ஆசிரியர் பக்கம்
நடப்பு
Published:Updated:

செக்டார் அனாலிசிஸ் - பலமிக்க பார்மா பங்குகள் !

செக்டார் அனாலிசிஸ் - பலமிக்க பார்மா பங்குகள் !

##~##

மருந்துத் துறையின் எதிர்காலம் எப்படி இருக்கும், அது முதலீட்டாளர்களுக்கு வழங்கும் வாய்ப்புகள் என்ன என்பதைப் பார்க்கும் அதேநேரத்தில், இத்துறையில் அடிப்படையாக தெரிந்துகொள்ளவேண்டிய சில விஷயங்களையும் பார்ப்போம்.  

பயோ பார்மசூட்டிகல்ஸ்!  

இத்துறையின் மிகப் பெரிய வாய்ப்பு என்பது பயோடெக்னாலஜி துறையில் இருக்கிறது. பாக்டீரியா, யீஸ்ட் போன்ற உயிருள்ள செல்களின் பங்களிப்போடு உருவாக்கப்படும் இந்த மருந்துகளை 'பயோடெக் பார்மா’ என்பார்கள். ரசாயன/வேதியியல் அடிப்படையில் கலந்து உருவாக்கப்படும் வழக்கமான மருந்து வகைகளைவிட கொஞ்சம் சிக்கலான ப்ராசஸ் இது. அதேசமயம், வழக்கமான மருந்துகளைவிட இம்முறையில் தயாரிக்கப்படுபவை அதிக பலனை அளிக்க வல்லவையும் கூட. குறிப்பாக, கேன்சர் போன்ற அதிதீவிர வியாதிகளுக்கு நல்ல பலனளிக்கக் கூடியவை இவ்வகை மருந்துகள்.

பயோ லாஜிக்ஸ்!

இயற்கையாகவே நம் உடம்பில் உள்ள எதிர்ப்பு சக்தி எப்படி வேலை செய்கிறதோ அதை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்படும் பயோடெக் மருந்துகள் இவை.

ருமேட்டிக்,  ஆர்த்ரைடீஸ் போன்ற தீராத மூட்டு வலிகளுக்குப் பயன்படும் மருந்துகளில் பயோ லாஜிக்ஸ் அடிப்படையில் தயாராகும் மருந்துகளும் உள்ளன.

செக்டார் அனாலிசிஸ் - பலமிக்க  பார்மா பங்குகள் !

சாதாரண மருந்துகளைக் கண்டுபிடிக்க ஆகும் செலவு உத்தேசமாக ரூ.20 கோடி வரை ஆகலாமென்றால், பயோடெக் மருந்துகளைக் கண்டுபிடிக்க அல்லது உருவாக்க ஆகும் ஆராய்ச்சி செலவு சில சமயம் ரூ.500 கோடி வரைகூட ஆகலாமென்று சொல்லப்படுகிறது. அவ்வளவு செலவு செய்தும் சில சமயம் அந்த மருந்து வேலை செய்யாமல் போகும் அபாயம் உண்டு. அப்படி ஏதாவது அசம்பாவிதமாக நடந்தால், அந்த மருந்தை  சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்படலாம்.  

இதற்கு நல்ல உதாரணம், சுமார் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், 'மெர்க்’ என்னும் பன்னாட்டு மருந்து கம்பெனியின் இழப்பைச் சொல்லலாம். 'க்ளைக்கோஃபி’ எனும் ஒரு குறிப்பிட்ட வகை புரோட்டீனைப் போன்ற (எரித்ரோபுரோட்டீன்) பயோசிமிலர் தயாரிக்கும் முறை மிகப் பெரிய ஃபெயிலியர். இதற்கு அந்த நிறுவனம் கொடுத்த விலை எவ்வளவு தெரியுமா? ரூ.2,000 கோடி! அவ்வளவும் கடலுக்குள் கரைத்த பெருங்காயம்போல் வேஸ்ட். ஆனால், கொடுத்தால் அள்ளிக் கொடுக்கும்.

