Published:Updated:

மோடி ஆட்சி... நம்பிக்கை தரும் பங்குச் சந்தை !

லாபம் தரும் பங்குகள்....- சே.புகழரசி.

இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையில் பெரும்பான்மை அரசு அமைந்திருக்கிறது. தேர்தல் பிரசாரத்தில் அவர் சொன்னதுபோல், இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வார் என்பது பரவலான எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த வளர்ச்சி பங்குச் சந்தையிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நரேந்திர மோடி பிரதமராகி இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் இந்திய பங்குச் சந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும்?, எந்தத் துறைகள் வளர்ச்சிக் காணும்?, எந்தப் பங்குகள் அதிக லாபம் தரும்? என முன்னணி பங்குச் சந்தை நிபுணர்களிடம் கேட்டோம்.

நாம் முதலில் சந்தித்தது மும்பையைச் சேர்ந்த ஈக்வினாமிக்ஸ் ரிசர்ச் அண்ட் அட்வைஸரி நிறுவனத்தின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான சொக்கலிங்கத்தை...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மோடி ஆட்சி...  நம்பிக்கை தரும் பங்குச் சந்தை !

''அரசியல் ஸ்திரத்தன்மை, பலமடைந்து வரும் ரூபாய் மதிப்பு, முதலீட்டாளர்களின் நம்பிக்கை போன்றவற்றால் இந்திய பங்குச் சந்தை ஏற்றம் காணும். ஸ்மால் கேப் நிறுவனங்கள் அடுத்த 3-5 ஆண்டு களில் நல்ல லாபத்தைத் தர அதிக வாய்ப்பு இருக்கிறது. நீண்ட கால நோக்கில் பார்க்கும்போது, தனியார் துறை வங்கிகள் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புள்ளது. மேலும், ஆட்டோ மொபைல் துறையும் நன்றாகச் செயல்பட வாய்ப்புள்ளது. இந்தியாவில் ஏற்கெனவே பல பொருளாதாரச் சீர்திருத்தங்கள் வந்துள்ள நிலையில், இனி இன்ஷூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை அதிகரிக்கலாம்'' என்றவர், தற்போதைய சூழ்நிலையில் சிறுமுதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கி சொன்னார்.

மோடி ஆட்சி...  நம்பிக்கை தரும் பங்குச் சந்தை !

''நேரடியாகப் பணப் புழக்கம் உள்ள ஜுவல்லரி போன்ற தொழிலை அடிப்படையாகக் கொண்ட நிறுவனப் பங்குகளை முதலீட்டுக்குத் தவிர்ப்பது நல்லது. இவற்றின் கணக்குவழக்குகள் சரிவர இல்லாமல் இருப்பதே முக்கியக் காரணம். சிறு முதலீட்டாளர்கள் வெறும் செய்திகளை மட்டும்

மோடி ஆட்சி...  நம்பிக்கை தரும் பங்குச் சந்தை !

கொண்டு முதலீடு செய்யாமல், நிறுவனத்தின் அடிப்படை வலிமை, அதாவது நிர்வாகம், தொடர்ந்து லாபத்தில் இயங்கிவருவது போன்றவற்றின் அடிப்படையில் பங்குகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யவேண்டும்'' என்றார் சொக்கலிங்கம். இனி, அவர் செய்த பங்கு பரிந்துரை:

சென்ஸார் டெக்னாலஜீஸ்!

இதன் அடுத்த ஓராண்டு பிஇ விகிதம் 5 என்கிற அளவில் மதிப்பிடப் பட்டிருக்கிறது. அதிக ரொக்க கையிருப்பைக் கொண்ட சாஃப்ட்வேர் சேவை நிறுவனம். இது வங்கி, இன்ஷூரன்ஸ், ஹெல்த்கேர், உற்பத்தி போன்ற வளர்ச்சி துறைகளுக்கு ஐ.டி சேவை அளித்து வருகிறது.

நெய்வேலி லிக்னைட்!

