Published:Updated:

செய்திச் சுருக்கம்: டிச.05, 2011

செய்திச் சுருக்கம்: டிச.05, 2011
செய்திச் சுருக்கம்: டிச.05, 2011

முல்லைப் பெரியாறு அணைக்கு அச்சுறுத்தல் இருப்பதால், மத்திய சிறப்புப் படை போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

*

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழக கட்சிகள் ஒற்றுமையாக இருப்பதால், இதற்கென சிறப்புச் சட்டமன்றக் கூட்டத் தொடரை கூட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

முல்லைப் பெரியாறு பாதுகாப்பு தொடர்பாக பிரதமருக்கு அனுப்பட்ட கடிதத்துக்கு, அவரிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை என்றும் முதல்வர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

மேலும், கேரள எல்லையில் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், அங்கு பாதுகாப்புப் பணியில் தமிழக போலீஸார் கூடுதலாக குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

*

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முடிவை கண்டித்து, கூடலூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களையும் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதால் திங்கட்கிழமை போக்குவரத்து முடங்கியது.

சபரிமலைக்கு செல்லும் தமிழக பக்தர்களுக்கும், வாகனங்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்தால், அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

*

தமிழகத்தில் விடுதிகளில் தங்கி படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பின்தங்கியோர், மிகவும் பின்தங்கியோர் மாணவர்களுக்கான உணவு கட்டணத்தை உயர்த்தி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கிறார். இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு  சுமார் 41 ரூபாய் கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

*

முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்கும் பணியில் மத்தியப் படையை உடனடியாக ஈடுபடுத்த வேண்டும் என டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மதிமுக பொதுச் செயலர் வைகோ திங்கட்கிழமை நேரில் வலியுறுத்தினார். அப்போது, முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வைகோ விரிவான கடிதம் ஒன்றை அளித்தார்.

*

சேலம் அருகே இன்று அதிகாலை ஆம்னி பஸ் ஒன்றும், ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். 4 பேர் காயம் அடைந்தனர்.

*

இந்தியாவுக்கு ஒப்புக்கொண்டதைப் போலவே தமக்கும் யுரேனியம் விற்பனை செய்ய முன்வர வேண்டும் என ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.

*

தமிழகத்தில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது கேரள அரசின் கடமை. அவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார்.

*

முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மை தொடர்பாக ஆய்வு நடத்த உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அதிகாரமளிக்கப்பட்ட குழு டெல்லியில் திங்கட்கிழமை கூடியது.

அப்போது, இடுக்கியில் நில அதிர்வுகள் ஏற்பட்டது பற்றியும் நிபுணர் குழு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என ஐவர் குழுவிடம் கேரள அரசு புதிய கோரிக்கை மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்தக் கோரிக்கையை, ஐவர் குழு ஏற்றுக்கொண்டது.

*

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு என்ற மத்திய அரசின் முடிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை எதிர்கட்சிகளிடம் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உறுதி செய்தார்.

இந்த விவகாரத்தில், எதிர்கட்சிகளுடன் சுமுகத் தீர்வு ஏற்படும் வரையில், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு என்ற மத்திய அரசின் முடிவு நிறுத்திவைக்கப்படுகிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்கட்சிகளின் அமளியால் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை சரிசெய்யும் வகையிலேயே மத்திய அரசு தனது பிடிவாதத்தைத் தளர்த்தியுள்ளது.

*

பால் விலை மற்றும் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர்.

*

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் விளாடிமிர் புதினின் ஐக்கிய ரஷ்ய கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. அக்கட்சி பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது.

*

சென்னையில் திங்கட்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,731 ரூபாயாக இருந்தது.

*

மும்பை பங்குச்சந்தையில் திங்கட்கிழமை வர்த்தகம் நிறைவடைந்தபோது, சென்செக்ஸ் 41 புள்ளிகள் வீழ்ச்சி கண்டிருந்தது. நிஃப்டி 11 புள்ளிகள் சரிந்திருந்தது.

*

லண்டனில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு சர்ச்சைக்குரிய டோ கெமிக்கல்ஸ் நிறுவனம் ஸ்பான்சராக இருப்பதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.