Published:Updated:

லாபம் தரும் பங்குகள்...

சூப்பர் செலெக்ஷன் ஃபார்முலாக்கள்!

லாபம் தரும் பங்குகள்...

சூப்பர் செலெக்ஷன் ஃபார்முலாக்கள்!

Published:Updated:
##~##

''என்ன, அரைச்ச மாவையே அரைக்கிறீங்களே!' என்று கேட்பவர்களுக்கு..!

தெரிந்த விஷயத்தை அடிப்படையாகக்கொண்டு ஆரம்பித்து, தெரியாத/புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதுதான் சரியான முறை. அந்த விதத்தில், சில அடிப்படைகளை மீண்டும் ஒருமுறை ஆரம்பத்தில் அலசிவிட்டு, பின்னர் அடுத்தக்கட்டத்திற்குத் தாவலாமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொண்ணு அல்லது மாப்பிள்ளைப் பார்த்த அனுபவம் உண்டல்லவா? சிவப்பாக வேண்டும் என்றால் குட்டையாக இருக்கலாம் என்றில்லை; உயரமாக வேண்டும் என்றால் குண்டாக இருக்க வேண்டும் என்றும் அர்த்தமில்லை. உயரமாக, சிவப்பாக, ஒல்லியாக பெண் வேண்டும் என  எல்லாவற்றையும் சேர்த்துச் சொன்னால், அதற்காக 80 வயது பாட்டியைக்கொண்டு வந்து நிறுத்தினால் சரியாக இருக்குமா?

ஆக, நமக்குப் பிடித்த, தேவையான எல்லா குணாதிசயங்களையும் பேப்பரில் லிஸ்ட் போட்டுக் கொடுத்தால்கூட அதையும் தாண்டி சரியான முடிவெடுப்பதற்கு ஒரு விஷயம் தேவை: அதுதான் காமன்சென்ஸ். அதுகூட கடைசியில்தான் தேவை. அதற்கு முன்பு நமக்குத் தேவையான வடிகட்டிகள் என்ன? ஓரளவுக்குச் சரியான, முதலீட்டிற்கு ஏற்ற பங்குகளைத் தேர்ந்தெடுக்க உதவும் சில 'ஃபில்டர்’களை இங்கு பார்க்கலாம். அதற்கு முன்பாக...

உபரி மட்டுமே..!

பங்குச் சந்தை முதலீட்டிற்குள் நுழைபவர்களுக்கான முதல் விதி: உபரி சேமிப்பை மட்டுமே பங்குகளில் முதலீடு செய்யுங்கள். ஏனெனில், பங்குச் சந்தையில் வெற்றி பெற முதல் தேவை சரியான மனப்பக்குவம். வட்டிக்குக் கடன் வாங்கி முதலீடு செய்பவர்களுக்கு அது சாத்தியமாவது கடினம். மாதாமாதம் வட்டி கட்டவேண்டுமே என்ற சுமையும், கடனைத் திருப்பி அடைக்கவேண்டுமே என்ற கவலையும் மனதைப் பாரமாக அழுத்தும். மனஅழுத்தத்தின் பிடியில் சிக்கியிருக்கும்போது நாம் எடுக்கும் முடிவுகள் அவ்வளவு சரியானதாக இருக்காது. எனவே, குறைந்தபட்சம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்காவது தேவைப்படாத உபரி சேமிப்பில் இருந்து மட்டுமே பங்குகளில் முதலீடு செய்யவும்.

லாபம் தரும் பங்குகள்...

பிரித்து செய்யுங்கள்..!

அடுத்ததாக, பல்வேறு துறைகளில் பிரித்து முதலீடு செய்யுங்கள். ஓரளவுக்கு ரிஸ்கை கட்டுப்படுத்துவதோடு, நீண்டகால அடிப்படையில் ஆதாயத்திற்கும் வாய்ப்பைத் திறந்து வைக்கும். அதேசமயம், எவ்வளவு பங்குகளில் அல்லது துறைகளில் பிரித்து முதலீடு செய்வது என்ற கேள்வி எழாமலில்லை. அது நம் முதலீட்டின் அளவைப் பொறுத்தும் மாறுபடும். முதலீட்டுத் தொகை சிறிதாக இருக்கும்போதும், அளவுக்கு அதிகமாக பல பங்குகளில் நம் முதலீட்டை பிரித்துப் போடும்போதும், லாபமும் மிகக் குறைவாகவே இருக்கலாம். பத்து துறை பங்குகளுக்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்வது என்பது சாமானிய முதலீட்டாளர்களுக்கு, முதலீட்டை ட்ராக் செய்யும் வேலையையும் எளிதாக்கும்.

டாப் டவுன் அப்ரோச்!

முதலீட்டில், 'டாப் டவுன் அப்ரோச்’ என சொல்வார்கள். அதாவது, நம் முதலீட்டிற்கு ஏற்ற வளர்ச்சி வாய்ப்புள்ள துறையை முதலில் தேர்வு செய்துவிட்டு, பின்பு அத்துறையில் முதலீட்டுக்குச் சிறந்த நிறுவனம் எது என தேர்ந்தெடுப்பது. இதற்கு நேரெதிர், 'பாட்டம் அப் அப்ரோச்’. எதிர்காலத்தில் அதிக வளர்ச்சியைத் தரும் 'சன்ரைஸ்’ துறைகளை அடையாளம் கண்டு முதலீடு செய்வது ஒருவகை; 'எவர்கிரீன்’ துறைகளில் சேஃப்-ஆக முதலீடு செய்வது இன்னொருவகை. ரிஸ்க்கிற்கு அஞ்சாதவர்கள், 'சன்ரைஸ்’ இண்டஸ்ட்ரி சேர்ந்த பங்குகளிலும், பாதுகாப்புக்குத் தேடுபவர்கள் 'எவர்கிரீன்’ பங்குகளிலும் முதலீடு செய்வது நல்லது.

இவை தவிர்த்து, எல்லோருக்கும் பொதுவான விதிமுறை என ஒன்று இருக்க முடியாது என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம்.  

இனி ஃபில்டர்கள்:

1. ஆண்டு அறிக்கை மற்றும் காலாண்டு அறிக்கைகள்: முதலீட்டிற்கு ஏற்ற பங்குகளைத் தேர்ந்தெடுக்குமுன் ஒவ்வொரு முதலீட்டாளரும் அந்நிறுவனத்தின் ஆண்டறிக்கையை முழுமையாகப் படிக்கவேண்டும். அந்நிறுவனம் பற்றிய பரந்துபட்ட புரிதலைப் பெற இது ஓர் ஆரம்பகட்ட அடிப்படை முயற்சி.

2. மேனேஜ்மென்ட் டிஸ்கஷன் அண்டு அனாலிசிஸ்: ஆண்டறிக்கையில் முக்கியமான அங்கம் உண்டு. கடந்த காலத்தையும் எதிர்காலத்தில் நிறுவனத்தின் திட்டங்கள், விரிவாக்கப் பணிகள், சந்தையின் போக்கு, சந்தையின் சவாலைச் சந்திக்க கைவசம் இருக்கும் திட்டங்கள், வளர்ச்சிக்கான சாத்தியங்கள் ஆகியவற்றை நிர்வாகமே இங்கு அலசி ஆராய்ந்து விவாதித்திருக்கும். வளர்ச்சியைக் கணிக்க நமக்கு ஓரளவுக்கு உதவும்.

3. ஆடிட்டர்ஸ் ரிப்போர்ட்: கம்பெனி கணக்குவழக்குகளில் ஏதாவது சிக்கல், நேர்மைக் குறைவு என்றால், அதை இங்கு குறிப்பிட வேண்டியது அந்த நிறுவனத்தின் ஆடிட்டரின் கடமை. ஆபத்தை முதலீட்டாளர்கள் முன்கூட்டியே உணர்ந்துகொள்ள இந்த அறிவிப்பு உதவும்.

லாபம் தரும் பங்குகள்...

4. இ.பி.எஸ்: பங்கு ஒன்று ஈட்டும் லாபம் தொடர்ந்து நீண்டகால அடிப்படையில் சராசரியாக அதிகரித்து வருகிறதா எனப் பார்க்கவேண்டும்.

5. பி.இ. ரேஷியோ: நியாயமான, நேரடியான காரணமில்லாமல், ஒட்டுமொத்த சந்தை இறங்கியதால் மட்டுமே ஒரு நல்ல பங்கின் பி.இ. ரேஷியோ குறைவு என்றால், அப்பங்கை வாங்க ஒரு நல்ல வாய்ப்பாகவே பார்க்கவேண்டும்.  

6. பி.இ.ஜி. ரேஷியோ: பி.இ. ரேஷியோவைவிட இது முக்கியம். ஒரு நிறுவனத்தின் தொடர் வளர்ச்சி, ஸ்திரத்தன்மையைக் கணிக்க உதவும்.

7. புக் வேல்யூ: ப்ராக்டிகலாகப் பார்த்தால், இந்த அளவுகோலால் எந்த பிரயோஜனமும் இல்லை. இருந்தாலும், ஒரு நிறுவனத்தின் அடிப்படை வலுவைக் கணிக்க இன்றும் ஆதாரமாகப் பார்க்கப்படுவது இதுதான்.  

8. டிவிடெண்ட் யீல்ட்: எப்போதெல்லாம் ஒரு நல்ல பங்கின் டிவிடெண்ட் யீல்டு சராசரியைவிட அதிகமாக இருக்கிறதோ, அப்போதெல்லாம் வாங்கலாம்.  

9. கேஷ் ஃப்ளோ: மிக முக்கியமான அளவுகோல் இது. நல்ல லாபம் ஈட்டும் நிறுவனம்கூட இதில் தோல்வி அடையலாம்.  லாபம் எல்லாம் கணக்கில் மட்டும்தான். உண்மையில் இருக்காமல் போகலாம். பில் போட்டு விற்பனை செய்தும் பணம் வரவில்லை என்றால் என்ன லாபம்? வாராக்கடன் மட்டுமல்லாது இன்னும் பல ரகசியங்களை உள்ளடக்கியது இந்த கேஷ் ஃப்ளோ ஸ்டேட்மென்ட். ஒவ்வொரு ஆண்டறிக்கையிலும் இருக்கும் இது, பாசிட்டிவ்-ஆக இருப்பது அவசியம்.

10. டெப்ட் ஈக்விட்டி ரேஷியோ: ஒரு நிறுவனத்தின் மொத்த பங்கு முதல் (ரிசர்வ் உள்ளிட்டது) போல எத்தனை மடங்கு கடன் உள்ளது என்பதைக் காட்டும் குறியீடு இது. பொதுவாக, அதிவேகத்தில் வளர்ந்துவரும் நிறுவனங்களுக்கு, அதன் பங்கு மூலதனம் போல இரு மடங்குகூட கடன் இருக்கலாம். வளர்ச்சி ஏதும் இல்லாமல் தேக்கநிலையில் இருக்கும் நிறுவனங்களுக்கு, இது சராசரியாக, ஒன்றுக்குள் இருக்கவேண்டும். நன்றாக வரும் நிறுவனத்தின் லாபமும் வளர வாய்ப்பிருப்பதாலும் கடனைத் திருப்பிக் கொடுக்கும் சக்தியும் அதிகம் என்பதாலும் அதிகம் கடன் வாங்குவதால் தவறில்லை. ஆனால், அதிக வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாத நிறுவனம் அப்படிச் செய்ய முடியாது. முதலுக்கு மேல் பல மடங்கு கடன் வாங்கினால், எங்கிருந்து திருப்பித் தருவது?

11. மார்க்கெட் கேப்: நிறுவனங்களின் பங்குச் சந்தை மதிப்பு அதிகம் உள்ள 'லார்ஜ் கேப்’ பங்குகளை அல்லது அதற்கு அடுத்த அளவில் உள்ள 'மிட் கேப்’ பங்குகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. ஓரளவு நல்ல லிக்விடிட்டி இருப்பதால் விற்பது வாங்குவதில் சிக்கல் இருக்காது. எஃப்.ஐ.ஐ.கள் அதிகம் முதலீடு செய்வது இவற்றில்தான். ஸ்மால் கேப் பங்குகளை சாமானிய முதலீட்டாளர்கள் தவிர்ப்பது நல்லது. கெட்ட காலத்தில் சிக்கினால் சின்னாபின்னமாவது உறுதி!

லாபம் தரும் பங்குகள்...

12. கார்ப்பரேட் கவர்னன்ஸ்: இது  மிக முக்கியம். ஒரு நிறுவனத்தின் நிதிச் செயல்பாடுகள் தவிர்த்து அதன் உண்மையான தராதரத்தை நிர்ணயம் செய்ய இது உதவும். ஆண்டறிக்கையில் முக்கிய பங்கு வகிக்கும் இதையும் நாம் கவனமாகப் படிக்கவேண்டும்.

13. டாப்லைன் குரோத், பாட்டம்லைன் குரோத்: தொடர்ச்சியான விற்பனை அதிகரிப்பும், லாபம் அதிகரிப்பும் இருக்கும் நிறுவனங்களுக்கு மவுசு அதிகம். (உதா. ஹெச்.டி.எஃப்.சி.)

14 அதிகரிக்கும் க்ராஸ் / நெட் மார்ஜின்: மொத்த லாபம் மற்றும் நிகர லாபம் தொடர்ந்து அதிகரித்து வருகிறதா என கவனியுங்கள்.

15. கம்பெனியின் வெப்சைட்:  இதை பார்த்தால் பல தகவல்கள் வெளிவரும். வெளிவராமலும் இருக்கும் பல தகவல்களும் அதில் பொதிந்திருக்கலாம்.

16. விலை குறைவான பங்கெல்லாம் நல்ல பங்கல்ல. அதேபோல,

17. விலை அதிகமான பங்கெல்லாம் கெட்ட பங்கல்ல.

18. ஸ்ட்ராங் பிராண்ட்: இவை நீண்டகால அடிப்படையில் நல்ல பலன் தரும். ஆனால், இன்று விலை அதிகமாகவே இருக்கும். எனவே, சந்தை வீழ்ச்சிக்குக் காத்திருந்து வாங்கவும்.

19. ஹை என்ட்ரி பேரியர்: யாரும் எளிதில் நுழைந்துவிட முடியாத துறை பங்குகளில் முதலீடு செய்வது பாதுகாப்பானது.  

20. ப்ளூ ஓஷன் ஸ்ட்ராட்டஜி மற்றும் எக்கனாமிக் மோட்: இந்நிறுவனங்கள் பாதுகாப்பானவை.

பங்குகளின்/ அத்துறையின் குணாதிசயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். உலோகம், தேயிலை, காபி போல அது சைக்ளிக்கல் இண்டஸ்ட்ரியா இல்லை பார்மா, எஃப்.எம்.சி.ஜி.போல   டிஃபென்சிவ் செக்டாரா, சாஃப்ட்வேர், பவர் போல ஸ்டேபிலா, சர்க்கரை, வங்கிபோல வாலட்டைல் ஆனதா என அலசவேண்டும். காலத்திற்கு ஏற்ப இந்நிலை மாறும்.

உதாரணமாக, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சமீபகாலமாக குறைந்து வருவதால், மென்பொருள் துறை பங்குகள் வாலட்டைலாக மாறிவிட்டன. தினமும் டாலர் மதிப்புக்கு ஏற்ப தாளம் போடுகின்றது இப்பங்குகளின் விலை. எனவே, இப்போது ஸ்ட்ரிக்ட் ஸ்டாப் லாஸுடன் டிரேட் செய்ய உகந்தவை இவை என முடிவுக்கு வரலாம்.  

எல்லோரும் சொல்லும் பங்கு..!

எல்லோரும் சொல்லும் பங்கை உடனடியாக வாங்காதீர்கள்; தினசரி வர்த்தகத்திற்கு வேண்டுமானால் அது ஏற்றதாக இருக்கலாம். நல்ல பங்காக இருந்தால், காத்திருந்து சந்தை இறக்கத்தின்போது மட்டுமே வாங்கவும். 'சரி, இறங்கலைனா?’ என்னும் கேள்விக்கு, சந்தையில் பல ஆயிரம் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன என்பதுதான் பதில்.

ஈஸி டிப்ஸ்..!

உங்களிடம் இருக்கிறது டிப்ஸ்; எனவே, அடுத்தவரிடம் கேட்காதீர்கள்! பீட்டர் லின்ச் சொல்வது இதுதான்: உங்களைச் சுற்றிப் பாருங்கள். உங்களுக்கு எது பிடிக்கும்?, உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு என்ன பிடிக்கும்?, எதை வாங்குகிறார்கள்?, எதைப் பயன்படுத்துகிறார்கள்?, எதை மறுபடியும் மறுபடியும் வாங்குகிறார்கள்?, அதை தயாரிக்கும் நிறுவனம் எது? இதுதான் டிப்ஸ். யாரையும் கேட்காமலேயே கிடைக்கும் டிப்ஸ்!

சந்தைக்கேற்ப மாறுங்கள்..!

நல்ல பங்குகளைத் தேர்ந்தெடுத்தபின் கொஞ்சம் லாபத்திற்கு ஆசைப்பட்டு, அவசரப்பட்டு விற்றுவிடாதீர்கள். பிரேக்அவுட்டிற்குப் பின்னர்தான் பல நேரங்களில் லாபம் பன்மடங்கு பெருகும்.

மாற்றம் ஒன்றே மாறாதது: சந்தையின் போக்குக்குத் தக்க மாறத் தயாராகுங்கள். நீண்டகால முதலீடு எனும் மனப்பக்குவம் அவசியம்தான். ஆனால், நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என எப்போதுமே சொல்லிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. காலம் மாறும்போது நாமும் மாறவேண்டும். இது தவிர வேறு எதுவும் சாஸ்வதமில்லை.

நீங்கள் யார்..?

லாபம் தரும் பங்குகள்...

நீங்கள் டே டிரேடரா, இல்லை டிரேடரா அல்லது லாங் டேர்ம் இன்வெஸ்டரா என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். என்னைக் கேட்டால், சந்தையைப் பொறுத்தவரையில், நீங்கள் இன்றைய அரசியல் கட்சிகள் மாதிரி இருப்பதே நல்லது. காலத்திற்கேற்றாற்போல மாறவேண்டியிருந்தால் மாறுவதுதான் நல்லதும் கூட. பொதுவாக, நீண்டகால முதலீட்டாளராக இருப்பதையே எல்லோரும் பரிந்துரைக்கின்றனர். என்றாலும், சந்தையின் போக்கு அதை மதிப்பதே இல்லையோ என்ற எண்ணம் பரவலாக உள்ளது. நீண்டகால முதலீட்டாளரைகூட சிலசமயம் வர்த்தகராக மாற்றிவிடும்போல்தான் இருக்கிறது இன்றைய சந்தையின் போக்கு. எனவே, நம் பங்குகளின் சாய்ஸும் அப்படி இருப்பதோடு, அதில் ஒரு பகுதியை அவ்வப்போதைய ஏற்ற இறக்கங்களைப் பயன்படுத்தி லாபத்தைப் பதிவு செய்யும் உத்தியையும் கடைப்பிடிப்பதில் தவறில்லை. கற்றுக்கொள்ளுங்கள்..!

அடுத்தவரிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். நம்மைச் சுற்றி இருப்பவர்களே நமக்கு நல்ல பாடம். அவர்கள் செய்த தவறுகள் என்ன, அவற்றைத் தவிர்ப்பது எப்படி என கற்றுக்கொள்வது முக்கியம். நாமே கீழே விழுந்து அடிபட்டுக் கற்றுக்கொள்வதைவிட அடுத்தவர் அனுபவத்தில் கற்றுக்கொள்வது ரிஸ்க் குறைவானது.

இவ்வளவு நேரம் செலவு செய்து அலசி ஆராய்ந்த பின்னரும்கூட பல பங்குகள் தேறாது. எனவே, மிஞ்சி நிற்கும் சில பங்குகளில் உடனடியாக முதலீடு செய்யலாமா என்றால்... கொஞ்சம் பொறுங்கள் அன்பரே..!

பங்குகளைத் தேர்ந்தெடுத்தால் மட்டும் போதாது. 'டைமிங்’-ஆக முதலீடு செய்வதும் அவசியம். ஒவ்வொரு ஆண்டும் ஓரிரு முறையாவது சந்தையில் பெரிய ஏற்ற இறக்கங்கள் இருக்கும். குறிப்பாக, நாம் தேர்ந்தெடுத்த நிறுவனத்தின் செயல்பாடுகளில் எந்தவித பாதிப்பும் இல்லாதபோதுகூட, ஒட்டுமொத்த சந்தையின் வீழ்ச்சி காரணமாக அப்பங்கின் விலையும் இறங்கும்போது, அதிகம் யோசிக்காமல் தைரியமாக வாங்கவேண்டும். அதிக ஆதாயத்தைத் துரிதமாகப் பெறுவதற்கு வழிசெய்யும் உத்தி இது! முதலீட்டுச் சந்தையில் கவனமாக இறங்குங்க; கலக்குங்க!

கடைசியாக... ஒரு ஜென் கதை..!

கட்டுரையின் ஆரம்பத்தில்தான் எல்லோரும் கதை சொல்வார்கள். கொஞ்சம் வித்தியாசமாக   கடைசியில் ஒரு கதை சொல்கிறேன் நான், ஒரு காரியமாகத்தான்.

ஜென் குரு ஒருவர் தியானத்தில் இருந்தார்; தூரத்தில் இருந்து ஒருவன் ஓடி வந்து குருவை பின்னால் தட்டிவிட்டுச் சென்றான். குருவோ சலனமில்லாமல் இருந்தார். அவன் மீண்டும் மீண்டும் பலமுறை குருவை அடித்தான். பின்னர் ஒரு கட்டத்தில் சோர்ந்துபோய் உட்கார்ந்துவிட்டான். குருவோ புன்னகை மாறாமல் தியானத்தில் இருந்தார்.

அருகில் இருந்த சீடனுக்கோ ஆச்சரியம். குரு கண் விழித்ததும் கேட்டான். சிரித்தபடி சொன்னார் குரு. 'அவனுக்கு ஏதோ பிரச்னை; அதை என்னிடம் மாற்றிவிடப் பார்க்கிறான். அவன் அடித்ததற்கு நான் கோபப்பட்டு ரியாக்‌ஷன் காட்டினால், அவன் பிரச்னை எனதாகிவிடும். என் மனநிலை மாறிவிடும். அதை எனக்கு மாற்றிவிட்ட சந்தோஷம் அவனுக்குக் கிடைக்கும். அதற்கு ஏன் நான் இடம் தரவேண்டும்? இப்போது பார், அவனே அசந்துபோய் உட்கார்ந்துவிட்டான்' எனச் சொன்னார் அமைதியாக.

இப்படித்தான் சந்தையும்; தென்னை மரத்தில் தேள் கொட்டினால்... பழமொழி நினைவுக்கு வருகிறதா? சந்தையின் போக்கைத் தினசரி தொடர்ந்து அவதானித்து, அதன் ஒவ்வொரு சிறிய மாறுதல்களுக்கும் காரணம் கண்டுபிடித்துக் கவலைப்படுவதைவிட, நின்று நிதானித்து ஆழமாகச் சிந்தித்து முடிவெடுத்து சரியான நேரத்திற்குப் பொறுமையாகக் காத்திருந்தால் நிச்சயம் ஜெயிக்கலாம். வாழ்த்துக்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism