Published:Updated:

பாசிட்டிவ் மார்க்கெட்...லாபம் தரும் ஃபண்டுகள்!

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

பாசிட்டிவ் மார்க்கெட்...லாபம் தரும் ஃபண்டுகள்!

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

Published:Updated:

இந்தியப் பங்குச் சந்தைகள் கிடுகிடுவென ஏறிவருகிறது.  பழைய உச்சத்தையெல்லாம் தாண்டி போய்க்கொண்டே இருக்கிறது. கடந்த ஐந்தாறு வருடங்களாகப் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து காத்திருந்த எல்லாரது முகத்திலும் மகிழ்ச்சி. சந்தை ஏறுமோ ஏறாதோ என வேடிக்கை பார்த்தவர்கள் எல்லாம், இனி சின்னச் சரிவு வந்தாலும் உடனே உள்ளே நுழையக் காத்திருக்கிறார்கள்.

பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய நேரம் இல்லாதவர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் தாராளமாக முதலீடு செய்யலாம். பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் நீண்டகால நோக்கில் பிரமாதமான வருமானம் தந்துள்ளன; இனிவரும் காலத்திலும் இது தொடரும். ஆனால், இந்த வகை முதலீடுகள் தினசரி பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தைக் கண்டு அஞ்சாதவர்களுக்குத்தான் உகந்தது என்பதையும் மறக்கக் கூடாது!

இந்த ரிஸ்க் எடுக்கத் தயார் என்கிறவர்களுக்குக் கிடைக்கும் லாபம் மிகப் பெரிது. உதாரணத்துக்கு, 20.5 வருடங்களான ஃபண்ட் ஒன்று ஏறக்குறைய 7000% வருமானத்தைத் தந்துள்ளது. அதாவது, 20.5 வருடங்களுக்குமுன் ரூ.1 லட்சத்தை இந்த ஃபண்டில் முதலீடு செய்திருந்தால், அதன் தற்போதைய மதிப்பு ரூ.70 லட்சத்துக்கும் மேல். அதேபோல், 18.7 வருடங்களுக்குமுன் ஆரம்பித்த மற்றொரு ஃபண்டில் முதலீடு செய்யப்பட்ட ரூ.1 லட்சம் தற்போது ரூ.65.70 லட்சம் ஆகியுள்ளது. பல ஃபண்டுகளில் ஐந்து வருடங்களுக்குமுன் முதலீடு செய்திருந்தால், ரூ.1 லட்சம் இப்போது சுமாராக ரூ.2 லட்சமாக மாறியிருக்கும். மேலே உள்ள உதாரணங்களிலிருந்து, ஆண்டுகள் அதிகரிக்க அதிகரிக்க வருமானம் பன்மடங்காகப் பெருகுவது புரிகிறதா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாசிட்டிவ் மார்க்கெட்...லாபம் தரும் ஃபண்டுகள்!

சரி, சந்தை இன்னும் ஏறும் என்று உறுதியாக நம்பப்படும் இந்தச் சமயத்தில், முதலீட்டுக்கு ஏற்ற ஃபண்டுகள் எவை என்பதைப் பார்க்கும்முன், முதலில் முதலீட்டாளர்களைப் பின்வருகிற மாதிரி பிரித்துக்கொள்வோம்:

1. கன்ஸர்வேட்டிவ்
2. மாடரேட் ரிஸ்க் எடுப்பவர்கள்
3. ரிஸ்க் எடுப்பவர்கள்
4. அதிக ரிஸ்க் எடுப்பவர்கள்
5. அக்ரெஸிவ்

இந்த முதலீட்டாளர்களுக்கு ஏற்ற ஃபண்டுகளைத் தேர்வுசெய்யப் பின்வரும் ஃபில்டர்களை அப்ளை செய்தோம்.

பாசிட்டிவ் மார்க்கெட்...லாபம் தரும் ஃபண்டுகள்!

1. குறைந்தது 5 ஆண்டு நடப்பில் இருந்திருக்க வேண்டும்.

2. திட்டம் நிர்வகிக்கும் சொத்து குறைந்தபட்சம் ரூ.500 கோடியாவது இருக்க வேண்டும். மிட் அண்ட் ஸ்மால் கேப் வகைக்கு இது ரூ.200 கோடியாகத் தளர்த்தப்பட்டது.

