Published:Updated:

கமகம ஏலக்காய் சந்தை! - நேரடி விசிட்!

கமகம ஏலக்காய் சந்தை! - நேரடி விசிட்!

##~##

நறுமணப் பொருட்களின் ராணி என்று அழைக்கப்படும் ஏலக்காய், மிளகுக்கு அடுத்தபடியாக மதிப்புமிக்க பொருளாக கருதப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரமான போடியில்தான் (தேனி மாவட்டம்) உலக ஏலக்காய் மார்க்கெட் அமைந்திருப்பது நமக்கெல்லாம் பெருமை. அதனால்தான் போடிநாயக்கனூரை ஏலக்காய் நகரம் என்று அழைக்கிறோம்.   

நறுமணப் பொருளான ஏலக்காய் விவசாயம் எப்படி நடக்கிறது, விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் ஏலக்காயை எப்படி சந்தைக்கு கொண்டுவந்து விற்கிறார்கள்? ஏலக்காயின் விலை எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது? என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள நேரடியாக போடிக்கு ஒரு விசிட் அடித்தோம்.

சந்தை நடக்கும் நேரம்!

போடியில் மூன்று நாட்கள், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள புத்தடியில் நான்கு நாட்கள் என வாரத்தின் ஏழு நாட்களுமே ஏலக்காய் சந்தை இயங்கி வருகிறது. திங்கள் காலை போடியில் உள்ள சி.பி.ஏ. வளாகத்தில் 10 மணிக்கு ஏலக்காய் விளைவிப்போர் சங்கம் (Cardamom Planters Association)மூலம் ஆரம்பமாகிறது முதல் சந்தை. செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொருநாள் சந்தையை நடத்துகிறது. முடிவாக, ஞாயிற்றுக்கிழமை அன்று கேரளா கார்டமம் பிராஸஸிங் அண்ட் மார்க்கெட்டிங் கம்பெனி லிமிடெட் நிறுவனம் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஏலம் விடுவதோடு முடிகிறது. விடுமுறை உள்ள நாட்கள் தவிர எல்லா  நாட்களிலும் ஏலக்காய் சந்தை  இதேபோல நடக்கிறது.

கமகம ஏலக்காய் சந்தை! - நேரடி விசிட்!

நம்பர் அவசியம்..!  

போடி ஏலக்காய் விவசாய கூட்டமைப்பு சங்கத் தலைவர் எஸ்.வி.சுப்ரமணியனை நாம் முதலில் சந்தித்தோம். ''உலகத்திலேயே அதிகம் ஏலக்காய் விளையும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்திலும், கௌதமாலா முதல் இடத்திலும் இருக்கிறது. நம் நாட்டில் வருடத்திற்கு 14,000 டன் ஏலக்காய் உற்பத்தி ஆகிறது எனில், கௌதமாலாவில் 30,000 மெட்ரிக் டன் உற்பத்தி ஆகிறது.

ஏலக்காய் எஸ்டேட் வைத்திருப்பவர் கள் ஸ்பைஸஸ் போர்டில் பதிவு செய்து சி.ஆர். நம்பரை (Cardamom Registration Number)பெற்றிருக்கவேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் ஏலக்காயை வர்த்தகம் மேற்கொள்ள வியாபாரிகள் ஸ்பைஸஸ் போர்டிடமிருந்து உரிமம்(spices board license) பெறவேண்டும்'' என்றார் அவர்.

மில்லி மீட்டரில் ஏலக்காய்!

ஏலக்காய் வர்த்தகத்தில் இருக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள் பற்றி சொன்னார் ஏலக்காய் அசோசியேஷன் தலைவர் முருகேசன். ''பொதுவாக, வரத்து அதிகம் இருக்கும்போது டிமாண்ட் குறைவாக இருந்தால் ஏலக்காய் விலை குறையும். வரத்து அதிகமாக இருக்கும்போது குறைந்தபட்சம் 200 முதல் அதிகபட்சம் 400 லாட்கள் சந்தைக்கு வரும். செப்டம்பர் முதல் ஜனவரி வரை வரத்து அதிகமாக இருக்கும். ஏலக்காயை வாங்குவதற்கு சரியான காலமும் இதுதான். ஆனால், வரத்து குறைந்து டிமாண்டு அதிகரித்து காணப்பட்டால் ஏலக்காயின் விலை அதிகரித்தே காணப்படும்.

கமகம ஏலக்காய் சந்தை! - நேரடி விசிட்!

ஏலமிடுவதற்கான விலை நிர்ணய அளவு (பிட்டிங் பிரைஸ்) என்பது குறைந்தபட்சம் 2 - 9 ரூபாய் வரை என்று இருக்கிறது. வியாபாரிகள் ஏலக்காயின் தரம், கலர், எடை மற்றும் சுத்தம் போன்றவற்றை கவனித்து வாங்குவார்கள். ஏலக்காய் 8.5 மில்லி மீட்டர், 8 மில்லி மீட்டர், 7.5-8 மில்லி மீட்டர், 6.8-7.5 மில்லி மீட்டர் மற்றும் 5.8-6.8 மில்லி மீட்டர் என பல வகைகளில் இருக்கிறது.

விவசாயிகள் கொண்டுவரும் ஏலக்காயின் தரம் பார்த்து வாங்கி அதை அளவு மற்றும் தரத்துக்கு தக்கபடி பிரித்து சுத்தம் செய்து, ஐந்து கிலோ கொண்ட பைகளாக கட்டி, அதை ஐம்பது கிலோ கொண்ட ஒரு மூட்டையாகக் கட்டி விற்பனை செய்வோம்.  

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உற்பத்தி செய்யப்படும் ஏலக்காய்க்கு வட இந்தியாவில் டிமாண்ட் அதிகமாக இருக்கிறது. டெல்லியில் நாம் உற்பத்தி செய்யும் ஏலக்காய்க்கு விலை கொஞ்சம் கூடுதலாகவே கிடைக்கிறது. இங்கிருந்து பெரும்பாலும் டெல்லி, மும்பை, கொல்கத்தா, அஹமதாபாத், ஜெய்ப்பூர் போன்ற இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கமகம ஏலக்காய் சந்தை! - நேரடி விசிட்!

சென்ற ஆண்டு பிட்டிங் விலை அதிகரிப்பு, முல்லை பெரியாறு அணை பிரச்னை போன்ற காரணங்களால் இரண்டு மாதம் ஏலக்காய் மார்க்கெட் ஸ்தம்பித்து காணப்பட்டது. இதனால் சென்ற ஆண்டு விலை சராசரியாக ரூ.500- 600 என்கிற நிலையில் இருந்தது. ஆனால், நடப்பு ஆண்டில் விலை நிலையாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்'' என்று முடித்தார்.

நிறம் பிரிக்கும் மெஷின்கள்!

கேரளாவின் புத்தடியில் இருக்கும் ஸ்பைஸஸ் போர்டின் துணை இயக்குநர் டாக்டர் பி.பேரின்பத்திடம் பேசினோம்.

''கடந்த 2012-13-ல் கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டின் மொத்த ஏலக்காய் உற்பத்தி அளவு 14,000 டன். இதில் 60% கேரளாவிலும், 30% கர்நாடகாவிலும், 10% தமிழ்நாட்டிலும் உற்பத்தி ஆனது. 2011-12-ல் 15,000 டன் உற்பத்தியானது. இவ்வாண்டு அதிக மழை காரணமாக அழுகல் நோய் அதிகம்.  எனவே, ஏலக்காய் சாகுபடி குறையும்.  

ஸ்பைஸஸ் பார்க் வளாகத்திற்கு உள்ளே வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் வசதிக்காக ஏலக்காய் தரம் பிரிக்கும் வசதிகளும், இருப்பு வைத்துக்கொள்ள சாதாரண மற்றும் கோல்டு ஸ்டோரேஜ்களும் உள்ளன. ஏலக்காய் தரம் பிரிப்பதற்கு கிலோவுக்கு 8 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏலக்காயை ஆன்லைன் டிரேட் செய்ய கலர் என்பது முக்கியமாக இருப்பதால் கலர் வாரியாகவும் ஏலக்காயைப் பிரிக்க மெஷின் வந்துவிட்டது.

இருப்பு வைக்கும் குடோன்கள் தனியாரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. 60 கிலோ ஏலக்காய் மூட்டையை சாதாரண குடோன் களில் வைக்க வருடத்திற்கு 22.85 ரூபாய் கட்டணம். கோல்டு ஸ்டோரேஜ் என்றால் 54 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ள

கமகம ஏலக்காய் சந்தை! - நேரடி விசிட்!

விரும்புபவர்கள் அன்றைய ஏலக்காய் மார்க்கெட் விலையில் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளலாம். பிரீமியம் அன்றைய மார்க்கெட் விலையில் 100 ரூபாய்க்கு 0.05 பைசா'' என்றார்.  

ஏக்கருக்கு 600 கிலோ!

பண்ணைபுரத்தைச் சேர்ந்த விவசாயி ஜெரித்குமாருடன் பேசினோம். ''எங்களுக்கு 40 ஏக்கரில் ஏலக்காய் எஸ்டேட் இருக்கிறது. முதலில் கிழங்குடன் கூடிய ஏலக்காய் தட்டையை வைத்தபிறகு 18 முதல் 24 மாதங்கள் கழித்து ஏலக்காய் சாகுபடி செய்ய முடியும். அதன்பிறகு 45 முதல் 60 நாட்கள் இடைவெளிவிட்டு வருடத்திற்கு ஆறு முறை ஏலக்காய் அறுவடை செய்யலாம். முதல் மூன்று முறை அதிகமாகவும், அடுத்த மூன்று சாகுபடிகளில் முன்பு கிடைத்ததைவிட கிடைக்கும் ஏலக்காயின் அளவு குறைவாகவும் இருக்கும். மழை, வெயில் போன்ற இயற்கை காரணிகளைப் பொறுத்து உற்பத்தியின் அளவு மாறும். ஓர் ஏக்கருக்கு சுமார் 500-600 கிலோ ஏலக்காய் (உலர்த்தப்பட்ட ஏலக்காய்) கிடைக்கும். கூலி ஆட்களின் சம்பளம், களையெடுப்பு, மருந்து அடிப்பு என ஓர் ஏக்கருக்கு வருடத்தின் பராமரிப்பு செலவு சுமார் 1.20-1.50 லட்சம் ரூபாய் ஆகும்'' என்றார்.

தரம் பிரிப்பது அவசியம்!

டிரையர் மெஷின் (ஏலக்காய் உலர்த்துவது) செயல்பாடு குறித்து பாரத்தோடு என்னும் ஊரைச் சேர்ந்த விவசாயி அருண் பிரசாத்திடம் கேட்டோம். ''அறுவடை செய்யப்பட்ட ஏலக்காயை அப்படியே சந்தையில் வர்த்தகம் செய்ய முடியாது என்பதால் சாகுபடி செய்த ஏலக்காயை டிரையர் மெஷினில் போட்டு அதை 45 ஃபாரன் ஹீட் வெப்பத்தைச் செலுத்தி 24 மணி நேரம் தொடர்ந்து சூடுபடுத்தவேண்டும். 100 கிலோ பச்சையான ஏலக்காயை டிரையர் மெஷினில் போட்டால், 20 கிலோ உலர்ந்த ஏலக்காயாகக் கிடைக்கும்.

ஏலக்காய் விவசாயம் செய்யும் அனைத்து விவசாயிகளிடமும் சிறியதும் பெரியதுமாக டிரையர் மெஷின் இருக்கும். எனக்கு 28 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட் இருக்கிறது. அதில் உற்பத்தி செய்யும் ஏலக்காயை என்னிடம் இருக்கும் 700 கிலோ கொள்ளளவு கொண்ட டிரையர் மெஷினில் உலர்த்தி சந்தைக்கு எடுத்துச் செல்வேன்.

2008-2009-ல் ஓர் ஏக்கரில் 1,650 கிலோ ஏலக்காயை (உலர்த்தப் பட்டது) உற்பத்தி செய்ததற்காக கேரள அரசால் 'ஹையஸ்டு யீல்டு அவார்டு’ வாங்கி இருக்கிறேன். அந்த ஆண்டு இயற்கை நன்கு ஒத்துழைத்தது. தவிர, இயற்கை முறையில் விவசாயம் மேற்கொண்டதால் என்னால் அதிகமான ஏலக்காயை சாகுபடி செய்ய முடிந்தது.

கமகம ஏலக்காய் சந்தை! - நேரடி விசிட்!

விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் தேவை என்பதால் தரம் பிரித்து வர்த்தகம் செய்வதில்லை. சாகுபடி செய்யும் ஏலக்காயை அப்படியே மார்க்கெட்டில் வர்த்தகம் செய்துவிடுகிறார்கள். ஆனால், தரம் பிரித்து விற்பதால் அதிக வருமானம் கிடைக்கும்'' என்றார் அவர்.

ஏலக்காய் - ஆன்லைன் டிரேடிங்!

ஆன்லைன் டிரேடர் சன்னாசி ராஜுவுடன் பேசினோம். ''நான் எம்.சி.எக்ஸ். சந்தையில் ஆன்லைன் டிரேடிங்கில் ஏலக்காய் வர்த்தகம் ஆரம்பித்த நாளிலிருந்தே வர்த்தகம் செய்கிறேன். ஆன்லைனில் டிரேட் செய்ய டி.ஆர். நம்பர் (Trader Registration Number) கண்டிப்பாக வேண்டும்.

ஆன்லைனில் இரண்டே இரண்டு கிரேடு ஏலக்காயை மட்டுமே வர்த்தகம் செய்ய முடியும். ஒன்று 7-8 கிரேடு, மற்றொன்று 6.2-7 கிரேடு. ஆன்லைன் டிரேடிங்கிற்காக டெபாசிட் செய்திருக்கும் ஏலக்காயின் தரத்தை சரி பார்க்கும் போது ஒரு கிலோவில் 14 ஏலக்காய்கள் சுத்தமில்லாமலோ அல்லது கிரேடு குறைவானதாகவோ இருந்தால் மறுபடியும் டெபாசிட் செய்யவேண்டி இருக்கும். ஐந்து அல்லது அதற்கு குறைவானதாக இருக்கும்பட்சத்தில் நம்முடைய டெபாசிட்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

நான் மாதம் 4,000 முதல் 5,000 கிலோ வரை டெபாசிட் செய்கிறேன். நம்பிக்கையின் அடிப்படையில்தான் ஆன்லைன் டிரேடிங் நடக்கும் என்பதால் அதில் ஈடுபடுபவர்கள் மிகக் கவனமாக இருப்பது அவசியம். போடி மற்றும் புத்தடி மார்க்கெட் விலை நிலவரத்தைப் பொறுத்துதான் ஆன்லைன் டிரேடிங் விலையானது மாறும்'' என்றார் அவர்.

ஏலக்காய் வர்த்தகத்தில் இத்தனை சுவாரஸ்யமான விஷயங்களா என்று நினைத்தால் ஆச்சர்யமாகவே இருக்கிறது.

 - செ.கார்த்திகேயன்,

படங்கள்: வி.சக்தி அருணகிரி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு