நடப்பு
Published:Updated:

செக்டார் அனாலிசிஸ் - தேயிலைத் துறை...சுறுசுறுப்பு பங்குகள் !

செக்டார் அனாலிசிஸ் - தேயிலைத் துறை...சுறுசுறுப்பு பங்குகள் !

##~##

''சூடா ஒரு கப் டீ சாப்பிட்டா, மீண்டும் ஃப்ரெஷ் ஆயிடலாம்'' எனச் சொல்லும் அளவுக்கு சுறுசுறுப்பான, உற்சாகம் தரும் பானம் டீ. சென்ற ஓர் ஆண்டில் சென்செக்ஸைவிட 50 சதவிகிதம் அதிக ஆதாயத்தைத் தந்திருக்கின்றன தேயிலைப் பங்குகள்! சென்செக்ஸ் தந்த ஆதாயம் 22 சதவிகிதம் எனில், முன்னணி தேயிலைப் பங்குகள் தந்த ஆதாயம் 36 சதவிகிதம். பல நிறுவனப் பங்குகள் 52 வார உச்சத்தைத் தொட்டன. வரும் ஆண்டிலும் இது தொடருமா?

உலக அளவில் தேயிலை உற்பத்தியில் இந்தியாதான் நம்பர் ஒன்! மொத்த உலக உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் தான்! ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் டன்கள்! விற்பனையிலும் இந்தியாதான் நம்பர் ஒன்! ஏறத்தாழ ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் துறை; சர்வதேச அளவில் தேயிலை ஏற்றுமதியிலும் இந்தியாவே முன்னணி வகிக்கிறது; ஆண்டுக்கு ரூ.2,000-ம் கோடிக்கு மேல் ஏற்றுமதி செய்கிறது நம் நாடு.

தென்னிந்தியாவில் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தேயிலை பயிரிடப்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்; வட கிழக்கில், அஸ்ஸாமிலும், மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங்கிலும் உயர்தர தேயிலை பயிரிடப் படுகிறது. மழை குறைந்து வறட்சி காரணமாக, சென்ற ஆண்டு அஸ்ஸாமில் உற்பத்தி 2 சதவிகிதம் குறைந்தது. எனவே, தேயிலை விலை அங்கு 10 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்து கிலோ ஒன்றுக்கு ரூ.130-ஐ தாண்டியது. உயர்தர டார்ஜிலிங் டீ அதிகரித்து ரூ.380-ஐ தாண்டி வர்த்தகமானது. இதே பிரச்னை காரணமாக தென்னிந்தியாவில், தேயிலை விலை 18 சதவிகிதம் வரை அதிகரித்து ரூ.85-ஐ தாண்டியது.  

செக்டார் அனாலிசிஸ் - தேயிலைத் துறை...சுறுசுறுப்பு பங்குகள் !

கென்யா, இலங்கை மற்றும் சீனாவும் ஏற்றுமதியில் நமக்கு இணையாக இருக்கும் நாடுகள். அங்குமே, சுற்றுலா காரணமாகவும், பருவநிலை காரணமாகவும் சமீப காலமாக உற்பத்தியாகும் நிலத்தின் ஏக்கரேஜ் அளவு குறைந்து வருகிறது. சர்வதேச அளவில் சென்ற ஆண்டு உற்பத்தி 2 சதவிகிதத்துக்கு மேல் குறைந்தது.

பொதுவாகவே, இரண்டாம் அரையாண்டில் தேயிலை நிறுவனங்களின் செயல்பாடுகள் பிரமாதமாக இருக்கும். குளிர் காரணமாக தேயிலை உற்பத்தி குறைவதும், அதே குளிர் காரணமாக டீ குடிப்பது அதிகம் என்பதாலும், உற்பத்தி குறைந்து, அதேசமயம் நுகர்வு அதிகரிப்பதால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

சர்க்கரைத் துறையில் கரும்பு போலவே இங்கும்; கமாடிட்டி என்பதால், மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கொருமுறை, சுழற்சி முறையில் விலை ஏற்ற இறக்கங்கள் வந்துபோகும். தேயிலை உற்பத்தி அதிகரிக்கும்போது அதன் விலை குறைவதும், தேயிலை விவசாயிகளுக்குத் தரப்பட வேண்டிய தொகை தாமதமாகக் கிடைப்பதும், அதன்காரணமாக தேயிலை பயிர் செய்வதில் நாட்டம் குறைவதும், வேறு பயிர்களில் அதிக கவனம் செலுத்தத் துவங்குவதும், இதனால் பின்னர் தேயிலை உற்பத்தி குறைவதும், தேயிலையின் விலை மீண்டும் அதிகரிப்பது எனவும், மீண்டும் தேயிலையில் கவனம் திரும்பு வதும் என, இப்படியே சுழற்சி மீண்டும் மீண்டும் தொடரும். எனவே, இதைப் புரிந்துகொண்டால் இப்பங்குகளில் முதலீடு செய்வது எளிது.

இப்போது உச்சத்தை நோக்கிப் பயணிப் பதால், கவனமாக இருக்கவேண்டிய நேரம். தற்போதைக்கு தேயிலைப் பங்குகளின் சந்தை மதிப்பீடு கொஞ்சம் அதிகம்தான் என்றாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக முதலீட்டிற்கு ஏற்ற நல்ல வாய்ப்புகளும் இல்லாமலில்லை. அவற்றில் சில பங்குகளைப் பற்றிய விவரங்களைத் தந்திருக்கிறேன். டாடா குளோபல் பீவரேஜஸ் போன்ற பங்குகளை கவனித்து, விலை குறையும் போது தொடர்ந்து முதலீடு செய்தால் நீண்டகால அடிப்படையில் நல்ல லாபம் பார்க்க முடியும், சுறுசுறுப்பாக.

நீலகிரி டீ: சந்தையில் மிகவும் பாப்புலர்; விலையும் குறைவு.

அஸ்ஸாம் டீ: உயர்தரம்; விலையும் அதிகம்.

டார்ஜிலிங் டீ: மிக உயர் தரம்; விலை மிக மிக அதிகம்.

செக்டார் அனாலிசிஸ் - தேயிலைத் துறை...சுறுசுறுப்பு பங்குகள் !

சி.டி.சி. டீ: கிரஷ்/கட், டியர்/டிவிஸ்ட் அண்ட் கர்ல் (crush/cut,Tear/Twist & Curl -CTC) 75 சதவிகிதத்துக்கு மேல் டீத்தூள் இந்த முறையில்தான் தயாரிக்கப்படுகிறது. மெக்கெர்ச்சர் என்பவர், வழக்கமான பழைய முறையில் சிறிய மாறுதல்களைச் செய்து 1930-ம் ஆண்டு அறிமுகப்படுத்திய முறை. பெயரிலேயே இருப்பதைப்போல, காயவைக்கப்பட்டு சிறிய பற்களைக்கொண்ட வரிசையான உருளைகளில் பயணித்து வெட்டப்பட்டு சுருளாக இறுதிவடிவம் எடுக்கும் இவ்வகை டீ ஸ்ட்ராங்கான தேநீருக்கு உகந்தது. ரெடிமேடாக சிறிய பைகளில் வரும் உடனடி டீ இப்படிப்பட்டதுதான். 'லீஃப் டீ’யில் கலப்படம் செய்வது கடினம்; கொஞ்சம் மட்ட ரகத்தைக் கலப்பது சி.டி.சி. டீ-யில் கொஞ்சம் எளிது. குறைந்த விலை, நிறம், திடம் என சந்தையில் எங்கும் இவ்வகை ரொம்ப பிரபலம். ஆனால், ஒரிஜினல் தேயிலையில் உள்ள நமக்குத் தேவையான பல அரிய சத்துகள் இம்முறையில் நீக்கப்பட்டுவிடுவதாகவும் சொல்லப்படுகிறது. எனவேதான் இப்போதெல்லாம் 'ஆர்கானிக் கிரீன் டீ’ பிரபலமாகி வருகிறது.

டாடா குளோபல் பீவரேஜஸ்: டாடா குழும நிறுவனம் என்பது இதன் முதல் பலம்; டாடா டீ என்பது பழைய பெயர். கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து விலை அதிகரித்து வரும் பங்கு இது. 2011-ம் ஆண்டு ரூ.85-க்குக் கீழே சென்ற இப்பங்கு, சமீபத்தில் ரூ.170-ஐ தொட்டது. இரண்டு ஆண்டுகளுக்குள் இரு மடங்கு அதிகரித்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளித் தந்தது. இப்போது ரூ.140-ஐ ஒட்டி வர்த்தகமாகிறது. ரூ.4,500-க்கு கோடிக்கு மேல் இருந்த கடன் சுமையைக் கணிசமாக குறைத்து ரூ.1,000-ம் கோடிக்குக் கீழே கொண்டு வந்திருப்பது நல்ல செய்தி.

இவை எல்லாவற்றையும்விட நல்ல செய்தி, சர்வதேச பிராண்ட்-ஆன ஸ்டார் பக்ஸ் நிறுவனத்துடன் செய்துகொண்டிருக்கும் ஜே.வி. ஒப்பந்தம். இதன் அடிப்படையில் மும்பையில் கடை திறந்தாச்சு! இனி மற்ற நகரங்களிலும் ஸ்டார் பக்ஸை பார்க்கலாம். ரீடெயில் துறையில் அதிக லாபம் கிடைக்கும் வாய்ப்பு இது. அடுத்த சில ஆண்டுகள் மட்டுமல்ல, நீண்டகால அடிப்படையிலும் அதிகம் கவனிக்கப்படப்போகும், கவனிக்கவேண்டிய பங்கு இது! இதை இன்னொரு ஐ.டி.சி. அல்லது யூனிலீவர் எனச் சொல்லலாம்.

