நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

நால்கோ, ஐ.டி.எஃப்.சி காலாண்டு ரிசல்ட் எப்படி? முக்கிய நிறுவனங்களின் 3-ம் காலாண்டு முடிவுகள்!

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
காலாண்டு முடிவுகள்

Q 3 R E S U L T S

நடப்பு 2020-21-ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு முடிவுகளை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. சில முக்கிய நிறுவனங் களின் டிசம்பர் காலாண்டு முடிவுகள் இங்கே...

நெஸ்லே இந்தியா (Nestle India)

ஸ்விட்சர்லாந்தை தலைமை யிடமாகக்கொண்ட உணவுப் பொருள் மற்றும் குளிர்பானங்கள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனமான இது, கடந்த டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக 483.3 கோடி ரூபாயை ஈட்டியிருந்தது. இதன் மொத்த வருவாய் 3,432.6 கோடி ரூபாயாக இருந்தது. சென்ற ஆண்டில் இதே காலகட்டத்தில் 472.6 கோடி நிகர லாபமாகவும், 3,260.7 கோடி நிகர வருவாயாகவும் இருந்தது.

பெரும்பான்மையான சந்தை வல்லுநர்கள் அந்த நிறுவனம் 544 கோடி ரூபாய் லாபம் ஈட்டும் என்றே கணித்திருந்தனர். ஆனால், அவர் களின் எதிபார்ப்பைவிட வருவாய் குறைந்ததுக்கு கொரோனா நோய்த்தொற்று காரணமாக வெளிநாட்டு ஏற்றுமதி குறைந்ததே என்று அந்த நிறுவனம் கூறியிருக்கிறது.

இந்த நிறுவனம் பங்கு ஒன்றுக்கு 65 ரூபாய் டிவிடெண்டாக வழங்கி உள்ளது. கடந்த நவம்பரில் தரப்பட்ட 135 டிவிடெண்டுடன் சேர்த்து இந்த ஆண்டு 200 ரூபாய் வழங்கியுள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ டைரக்ட், இந்தப் பங்கு விலை வரும் காலத்தில் 18,000 அளவுக்கு உயரும் எனக் கணித் துள்ளது.

அம்புஜா சிமென்ட்ஸ் (Ambuja Cements)

சிமென்ட் உற்பத்தியில் உலகில் முதலிடத்தில் உள்ள ஹொல்சம் நிறுவனத்தின் துணை நிறுவனமான இது கடந்த டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக 732.24 கோடி ரூபாய், மொத்த வருவாயாக 7,452.87 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலாண்டைக் காட்டிலும் நிகர வருவாயில் 4.58% மற்றும் நிகர லாபத்தில் 18.95% அதிகமாகும்.

இந்த நிறுவனம் பங்கு ஒன்றுக்கு 1 ரூபாய் டிவிடெண்டாக வழங்கியுள்ளது. இதன் எபிட்டா 1,442 (உயர்வு 18.95%) கோடியாக உள்ளது.

காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்

வருண் பெவரேஜஸ் (Varun Beverages)

பெப்சிகோ நிறுவனத்துடன் கைகோத்துள்ள இந்தியாவின் முன்னணி குளிர்பான நிறுவனமான இது, கடந்த டிசம்பர் காலாண்டில் 19.73 கோடி ரூபாய் நிகர இழப்பு. மொத்த வருவாய் 1,330.89 கோடி ரூபாயாக உள்ளது. இது சென்ற ஆண்டில் இதே காலாண்டில் 59.41 கோடி நிகர நஷ்டமாகவும், 1,220.24 கோடி நிகர வருவாயாகவும் இருந்தது. அதன் எபிட்டா 177.79 கோடியாக (உயர்வு 17.18 கோடி) உள்ளது.

நால்கோ (NALCO)

அலுமினியம் தயாரிப்பில் முன்னணியில் உள்ள அரசு சார்புள்ள மினி ரத்னா நிறுவனமான இது, கடந்த டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.239.81 கோடி (123% அதிகம்) ஈட்டியுள்ளது. மெட்டல் துறை பங்குகள் கடந்த சில மாதங் களாக நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. வரும் காலங்களின் அலுமினியத்துக்கான தேவை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இது இந்த நிறுவனத்துக்குச் சாதகமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் தற்போது 749.10 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளைத் திரும்ப வாங்க உள்ளது. பங்கு ஒன்றுக்கு 57.50 ரூபாய் கொடுத்து வாங்க உள்ளது. கடந்த வெள்ளி அன்று இந்த நிறுவனப் பங்கின் இந்த ஆண்டின் உச்ச விலையான 51.80 ரூபாய் என்ற அளவுக்கு வர்த்தகமாகி வருகிறது.

ஐ.டி.எஃப்.சி பேங்க் (IDFC Bank)

கட்டுமானப் பணிகளுக்குக் கடன் வழங்கும் முன்னணி நிதி நிறுவனம். டிசம்பர் காலாண்டில் இதன் நிகர வருவாய் சென்ற ஆண்டில் இதே காலாண்டுடன் ஒப்பிட்டால், 19.76% உயர்ந்து ரூ.103 கோடியாக உள்ளது. நிகர லாபம் 22 கோடியில் இருந்து 23 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

எடெல்வைஸ் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் (Edelweiss Financial Services)

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட நிதி மற்றும் காப்பீடு நிறுவனம். இந்த நிறுவனத்தின் நிகர இழப்பு, டிசம்பர் காலாண்டில் ரூ.69.72 கோடியாக உள்ளது. மொத்த வருவாய் ரூ.2,178.54 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் வருவாய் 17.47% குறைவு மற்றும் லாபம் 517.24% குறைவாகும். இந்த நிறுவனம் காப்பீட்டுத் துறையில் ஆயுள் காப்பீடு உட்பட பல சேவைகளை வழங்கி வருகிறது. அதன் காப்பீட்டுப் பிரிவில் 800 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்த நிறுவனம் இந்தத் தொழிலில் முதலீடு செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவேற்பதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. சமீபத்திய மத்திய பட்ஜெட்டில் காப்பீட்டுத் துறையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 74% வரை இந்தியாவில் முதலீடு செய்ய அனுமதி அளித்திருந்தது. இதை வெளிநாட்டு முதலீட் டாளர்கள் பயன்படுத்தி தமது நிறுவனத்தில் அதிக முதலீடு செய்தால், அதிக வளர்ச்சி இலக்கை எட்ட முடியும் என்று குறிப்பிட்டுள்ளது

மஹிந்திரா சி.ஐ.இ ஆட்டோமோட்டிவ் (Mahindra CIE Automotive)

வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் துணை நிறுவனமான இது, கடந்த டிசம்பர் காலாண்டில் மொத்த வருவாய் 13.62% உயர்ந்து, ரூ.1,957.64 கோடியாக உள்ளது. நிகர லாபம் 9 மடங்கு உயர்ந்து, 111.67 கோடி யாக உள்ளது. என்றாலும், இந்த முழு ஆண்டின் லாபமானது கடந்த ஆண்டின் மொத்த லாபத்தைவிட 69.92 கோடி குறைவாக உள்ளது. இதற்கு கொரோனா நோய்த்தொற்று காரணமாக இருந்தாலும் கடந்த காலாண்டின் சிறப்பான வரு மானம் வாகனத்துறை மீண்டும் எழுச்சிப் பாதைக்கு செல்வதை உணர்த்துவதாக உள்ளது.

அப்பெக்ஸ் ஃப்ரோசன் ஃபுட்ஸ் (Apex Frozen Foods)

இறால் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான இது, கடந்த டிசம்பர் காலாண்டில் மொத்த விற்பனை மூன்றாம் காலாண்டில் ரூ. 156.07 கோடியாக உள்ளது. இது கடந்த டிசம்பர் 2019 காலண்டுடன் ஒப்பிட்டால் 20.05% குறைவாகும்.இதன் நிகர லாபம் ரூ. 2.25 கோடி யாக (89.39% குறைவு) உள்ளது. அதன் எபிட்டா 58.53% குறைந்து 11.88 கோடியாக உள்ளது.

திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் – டி.ஹெச்.எஃப்.எல் (Diwan Housing Finance Limited)

வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனமான இது, கடந்த டிசம்பர் காலாண்டில் நிகர வருவாயாக ரூ.2,206.58 கோடி ஈட்டியுள்ளது. நிகர இழப்பு ரூ. 13,095.38 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்தை பிரமல் குழுமம் வாங்கியது சந்தையில் மிகவும் சாதகமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் பல பொதுத்துறை வங்கிகளிடமிருந்து அதிகக் கடன் பெற்றுள்ளது. ஆனால், இந்த நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வந்ததால், இந்தக் கடன் பல பொதுத்துறை வங்கிகளுக்குப் பிரச்னையாக இருந்தது. இந்த நிலையில், பிரமல் குழுமம் இந்த நிறுவனத்தை வாங்கியதால், பல பொதுத்துறை வங்கிகளின் கடன் திரும்ப கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 34,250 கோடி ரூபாயை பிரமல் நிறுவனம் பொதுத்துறை வங்கி களுக்குத் திரும்ப செலுத்த ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் கேட்டிருந்தது. இதில் 14,700 கோடி ரூபாய் உடனடியாகவும் மீதமுள்ள 19,550 கோடி ரூபாய் தவணைகளிலும் செலுத்த சம்மதித்துள்ளது. இதற்கான ஒப்புதலை ரிசர்வ் வங்கி வழங்கி யுள்ளது. இது பல பொதுத்துறை வங்கிகளுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. இதன்மூலம் இந்த வங்கிகளின் வாராக்கடன் இதன் மூலம் திரும்பக் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல வங்கிப் பங்குகள் உயரத் தொடங்கியுள்ளன. வங்கி கள் ஏற்கெனவே கணக்கியல் ரீதியாக இந்தக் கடனைத் தள்ளுபடி செய்துவிட்டதால், திரும்பக் கிடைக்கும் இந்தத் தொகை வங்கிகளின் கணக்கில் லாபமாகச் சேரும். கடந்த இரண்டு வாரத்தில் பங்கின் விலை 40% ஏற்றம் கண்டுள்ளது.

ஆயில் இந்தியா (Oil India)

இந்தியாவின் முன்னணி எண்ணெய் நிறுவனமான இது, கடந்த டிசம்பர் காலாண்டில் நிகர வருவாயாக 2,137.34 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது. நிகர லாபமாக 889.69 கோடியைப் பெற்றுள்ளது. சென்ற காலாண்டில் அந்த நிறுவனம் நிகர வருவாயாக 2,957.19 கோடியும் நிகர லாபமாக 709.39 கோடியும் ஈட்டியிருந்தது. விலை அதிகரித்து அதன் லாபம் அதிகரிக்க உதவியுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் (Jet Airways)

முன்னணி விமானச் சேவை நிறுவனம். இந்த நிறுவனம், கடன் பிரச்னைகள் காரணமாக ஏப்ரல் 2019 முதல் தனது விமானச் சேவையை நிறுத்தியிருக்கிறது. திவால் சட்டத்தின் மூலம் பயன்படுத்தி நிறுவனத்தை மீட்கும் முயற்சிகளில் உள்ளது. இதில் முக்கியத் திருப்பமாக இந்த நிறுவனத்தை கல்ராக் கேப்பிடல் மற்றும் துபாயைச் சேர்ந்த மற்றொரு வெளிநாட்டு நிறுவனம் சேர்ந்து வாங்கியுள்ளது. இந்த நிறுவனம் இன்னும் ஆறு மாத காலத்தில் விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கு அனுமதி வேண்டி தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்திடம் விண்ணப்பித்து உள்ளது. இந்திய விமானச் சேவையில் நல்ல வாய்ப்புகள் உள்ளதாகவும், தங்கள் நிறுவனத்தால் இந்தியாவில் சிறந்த விமான சேவைகளைத் தர முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கிங் ஃபிஷர், டெக்கான் ஏர்லைன்ஸ் முதலான பல விமானச் சேவை நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இந்தச் சிக்கலில் இருந்து மீள்வது விமானச் சேவைத் துறைக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் உள்ளது. இதன் காரணமாக ஜெட் ஏர்வேஸின் பங்கு அதிக ஏற்ற இறக்கம் கொண்ட பங்காக இருந்து வருகிறது. அதிக ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்டவர்கள் மட்டுமே இதில் முதலீடு செய்ய முடியும் என்ற நிலையில் இந்த பங்கு இருக்கிறது.

தொகுப்பு: பிரமேஷ் எஸ்

பிட்ஸ்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.சந்திர சேகரன் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் முடிந்துள்ளன. இந்தக் குறுகிய காலத்தில் டி.சி.எஸ் நிறுவனம் மிகச் சிறப்பாகச் செயல் பட்டதன் காரணமாக டாடா நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளன!