு
Published:Updated:

செக்டார் அனாலிசிஸ்!

செக்டார் அனாலிசிஸ்!

செக்டார் அனாலிசிஸ்!

வங்கிகளின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளத் தேவையான முக்கியமான பல விஷயங்களை கடந்த இதழ்களில் பார்த்தோம். இந்த இதழில் வங்கிப் பங்குகளை எப்படி தேர்வு செய்வது என்று பார்ப்போம்.  

##~##
'வெ
றும் கையால முழம் போடாதே’ என்பார்கள் நம்மூரில்.  வெறும் கையால் முழம் போட்டதால்தான் 2008-ல் அமெரிக்க வங்கிகள், நிதி நிறுவனங்கள் பல திவாலாயின. அந்த வங்கிகள் திவாலானதோடு, ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் சீர்குலைத்துவிட்டன. மீண்டும் அதுமாதிரியான அமளிதுமளி நடக்கக்கூடாது என்பதற்காக பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதில் முக்கியமானதுதான் 'பேசல்’ (Basel).  

'பேசல்’ என்பது ரிஸ்கிற்கு ஏற்ற குறைந்தபட்ச மூலதனத்தையும் சட்டதிட்டங்களையும் நிர்ணயிப்பது. இதில் முக்கியமான விஷயமாக இருப்பது 'கார்’ (CAR – Capital Adequacy Ratio or CRAR  -Capital to Risk-Weighted Assets Ratio).

'கேப்பிட்டல் அடிக்வசி ரேஷியோ’ என்பது ஒவ்வொரு வங்கியும் எடுக்கும் ரிஸ்கிற்கு ஏற்ப வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்சத் தேவையான அளவு முதலீடு. ஒரு வங்கியின் ஸ்திரத்தன்மையைக் கணிக்க இது உதவும். டயர் 1 மூலதனத்தையும் டயர் 2 மூலதனத்தையும் கூட்டிவரும் தொகையை ரிஸ்க்கோடு ஒப்பிடப் பட்ட சொத்துக்களோடு ஒப்பிட் டுப்பார்த்தால் கிடைப்பது இந்த விகிதாச்சாரம்.

இதில் டயர் 1 மூலதனம் என்பது வங்கியின் செலுத்தப்பட்ட பங்கு மூலதனம் + ரிசர்வ் கையிருப்பு போன்றவை உள்ளிட்டது. டயர் 2 மூலதனம் என்பது ப்ரிஃபரன்ஸ் ஷேர் எனும் உரிமைப் பங்குகள், பாண்ட், டிபெஞ்சர் போன்ற கடன் பத்திரங்கள் ஆகியவை உள்ளிட்டது. இதுபோக டயர் 3 கேப்பிட்டல் என ஒன்று இருந்தது. நடப்பு ஆண்டில் இருந்து அது தேவையில்லை என முடிவாகி இருப்பதால் இனி அதை மறந்துவிடலாம்.  

செக்டார் அனாலிசிஸ்!

'கார்’ என்பது..!

ஒரு வங்கியின் அன்றாட நடைமுறையில் ஏற்படும் சிக்கல்கள், இழப்புகள் மற்றும் கடன் கொடுக்கல் வாங்கலினால் ஏற்படும் நஷ்டங்களைச் சமாளிக்கத் தேவையான அளவு மூலதனம் உள்ளதா எனக் கணக்கிட்டுச் சொல்வது இந்த 'கார்’. எந்தச் சிக்கல் ஏற்பட்டாலும் வங்கி தொடர்ந்து செயல்பட முடியுமா என்று கணிக்க உதவுவதுதான் 'கார்’.

வங்கியில் டெபாசிட் போட்டு வைத்திருப்போருக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இந்த 'கார்’ இருக்க வேண்டும். இப்போது செயல்பட்டுவரும் வங்கிகளுக்கு 9% (முன்பு 8%); புதியதாகத் துவங்கும் தனியார் வங்கிகளுக்கு 10%.