கவனிக்கவேண்டிய இதர பங்குகள்:

பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி: 150 ஆண்டுகள் பழைமையானது; நவம்பர் 2012-ல் 10 ரூபாய் ஸ்டாக்கை 2 ரூபாய் ஸ்டாக்காக ஸ்ப்ளிட் செய்தார்கள்.

செக்டார் அனாலிசிஸ் - தேயிலைத் துறை...சுறுசுறுப்பு பங்குகள் !

மெக்லாயிட் ரஸ்ஸல்: 'பல்க் டீ’ உற்பத்தியில் உலகிலேயே பெரிய நிறுவனம்.

குட்ரிக் குரூப்: 40 சதவிகிதமாக இருந்த புரமோட்டர்கள் பங்கை 54 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறார்கள்.

வாரன் டீ: புரமோட்டர்கள் வசம் 83 சதவிகித பங்குகள் உள்ளன; இதில் 8 சதவிகிதப் பங்குகள் குறைக்கப்படவேண்டும்.

ஜெயஸ்ரீ டீ: இந்தப் பங்கையும் கவனிக்கலாம்.

ஹாரிஸன் மலையாளம்: காளியார் எஸ்டேட் எனும் தன்னுடைய 1,500 ஏக்கர் தோட்டத்தை விற்பதற்குத் தடை விதித்தது கேரள உயர் நீதிமன்றம்.

யுனைடெட் நீல்கிரி டீ: சென்னை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது; தேசிய பங்குச் சந்தையில் மட்டும் வர்த்தகமாகிறது. கடன் குறைவான நிறுவனம்.

அஸ்ஸாம் கம்பெனி: விலை குறைவு என்றாலும், தவிர்க்கவேண்டிய பங்கு. ரிஸ்க் எடுக்கத் தயங்காதவர்கள் ஒருகை பார்க்கலாம்.

ரஸ்ஸல் இந்தியா: ரஸ்ஸல் டீ என்ற பெயரில் முன்பு கொல்கத்தா மற்றும் கவுஹாத்தி பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டது. ஹெலிகாப்ட ருக்கான உதிரிபாகங்கள், ராணுவத்திற்கான விமானங்களுக்கான உதிரிபாகங்கள், ப்ளாக் பக்ஸ் ஆகியவற்றின் தயாரிப்பிலும் உள்ளனர்.

(அலசுவோம்)

தேயிலைத் துறை!

 ஒரு ஸ்வாட் அனாலிசிஸ்!

 பலம்:

இன்றும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் பானம் டீதான்; வளரும் நம்முடைய ஜனத்தொகை, சாலையோர டீ கடைகள், மொபைல்/சைக்கிள் டீ கடைகள், ஏற்றுமதி சந்தை, தரமான தேயிலைத் தோட்டங்கள். இந்திய தேயிலையை ஆதரிக்க ஈரான் முடிவு.

சீனர்கள் டீ குடிப்பது அதிகரித்து வருகிறது. இஞ்சி, துளசி, லெமன், ஏலக்காய், மசாலா டீ - என,  ஃப்ளேவர்டு டீ போன்ற உயர்தர டீ - க்கு அதிக விலை கொடுக்கத் தயாராக இருக்கும் நமது சந்தை மிகப் பெரிய பலம்.  

பலவீனம்:

பருவநிலை மாறுதல்கள், புதிது புதிதாக சந்தையில் அறிமுகமாகும் ஆரோக்கிய குளிர்பானங்கள் போட்டி ஒருபக்கம், கையிருப்பு ஸ்டாக் குறைந்து வருவது. டார்ஜிலிங் மலைப் பகுதிகளில் கூர்கா ஜனமுக்திமோர்ச்சாவின் போராட்டங்கள்.  

அச்சுறுத்தல்:

மலை வாசஸ்தலங்களில் சுற்றுலாத்தலங்கள் வளர்ந்த அளவுக்கு தேயிலை பயிரிடும் இடங்கள் வளரவில்லை. மேலும் சுருங்கும் வாய்ப்புதான் உள்ளது. எனவே, கால ஓட்டத்தில் உற்பத்தி குறைந்து விலை அதிகரிக்கலாம்.  

வாய்ப்பு:

உலகிலேயே அதிக அளவு டீ விற்பனை இந்தியாவில்தான் என்றாலும், நபர் ஒருவர் குடிக்கும் டீயின் அளவு குறைவுதான். குளிரூட்டப்பட்ட டீ குடிப்பதும் அதிகமாகி வருகிறது.