மின்சாரத் துறையைச் சார்ந்த இந்த நிறுவனம், அதிக ரொக்க கையிருப்பு தொகையைக் கொண்டுள்ளது. தூத்துக்குடி மின்சாரத் திட்டம் நடைமுறைக்கு வரும்போது இந்த நிறுவனத்தின் மின்சார உற்பத்தி மேலும் 33% அதிகரிக்கும். இந்தப் பங்கு நீண்ட காலத்தில் நல்ல லாபம் தரும்.

ராடிகோ கெய்த்தான்!

மோடி ஆட்சி...  நம்பிக்கை தரும் பங்குச் சந்தை !

பிராண்டட் மதுபான தயாரிப்பு துறையைச் சார்ந்த இந்த நிறுவனப் பங்கு முதலீட்டுக்கு ஏற்றதாகும். கவர்ச்சிகரமான மதிப்பீடு கொண்டதாக இந்த நிறுவனப் பங்கு உள்ளது. இந்திய மது நிறுவனங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அந்த வகையில் இந்த நிறுவனம் லாபம் அடைய அதிக வாய்ப்புள்ளது.

அடுத்து, ஜியோஜித் பி.என்.பி. பரிபாஸ் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தின் ரிசர்ச் ஹெட் அலெக்ஸ் மேத்யூஸிடம் கேட்டோம்.

''புதிய அரசு பல்வேறு கொள்கைகளை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது பணவீக்க விகிதம், நிதி ஆண்டு பற்றாக்குறை, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை போன்றவற்றைக் குறைக்கும். அந்த வகையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படும். தற்போது நாட்டின் ஜிடிபி வளர்ச்சி குறைந்து காணப்படுகிறது. இது அடுத்த மூன்றாண்டு காலத்தில் 8 சதவிகிதத்தைத் தாண்ட அதிக வாய்ப்புள்ளது.

எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி ஏற்பட உள்கட்டமைப்புத் திட்டங்களான சாலைகள், மேம்பாலங்கள், ரயில், விமானம், துறைமுகம், மின் உற்பத்தி போன்றவை வளர்ச்சி காண வேண்டும். இவை நிறைவேறும்பட்சத்தில் அதிக வேலைவாய்ப்பு உருவாகும். அந்த வகையில் அடுத்த 4 - 5 ஆண்டுகளில்

மோடி ஆட்சி...  நம்பிக்கை தரும் பங்குச் சந்தை !

ஜிடிபி இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி காணும்'' என்ற அலெக்ஸ் மேத்யூஸ் பங்குச் சந்தையின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதையும் விளக்கினார்.

''பொருளாதார வளர்ச்சிக்கும் பங்குச் சந்தைக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. பொருளாதாரம் வேகமாக வளரும்பட்சத்தில் சென்செக்ஸ் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் 50000 புள்ளிகளைத் தாண்டக்கூடும். வரும் ஆண்டுகளில் வங்கி மற்றும் நிதிச் சேவை, கேப்பிட்டல் கூட்ஸ், ஜவுளி போன்ற துறைகள் சிறப்பாகச் செயல்படும். நடுத்தரக் காலத்தில் விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, சர்க்கரை துறைகள் சிறப்பாகச் செயல்பட வாய்ப்பு இல்லை.

கடந்த 2008 - 2013 வரை இந்திய பங்குச் சந்தை இறக்கத்தில் இருந்தது. 2014 முதல் சந்தை ஏற்றம் காணும் நிலை இருக்கிறது. சிறு முதலீட்டாளர்கள் 5 - 10 ஆண்டுகள் இலக்கு வைத்துக்கொண்டு சந்தையில் முதலீடு செய்ய வேண்டும். அதிகக் கடன், குறைவான ஆர்டர்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் பங்குகளைத் தவிர்ப்பது நல்லது. நிறுவனங்களின் அடிப்படையை சிறு முதலீட்டாளர்களால் அலசி ஆராய முடியவில்லையெனில், நிஃப்டி 50 பங்கு களிலிருந்து பங்குகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யலாம்'' என்றார். இனி அலெக்ஸ் மேத்யூஸின் பங்கு பரிந்துரை:  

ஹெச்.சி.எல். டெக்!

