Published:Updated:

ஷேர்லக் கொண்டாட்டத்தில் மிட் கேப் பங்குகள்!

ஷேர்லக் கொண்டாட்டத்தில் மிட் கேப் பங்குகள்!

கடந்த இரண்டு வாரங்களாக உற்சாகமாக வந்த ஷேர்லக், இன்று கொஞ்சம் சோகமாகவே இருந்தார். சந்தை இறங்குமுகத்தில் இருந்ததே அதற்கு காரணம். இருந்தாலும் அவரை உற்சாகப்படுத்துகிறமாதிரி, ''சந்தை புதிய உச்சத்தைத் தொட்டுவிட்டதே, அடுத்து என்ன?'' என்று கேட்டோம்.

''கடந்த ஆறு ஆண்டுகளில் தொடர்ந்து பத்து நாள் வரை பங்குச் சந்தை உயரவில்லை. ஆனால், இந்தமுறை பங்குச் சந்தை தொடர்ந்து பத்து நாள் வரை உயர்ந்தது புதிய சாதனைதான். இந்த உயர்வு பத்து நாட்களுக்கு மேல் தொடரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், சந்தை சரியத் தொடங்கிவிட்டது.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் ஏற்படவிருக்கும் புதிய ஆட்சியானது பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என எஃப்ஐஐகள் பலமாக நம்புவதால், முதலீட்டைக் கொண்டுவந்து குவித்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நீண்ட காலத்தில் இந்திய பங்குச் சந்தை கணிசமான வருமானத்தை அளிக்கும் என்கிற எண்ணத்தில் வெளிநாட்டு பென்ஷன் ஃபண்ட் நிறுவனங்களும் முதலீட்டை அதிகரித்து வருகின்றன. 2013 டிசம்பரில் எஃப்ஐஐ முதலீட்டில் பென்ஷன் ஃபண்ட்களின் பங்களிப்பு 9 சதவிகிதமாக இருந்தது. அது 2014 டிசம்பரில் 16 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது.

ஷேர்லக் கொண்டாட்டத்தில் மிட் கேப் பங்குகள்!

ஆனால், நமது மியூச்சுவல் ஃபண்டுகள் தங்களது முதலீட்டைத் தொடர்ந்து வெளியே எடுத்து வருகின்றன. கடந்த மார்ச் மாதத்தில் 3,735 கோடி ரூபாய்க்கான முதலீட்டையும், கடந்த நிதி ஆண்டில் 20,900 கோடி ரூபாய்க்கான முதலீட்டையும் திரும்பப் பெற்றிருக்கிறது. வெளிநாட்டுக்காரர்கள் நம் சந்தையின் மீது வைக்கும் நம்பிக்கையில் பத்தில் ஒருபங்கை நம்மவர்கள் நம் சந்தை மீது வைக்க வேண்டும்'' என்றவருக்கு, சுடச்சுட டீ தந்தோம்.

''புதிதாக வந்துள்ள பிஎஸ்யூ இடிஎஃப்-க்கு முதலீட்டாளர்களின் ஆதரவு எப்படி இருந்தது?'' என்று வினவினோம்.

''அமோகமாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். 40,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பித்ததால், இலக்கு தொகையான 3,000 கோடி ரூபாய் மிகச் சுலபமாக திரண்டுவிட்டது. இந்த இடிஎஃப்-ன் யூனிட் மதிப்பு அது பட்டியலிடப்பட்ட முதல் நாளே 13% அதிகரித்தது. முதலீட்டாளர்களுக்கு 5% விலை தள்ளுபடி மற்றும் ஓராண்டுக்கு மேல் வைத்திருந்தால், 15 யூனிட்களுக்கு ஒரு போனஸ் யூனிட் வழங்கப்படுவது, அதிக டிவிடெண்ட் வழங்கிவரும் 10 பொதுத்துறை நிறுவனங்கள் இந்த இடிஎஃப்-ன் போர்ட்ஃபோலியோவில் இடம் பிடித்திருப்பது எனப் பல கவர்ச்சிகரமான விஷயங்கள் இதில் இருந்ததால், இந்த அமோக ஆதரவு என்கிறார்கள் அனலிஸ்ட்கள். இப்போது இதன் யூனிட்களை பங்குச் சந்தைகள் மூலமும் வாங்க முடியும். நீண்ட கால அடிப்படையில் எஸ்.ஐ.பி முறையில் இதில் முதலீடு செய்யலாம்'' என்று பரிந்துரைத்தார் ஷேர்லக்.

''சமீபத்தில் சந்தை உயர்ந்ததில், மிட் கேப் நிறுவனங்களுக்கு நல்ல கொண்டாட்டம் போலிருக்கிறதே?'' என்றோம்.