வங்கிப் பங்குகளைத் தேர்வு செய்ய இவை மட்டும்தான் அளவுகோலா இல்லை, இன்னும் இருக்கிறதா எனக் கேட்டால், சொல்லிக்கொண்டே போகலாம்.

கிளைவாரியான லாப - நஷ்டக் கணக்கு!

ஒரு வங்கியை மட்டும் எடுத்துக் கொண்டு, அதன் ஒவ்வொரு கிளையும் கொண்டுவரக்கூடிய சராசரி பிஸினஸின் அளவு என்ன (Business per Branch), கிளை ஒன்றுக்கு சராசரி செலவு என்ன (Expenses per Branch) மற்றும் அது ஈட்டும் சராசரி லாபம் என்ன (Profit per Branch)) என்பது போன்ற அளவுகோல்களைக் கணக்கிட்டு, ஒரு வங்கிக்கும் இன்னொரு வங்கிக்கும் இடையே ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

ஒரு வங்கியின் சராசரி பிஸினஸ் மற்றும் லாபம் ஆகியவற்றைவிடக் குறைவான லாபத்தை ஈட்டும் கிளைகளைக் கண்காணித்து, அவற்றை ஊக்கப்படுத்தி உற்பத்தித் திறனை அதிகரித்து வளர்ச்சிக்கு வழிவகுக்கவும், வங்கிகளுக்கு இக்கணக்கீடு உதவும். அதிக கிளை கள் இருந்தும் சராசரியாக அதிக லாபம் ஈட்டாத வங்கிகளைக் கண்டுபிடித்து அவற்றில் முதலீடு செய்வதைத் தவிர்க்க முதலீட்டா ளர்களுக்கு இக்கணக்கு உதவும்.

செக்டார் அனாலிசிஸ்!

ஊழியர் வாரியாக லாப-நஷ்டக் கணக்கு!

அதேமாதிரி, ஒரு வங்கியில் ஓர் ஊழியர் சராசரியாகக் கொண்டுவரும் பிஸினஸின் அளவு என்ன (Business per Employee), சராசரியாக ஓர் ஊழியருக்கு வங்கி செய்யும் செலவு என்ன (Expenses per Employee), வங்கிக்கு தனி ஒருவராக அவர் ஈட்டித் தரும் சராசரி லாபம் என்ன (Profit per Employee) என்பது போன்ற அளவீடுகளை வைத்து வங்கிகளை ஒப்பிட்டுப் பார்ப்பதும் சரியான முதலீட்டு முடிவுகளை எடுக்க உதவும்.  

வங்கித் துறையின் சாதக - பாதகங்கள்!

ஒரு துறையில் உள்ள பங்கு களில் முதலீடு செய்யும்போது பொதுவாகப் பார்க்கவேண்டிய குணாதிசயங்கள் பல உண்டு; அதில் மிக முக்கியமான ஒன்று 'என்ட்ரி பேரியர்’. அதாவது, இத்தொழிலில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சுலபமாக நுழைய முடியும் என்ற நிலை இருக்கக்கூடாது. அப்போதுதான் போட்டி குறைவாகவும் லாபம் அதிகமாகவும் ஈட்டும் வாய்ப்பு அதிகரிக்கும்.

ஒரு தொழில் நன்றாக நடக்கிறது, அதிக லாபத்தைத் தருகிறது என்றால், பலர் அதில் நுழைய எத்தனிப்பார்கள்; மெள்ள மெள்ள போட்டி அதிகரிக்கும். விற்பனை படுக்கும்; லாபமும் குறையும். அதேசமயம், ஒரு தொழிலில் கால் வைப்பது மிகக் கடினம்; அரசு அனுமதி கிடைப்பது குதிரைக் கொம்பு எனில், அதில் போட்டி குறைவாகவும், ஏற்கெனவே அத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் வைத்ததுதான் சட்டம் என்றும் இருக்கும்.