சாஃப்ட்வேர் உருவாக்கம், அது சார்ந்த இன்ஜினீயரிங் சேவைகளை அளித்து வருகிறது. இந்தக் குழுமத்தின் தொழில்நுட்பம், இன்டர்நெட், இ-காமர்ஸ், நெட் வொர்க்கிங், இன்டர்நெட் டெலிபோனி, எம்படட் சாஃப்ட்வேர், சாட்டிலைட் மற்றும் வயர்லெஸ் கம்யூனிகேஷன்ஸ் போன்ற துறைகளில் பயன்படுத்துகிறது. இவை எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சி பெறும் என்பதால் இந்த நிறுவனப் பங்கின் விலையும் கணிசமாக அதிகரிக்கும்.

மோடி ஆட்சி...  நம்பிக்கை தரும் பங்குச் சந்தை !

வா டெக் வாபாக்!

இந்த நிறுவனம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், குடிநீர் மேலாண்மை, கடல் நீரை குடிநீராக மாற்றும் தொழிற்சாலைகளை அமைத்துத் தருகிறது. நாட்டில் இன்ஃப்ரா துறை வளர்ச்சி காணும்போது, இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கானத் தேவை முன்பைவிட அதிகரித்து, இதன் லாபம் உயரும். அந்த வகையில் இந்த நிறுவனப் பங்கின் விலையும் நன்கு அதிகரிக்கும்.

ஆக்ஸிஸ் பேங்க்!

தனியார் துறையைச் சேர்ந்த இந்த வங்கி, இந்தியா முழுக்க முழுவீச்சில் இயங்கி வருகிறது. சில்லறை வணிகம், முதலீட்டு மேலாண்மை, மெர்ச்சன்ட் பேங்கிங், கருவூல சேவை, என்.ஆர்.ஐ சேவை போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

மோடி ஆட்சி...  நம்பிக்கை தரும் பங்குச் சந்தை !

கடைசியாக, சிஸ்டமெடிக்ஸ் ஷேர்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ சுனில் சர்தாவிடம் கேட்டோம். அவர், ''மத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான நிலையான ஆட்சி அமைந்திருக்கிறது. அந்த வகையில் 2014-15-ல் சென்செக்ஸ் வருமானம் குறைந்தபட்சம் 15 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் சென்செக்ஸ் 28000 புள்ளிகளைத் தாண்டும்.

பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இது அமல்படுத்தப்பட்டால் சாலை, ரயில், கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் சிறப்பாகச் செயல்படும். கேப்பிட்டல் கூட்ஸ், வங்கி துறைகளும் சிறப்பாகச் செயல்படும். பொதுத்துறை நிறுவனப் பங்குகள் நல்ல லாபம் தரக்கூடியதாக இருக்கும். இந்திய பங்குச் சந்தை அடுத்த 3 - 5 ஆண்டுகளில் ஃபண்டமென்டல் அடிப்படையில் காளைச் சந்தையின் பிடியில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். ஆனால்,  பார்மா, எஃப்.எம்.சி.ஜி நிறுவனப் பங்கு முதலீடு லாபகரமாக இருக்க வாய்ப்பு இல்லை'' என்றார். இனி சுனில் சர்தாவின் பங்கு பரிந்துரை:

எஸ்.பி.ஐ!

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கி. வீட்டுக் கடன் அளிப்பதில், டெபாசிட் திரட்டுவதில் இதர பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் துறை வங்கிகளைவிடத் தீவிரமாக இருக்கிறது.

ஜே.கே. லட்சுமி சிமென்ட்!

கடந்த 32 ஆண்டுகளாக ஜே.கே. லட்சுமி சிமென்ட் இயங்கி வருகிறது. மின்சாரச் சேமிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உற்பத்தித் திறன் போன்றவற்றில் விருதுகளைப் பெற்றிருக்கிறது. ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஹரியானா, உ.பி., பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், மத்தியப்பிரதேசம், மும்பை மற்றும் பூனே போன்ற நகரங்களுக்கு 2,200 டீலர்களைக் கொண்டு சிமென்ட் வர்த்தகம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 2,300 கோடி ரூபாய். நாட்டில் உள்கட்டமைப்புத் துறை வளர்ச்சிக் காணும்போது, இந்த நிறுவனத்தின் சிமென்ட் விற்பனை நிச்சயம் அதிகரித்து இதன் லாபம் கூடும்.

