Published:Updated:

மோடியின் மேக் இன் இந்தியா சாத்தியம் ஆகுமா?

ச.ஸ்ரீராம்

மேட் இன் அமெரிக்கா, மேட் இன் ஜெர்மனி என்கிற வார்த்தைகள் ஒரு காலத்தில் நம்மவர்கள் இடையே படுபிரபலம். இதனை உணர்ந்த பிரதமர் மோடி இதே பாணியில் மக்களைக் கவரும் விதமாக  சமீபத்தில் அறிவித்திருக்கும் திட்டம் தான் ‘மேக் இன் இந்தியா’. உலகின் எந்தப் பகுதியில் இருக்கும் நிறுவனமாக இருந்தாலும் சரி, இந்தியாவில் பொருளைத் தயாரித்து, அதை உலகம் முழுக்க கொண்டு சென்று விற்கலாம். இதன்மூலம் பல கோடி வேலைவாய்ப்பு களை உருவாக்கலாம் என்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். இந்தத் திட்டத்தை முழுமையாக விளக்கும் வகையில் ஒரு தனி இணையதளத்தையே திறந்திருக்கிறது மத்திய அரசாங்கம்.

மோடியின் மேக் இன் இந்தியா சாத்தியம் ஆகுமா?

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க 25 துறைகளை அந்த இணையதளத்தில் பரிந்துரை செய்திருக்கிறார் பிரதமர் மோடி. இந்தத் துறைகள் இன்றைக்கு இந்தியாவில் எப்படி இருக்கிறது, ஏன் இந்தத் துறைகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான காரணங் களையும் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். இணையதளத்தில் சொல்லப்பட்டு இருக்கும் முக்கிய விஷயங்களைக் கொஞ்சம் பார்ப்போம்.

1ஆட்டோ மொபைல் துறை யில் ஆண்டுக்கு 21.50 லட்சம் வாகனங்களைத் தயாரிக்கிறது நம் இந்தியா. உலக அளவில் ஆட்டோமொபைல் உற்பத்தியில் இந்தியா 4-வது பெரிய நாடாக இருக்கிறது. எனவே, இந்தியாவில் ஆட்டோமொபைல் தொழிலுக்குத் தேவையான கட்டமைப்பு இருப்பதால், இந்தத் தொழிலை வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு வந்து தொடங்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார். மேலும், 2020-ல் வருடத்துக்கு 60 லட்சம் வாகனங் களை விற்பனை செய்யும் அளவுக்கு இந்தியா வளரும்; அடுத்த 20 வருடத்தில் உலகின் மிகப்  பெரிய ஆட்டோமொபைல் ஹப்பாக இந்தியா இருக்கும். 

2 ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்புத் துறை 2012-13-ல் மட்டும் 39.7 பில்லியன் டாலர் வருவாயைப் (சுமார் 2.42 லட்சம் கோடி ரூபாய்) பெருக்கியுள்ளது. தற்போது உலகின் நான்காவது பெரிய ஸ்டீல் உற்பத்தியாளராக உள்ள இந்தியா இன்னமும் இரண்டு ஆண்டுகளில் உலகின் இரண்டாவது பெரிய ஸ்டீல் உற்பத்தியாளராக உருவாகும்.

மோடியின் மேக் இன் இந்தியா சாத்தியம் ஆகுமா?

3உள் கட்டமைப்புத் துறையில் 2017-ம் ஆண்டு வரை 1,000 பில்லியன் டாலர் அளவிலான திட்டங்களுக்குத் தேவை இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி, இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் 650 பில்லியன் டாலர் (சுமார் 39.65 லட்சம் கோடி ரூபாய்) அளவுக்கு முதலீடு தேவைப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கட்டுமானப் பணிகள் இந்திய ஜிடிபியில் 10 சதவிகிதப் பங்களிப்பை அளிப்பதால், இந்தத் துறையில் முதலீடு வரவேற்கப்படுகிறது.

மோடியின் மேக் இன் இந்தியா சாத்தியம் ஆகுமா?

4  கனிமவளத் துறையில் இந்தியா உலக அளவில் ஆறாவது இடத்திலும், இரும்பு உலோக இருப்பில் ஐந்தாவது மிகப் பெரிய நாடாகவும் இருக்கிறது.

இந்தியாவில் இன்னமும் 302 பில்லியன் டன் நிலக்கரி இருப்பு உள்ளதால், அடுத்த 20-30 வருடங்களுக்குக் குத்தகைக்கு விடும் அளவுக்கு சக்தி உள்ளது. இந்தியப் பொருளாதார வளர்ச்சியானது மின்சாரம் மற்றும் சிமென்ட் துறையை அதிகம் சார்ந்துள்ளதால், இந்தத் துறைகளில் அதிக முதலீடுகள் வரவேற்கப்படுகின்றன.