''இந்திய பங்குச் சந்தையின் ஏற்றம், மிட் கேப் நிறுவனங்களின் அதிபர்களை சந்தோஷம் கொள்ள வைத்திருக்கிறது. சந்தை ஏற்றத்தால் பாபா கல்யாணி குழுமத்தின் நிகர சொத்து மதிப்பு 4,000 கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. இதேபோல், வெஸ்ட்லைஃப் டெவலப்மென்ட், அலெம்பிக், பேஜ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் நிகர சொத்து மதிப்பு சுமார் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்து அதன் அதிபர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்திருக்கிறது. கூடவே, இந்த நிறுவனப் பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்களும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்'' என்றார்.

''எல் அண்ட் டி நிறுவனத்தில் என்ன பிரச்னை?'' என்று விசாரித்தோம்.

''உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அரசின் அனுமதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் உள்ளிட்ட காரணங்களால் அந்த நிறுவனம் அதன் 1,70,000 கோடி ரூபாய் ஆர்டரில் 10 சதவிகிதத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. சாலை, தாதுக்கள், மெட்டல் துறைகளில் சுமார் 9,000 கோடி ஆர்டர்களை திரும்ப அளிக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்'' என்று சிறிய விளக்கம் தந்தார்.

''எடெல்வைஸ் பங்கின் விலை ஒரேநாளில் 6% அதிகரித்திருக்கிறதே, என்ன விஷயம்?'' என்று கேட்டோம்.

''எல்லாம் ஆர்பிஐ நடவடிக்கைதான். இந்த நிறுவனத்தில் எஃப்ஐஐகளின் முதலீட்டை 28 சதவிகிதமாக அதிகரிக்க ஆர்பிஐ அனுமதி அளித்திருப்பதுதான் இந்த விலை உயர்வுக்கு முக்கிய  காரணம். தற்போது இந்த நிறுவனத்தில் எஃப்ஐஐ முதலீடு 22.63 சதவிகிதமாக உள்ளது. எஃப்ஐஐ முதலீடு அதிகரிப்பதால் பங்கின் விலை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எடெல்வைஸ் நிறுவனத்தைப்போல, லூபின் பார்மாவும் அதன் எஃப்ஐஐ முதலீட்டு அளவை அதிகரிக்க, கடந்த ஆறு மாத காலமாக போராடி வருகிறது. இந்த நிறுவனத்தில் எஃப்ஐஐகளின் பங்கு முதலீடு தற்போது 33 சதவிகிதமாக உள்ளது. இதை 49 சதவிகிதமாக அதிகரிக்க அந்த நிறுவனம் ரிசர்வ் வங்கியை அணுகியுள்ளதாக தகவல். ஆனால், பார்மா துறை இப்போது கொஞ்சம் கஷ்டகாலத்தில் இருப்பதால், இந்த நிறுவனத்தின் கோரிக்கை நிறைவேறுமா, இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்றார்.

''ஆர்பிஐ துணை கவர்னராக அவர் வருவார், இவர் வருவார் என யார் யாருடைய பெயரெல்லாமோ அடிபட்டது. ஆனால், ஆர்.காந்தி என்பவர் அந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறாரே..?'' என்று கேட்டோம்.

''ஆர்பிஐ-ன் செயல் இயக்குநராக இருந்த காந்தி, துணை கவர்னராக இருந்த ஆனந்த் சின்ஹா பதவி காலம் முடிந்ததையடுத்து துணை கவர்னராக பதவி உயர்த்தப்பட்டிருக்கிறார். இவர் தனது பொருளாதார மேற்படிப்பை  அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முடித்திருக்கிறார். 58 வயதாகும் இவர் வங்கிகளின் வளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் உரிமம் வழங்குதல் உள்ளிட்ட முக்கிய பணிகளை கவனிக்க இருக்கிறார்'' என்றவர், புறப்படத் தயாரானார்.

''ஷேர்டிப்ஸ் ஏதும் தருவீர்களா?'' என்று பவ்வியமாக கேட்டோம்.

''சந்தை இறங்கும் இந்தச் சமயத்தில் பாதுகாப்பான பங்குகள் எனப்படும் பார்மா பங்குகளில் முதலீட்டை மேற்கொள்ளலாம் என்கிறார்கள் என் அனலிஸ்ட் நண்பர்கள். அதிலும் குறிப்பாக, டாக்டர் ரெட்டீஸ், லூபின், கிளென் பார்மா, கெடிலா போன்ற பங்குகளைக் கவனிக்கலாம்.

இவை தவிர, அமரராஜா பேட்டரீஸ், அசோக் லேலாண்ட், டாடா மோட்டார்ஸ், எல்ஐசி ஹெச்எஃப்எல், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், மைண்ட்ட்ரீ, ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ், ஆர்இசி போன்ற பங்குகளை கவனித்து நீண்டகால நோக்கில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம். இந்தப் பங்குகளை இறக்கத்தில் வாங்குவது முக்கியம்'' என்றவர், புறப்பட்டுச் சென்றார்.