பயோ சிமிலர்!

செக்டார் அனாலிசிஸ் - பலமிக்க  பார்மா பங்குகள் !

பேடன்ட் காலம் முடிவடைந்த 'பயோ லாஜிக்’-கின் காப்பி அடிக்கப்பட்ட வெர்ஷன் மருந்துகளே இவை. அதுதான் 'சிமிலர்’ என்று சொல்லப்படுகிறது. ஒரிஜினல் 'பயோ லாஜிக்ஸ்’ மருந்து எந்த நோயைக் குணப்படுத்தப் பயன்பட்டதோ அதே நோயைக் குணப்படுத்தும் மருந்துதான் இதுவும். லூபின், சிப்லா, வொக்ஹார்ட், டாக்டர் ரெட்டீஸ் லேப் ஆகிய நிறுவனங்கள் இத்துறையில் கால்பதித்து இருக்கின்றன.  

பயோ ஜெனெரிக்ஸ்!

பயோ சிமிலரை இப்படியும் குறிப்பிடலாம். நோயாளிகள் மீது இம்மருந்துகளின் தாக்கம் மட்டுமே ஒரிஜினல் மருந்தைப்போல இருக்குமே தவிர, பார்ப்பதற்கு வேறு வடிவில் இருக்கலாம். சர்வதேச அளவில் இதற்கான சந்தை சுமார் முப்பது பில்லியன் டாலர்கள் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

செக்டார் அனாலிசிஸ் - பலமிக்க  பார்மா பங்குகள் !

அது மட்டுமா? கேன்சர் மற்றும் டயாபெட்டீஸ் நோய்களுக்கான பெரும்பான்மையான பயோ லாஜிக்ஸ் மருந்துகளின் காப்புரிமை விரைவில் முடிவுக்கு வருவதால், ஆண்டுக்கு 50 சதவிகித வளர்ச்சியை எதிர்பார்க்கக்கூடிய துறையாகவும் பயோ சிமிலர் மருந்துகள் இருக்கின்றன என்பதுதான் நமக்கு சுவாரஸ்யமான சமாச்சாரம். உயர்ந்துவரும் மருத்துவச் செலவுகளைக் கட்டுக்குள் கொண்டுவரவும் பயோ சிமிலர் மருந்துகளை ஊக்கப்படுத்துகின்றன ஐரோப்பிய நாடுகள்.

எவ்வளவு தூரம் இத்துறை முக்கியமானது எனத் தெரியவேண்டுமானால், ஒரு விஷயம் சொல்கிறேன்; எலெக்ட்ரானிக்ஸ் துறையில் கோலோச்சும் சாம்சங் நிறுவனம், 250 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் 'சாம்சங் பயோ லாஜிக்ஸ்’ என ஒரு நிறுவனத்தைத் துவங்கியுள்ளது.  

எனவே, பயோகான், வொக்ஹார்ட், டாக்டர் ரெட்டீஸ் லேப், லூபின் மற்றும் சிப்லா ஆகிய நிறுவனங்களின் மேல் ஒரு கண் வையுங்கள். விலைகள் இறங்கும்போது வாங்கிச் சேர்க்கலாம்.  

கிராம்ஸ் (CRAMS -Contract Research and Manufacturing Services):பல பன்னாட்டு/உள்நாட்டு மருந்து நிறுவனங்கள், ஒப்பந்த அடிப்படையில் தங்களது மருந்து ஆராய்ச்சியை வேறு நிறுவனங்களிடம் அவுட்சோர்ஸ் செய்வதுதான் 'கிராம்ஸ்’. நம் நாட்டில் குறைந்த சம்பளத்தில் சுலபமாகக் கிடைக்கக்கூடிய, படித்த, அனுபவமிக்க மனிதவளம்தான் இந்நிறுவனங்களின் பலம்.