நம்மூரில் புதிதாக வங்கி துவங்க அனுமதி கிடைப்பது அரிது. அந்த வகையில், ஏற்கெனவே களத்தில் இருக்கும் போட்டியாளர்களைச் சமாளித்தால் போதும் என்ற நிலை தான் இதுவரை. ஆனால், சமீபத்திய வங்கிச் சட்டத் திருத்தத்திற்குப் பின் நிலைமை இப்படியே தொடராது. புதிய வங்கிகள் வர வாய்ப்புகள் அதிகம்.

செக்டார் அனாலிசிஸ்!

ரீஸ்ட்ரக்சர்டு லோனா இல்லை என்.பி.ஏ.வா?  

வங்கித் துறையில் அதிகரித்து வரும் வாராக்கடன்களின் அளவும் சற்றே கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. வாராக்கடன்களின் அளவு இப்போது சொல்லப்படுவதைவிட மிக அதிகம் என்பதே வெளியே சொல்லப்படாத உண்மை. அவற்றில் சிலவற்றைத் தள்ளிப்போட்டு 'ரீஸ்ட்ரக்சர்டு லோன்’-ஆக மாற்றும்போது, அவை என்.பி.ஏ.வாக எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. ஆனால், உண்மையிலேயே பார்த்தால், அன்றைய தேதியில் அது வாராக்கடனாகத்தானே கருதப்பட வேண்டும்? இப்படி ரீஸ்ட்ரக்சர் செய்யப்படும் கடன்களில் நான்கில் ஒரு பங்கு மீண்டும் வாராக்கடனாக மாறுவதற்கான அறிகுறிகளே அதிகம் எனச் சொல்லப்படுகிறது.

எதிர்காலம் எப்படி?

செக்டார் அனாலிசிஸ்!

எதிர்காலத்தில் அபரிமிதமான வளர்ச்சிக்கு சாத்தியமுள்ள துறைகளில் வங்கித் துறையும் ஒன்று. வளர்ந்துவரும் இந்தியப் பொருளாதாரம், புதிதாக உயர்வு பெறும் மிடில் கிளாஸ், அவர்களின் சேமிப்பு, உபரி வருவாய் ஒருபக்கம்; இரு சக்கர வாகனம், கார், வீடு, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி., கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு என நுகர்பொருள் தேவையைப் பூர்த்தி செய்ய வங்கிகள் வழங்கும் கடன் வசதிகள் மறுபக்கம்.

இவை எல்லாவற்றையும்விட வங்கிகளின் வளர்ச்சிக்கு  உதவும் முக்கியமான விஷயம் சமீபத்தில் நடந்திருக்கிறது. அது, மத்திய அரசின் நேரடி மானியம் வழங்கும் முடிவு. இதனால் லட்சக்கணக்கான புதிய வங்கிக் கணக்குகள் திறக்கப்படும். இனிவரும் காலத்திலும் இந்த புதிய வங்கிக் கணக்குகள் மூலம் பணப்பரிமாற்றம் நடக்கும் என்பதால் அவை வங்கிகளின் வளர்ச்சியை வேகப்படுத்தும்.  

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி!

வங்கிகள் பெரும் வளர்ச்சி காண காத்திருக்கிறது இந்தியாவில். 2,750-க்கும் மேற்பட்ட கிளைகளுடன், 9,300-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம்.களுடன், இந்தியாவின் இரண்டாது மிகப் பெரிய வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியை எடுத்துக் கொண்டால், ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் காப்பீடு நிறுவனத்தின் 73% பங்குகளில் ரூ.3,500 கோடிக்கு மேல் முதலீடும், ஐ.சி.ஐ.சி.ஐ. லம்பார்ட் காப்பீட்டு நிறுவனத்தின் 73% பங்குகளில் ரூ.1,350 கோடியும் முதலீடு செய்திருக்கின்றன. இப்போதைக்கு இல்லை என்றாலும், விரைவில் லாபம் ஈட்டத் துவங்கும் என எதிர்பார்க்கப்படும் காப்பீடு நிறுவனங்கள், பொதுமக்களுக்குப் புதிய பங்கு வெளியீடு வரும்போது இதன் மதிப்பு உயர்வதற்கான சாத்தியமும் அதிகம்.  

எஸ்.பி.ஐ.!

பொதுத்துறை வங்கிகளில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவும், தனியார் துறையில் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஆக்ஸிஸ் வங்கியும் நீண்டகால அடிப்படையில் எஸ்.ஐ.பி. முறையில் தொடர்ந்து முதலீடு செய்ய உகந்தவை.

என்றாலும், அதிகரித்துவரும் என்.பி.ஏ., 2014 தேர்தல் என்பதையெல்லாம் வைத்துப் பார்க்கையில், வங்கித் துறைப் பங்குகளில் பெரும்பான்மையானவை அவற்றின் நீண்ட கால சராசரியைவிட அதிக மதிப்பீட்டில் வர்த்தகமாகிறது எனத் தோன்றுகிறது.

'சம்  ஆஃப் பார்ட் வேல்யூவேஷன்’ அடிப்படை யில் ஸ்டேட் பேங்க்-ன் உண்மையான மதிப்பையும், அதன் துணை வங்கிகளையும் சேர்த்துக் கணக்கிட்டுப் பார்த் தால், சந்தையில் இப்போது வர்த்தகமாகும் விலையைவிட அதிகம் என்றாலும்கூட, ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், அவசரப்படாமல் கரெக்‌ஷனுக்குக் காத்திருத்தல் நல்லது என்றே சொல்லலாம்.  

செக்டார் அனாலிசிஸ்!

பேங்கெக்ஸ் (BANKEX)!

மும்பை பங்குச் சந்தையில் வங்கித் துறைப் பங்குகளின் விலைப்போக்கை கவனிக்க ஏதுவாக தனிக் குறியீட்டை உருவாக்கியுள்ளனர். 2002-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதியை துவக்கத் தேதியாகக் கொண்டு, அன்றைய தேதியில் இதன் மதிப்பு 1,000 என்னும் அடிப்படையில், ஜனவரி 23, 2003-ல், இக்குறியீடு அறிமுகம் செய்யப்பட்டது. 'பேங்கெக்ஸ்’ கடந்த ஓராண்டில் தந்த ஆதாயம் 47 சதவிகிதம்.

பேங்கெக்ஸ் குறியீட்டில் உள்ள வங்கிப் பங்குகளின் மொத்த மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் ரூ.7,08,185  கோடி; மொத்த சந்தையின் மார்க்கெட் கேப் ரூ.67,69,280 கோடியில் இது சுமார் 10 சதவிகிதத்துக்கு மேல். எனவே, சந்தையில் வங்கித் துறைப் பங்குகளின் முக்கியத்துவம் என்ன என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

பேங்க் நிஃப்டி (Bank Nifty):  

ஜனவரி 1, 2000-ம் ஆண்டில் துவக்கக் குறியீடாக 1,000 எனும் அடிப்படையில், தேசிய பங்குச் சந்தையில் பேங்க் நிஃப்டி தொடங்கப்பட்டது. இதில் வர்த்தக மாகும் அனைத்துப் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பில் சுமார் 15 சதவிகிதத்துக்கு மேல் இக்குறியீட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பேங்க் நிஃப்டி கடந்த ஓராண்டு காலத்தில் 21 சதவிகிதமும், மூன்றாண்டுகளில் 30 சதவிகிதமும், ஐந்து ஆண்டுகளில் 42.46 சதவிகித வருமானத்தையும் தந்திருக்கிறது.

வங்கித் துறையும், வங்கிப் பங்குகளை எப்படி தேர்வு செய்வது என்பதையும் நன்றாகப் புரிந்துகொண்டுவிட்டோம். அடுத்த இதழில் வேறு ஒரு துறையைப் புரிந்துகொள்ள ஆரம்பிப்போம்.

(அலசுவோம்)