மோடி ஆட்சி...  நம்பிக்கை தரும் பங்குச் சந்தை !

ஐ.எல். அண்ட் எ.ஃப்.எஸ். டிரான்ஸ்போர்ட்!

கடந்த 25 ஆண்டுகளாக இயங்கிவரும் ஐ.எல். அண்ட் எ.ஃப்.எஸ். டிரான்ஸ்போர்ட் நிறுவனம் 25 சாலைகளை நிறைவேற்றி இருக்கிறது. மெட்ரோ ரயில், நகரப் போக்குவரத்து, செக்போஸ்ட்கள் போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் சமீபத்திய புராஜெக்ட்கள் மத்தியப்பிரதேசம், கூர்கான், நாக்பூர் போன்ற நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. அமெரிக்கா, மெக்சிகோ, பிரேசில் போன்ற நாடுகளிலும் இயங்கி வருகிறது.

ஆக, மோடி தலைமையிலான அரசு இன்ஃப்ரா, இயற்கை வளம், பங்கு விலக்கல், கல்வி, வீட்டு வசதி, ராணுவம் உள்ளிட்ட துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் மூன்று ஆண்டுகளில் ஜிடிபி 8 சதவிகிதம் வளர்ச்சி அடையும்போது சென்செக்ஸ் 40000 தாண்டும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

பங்குச் சந்தை வளர்ச்சி காணும் பட்சத்தில் சிறு முதலீட்டாளர்களைப் பொறுத்தவரையில் நீண்ட காலத்தில் நல்ல பங்குகளை இறக்கத்தின்போது தொடர்ந்து வாங்கி முதலீடு செய்துவந்தால் கணிசமான லாபத்தைப் பார்க்க முடியும்.

தங்கம் விலை ஏறுமா?

இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. மேலும், தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து வெளியாகிவரும் பொருளாதாரக் குறியீடுகள் அமெரிக்கப் பொருளாதாரம் வலுவடைந்து வருவதையே காட்டுகிறது. இதையடுத்து வரும் மாதங்களில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்று மும்பை காம்டிரென்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஞானசேகர் தியாகராஜனிடம் கேட்டோம்.

மோடி ஆட்சி...  நம்பிக்கை தரும் பங்குச் சந்தை !

தங்கம் விலை குறையலாம்!

''அமெரிக்க டாலர் பலமிழந்திருந்தும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்படவில்லை. ஏப்ரல் மாத அமெரிக்க ஃபெடரல் வங்கியின் கூட்ட முடிவுகள் வெளியாகவிருப்பதால் முதலீட்டாளர்கள் அதிக கவனத்துடன் இருக்கிறார்கள். அடுத்த ஆறு மாதங்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பில்லை என எதிர்பார்க்கப்பட்டாலும்,  அமெரிக்காவிலிருந்து வெளியான பொருளாதாரம் சார்ந்த குறியீடுகள் வலுவான வளர்ச்சியைக் காட்டுவதால், கூடிய விரைவில் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது.

மோடி ஆட்சி...  நம்பிக்கை தரும் பங்குச் சந்தை !

மேலும், இந்தியாவில் தங்கத்தின் தேவை குறைந்துள்ளது. மத்திய அரசு தங்கம் இறக்குமதியை தடை செய்ததே இதற்கு காரணம். எனினும், வரப்போகிற புதிய அரசு தங்கத்தின் மீதான கட்டுப்பாடுகளில் தலைகீழ் மாற்றங்களைக் கொண்டு வரலாம். மேலும், இந்திய ரூபாயின் மதிப்பும் நிலையாக இருப்பதால் தங்கத்தின் மீதான கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படலாம்.

தற்போதைய நிலையில் ரஷ்யா - உக்ரைன் இடையே நிலவிவரும் பிரச்னை மட்டுமே, தங்கத்தின் விலை மேலும் குறையாமல் இருப்பதற்கு காரணமாக உள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வரும் மாதங்களில் 1,330 - 1,200 டாலர் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதுவே, எம்.சி.எக்ஸில் 10 கிராம் 24 காரட் தங்கம் ரூ.27,000 - 28,700 என்ற நிலையிலேயே வர்த்தகமாகலாம்''.