பயோகான், ஜூப்லியன்ட் லைஃப் சயின்சஸ், டிவிஸ் லேப், பிரமல், டிஷ்மேன் பார்மா ஆகியவை 'கிராம்ஸ்’-ல் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள். தற்போதைய உள்ளூர் சந்தையின் அளவு மட்டுமே ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல். ஆண்டுக்கு 20 சதவிகித வளர்ச்சி அடைந்துவரும் துறையாகவும் இது இருக்கும்.

ஒரே ஒரு சிக்கல், இந்த ஆராய்ச்சிகள் முறையாக சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுச் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு சமீபகாலமாக அதிகரித்து கோர்ட் வரை சென்றுள்ளது ஒரு தற்காலிகப் பின்னடைவு  எனச் சொல்லலாம்.

பொதுவாக, பார்மா பங்குகளை 'டிஃபென்சிவ் ஸ்டாக்ஸ்’ எனச் சொல்வார்கள். அதாவது, சந்தை பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கும் கெட்ட நேரத்தில்கூட அதிகம் விழாமல் நம்மைக் காப்பாற்றும் ஆபத்பாந்தவன். சென்ற ஆண்டு மட்டும் சுமார் 36 சதவிகிதத்துக்கு மேல் ஆதாயத்தைக் கொடுத்துள்ளன இத்துறையின் முன்னணிப் பங்குகள். பொதுவாகவே, பார்மா பங்குகளின் மதிப்பு கொஞ்சம் அதிகம் போலவே இருக்கும். இப்போதும் அப்படியே. எனவே, கரெக்‌ஷனுக்குக் காத்திருப்பது ஒரு ஸ்ட்ராட்டஜி என்றாலும், எஸ்.ஐ.பி. முறையில் சிறுகச் சேர்த்து வாங்கலாம்.

பி.எஸ்.இ. ஹெல்த்கேர் குறியீடு:

இப்போது 8244-ஐ ஒட்டி வர்த்தகமாகிறது. (ஓராண்டிற்கு முன்னர் 5983). கடந்த ஓராண்டிலேயே 38 சதவிகித லாபத்தைத் தந்துள்ளன இக்குறியீட்டிலுள்ள பங்குகள்.மொத்தம் 17 பங்குகள் இதில் அடக்கம். இக்குறியீட்டின் பி.இ: 47  

செக்டார் அனாலிசிஸ் - பலமிக்க  பார்மா பங்குகள் !

இக்குறியீடு, இதில் உள்ள பங்குகளின் மொத்த புத்தக மதிப்பைப் போல 2.50 மடங்காக வர்த்தகமாகிறது. டிவிடெண்ட் யீல்டு மிகக் குறைவாக 0.66 % மட்டுமே இருக்கிறது.

மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் அனைத்துப் பங்குகளின் மார்க்கெட் கேப் மதிப்பில் சுமார் 4.50

-5.00%, இக்குறியீட்டிலுள்ள பங்குகளின் மதிப்பாகும்.

சி.என்.எக்ஸ். பார்மா குறியீடு:

ஜனவரி 1, 2001-ல் அறிமுகம்; அடிப்படைத் துவக்கக் குறியீடு  1000. தற்போது 6117 புள்ளிகளாக இருக்கிறது.

தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பில் சுமார் 4.50 % இக்குறியீட்டிலுள்ள பங்குகளின் மார்க்கெட் கேப்.

தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் மொத்த பார்மா பங்குகளின் மார்க்கெட் கேப்பில் 75 சதவிகிதத்துக்கு மேல் இக்குறியீட்டின் மார்க்கெட் கேப்.

பார்மா செக்டாரை காலகாலத்துக்கும் நாம் கவனித்துக்கொண்டே இருப்பது நல்லது. அடுத்த வாரம் வேறு ஒரு செக்டாருடன் உங்களைச் சந்திக்கிறேன்.

(அலசுவோம்)