மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாணயம் ஜாப் - அவசியம் தேவை...நிறுவனம் தரும் உற்சாகம்..!

செ.கார்த்திகேயன்

 ##~##

அலுவலகத்தில் வேலை பார்க்கும் பணியாளர்கள் எப்போதும் உற்சாகமாக வேலை செய்ய வேண்டும். அப்போதுதான் அடுத்தடுத்து பதவி உயர்வு ஏணியில் தொடர்ந்து மேலே ஏறமுடியும். ஆனால், பணியாளர்கள் உற்சாகமாக நடப்பதென்பது அவர்களிடம் மட்டுமே இல்லை. நிறுவனத்துக்கும் இதில் பெரும் பங்குண்டு. ஊழியர்கள் சோர்ந்து போகாமல் சுறுசுறுப்பாக வேலை பார்க்கும் நிறுவனங்கள் வளர்ச்சி விகிதத்தில் எப்போதுமே ஏறுமுகத்தில்தான் இருக்கும். ஊழியர்களை உற்சாகப்படுத்த நிறுவனங்கள் என்னென்ன செய்ய வேண்டும்? என்பதைச் சொன்னார் பொலாரிஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு பிரிவின் மேலாளர் பாலமுருகன்.  

''வாழ்க்கையின் பெரும் பகுதியை அலுவலகத்தில் கழிக்கும் ஊழியர்களுக்கு நிறுவனத்திடமிருந்து உற்சாகமும், ஊக்குவிப்பும் அவசியம் தேவைப்படும். இந்த உற்சாகமும், ஊக்குவிப்பும் பிற துறைகளில் அதிகம் கிடைப்பதில்லை என்பதுதான் சோகமான விஷயம். ஆனால், ஐ.டி. துறையில் வேலை செய்துவரும் அனைவருக்கும் இந்த வாய்ப்புகள் நிறையவே கிடைக்கிறது. நாள்தோறும் ரோபோக்கள் போல சுழன்று வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு அதிகம் தேவைப்படுவது இந்த உற்சாகம்தான். இன்றைய இளைய தலைமுறையினருக்கு கைநிறைய சம்பளம் கிடைத்தாலும் உற்சாகமும் ஓய்வும் கிடைக்காத வேலையில் தொடர்ந்து இருப்பதற்கு விரும்புவதில்லை'' என்றவர், நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை உற்சாகப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைக் குறித்து விளக்கினார்.  

நாணயம் ஜாப் - அவசியம் தேவை...நிறுவனம் தரும் உற்சாகம்..!

''வருடம் ஒருமுறையேனும் ஒரு விழா நடத்தி, அதில் ஊழியர்கள் மட்டுமல்லாமல் ஊழியர்களின் குடும்பத்தினரையும் அழைத்து உற்சாகப்படுத்துவது அவசியம். சக ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களை தெரிந்துகொள்வதன் மூலம் ஊழியர்கள் உற்சாகமடைவதோடு, குடும்ப உறுப்பினர்களும் உற்சாகமடைவார்கள்.

அலுவலகத்தில் ஊழியர்களுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை குடும்ப உறுப்பினர்கள் நேரடியாகப் புரிந்துகொள்வதன் மூலம் வேலை செய்வதற்கு உதவியாக இருக்க வேண்டும் என்கிற சிந்தனை அவர்களின் மனதில் தோன்றும். இப்படியான நிகழ்ச்சிகளை ஒரு நிறுவனம் நடத்தத் தயாராக இல்லாதபட்சத்தில், அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு காலதாமதமாக வீட்டுக்கு வரும்போது ஊழியரின் நிலைமையைப் புரிந்துகொள்ள குடும்ப உறுப்பினர்கள் தயாராக இருக்க மாட்டார்கள்.

இந்த நிகழ்ச்சியை மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என பண்டிகைகளை ஒட்டி நடத்தினால், ஊழியர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் மிகவும் உற்சாகமடைவார்கள்.

நாணயம் ஜாப் - அவசியம் தேவை...நிறுவனம் தரும் உற்சாகம்..!

அதேபோல, அலுவலகத்தில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களும் சேர்ந்து குழுவாகச் சுற்றுலா செல்வது ஆண்டுக்கு ஒருமுறையாவது நடக்க வேண்டும். இப்படி செல்லும்போது அலுவலக ஊழியர்கள் உற்சாகமடைவதோடு, அவர்களுக்கிடையே பதவி, சம்பளம், வயது வித்தியாசங்களைத் தாண்டி நட்பினை வளர்த்துக்கொள்ள இது நல்லதொரு வாய்ப்பு. ஆனால், இந்த சுற்றுலாவினால் குடும்ப உறுப்பினர்கள் கோபமடைகிற மாதிரி செய்துவிடக்கூடாது. ஊழியர்கள் தங்கள் சொந்த சேமிப்பின் மூலம் பணம் சேர்த்து குடும்ப உறுப்பினர்களை ஏதாவது ஒரு இடத்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதன் மூலமே அவர்களையும் தொடர்ந்து உற்சாகமாக வைத்திருக்க முடியும்.

அதிக வேலைப்பளு இருக்கும் நிறுவனங்களில் மாதம்தோறும் ஊழியர்கள் குடும்பத்தோடு திரைப்படங்களுக்குச் சென்றுவர ஸ்பான்சர் செய்யலாம். அல்லது ஊழியர்களுடன் அனைவரும் ஒன்று சேர்ந்து பார்ட்டியில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யலாம்.  

ஊழியர்களின் பிறந்த நாள், திருமண நாள், மனைவி மற்றும் குழந்தைகளின் பிறந்த நாட்களில் அலுவலகம் சார்பில் வாழ்த்து அட்டை அனுப்புவதன் மூலம் ஊழியர்களை உற்சாகமடையச் செய்யலாம். பிறந்த நாள் அல்லது திருமண நாளின்போது ஒரு சிறு நினைவுப்பரிசை அளித்து ஆச்சரியப்படுத்துவதன் மூலம் நிறுவனத்துடன் ஊழியர்களுக்கு இருக்கும் உறவை இன்னும் வலிமையானதாக ஆக்கிக்கொள்ளலாம்.

ஊழியர்களின் உடல் ஆரோக்கியம் மீது நிறுவனங்கள் காட்டும் அக்கறைக்கு தனி மரியாதை கிடைக்கும். நிறுவனத்தில் அடிக்கடி மருத்துவ முகாம்களை நடத்துதல், நிறுவனத்துக்குள்ளேயே ஜிம் அமைத்து உடற்பயிற்சி செய்ய செய்தல், சிறுசிறு விளையாட்டுகளை விளையாடுவதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருதல் போன்றவை ஊழியர்கள் புத்துணர்ச்சி அடைய பெரிய அளவில் உதவி செய்யும்.

ஆனால், இதை எல்லாம் செய்ய வேண்டியது நிறுவனம்தான். வளர்ச்சியை விரும்பும் நல்ல நிறுவனங்கள் ஊழியர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்த தயங்கவே தயங்காது'' என்று முடித்தார்.