5 துறைமுகங் களைப் பொறுத்த மட்டில், 2009-ம் ஆண்டு 575 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருந்த சரக்கு பயன்பாட்டு வசதி தற்போது 800 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 43,000 கோடி ரூபாய்  அளவிலான முதலீடு கள் 2014-ம் ஆண்டில் ஏற்பட்டுள்ளதும் இந்தத் துறையில் முதலீடு செய்யக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், புதிதாக 87 துறைமுகங்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேபோன்று பாதுகாப்புத் துறை, தகவல் தொழில்நுட்பம், பார்மா, மாற்று எரிசக்தி, போக்குவரத்து, விண்வெளி, சுற்றுலா போன்ற துறைகளில் உள்ள சிறப்பம்சங்களையும் மோடி அரசு முன்வைத்து இந்தத் திட்டங்களை உருவாக்கியுள்ளது.
 

மோடியின் மேக் இன் இந்தியா சாத்தியம் ஆகுமா?

இந்த அறிவிப்புகளை எல்லாம் பார்க்கும்போது, ஆஹா, அற்புதம் என்றுதான் சொல்லத் தோன்றும். ஆனால், இவையெல்லாம் நிறைவேறும் சாத்தியம் கொண்ட திட்டங்கள்தானா, சர்வதேச அளவில் உற்பத்தித் துறையில் இன்றைக்கும் நம் நாடு எங்கே இருக்கிறது என்கிற கேள்விகள் முக்கியமானவை.

உலகில் உற்பத்திரீதியாக முன்னிலை வகிக்கும் 189 நாடுகளில் இந்தியா 134வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் ஜிடிபியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு வெறும் 16%தான். ஆனால், சீனாவின் உற்பத்தி அதன் ஜிடிபியில் 36%, தென்கொரியா 34% பங்களிப்பை கொண்டுள்ளன. நம் அண்டை நாடு களான பாகிஸ்தானும், பங்களாதேஷும் நம்மைவிட அதிக பங்களிப்பைதான் ஜிடிபிக்கு வழங்குகின்றன.
 

மோடியின் மேக் இன் இந்தியா சாத்தியம் ஆகுமா?

2022-ல் நமது மொத்த ஜிடிபியில் 25 சதவிகித பங்களிப்பை உற்பத்தித் துறை செய்ய வேண்டும் என்கிற இலக்கு தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை நம்மால் அடைய முடியுமா என்றால், கடினம்தான்.

 இந்தியாவில் தொழில் துவங்க 12   முக்கிய அனுமதி பெற வேண்டும். இதற்கு 27 நாட்கள்  செலவாகும்.  கட்டுமான அனுமதி பெற 35 அனுமதி பெற வேண்டும். இதற்கு 168 நாட்கள் செலவாகும். ஆக மொத்தம், அனைத்து அனுமதிகளையும் பெற 1,420 நாட்கள் (அதாவது, 3 ஆண்டுகள் 89 நாட்கள்) தேவைப்படும் என ஆய்வுகள் சொல்கின்றன. இந்த நிலையில் 10 கோடி புதிய வேலைகளை எப்படி உருவாக்க முடியும்  என்கிற கேள்வி எழவே செய்கிறது.

இருப்பினும் தொலைதொடர்பு, ரயில்வே துறையின் உள்கட்டமைப்பு களில் 100 சதவிகித அந்நிய முதலீட்டை யும், பாதுகாப்புத் துறையில் 49 சதவிகித அந்நிய முதலீட்டுக்கும் அரசு அனுமதி தந்திருப்பது இந்தத் திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது. தவிர,  பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களில் நிச்சயம் எதாவது ஒரு திட்டம் அந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்படுவதால், தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சிக்கு  வழிவகுக்கும்.

மோடியின் மேக் இன் இந்தியா சாத்தியம் ஆகுமா?

மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டமானது கேட்பதற்கு உற்சாகம் தரு வதாக இருந்தாலும், இதைச் செயல்படுத்த தேவையான நிலங்கள், மின்சாரம் போன்றவை பெரும் தட்டுப்பாடாகவே  உள்ளன. இந்தத் தடைகளை தகர்க்க மத்திய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்துதான் இந்தத் திட்டத்தின் வெற்றி அமையும்.

இந்திய நிறுவனங்கள் சர்வதேச அளவில் உயரும்

‘‘நமது பொருளாதாரத்தில் உற்பத்தித் துறையின் பங்களிப்பை அதிகரிப்பதற்காகத் தொடங்கப்பட்ட திட்டங்களில் ‘மேக் இன் இந்தியா’ முக்கியமானதாகும். இந்திய நிறுவனங்களாக இருந்தாலும் சரி, வெளிநாட்டு நிறுவனங்களாக இருந்தாலும் சரி, இந்தியாவில் உற்பத்தியைப் பெருக்க அரசாங்கமானது அனைத்து வகையிலும் உதவி செய்யத் தயாராக இருக்கிறது என்கிற செய்தி இந்தத் திட்டத்தின் மூலம் தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டு இருக்கிறது.

மோடியின் மேக் இன் இந்தியா சாத்தியம் ஆகுமா?

நம் இந்திய நாடானது உற்பத்தித் துறையில் போட்டியை சமாளிக்கக்கூடியதாகவும், குறைந்த விலையில் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் ஹப்பாகவும் பார்க்கப்பட வேண்டும். இதற்கு தடையாக இருக்கும் முட்டுக்கட்டைகளை களைந்தெறிய வேண்டும். தொழில்களைத் தொடங்கும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகளை செயல்படுத்துவது மிக முக்கியம். இதன் மூலம் உற்பத்தித் துறையில் முதலீடு பெருகும். பொருளாதார இறக்கமும் முடிவுக்கு வரும்.

இந்தியாவில் எளிதாக தொழில் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் இந்தியா வளர்ச்சி காணும். இந்திய நிறுவனங்கள் சர்வதேச அளவில் உயர்ந்து, வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டி போடக்கூடிய சூழல் உருவாகும்.’’ 

இன்னும் இரு ஆண்டுகளில் சாத்தியம்தான்!

‘‘மேக் இன் இந்தியா’ என்ற திட்டத்தை மோடி அறிவித்திருப்பதன் நோக்கமே நமது ஜிடிபியில் உற்பத்தி துறையின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்பதுதான். காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் உற்பத்தியை அதிகரிக்கத் திறன் மேம்பாட்டு ஆணையம் அமைத்தார்கள். அதன் செயல்பாடு சரிவர அமையாததால், தற்போது அது ‘மேக் இன் இந்தியா’வாக வேறு பெயரில் துவங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் நாம் சீனா அளவுக்கு உற்பத்தியைப் பெருக்க முக்கியமாக நான்கு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

மோடியின் மேக் இன் இந்தியா சாத்தியம் ஆகுமா?

1. உற்பத்தியைப் பெருக்குவதற்குத் தேவையான மின்சாரம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். தற்போது நாட்டில் பெரிய பிரச்னையாக இருப்பதே மின்சாரம்தான். அதனைச் சீரமைக்க நடவடிக்கை களை ஏற்படுத்த வேண்டும்.

2. உள்கட்டமைப்பு வசதிகள் வளர திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, துறைமுகங்கள் மேம்படுத்தப்பட வேண்டும். ஒரு நாட்டின் உற்பத்தியை அதிகரிக்கும் வேளையில், அதனை எதிர்கொள்ள சரியான துறைமுகங்கள் ஏற்றுமதிக்குப் பயன்படும் வகையில் தரம் உயர்த்தப்பட வேண்டும்.
3. தேவையான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கும் அளவுக்குத் திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இன்றைய சூழலில் இந்தியாவில் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு ஆட்கள் கிடைத்தாலும், அவர்களுக்குத் திறன் சார்ந்த பயிற்சிகளையும் அளிக்க வேண்டும்.

4. முக்கியமாக மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்பு அதிகமாக இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் அரசு சரியாகச் செயல்படுத்தினால், மேக் இன் இந்தியா இன்னும் இரண்டு வருடங்களில் சாத்தியம்தான்.’’

உள்கட்டமைப்பு வசதியைப் பெருக்க வேண்டும்!

‘‘மேக் இன் இந்தியா திட்டம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் தொழில் துவங்க நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்துவதுடன் நம் நாட்டின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் அந்நிய முதலீடுகளை வரவேற்றுள்ளது.

உற்பத்தித் துறையின் பங்களிப்பு மிகக் குறைவாக இருப்பதுதான் பொருளாதாரம் நலிவடைய முக்கிய காரணமாக உள்ளது. அதனைச் சரிசெய்யும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் உற்பத்தியை அதிகரித்தால், நாமும் சீனா போன்ற உற்பத்தியை இங்குள்ள வசதிகளைக் கொண்டு தரமுடியும்.

மோடியின் மேக் இன் இந்தியா சாத்தியம் ஆகுமா?

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், பல லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகும். தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சி நாட்டில் உருவாகும். அந்நிய நிறுவனங்கள் பயன்படுத்தும் அதிநவீன தொழில்நுட்பம் நம் நாட்டிலும் உருவாக வழிபிறக்கும்.

இதற்கு சில விஷயங்களை நாம் செய்தே ஆகவேண்டும். நமது உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க வேண்டும். ஆராய்ச்சித் துறையில் புதிய திட்டங்களுக்கான புதுமைகளை உருவாக்குவது அவசியம். எந்த விதத்திலும் தரத்தை குறைக்கக் கூடாது. இதை எல்லாம் செய்தால் அடுத்த 4 - 5 வருடங்களில்  ‘மேக் இன் இந்தியா’ நமக்கு சாத்தியம்தான்!’’
 

சிறப்புக் கட்டுரை