3. கடந்த ஐந்து/பத்து வருடங்களில் நல்ல வருமானத்தைத் தந்துள்ள ஃபண்டாக இருக்க வேண்டும். குறிப்பாக, நிஃப்டி 50 குறியீட்டைவிட அதிக வருமானத்தைத் தந்திருக்க வேண்டும்

4. ஒழுக்கமான ஃபண்ட் நிறுவனமாக இருப்பதுடன் நல்ல ஃபண்ட் மேனேஜ்மென்ட் டீமை கொண்டிருக்க வேண்டும்.

5. ஃபண்ட் நிறுவனங்கள் மற்றும் ஃபண்டைப் பற்றி எனது நேரடி பரிச்சயம்.

இனி, ஒவ்வொரு வகை முதலீட்டாள ருக்கும் ஏற்ற ஃபண்டுகளைப் பார்ப்போம்.

கன்ஸர்வேட்டிவ்

பங்குச் சந்தையில் ரிஸ்க் இருக்கத்தான் செய்யும். அதில் மிகக் குறைந்த ரிஸ்க் உடைய எம்ஐபி ஃபண்டுகள்தான் இந்த வகை முதலீட்டாளர்களுக்கு உகந்தது. இந்த வகை ஃபண்டுகள் பொதுவாக 70% வரை கடன் பத்திரங்களிலும் மீதியை பங்குகளிலும் முதலீடு செய்யும். நீண்ட காலத்தில் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட அதிக வருமானம் தரும். எல்லாவற்றையும்விடப் பெரிய கவர்ச்சி, டெபாசிட்டைப்போல் வருமான வரி இருக்காது.

12 மாதங்களுக்குமேல் போட்ட முதலீட்டை எடுக்கும்பட்சத்தில், நீண்ட கால முதலீட்டு லாப வரிதான் கட்டவேண்டி வரும் (பணவீக்கத்தைக் கழித்தபிறகு 20% வரி கட்ட வேண்டும்). இது மிக மிகக் குறைவாகவே இருக்கும். அந்த வகையில் தொடர்ச்சியாக நன்றாகச் செயல்பட்டு வரும் இரண்டு ஃபண்டுகளைப் பரிந்துரைத்துள்ளேன்.

1. ஹெச்டிஎஃப்சி எம்ஐபி – எல்டிபி
2. ரிலையன்ஸ் எம்ஐபி

பாசிட்டிவ் மார்க்கெட்...லாபம் தரும் ஃபண்டுகள்!

மாடரேட் ரிஸ்க் எடுப்பவர்கள்

இந்த வகை முதலீட்டாளர்கள் மேற்கண்டவர்களைக் காட்டிலும் சற்று அதிக ரிஸ்க் எடுக்கக் கூடியவர்கள்; அதேசமயத்தில் சற்று அதிக வருமானத்தையும் எதிர்பார்க்கக் கூடியவர்கள். இந்த வகையினர் பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இந்த வகை ஃபண்டுகள் 70% வரை பங்குகளிலும், மீதியை கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யும். பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதன்முறையாக முதலீடு செய்பவர்களும் இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

1. ஹெச்டிஎஃப்சி புரூடென்ஸ்
2. ஹெச்டிஎஃப்சி பேலன்ஸ்டு
3. ஐசிஐசிஐ புரூ. பேலன்ஸ்டு

ரிஸ்க் எடுப்பவர்கள்

சந்தையின் ஏற்ற இறக்கத்தையட்டி ரிஸ்க் எடுக்க தயார் என்பவர்கள் லார்ஜ் கேப் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யும் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். மேலும், நீண்ட கால நோக்கில் பார்க்கும்போது, ஒரு ஸ்திரத்தன்மையுடன் இந்தத் திட்டங்கள் செயல்படும். இந்த வகையில் தொடர்ந்து நன்றாகச் செயல்பட்டுவரும் திட்டங்களின் பெயர்களைக் கீழே பரிந்துரை செய்துள்ளேன். ஒவ்வொருவரின் மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவிலும் ஒரு கணிசமான பகுதி இந்த வகை ஃபண்டுகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

1. ஐசிஐசிஐ புரூ. ஃபோகஸ்டு புளூசிப் ஈக்விட்டி.
2. ஹெச்டிஎஃப்சி டாப் 200.
3. பிர்லா சன் லைஃப் ஃபிரன்ட்லைன் ஈக்விட்டி.
4. யூடிஐ ஆப்பர்ச்சூனிட்டீஸ்.

அதிக ரிஸ்க் எடுப்பவர்கள்

சற்று அதிகம் ரிஸ்க் எடுக்க முடிந்தவர்கள் லார்ஜ்+மிட் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இந்த வகை ஃபண்டுகள் பெரும்பாலும் 70% லார்ஜ் கேப் பங்குகளிலும் மீதியை மிட் கேப் பங்குகளிலும் முதலீடு செய்கின்றன. இந்த வகை ஃபண்டுகள், சந்தை ஏற்றத்தில் இருக்கும்போது சந்தையைவிடச் சற்று கூடுதல் வருமானம் தரும். அதேசமயத்தில், சந்தை இறங்குமுகத்தில் இருக்கும்போது சந்தையைவிட சற்று அதிகமாகவே இறங்கும். நன்றாகச் செயல்படும் ஃபண்டுகள் நீண்ட காலத்தில் நல்ல வருவாயைத் தந்துள்ளன. லார்ஜ் கேப் ஃபண்டுகளுக்கு அடுத்தபடியாக ஒருவரின் போர்ட்ஃபோலியோவில் இந்த வகை ஃபண்டுகள் ஒரு கணிசமான அளவில் இடம்பெற்றிருக்க வேண்டும். இந்தவகையில் முதலீட்டுக்கு உகந்த சில ஃபண்டுகளைக் கீழே தந்துள்ளேன்.

1. ரிலையன்ஸ் ஈக்விட்டி ஆப்பர்ச்சூனிட்டீஸ்.
2. ஐசிஐசிஐ புரூ. டைனமிக் பிளான்.
3. ஹெச்டிஎஃப்சி ஈக்விட்டி.

பாசிட்டிவ் மார்க்கெட்...லாபம் தரும் ஃபண்டுகள்!

அக்ரெஸிவ் முதலீட்டாளர்கள்

இந்த வகை முதலீட்டாளர்களுக்குத்தான் இந்தச் சந்தை மிகப் பொருத்தமாக இருக்கும். சந்தை இன்னும் ஏறும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கையில், மிட் அண்ட் ஸ்மால் கேப் பங்குகள் மிகவும் அதிகமாக ஏறும். அதனால் அதுபோன்ற நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யக்கூடிய மிட் அண்ட் ஸ்மால் கேப் ஃபண்டுகள் மிகவும் நன்றாகச் செயல்படும். பொருளாதாரம் மேலெழுந்து வருகையில் நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களின் வளர்ச்சி அதிவேகமாக இருக்கும். ஆகவே, இந்த வகை ஃபண்டுகள் நல்ல வருவாயைத் தரும்.

இந்த வகையில் உள்ள ஓரிரு ஃபண்டுகள் கடந்த ஓராண்டில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான வருவாயைத் தந்துள்ளன. பல ஃபண்டுகள் 70%-க்கும் அதிகமான வருவாயைத் தந்துள்ளன. அதுபோல் பொருளாதாரம் கீழ் இறங்கி வருகையில், இந்த வகை ஃபண்டுகளின் இறக்கமும் அதிகமாக இருக்கும் என்பதை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த வகையில் நன்கு செயல்பட்டு வரும் சில ஃபண்டுகள் பற்றிய விவரங்கள் இனி:

ஐசிஐசிஐ புரூ. வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட்: இந்த ஃபண்ட் ரூ.3,000 கோடிக்கும் மேலான சொத்தை நிர்வகித்து வருகிறது. ஏறக்குறைய 70 சதவிகிதத்தை மிட் அண்ட் ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகளிலும், மீதியை லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகளிலும் முதலீடு செய்கிறது. லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடு வைத்துள்ளதால், இந்த ஃபண்டுக்கு லிக்விடிட்டி பிரச்னை இல்லாமல் இருக்கிறது. இந்த ஃபண்ட் ஆரம்பிக்கப்பட்ட ஆகஸ்ட் 16, 2004-ல் இதில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அதன் இன்றைய மதிப்பு ரூ.8.85 லட்சம். இதன் கூட்டு வட்டி ஆண்டு வருமானம் 24.85%. ஸ்திரத்தன்மையுடன் செயல்படும் மிட் அண்ட் ஸ்மால் கேப் ஃபண்டுகளில் இதுவும் ஒன்று. முதலீட்டாளர்கள் சந்தை சரிவுகளின்போது மொத்தமா கவும், எஸ்ஐபி முறையிலும் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

ஹெச்டிஎஃப்சி மிட் கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்: ரூபாய் 3,000 கோடிக்கு மேலான சொத்துகளை இந்த ஃபண்ட் நிர்வகிக்கிறது. இந்த ஃபண்ட் கடந்த முறை பங்குச் சந்தை உச்சத்தைத் தொட்டபோது ஆரம்பிக்கப்பட்ட ஃபண்ட் ஆகும் (ஜூன்25, 2007). இந்த ஃபண்ட் ஏறக்குறைய 85 சதவிகிதத்தை மிட் அண்ட் ஸ்மால் கேப் பங்கு களிலும், எஞ்சியதை லார்ஜ் கேப் பங்குகளிலும் முதலீடு செய்துள்ளது. ஃபண்ட் ஆரம்பித்தபோது போட்ட 1 லட்சம் ரூபாய் தற்போது ரூ.2.83 லட்சமாக உள்ளது. பங்குச் சந்தை இறக்கத்தின்போதும் நன்றாகச் செயல்படும் ஃபண்டுகளில் இதுவும் ஒன்று. நீண்ட காலத்தில் செல்வத்தை உண்டுபண்ணுவதற்கு/ வளர்ப்பதற்கு இது ஒரு நல்ல ஃபண்டாகும். இதுபோன்ற ஏறுமுகமான சந்தையில், சிறிய இறக்கங்களைப் பயன்படுத்தி மொத்தமாகவும் எஸ்ஐபி முறையிலும் முதலீடு செய்யலாம்.

ஐடிஎஃப்சி பிரீமியர் ஈக்விட்டி ஃபண்ட்: மிட் அண்ட் ஸ்மால் கேப் கேட்டகிரியில் தொடர்ந்து நன்றாகச் செயல்பட்டுவரும் ஃபண்டுகளில் இதுவும் ஒன்று. சந்தை ஏறுமுகத்தில் இருக்கும்போது எல்லா ஃபண்டுகளும் நல்ல வருமானம் தரலாம். ஆனால், இறங்குமுகத்தில் இருக்கும்போது நன்றாகச் செயல்படுவதுதான் இந்த ஃபண்டின் சிறப்பு. இந்த ஃபண்ட் நிர்வகிக்கும் சொத்து 3,700 கோடி ரூபாய்க்கு மேல். பொதுவாக, எஸ்ஐபி முறையில் மட்டுமே முதலீடு செய்ய முடிந்த இந்த ஃபண்ட், தற்போது மொத்த முதலீட்டுக்கும் குறிப்பிட்ட காலத்துக்குக் கதவைத் திறந்துள்ளது. இந்த ஃபண்ட் செப்டம்பர் 2005-ல் ஆரம்பித்தபோது ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அதன் தற்போதைய மதிப்பு ரூ.5.38 லட்சமாகும். இதன் கூட்டு வட்டி ஆண்டு வருமானம் 21.32%. வங்கிகளின் 9% வட்டி எங்கே, பங்கு சார்ந்த முதலீட்டின் வருமானம் எங்கே என்று நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

பாசிட்டிவ் மார்க்கெட்...லாபம் தரும் ஃபண்டுகள்!

ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா ஃபண்ட்: இந்த ஃபண்ட் துவங்கி 20 (டிசம்பர் 01, 1993) வருடங்களுக்கும் மேலாகிறது. இந்த ஃபண்ட் ஏறக்குறைய 86% மிட் அண்ட ஸ்மால் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்கிறது. இந்த ஃபண்ட் நிர்வகிக்கும் சொத்து ரூ.986 கோடியாகும். இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது முதலீடு செய்த ரூ.1 லட்சம் இன்று 48 லட்சத்துக்கும் மேலாக உள்ளது. இதன் டாப் முதலீட்டுத் துறைகள் ஃபைனான்ஸ், இன்ஜினீயரிங் மற்றும் கெமிக்கல்ஸ் ஆகும். உங்களது போர்ட்ஃபோலியோவில் ஒரு சிறிய பகுதியை இந்த வகை ஃபண்டுகளுக்கு ஒதுக்குவது சிறந்தது.

டிஎஸ்பி பிஆர் ஸ்மால் அண்ட் மிட் கேப்: இந்த ஃபண்ட் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.973 கோடியாகும். ஃபைனான்ஸ், இன்ஜினீயரிங், டெக்னாலஜி போன்ற துறைகள் இதன் டாப் ஹோல்டிங்ஸ் ஆகும். ஃபண்ட் ஆரம்பித்தபோது ரூ.1 லட்சம், இன்று ரூ.2.78 லட்சமாக உள்ளது (ஆண்டுக்கு கூட்டு வட்டியில் 14.43%). கடந்த ஐந்து வருடத்தில் இந்த ஃபண்டின் செயல்பாடு நன்றாக உள்ளது. இந்த ஃபண்ட் ஏறக்குறைய 75% மிட் கேப் பங்குகளிலும், 20% ஸ்மால் கேப் பங்குகளிலும் முதலீடு செய்துள்ளது. இதன் போர்ட்ஃபோலியோவில் உள்ள பங்குகளின் ஆவரேஜ் சந்தை மதிப்பு ரூ.6,815 கோடியாகும்.

ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மாலர் கம்பெனீஸ்: இந்த ஃபண்ட் ரூ.386 கோடி மதிப்புள்ள சொத்துகளை நிர்வகித்து வருகிறது. ஜனவரி 2006-ல் இந்த ஃபண்ட் துவங்கப்பட்டது. அன்று ரூ.1 லட்சம் முதலீடு செய்தவர்களுக்கு இன்று ரூ.2.78 லட்சமாக உள்ளது. இது மிட் கேப் நிறுவனப் பங்குகளில் 54%ம் ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகளில் 41%ம், எஞ்சியதை லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகளிலும் முதலீடு செய்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் ஏறக்குறைய 67% வருமானத்தைக் கொடுத்துள்ளது. இந்த ஃபண்டின் கடந்த ஐந்து வருடச் செயல்பாடு நன்றாக உள்ளது.

டிஎஸ்பி பிஆர் மைக்ரோ கேப் ஃபண்ட்: இந்த ஃபண்ட் பெரும்பாலும் தனது முதலீட்டை ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்கிறது. 81 சத விகிதத்தை ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகளிலும், எஞ்சியதை மிட் கேப் பங்குகளிலும் முதலீடு செய்கிறது. ஆகவே, இந்த ஃபண்டின் ரிஸ்க் மற்றும் ரிவார்டு மேற்கண்ட ஃபண்டுகளைவிட அதிகம். எனவே, முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டில் ஒரு சிறிய பகுதியை இதுபோன்ற ஃபண்டுகளுக்கு ஒதுக்கலாம். ஜூன் 2007-ல் இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது ஒருவர் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அதன் தற்போதைய மதிப்பு ரூ.2.58 லட்சமாக உள்ளது. கடந்த முறை பங்குச் சந்தை உச்சத்தில் ஆரம்பிக்கப்பட்டது இந்த ஃபண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஃபண்ட் நிர்வகிக்கும் சொத்தின் மதிப்பு ரூ.361 கோடியாகும்.

பாசிட்டிவ் மார்க்கெட்...லாபம் தரும் ஃபண்டுகள்!

யூடிஐ மிட் கேப் ஃபண்ட்: இந்த ஃபண்ட் நிர்வகிக்கும் சொத்துகளின் மதிப்பு ரூ.299 கோடியாகும். இதன் முதன்மை முதலீட்டுத் துறைகள் ஆட்டோமொபைல், ஃபைனான்ஸ், மற்றும் எஃப்எம்சிஜி ஆகும். இதன் போர்ட்ஃபோலியோவில் எந்தப் பங்குக்கும் 4 சதவிகிதத்துக்கு மேல் இடம் கிடையாது.

இந்த ஃபண்ட் ஏப்ரல் 2004-ல் ஆரம்பிக்கப்பட்டபோது செய்த முதலீடான ரூ.1 லட்சம் இன்று 5.49 லட்சமாக உள்ளது (ஆண்டுக்கு 19.27% வருமானம்). இந்த ஃபண்ட் 55% மிட் கேப் பங்குகளிலும், 34%-ஐ ஸ்மால் கேப் பங்குகளிலும், மீதியை லார்ஜ் கேப் பங்குகளிலும் முதலீடு செய்துள்ளது.

நாம் மேலே கொடுத்துள்ள எட்டு ஃபண்டுகளும் மிட் மற்றும் ஸ்மால் கேப் வகையைச் சார்ந்த ஃபண்டுகளாகும். சந்தை ஏறுமுகத்தில் இருக்கும்போது இந்த ஃபண்டுகள் மிகவும் நன்றாகச் செயல்படும். நீண்ட கால முதலீட்டாளர்கள் தங்களது மொத்த முதலீட்டை இந்த ஃபண்டுகளில் போட வேண்டாம். ஒரு பகுதியை மட்டுமே முதலீடு செய்துகொள்ளுங்கள். மீதியை லார்ஜ் கேப், லார்ஜ்+மிட் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்துகொள்ளுங்கள்.

மிட் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டுகளில் அபரிமிதமான லாபம் கிடைக்கும்போது, அதை அறுவடை செய்துகொள்ளலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism