Published:Updated:

அள்ளித் தரும் டிவிடெண்ட் பங்குகள்!

அசத்தல் லாபத்துக்கு பெஸ்ட் சாய்ஸ்...

##~##

பங்குச் சந்தையில் நல்ல வருமானம் பார்க்க நினைத்தால், அதிகமாக டிவிடெண்ட் வழங்கிவரும் பங்குகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்.

இந்த ஜனவரி மாதத்தை 'டிவிடெண்ட் காலம்’ என்று சொல்லலாம். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பல நிறுவனங்கள் இடைக்கால டிவிடெண்டை அறிவித்த வண்ணம் உள்ளன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், நிதிச் சம்பந்தமான இதழ்களிலும் 'டிவிடெண்ட் யீல்டு’ என்ற வார்த்தை அதிகம் பயன்படுத்தப் படுகின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அண்மை ஆண்டுகளில் இந்தியப் பங்குச் சந்தை அதிக ஏற்றஇறக்கத்தைக் கண்டுள்ளது. பங்கின் விலைப் பெரிதாக உயர்ந்து லாபம் தரவில்லை என்றாலும், பல நிறுவனங்கள் அதிக டிவிடெண்ட் வழங்குவதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கொடுத்து வருகின்றன.

தொடர்ந்து நல்ல டிவிடெண்ட் தந்துகொண்டிருக்கும் பங்குகளில் முதலீடு செய்வதில் இரண்டு நன்மைகள் இருக்கின்றன. ஒன்று, பங்கின் விலை உயர்வு மூலம் கிடைக்கும் லாபம். அடுத்தது, வரி இல்லா டிவிடெண்ட் வருமானம். அந்தவகையில் பங்குச் சந்தையில் ஓரளவுக்கு நல்ல வருமானம் பார்க்க நினைத்தால், அதிகமாக டிவிடெண்ட் வழங்கிவரும் பங்குகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்.

அதற்குமுன், பங்குச் சந்தை புதிய முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் குறித்துப் பலவித சந்தேகங்கள் இருக்கலாம். அந்தச் சந்தேகங்களை முதலில் தெளிவுபடுத்திக்கொள்வோம்.

அள்ளித் தரும் டிவிடெண்ட் பங்குகள்!

மூன்று வகை..!

ஒரு நிறுவனம் ஈட்டும் லாபத்தை மூன்று வகைகளில் உபயோகப்படுத்தும்.

1. லாபம் அனைத்தையும் தான் செய்யும் தொழிலின் விரிவாக்கப் பணிகளுக்கோ அல்லது கடனைக் குறைப்பதற்கோ அல்லது வேறு நிறுவனங்களை கையகப்படுத்து வதற்கோ உபயோகிக்கலாம்.

2. லாபத்தின் ஒரு பகுதியை டிவிடெண்டாகப் பங்குதாரர்களுக்கு வழங்கலாம்.

3. அல்லது மேலே கூறிய இரண்டையும் செய்யலாம்.

டிவிடெண்ட் என்பது ஒரு நிறுவனம், தான் ஈட்டும் லாபத்தின் ஒரு பகுதியை மொத்தப் பங்குதாரர்களுக்குப் பணமாகப் பிரித்து வழங்குவது.

செபியின் அறிவுறுத்தல்..!

அள்ளித் தரும் டிவிடெண்ட் பங்குகள்!

பொதுவாக, இந்த டிவிடெண்ட் தொகையை இத்தனை சதவிகிதம் என்று அறிவிப்பார்கள். ஒரு பங்கின் மீதான டிவிடெண்ட் தொகை என்பது பங்கின் முக மதிப்புக்கு வழங்கப்படுவதாகும். இங்கேயும் பலவிதக் குழப்பங்கள்; ஏனென்றால் ஒவ்வொரு நிறுவனமும், ஒவ்வொரு முக மதிப்பில் பங்குகளை வைத்திருக்கின்றன. மேலும், சில நிறுவனங்கள் பங்குகள் மீதான வர்த்தகம் அதிகரிக்கவேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து முக மதிப்பைக் குறைத்துவரும் அல்லது பங்கைப் பிரிக்கும் (Stock Split) வேலைகளில் ஈடுபடுகின்றன. எனவே, தற்போது நிறுவனங்கள் ஒரு பங்கின் மீதான டிவிடெண்ட் எவ்வளவு (Dividend Per Share)  என்று தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று செபி அறிவுறுத்தி உள்ளது.

புக் - குளோஸர் தேதிகள்!

அள்ளித் தரும் டிவிடெண்ட் பங்குகள்!

பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்ட ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் நிறுவனத்தின் பங்குதாரர்களின் தகவல்களைச் சரிசெய்து கொள்வதற் காகவும் தாங்கள் வழங்கும் டிவிடெண்ட், போனஸ் மற்றும் உரிமைப் பங்குகள் பெறுவதற்குத் தகுதியான பங்குதாரர்களைத் தீர்மானிக்கவும் மற்றும் பங்குதாரர்களின் வருடாந்திரக் கூட்ட தேதி குறித்து முடிவு செய்யவும் 'புக் குளோஸர்’ தேதிகளை அறிவிப் பார்கள். இதில் ஓர் ஆரம்பத் தேதியும் ஒரு முடிவுத் தேதியும் இருக்கும்.

எடுத்துக்காட்டாக, ஒரு நிறுவனம் பிப்ரவரி 4-லிருந்து 11 வரை புக் குளோஸர் தேதிகளை அறிவித்தால், நம்முடைய ஆதாயங்கள் குறிப்பாக, டிவிடெண்ட் நமக்குக் கிடைக்கவேண்டுமானால் நாம் வாங்கும் பங்குகள் ஆரம்பத் தேதிக்கு முதல் நாளிலேயே அதாவது, பிப்ரவரி 3-ம் தேதியே நம்முடைய டீமேட் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்.

ரெக்கார்டு டேட்!

ஒரு நிறுவனம், பங்குதாரர்களுக்குத் தாங்கள் வழங்கும் ஆதாயத்தைப் பெறுவதற்கு, குறிப்பாக, டிவிடெண்ட் பெறத் தகுதியானவர்களைத் தீர்மானிப்பதற்கு ஒரு தேதியை அறிவிக்கும். அதுதான் 'ரெக்கார்டு டேட்’ என்றழைக்கப்படும்.

எடுத்துக்காட்டாக, ஒரு நிறுவனம் இடைக்கால டிவிடெண்ட் வழங்குவதற்கு பிப்ரவரி 4-ம் தேதியை ரெக்கார்டு தேதியாக அறிவிக்கிற தெனில், நாம் வாங்கும் பங்குகள் பிப்ரவரி 4-ம் தேதிக்குள் நம்முடைய டீமேட் கணக்கில் வரவு வைக்கப் பட்டிருக்கவேண்டும்.

'எக்ஸ்-டேட்’(Ex-date)!

இந்தத் தேதியை பங்குச் சந்தைகள் (Stock Exchange)  தீர்மானிக்கின்றன. எடுத்துக்காட்டாக, கும்மின்ஸ் இந்தியா (cummins india)  நிறுவனம் 15.2.2014-ம் தேதியை இடைக்கால டிவிடெண்ட் வழங்குவதற்கான ரெக்கார்டு தேதியாக அறிவித்திருக்கிறது. தேசிய பங்குச் சந்தை (National Stock Exchange) 13.2.2014 தேதியை இதற்கு 'எக்ஸ்-டேட்’ஆக அறிவித்திருக்கிறது. இதன் அர்த்தம் என்னவென்றால், 'எக்ஸ் டேட்’ மற்றும் அதற்குப் பின்னால் வாங்குபவர்களுக்கு அந்த நிறுவனம் வழங்கும் டிவிடெண்ட் ஆதாயம் கிடைக்காது.

அதேமாதிரி 'எக்ஸ்-டேட்’-க்கு முன்னால் பங்குகளை விற்பவர்களும் நிறுவனங்களின் டிவிடெண்ட் ஆதாயத்தை உரிமை கொண்டாட முடியாது.

அள்ளித் தரும் டிவிடெண்ட் பங்குகள்!

புக் குளோஸர் தேதி அல்லது ரெக்கார்டு தேதி மற்றும் என்ன ஆதாயங்கள் வழங்கப்படுவதற்காக அந்தத் தேதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன போன்ற தகவல்களை நிறுவனங்கள் ஏழு நாட்களுக்கு முன்பாகப் பங்கு சந்தைகளுக்குத் தெரியப்படுத்தவேண்டும். ஆனால், அந்த டிவிடெண்ட் ஆதாய அளவு குறித்து முடிவெடுக்கும் இயக்குநர் குழுவின் கூட்டத் தேதியை (Board Meeting Date) இரண்டு தினங்களுக்கு முன்னால் தெரியப்படுத்தினால் போதுமானது. எடுத்துக்காட்டாக, கும்மின்ஸ் இந்தியாவின் ரெக்கார்டு தேதி மற்றும் 'எக்ஸ்-டேட்’களைப் பார்த்தோம். ஆனால், அவர்களின் இயக்குநர் குழுவின் கூட்டம் பிப்ரவரி 4-ல் நடக்க உள்ளது. அன்றுதான் அவர்கள் வழங்கப்பட வேண்டிய இடைக்கால டிவிடெண்ட் தொகை குறித்து முடிவெடுப்பார்கள்.

சமீபத்தில் கோல் இந்தியா நிறுவனம் பிரத்யேக இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு ரூ.29 என்று அறிவித்தது. ஆனால், அந்த அறிவிப்பு எக்ஸ்-டேட்டுக்கு இரண்டு தினங்கள் முன்னர்தான் தெரிவித்தது. ரெக்கார்டு தேதிக்கும் முடிவு தெரிந்த தேதிக்கும் இடையில் இடைவெளி அதிகம் இருந்ததால் ஊக அடிப்படையில் வர்த்தகம் நடைபெற்று முடிவு தெரியும்போது விலை ஏறிவிட்டது. நிறைய முதலீட்டாளர்கள் எக்ஸ்-டேட்-ல் விலை இறங்கிவிடும் என்ற பயத்தின் காரணமாக வாங்காமல் விட்டுவிட்டார்கள். எதிர்பார்த்தபடி, எக்ஸ்-டேட்-ல் விலையும் சற்று அதிகமாகவே இறங்கிவிட்டது.

'பங்கு டிவிடெண்ட்’ வருமானத்தை விரும்பும் வாசகர்களுக்கு வழிகாட்டும் விதமாக அட்டவணையில் அதிக டிவிடெண்ட் வழங்கும் பங்குகளின் பட்டியலைக் கொடுத்துள்ளோம். அந்தப் பங்குகளை எப்படித் தேர்வு செய்வது?

அடிப்படைக் காரணங்கள்..!

டிவிடெண்ட் அடிப்படையில் ஒரு நிறுவனத்தைத் தேர்வு செய்ய அடிப்படைக் காரணங்கள்...

1. எல்லோராலும் ஓரளவு அறியப்பட்ட நிறுவனங்கள்.

2. தொடர்ந்து 5 ஆண்டுகளாக டிவிடெண்ட் வழங்கிவரும் நிறுவனங்கள்.

3. நியாயமான டிவிடெண்ட் யீல்டு.

4. நியாயமான டிவிடெண்ட் கவர்.

டிவிடெண்ட் யீல்டு:

ஒரு பங்கின் மீதான டிவிடெண்ட் ரூபாய் 5. அந்தப் பங்கை ரூ.100-க்கு வாங்குகிறோம் எனில், நம் முதலீட்டின் மீதான வருமானம் என்ன என்பதே  டிவிடெண்ட் யீல்டு.

டிவிடெண்ட் யீல்டு = ஒரு பங்கு டிவிடெண்ட் / சந்தை விலை ஙீ 100

மேற்கூறிய எடுத்துக்காட்டில் = 5/100 X 100 அதாவது 5%

ஒரு பங்கின் விலை குறையும்போது 'டிவிடெண்ட் யீல்டு’ அதிகரிக்கும். 'டிவிடெண்ட் யீல்டு’ மிக அதிகமாக இருந்தால், அந்த நிறுவனம் சிக்கல்களைச் சந்திக்கப்போகிறது என்று அர்த்தம். அந்த நிறுவனத்தில் பிரச்னை இருந்தால்தான் விலை அதிகமாக இறங்கும். மும்பை பங்குச் சந்தையின் ஒரு குறியீடான பிஎஸ்இ 500-ல் அங்கம் வகிக்கும் நிறுவனங்களின் சராசரி 'டிவிடெண்ட் யீல்டு’ 2%-லிருந்து 5% வரை.

அள்ளித் தரும் டிவிடெண்ட் பங்குகள்!

சந்தை விலை ஜனவரி 22 நிலவரப்படி (தேசிய பங்குச் சந்தை)

டிவிடெண்ட் கவர்!

ஒரு நிறுவனம் அந்த ஆண்டுக்கான லாபத்திலிருந்து டிவிடெண்ட் வழங்கி இருக்கிறார்களா அல்லது தக்கவைத்து லாபத்திலிருந்து வழங்கியிருக்கிறார்களா என்பதை அறிந்துகொள்ள உதவும் விகிதம்தான் டிவிடெண்ட் கவர். இதை எளிமையாகக் கணக்கிடலாம்.

டிவிடெண்ட் கவர் = ஒரு பங்கு வருவாய் / ஒரு பங்கு டிவிடெண்ட்.

பொதுவாக, இந்த விகிதம் 2 அல்லது 3-ஆக இருந்தால் நல்லது. 1-க்குக் கீழ் இருந்தால் நிறுவனம் சிக்கலை சந்திக்கும் என்று பொருள்.

டிவிடெண்ட் லாபத்துக்காகப் பங்குகளை வாங்குபவர்கள், அந்தப் பங்கின் தற்போதைய விலையைக் கவனிப்பது அவசியம். பங்கின் விலை மிக அதிகமாக அல்லது 52 வார உச்ச விலைக்கு அருகில் இருந்தால், விலையில் கரெக்ஷன் ஏற்படும்போது கவனித்து வாங்குவது லாபம் தரும்.

(டிவிடெண்ட் சொல்லும் பாடங்கள் பற்றி அடுத்த இதழில் சொல்கிறேன்!)

குறிப்பு: அட்டவணையில் தரப்பட்டுள்ள நிறுவனங்கள் இடைக்கால டிவிடெண்ட் வழங்குபவை. இந்தப் பட்டியலில் பொதுத்துறை வங்கிப் பங்குகள் இடம் பெறவில்லை. அவற்றின் வாராக்கடன் மிக அதிகம். தவிர, பெரும்பாலான வங்கிகள் இடைக்கால டிவிடெண்டை ஏற்கெனவே அறிவித்துவிட்டன.