Published:Updated:

கரன்சி டிரேடிங்... கதவைத் தட்டும் புதிய வாய்ப்பு!

வா.கார்த்திகேயன்.

பிரீமியம் ஸ்டோரி

முதலீடு :

##~##

நேற்றுவரை நமக்குத் தெரிந்ததெல்லாம் பங்குச் சந்தை மட்டுமே. இன்று, கமாடிட்டி சந்தை பற்றியும் நாம் தெரிந்துகொண்டுவிட்டோம். நாளைக்கு கரன்சி சந்தை பற்றியும் அறிந்துகொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று சொன்னால் அதில் எந்த மிகையும் இல்லை.

ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இருப்பவர்களே  கரன்சி சந்தை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்த காலம் முடிந்துவிட்டது. இன்றைக்கு கமாடிட்டி சந்தை போல, கரன்சி சந்தையிலும் டிரேடிங் செய்து லாபம் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதிக ஏற்ற, இறக்கம் இல்லாத சந்தை இது என்பதால், பலரும் இதில் இறங்கி லாபத்தைச் சுவைக்கத் தொடங்கி இருக்கின்றனர்.  

இத்தனைக்கும் இந்தியாவில் கரன்சி சந்தை வர்த்தகம் ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள்தான் ஆகிறது. 2008-ல்தான் முதன்முதலாக இந்தியாவில் கரன்சி டெரிவேட்டிவ் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த வருடம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 57 ரூபாயைத் தாண்டியபோதுதான் கரன்சி வர்த்தகத்தின் மீது பலருக்கும் ஆர்வம் பிறந்தது.

அமெரிக்க டாலர், யூரோ, பவுண்ட், யென் ஆகிய நான்குவகையான கரன்சிகளை நம்மூரில் வர்த்தகம் செய்யமுடியும். இந்தியாவில் நடக்கும் கரன்சி வர்த்தகத்தில் சுமார் 85 சதவிகிதம் டாலரில் மட்டுமே நடக்கிறது. இதற்கு காரணம், டாலர் வர்த்தகத்தில் மட்டும்தான் ஆப்ஷன் நடக்கிறது. மற்ற நாடுகளில் 24 மணி நேரம் கரன்சி வர்த்தகம் நடந்தாலும் நம்மூரில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கரன்சி வர்த்தகம் செய்யமுடியும்.

கரன்சி டிரேடிங்... கதவைத் தட்டும் புதிய வாய்ப்பு!

சிறுமுதலீட்டாளர்களும் செய்யலாம்!

நான் ஒரு சிறுமுதலீட்டாளர்தான். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலை எல்லாம் நான் செய்யவில்லை. நான் ஏன் கரன்சி சந்தையைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்று கேட்கிறீர்களா?

சிறுமுதலீட்டாளர்கள் கரன்சி வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. இந்த சந்தையில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை. கரன்சி சந்தையின் வர்த்தகம் பெரும்பாலும் செய்தியைப் பொறுத்துதான் இருக்கும். வதந்திகள் இல்லை என்பதால், அதிக ஏற்ற, இறக்கம் இருக்காது. கமாடிட்டி வர்த்தகம்கூட சப்ளை-டிமாண்டை பொறுத்து விலை மாறுபடும். ஆனால், கரன்சி சந்தையில் செய்திகள் மட்டுமே விலையை நிர்ணயிக்கும்.

பங்கு மற்றும் கமாடிட்டி சந்தைகளோடு ஒப்பிடும்போது கரன்சி சந்தையில் குறைவான மார்ஜின் செலுத்தினால் போதும். இதன் மார்ஜின் தொகை சுமார் 3 சதவிகிதம்தான். மேலும், கரன்சி சந்தையில் பெரிய அளவுக்கு ஏற்ற இறக்கம் இருக்காது. 2010-ல் சுமார் 5 பைசா என்ற அளவில்தான் ஏற்ற, இறக்கம் இருந்தது. இது இப்போது கொஞ்சம் அதிகரித்திருக்கிறது இச்சந்தையின் வால்யூமும்  அதிகரிக்கவே செய்திருக்கிறது.

ஏற்றுமதியாளர்களுக்கு..!

கரன்சி டிரேடிங்... கதவைத் தட்டும் புதிய வாய்ப்பு!

ஏற்றுமதியாளர்கள் ஓ.டி.சி (Over the counter)சந்தையில் டாலரை ஹெட்ஜ் செய்வதைவிட, கரன்சி சந்தையில் வர்த்தகம் செய்யலாம். ஓ.டி.சி. சந்தையில் அவர்கள் சொல்வதுதான் விலை. மேலும், ஆளுக்கு தகுந்தாற்போல, வாங்கும் அளவுக்கு தகுந்தாற்போல விலை மாறும். மேலும், ஓ.டி.சி-யில்  செல்லும்போது லெட்டர் ஆஃப் கிரெடிட் காட்டவேண்டும். (அதாவது, உங்களிடம் இருக்கும் ஏற்றுமதி ஆர்டரை காட்டவேண்டும்). இங்கு அப்படி எதையும் காட்டத் தேவையில்லை. தவிர, ஒருவர் எவ்வளவு பொசிஷனையும் வைத்துக்கொள்ளலாம்.

எவ்வளவு லாபம்?

ஒரு லாட் என்பது 1,000 டாலர்கள். ஒரு டாலர் 56 ரூபாய் என்று வைத்துக்கொண்டால், 56,000 ரூபாய் ஒரு லாட். இதில் சுமார் 3 சதவிகிதம் அளவுக்கு மட்டும் மார்ஜின் செலுத்தினால் போதும். ஒரு பைசா உயர்ந்தால் 10 ரூபாய் லாபம் கிடைக்கும். அதிகபட்சம் 2 ரூபாய் வரை புரோக்கரேஜ் மட்டும் பரிவர்த்தனை வரிக்குச் செலவாகலாம். ஒருவர் ஒரு நாளைக்கு எத்தனை லாட்டுகள் வேண்டுமானாலும் வாங்கி, விற்கலாம். ஒரு நாளைக்கு எத்தனைமுறை வேண்டுமானாலும் வர்த்தகம் செய்யலாம். இதில் ரிஸ்க் குறைவு என்பதினால் கிடைக்கும் லாபமும் குறைவாகவே இருக்கும்.

என்ன செய்யவேண்டும்?

கரன்சி வர்த்தகத்தில் ஈடுபடும்போது என்னென்ன விஷயங்களை கவனிக்கவேண்டும் என்பது குறித்து ஜியோஜித் நிறுவனத்தின் கரன்சி ஹெட் (தென் இந்தியா) சங்கரிடம் பேசினோம்.

கரன்சி டிரேடிங்... கதவைத் தட்டும் புதிய வாய்ப்பு!

'' இதில் மார்ஜின் தொகை குறைவு என்பதால் கையில் இருக்கும் தொகை முழுவதற்கும் பொசிஷன் எடுக்கக்கூடாது. மேலும், ஸ்டாப்லாஸ் போடாமல் பலரும் வர்த்தகம் செய்கிறார்கள். இதனால் அதிக இழப்பு வரலாம். இந்த சந்தைக்குள் நுழைய நிறைய ஹோம்வொர்க் தேவை. உலக நிலவரங்கள், முக்கியமான டேட்டாக்கள் எப்போது வருகிறது, அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். தங்கத்துக்கும், கரன்சிக்கும் உள்ள தொடர்பையும் புரிந்துகொள்ளவேண்டும்.

நீங்கள் அமெரிக்க டாலர் மற்றும் இந்திய ரூபாய்க்கு மட்டும் வர்த்தகம் செய்தாலும்,  கிராஸ் கரன்சி என்று சொல்லக்கூடிய மற்ற நாணயங்களும் எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்க்கவேண்டும். சமீபத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான யூரோ கடுமையாக சரிந்தது. இதனால் அமெரிக்க டாலர் பலமடைந்தது. இந்த பலம் இந்திய ரூபாயின் வர்த்தகத்திலும் பாதிப்படைந்தது. அதனால் உலக விஷயங்களையும் தொடர்ந்து அப்டேட் செய்ய வேண்டும்'' என்று முடித்தார்.

புதிய வாய்ப்பைத் தேடுகிறவர்கள் இதையும் ஒரு கைபார்க்கலாமே!

ரூபாய் எதிர்காலம்?

கரன்சி டிரேடிங்... கதவைத் தட்டும் புதிய வாய்ப்பு!

இந்திய ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு 56 ரூபாய்க்கு மேலே சென்றுவிட்டது. இந்திய ரூபாய் இன்னும் பலவீனமடைந்து, தன்னுடைய உச்சபட்ச அளவான 57.12 ரூபாய்க்கு செல்லுமா என்பதுதான் இப்போதைக்கு பெரும்பாலானவர்களின் கவலை. இதுகுறித்து மும்பையில் இருக்கும் ஆனந்த்ரதியின் கமாடிட்டி மற்றும் கரன்சி அனலிஸ்ட் சிவசுப்ரமணியம் கூறும்போது, ''முந்தைய குறைந்தபட்ச விலையை உடைத்துக்கொண்டு கீழே செல்வதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. ஒருவேளை போனாலும் அந்த இடத்தில் நிலைபெறாமல் மீண்டும் உயர்வதற்குதான் வாய்ப்பு அதிகம். ரூபாயில் பலவீனம் ஏதும் இல்லை. மற்ற நாணயங்களுக்கு எதிராக டாலர் பலமடைந்து வருவதே இந்திய ரூபாய் மதிப்பு சரிவதற்கு முக்கிய காரணம். இந்தியப் பொருளாதாரம் ஓரளவுக்கு தேறி வருவதால் 57 ரூபாய்க்கு கீழே சரிய பெரிய வாய்ப்பு இல்லை'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு