மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாணயம் ஜாப்: கவனித்து செய்தால் காலத்துக்கும் இருக்கலாம்!

இரா.ரூபாவதி.

##~##

படித்து முடித்து வேலைக்குப் போவது என்பது பொதுவான விஷயம்தான். வேலைக்குச் சேரும் போதே நல்ல பதவி, அதிக சம்பளம் கிடைத்தால், வேறு ஒரு புதிய வேலையைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால், இந்த இரண்டையும் பெறுவதற்காகதான் வேறு வேறு வேலைக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள் நம்மில் பலர். இப்படி மாறுவது எல்லோருக்கும் வெற்றிகரமாக அமைந்துவிடுவதில்லை. சில சமயங்களில் நல்ல வேலை என்று செல்ல, போனபிறகு ஏன் வந்தோமோ என்று புலம்ப வைத்துவிடும். ஆக, வேலை மாற்றம் என்பது தெரிந்தே எடுக்கும் ஒரு ரிஸ்க் என்பதுதான் உண்மை. இந்த ரிஸ்கை எடுக்கும் முன்பு கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று மனிதவளத் துறை நிபுணரும் கெம்பா நிறுவனத்தின் இயக்குநருமான டாக்டர் ஆர்.கார்த்திகேயன் விளக்குகிறார்.

''வேலை மாற்றம் என்பது வாழ்க்கையில் நம்மை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லவேண்டுமே தவிர, தடுமாற்றத்தை ஏற்படுத்திவிடக்கூடாது. வேலை மாறும்போது ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனம் மாறுகிறோமா அல்லது ஒரு துறையிலிருந்து இன்னொரு துறைக்கு மாறுகிறோமா என்பதைத் தெளிவாகத் திட்டமிட்டுக்கொள்ளவேண்டும்.

இதில் ஒரே நிறுவனத்தில் ஒரு வேலையில் இருந்து, இன்னொரு வேலைக்கு மாறுவது மிகவும் குறைவு. அதாவது, மார்க்கெட்டிங் துறையிலிருந்து, மனித வளம், நிர்வாகம் போன்று ஏதாவது ஒரு துறைக்கு மாறுவது. அப்படியே நடந்தாலும், அது கீழ்நிலையில்தான் நடக்கும். இப்படி மாறுகிறவர்கள், புதிதாகச் செல்லும் வேலைக்குத் தேவையாக ஏதாவது ஒரு படிப்பை படிப்பது நல்லது. அப்போதுதான் அந்தத் துறையில் அடுத்தடுத்த பதவிகளுக்கு தன்னை தயார் செய்துகொண்டு மேலே செல்ல முடியும். இல்லையெனில் கீழ்மட்ட நிலையிலே இருக்கவேண்டியிருக்கும். எனவே, இதுபோன்று வேலை மாறுகிறவர்கள் மிகுந்த கவனத்துடன் அடுத்தகட்ட முயற்சிகளை எடுப்பது அவசியம்.

நாணயம் ஜாப்: கவனித்து செய்தால் காலத்துக்கும் இருக்கலாம்!

அடுத்தது, ஒரு துறையிலிருந்து இன்னொரு துறைக்கு மாறுவது என்பது இப்போது அதிகமாக நடக்கிறது. கிட்டத்தட்ட  20 - 30 சதவிகிதத்தினர் இப்படி மாறுகிறார்கள். இதற்கு காரணம், புதிதாக கிடைக்கும் வேலை வாய்ப்பு, பொருளாதார நெருக்கடியின் காரணமாக வேலை இழப்பு, சம்பளம் குறைவு, வேலையாட்கள் குறைப்பினால் அதிக பணிச்சுமை போன்ற காரணங்களினாலே பலரும் வேறு துறைக்கு மாறும் முடிவுக்கு வருகிறார்கள்.

இதுபோன்ற சூழ்நிலையில் வேறு துறைக்கு மாறுபவர்களின் மனநிலை, வேலை கிடைத்தால்போதும் என்பதாகவே இருக்கிறது. ஆனால், அவர்களின் அடிப்படை வேலை என்பது ஒரே மாதிரிதான் இருக்கும். அதாவது, பெயின்ட் துறையில் மார்க்கெட்டிங்கில் இருந்தவர், எஃப்.எம்.சி.ஜி. துறைக்கு மார்க்கெட்டிங் பிரிவில் வேலைக்குச் சேர்ந்தால், இரண்டு துறையிலும் வேலை ஒன்றுதான். அதாவது, பொருட்களை விற்பதுதான். இவர்களுக்கு மார்க்கெட்டிங் தெரியும். இதனால் இவர்கள் பெரிய ரிஸ்க் எதுவும் எடுக்கத் தேவையில்லை. ஆனால், இதிலும் ஒன்று கவனிக்கவேண்டும். நீங்கள் புதிதாகத் தேர்ந்தெடுக்கும் துறை எப்படி உள்ளது என்பதைக் கவனிக்கவேண்டும்.

மேலும், செக்டார் மாறும்போது எதற்காக மாறுகிறோம், இந்த மாற்றத்தினால் நம்முடைய தேவை நிறைவேறுமா, இந்த செக்டாரில் தொடர்ந்து இருக்க முடியுமா, அந்த செக்டாரின் தேவை என்ன என்பதை எல்லாம் தெரிந்துவைத்திருக்கவேண்டும். செக்டார் மாறும்போது அங்கு நிலவும் கலாசாரம் உங்களுக்கு ஏற்றதாக இருக்குமா என்பது முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம்.

நாணயம் ஜாப்: கவனித்து செய்தால் காலத்துக்கும் இருக்கலாம்!

மருத்துவமனை, ஹோட்டல், விருந்தோம்பல் துறைகளில் வேலை, வேலை நேரம் என்பதில் ஆரம்பித்து உடை வரை அத்தனை விஷயங்களும் வித்தியாசமாக இருக்கும். இதற்கு தகுந்தாற்போல உங்களால் மாறமுடியுமா என்பதை யோசித்து முடிவெடுங்கள். உங்களுக்கு சரிவராது என்றால் அந்த வேலையில் சேரும் முடிவை எடுக்காதீர்கள்.  

உடன் வேலை பார்த்தவர்கள் எல்லாம் செக்டார் மாறுகிறார்கள், அதனால் நாமும் மாறுவோம் என்றெல்லாம் செக்டாரை மாற்றாதீர்கள். ஏனெனில், அவர்களுக்கு கிடைப்பதெல்லாம் உங்களுக்கும் கிடைக்குமா என்பதைத் தெரிந்துகொண்டு முடிவு எடுங்கள்.  

தொழில்நுட்பம், உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் இந்த செக்டார் மாற்றம் என்பதை எல்லாம் செய்வது மிகவும் கடினம். புதிய துறையில் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு அதற்கு ஏற்ப அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்வது கடினம் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்'' என்று முடித்தார்.

இத்தனை விஷயங்களையும் கவனித்தபிறகு வேலை மாறினால், அந்த வேலையில் நீண்டகாலம் இருக்க வாய்ப்புண்டு. இல்லாவிட்டால், மீண்டும் ஒரு வேலை தேடவேண்டியிருக்கும், ஜாக்கிரதை!