ஆசிரியர் பக்கம்
நடப்பு
Published:Updated:

செக்டார் அனாலிசிஸ் - டாப்பான டயர் பங்குகள் !

வி.நாகப்பன்

##~##

டயர் இண்டஸ்ட்ரி இன்றைக்கு எப்படி இருக்கிறது?, அத்துறையில் உள்ள பிரச்னைகள் என்னென்ன என்பது குறித்து கடந்த இதழில் விரிவாகப் பார்த்தோம். இந்த இதழில் இத்துறையின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதையும், இத்துறையில் இருக்கும் சில முக்கியப் பங்குகள் பற்றியும் விரிவாகப் பார்ப்போம்.

எதிர்காலம் எப்படி?

குறுகியகால அடிப்படையில் ஆட்டோ மொபைல் துறையின் போக்கு சுமாராக இருப்பதும், ஏற்றுமதி பெரிதாக வளராது என்பதுவும் இப்போதைக்கு இத்துறையில் முட்டுக்கட்டைப்போட்டு நிற்கும் முக்கியப் பிரச்னைகள்; மூலப்பொருட்களின் விலை குறைந்து வருவதும் இன்னொரு முக்கியப் பிரச்னை. இனி இந்த விலை குறைவது நின்று ஓரளவுக்கு ஸ்திரமாகலாம். மத்திய ரிசர்வ் வங்கி 0.25 சதவிகிதம் வட்டிக் குறைப்பு செய்திருப்பது இத்துறைக்கு நல்லது.

செக்டார் அனாலிசிஸ் - டாப்பான டயர் பங்குகள் !

நீண்டகால அடிப்படையில், ரப்பர் விலை, வட்டி விகிதம் மற்றும் டாலர் மதிப்பில் மாற்றங்களைப் பொறுத்து லாப விகிதங்கள் மாறலாம். மற்றபடி வளர்ச்சி ஓரளவுக்கு ஸ்திரமாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

எப்படித் தேர்ந்தெடுக்கலாம்?

இனி பங்குகளை எப்படித் தேர்வு செய்யலாம் என்பதை விளக்கமாகப் பார்ப்போம்.

செக்டார் அனாலிசிஸ் - டாப்பான டயர் பங்குகள் !

* ஓ.இ.எம்.: வாங்கும் சக்தி அதிகம் உள்ளவர்கள்; பேரம் பேசும் அளவு வாங்குகிறவர் கள். லாபம் குறைவு, விற்பனை அதிகம்.

* ரீப்ளேஸ்மென்ட்: லாபம் அதிகம்; ஆனால், பிராண்ட் லாயல்டி அவசியம்.

* ஏற்றுமதி: டாலர் மதிப்பு மாற்றம்; சர்வதேச அளவில் பொருளாதாரத் தேக்கநிலை.

மேலே சொன்ன மூன்றையும் சீர்தூக்கிப் பார்த்து சரியான கலவையில் விற்பனை உள்ள நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இறுதியாக, டூவீலர், ஃபோர் வீலர், கனரக/இலகுரக வாகனங்கள் என பலதரப்பட்ட வாகனங்களுக்கும் டயர் உற்பத்தி செய்யும் பன்முக நிறுவனமா என்பதும் முக்கியம்.

பங்குகள்!

எம்.ஆர்.எஃப். லிட்:

பலூன் தயாரிக்கும் கம்பெனியாகத்தான் முதலில் ஆரம்பிக்கப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா?! இந்தியாவின் மிகப் பெரிய டயர் உற்பத்தி நிறுவனம்; நம் நாட்டின் முதல் டயர் ஏற்றுமதியாளர், அதுவும் 1967-ம் ஆண்டிலேயே! இப்போது பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. ரூ.100 பில்லியனுக்கு மேல் விற்பனை. பலதரப்பட்ட வாகனங்களுக்கு டயர் உற்பத்தி செய்வதோடு, அந்தந்தப் பிரிவுகளிலும் விற்பனையில் நம்பர் ஒன்னாகத் திகழ்கிறது.

செக்டார் அனாலிசிஸ் - டாப்பான டயர் பங்குகள் !

சுரங்கங்கள், சிமென்ட் ஆலைகள், அனல்மின் நிலையங்கள், எஃகு உற்பத்தி ஆலைகள், உர உற்பத்தி ஆலைகள் ஆகியவற்றுக்குத் தேவையான கன்வேயர் பெல்ட், பாலியூரித்தீன் பெயின்ட் வகைகளையும் உற்பத்தி செய்கிறது. சென்னை, புதுச்சேரி, அரக்கோணம், திருச்சி, கோட்டயம், மேடக் மற்றும் கோவாவில் என ஏழு தொழிற் சாலைகள் உள்ளன.

பங்கு முதலோடு ஒப்பிட்டுப்பார்க்கையில், எக்கச்சக்க ரிசர்வ் கையிருப்பாக பேலன்ஸ்ஷீட்டில் இருந்தபோதிலும், முதலீட்டாளர்களுக்குப் பெரிய அளவில் போனஸ் கொடுக்கவில்லையே என்பது, இந்நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்து பல ஆண்டுகளாக நம்பிக்கையோடு காத்திருப்பவர்களின் ஏக்கம். ஆனால், விற்பனை யிலும், லாபத்திலும் நல்ல செயல்பாடு உள்ள நிறுவனம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். நீண்டகால முதலீட்டாளர்களுக்கு ஏற்ற நல்ல பங்கு. விலை இறங்க இறங்க வாங்கிச் சேர்க்க ஏற்ற பங்கு.

அப்போலோ டயர்ஸ் லிட்:

செக்டார் அனாலிசிஸ் - டாப்பான டயர் பங்குகள் !

எம்.ஆர்.எஃப்.-க்கு அடுத்து இரண்டாவது இடம் இந்நிறுவனத்துக்குத்தான். இதுவும்கூட அனைத்து ரக டயர்களையும் உற்பத்தி செய்யும் நிறுவனம். இந்தியாவில் மட்டுமல்லாது, நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே உள்ளிட்ட பல நாடுகளில் பத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் டன்லப் பிராண்டிற்கான உரிமத்தைப் பெற்றிருக்கிறது. வெளிநாடுகளில் வாங்கிய தொழிற்சாலைகள் மூலமாகவும் நல்ல வருவாய் வரத் துவங்கியிருக்கிறது. ரீப்ளேஸ்மென்ட் சந்தை தான் இதன் பலம் (65%). புதிது புதிதாகப் பல பெரிய முதலீடுகளை இத்துறையில் செய்து வருகிறார்கள். அக்ரெஸிவ்வான வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். எதிர்காலத்தில் மல்டிபேகராகவும் வரும் வாய்ப்பு உள்ளது. காத்திருந்து வாங்கவும்.

சீயட் லிட்:  

செக்டார் அனாலிசிஸ் - டாப்பான டயர் பங்குகள் !

இப்போது ஆர்.பி.ஜி. குழும நிறுவனம். என்றாலும், டாடா குழும ஆதரவோடு சீயட் டயர்ஸ் லிமிடெட்-ஆக 1958-ல் ஆரம்பிக்கப்பட்டது. ட்ரக் மற்றும் பஸ்களுக்கான டயர்கள் உற்பத்தி/விற்பனை இவர்களது பலம். இந்த நிறுவனம் டயர் உற்பத்தியில் மட்டுமல்லாமல், டியூப்கள் உற்பத்தியிலும் கவனம் செலுத்தி வருகிறது. வருடத்திற்கு இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 3,500 கோடி ரூபாய்.

இந்த நிறுவனம் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னர் முதன் முதலில் 1924-ம் ஆண்டு இத்தாலியில் ரயில்வே மற்றும் தொலைத்தொடர்பு கேபிள்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக அமைக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் சுமார் ஆறு மில்லியன் டயர்களை உற்பத்தி செய்து வருகிறது.  தான் உற்பத்தி செய்யும் டயர்களை அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் மொத்தம் 37 மண்டல அலுவலகங்களையும், 3,500 டீலர்களையும்கொண்டு செயல்பட்டு வருகிறது.

ஜே.கே. டயர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரிஸ்:

செக்டார் அனாலிசிஸ் - டாப்பான டயர் பங்குகள் !

ராஜஸ்தானில், சிங்கானியா குழுமத்தைச் சேர்ந்தது; சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே மேற்கு வங்கத்தில் ஆரம்பிக்கப்பட்டாலும், எழுபதுகளின் ஆரம்பத்தில்தான் டயர் உற்பத்திக்கான ஆலையை நிறுவியது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் (மைசூர்) ஐந்து ஆலைகள் உள்ளன. மெக்சிகோவின் முக்கிய டயர் கம்பெனியை வாங்கியதன் மூலம் மூன்று ஆலைகள் உள்ளன. மாருதி, டாடா, டொயோட்டா, ஃபோர்டு, ஃபியட், ஹோண்டா, மிட்சுபிஷி என பதினைந்துக்கும் மேற்பட்ட வாகன உற்பத்தியாளர்களுக்கு நேரடியாக ஓ.இ.எம். அடிப்படையில் விற்பனை செய்கிறது இந்நிறுவனம்.

(அலசுவோம்)