Published:Updated:

வங்கியை விட அதிக லாபம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்; இதில் உங்களுக்கேற்ற திட்டம் எது? - 34

வங்கிகள் 5 - 6 சதவிகிதம் வட்டி தரும்போது மியூச்சுவல் ஃபண்டுகள் 10 – 12 சதவிகித வருமானம் தருவதால் மக்களின் பார்வை இதன் பக்கம் திரும்பியுள்ளது.

பங்குச் சந்தை முதலீடு பற்றிப் பார்த்தோம். பங்குச் சந்தையின் கூடவே ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தை போல் வருவது மியூச்சுவல் ஃபண்ட்தானே? பங்குச் சந்தையில் நாம், நமக்குத் தெரிந்த அளவு ஆராய்ச்சி செய்து (அல்லது செய்யாமல்) பங்குகள் வாங்குகிறோம்; விற்கிறோம்; லாபம் / நஷ்டம் அடைகிறோம். மியூச்சுவல் ஃபண்டில் திறன் வாய்ந்த ஃபண்ட் மேனேஜர் விரிவான ஆராய்ச்சி செய்து நமக்காக இந்தக் காரியங்களைச் செய்கிறார்.

மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்கள் உருவாவது எப்படி?

ஒரு ஸ்கீமை ஆரம்பிப்பதாக முடிவு செய்யும் ஃபண்ட் ஹவுஸ், அது பற்றி விளம்பரங்கள் செய்ய, நாம் அதற்கு விண்ணப்பிக்கிறோம். இப்படி பலரிடமும் சேகரித்த பணத்தைக் கொண்டு பங்குகளை வாங்கி, நம் முதலீட்டுக்குத் தக்கவாறு நமக்கு யூனிட்டுகளாக தருகிறார்கள்.

Investment (Representational Image)
Investment (Representational Image)
ஒரு கம்பெனியின் பேலன்ஸ் ஷீட்டை புரிந்துகொள்வது எப்படி? ஓர் எளிய விளக்கம்! - பணம் பண்ணலாம் வாங்க 31

பொதுவாக ஒரு யூனிட் விலை பத்து ரூபாய். அந்த யூனிட்டுகளை வைத்துக் கொள்ள அந்த ஃபண்ட் ஹவுஸ் நமக்கு ஒரு அக்கவுன்டும் தருகிறது. வங்கி அக்கவுன்ட் போலவே இதிலும் கே.ஒய்.சி (KYC) ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய குறைந்த பட்சத் தொகை ரூ.500 மட்டுமே.

ஸ்கீமிற்கென்று நியமிக்கப்படும் ஃபண்ட் மேனேஜர்கள் முழு நேரமும் ரிசர்ச்சில் செலவிடுபவர்கள். அவர்களுக்கு உதவ, மிகுந்த திறன் வாய்ந்த அனலிஸ்ட்டுகளும் உண்டு. ஃபண்ட் மேனேஜர் பங்குகளை வாங்கி விற்று நமக்காக லாபம் சம்பாதிக்கிறார். அதனால் நாம் முதலீடு செய்த பத்து ரூபாய் முகமதிப்பு மெல்ல வளர்ந்து வரும். இதை நெட் அசெட் வேல்யூ (Net Asset Value) என்று அழைக்கிறார்கள். பிற்காலத்தில் முதலீடு செய்பவர்கள் இந்த என்.ஏ.வி. மதிப்பில்தான் முதலீடு செய்யமுடியும்.

கம்பெனி நடத்தும் செலவுகள், ஃபண்ட் மேனேஜர் சம்பளம், போனஸ், ஏஜன்டுகள் கமிஷன், விளம்பரச் செலவுகள் போன்றவற்றிற்காக ஒரு குறிப்பிட்ட தொகை (0.50% - 3%) வருடாவருடம் நம் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும். இதை எக்ஸ்பென்ஸ் ரேஷியோ என்பார்கள்.

வகைகள் இரண்டு

டிவிடெண்டின் அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் இரு வகை உண்டு – க்ரோத் மற்றும் டிவிடெண்ட். க்ரோத் ஸ்கீமைத் தேர்ந்தெடுத்தால் டிவிடெண்ட் வராது; ஆனால் என்.ஏ.வி. அதிகமாகும். டிவிடெண்ட் தரும் ஸ்கீம்களில் வருடாவருடம் ஒரு குறிப்பிட்ட தொகை நமக்கு டிவிடெண்டாகத் தரப்படும். இதனால் டிவிடெண்ட் தந்தவுடன் என்.ஏ.வி. குறையும். நமக்குத் தேவைப்படும்போது, நம் யூனிட்டுகளை சரண்டர் செய்து அன்றைய என்.ஏ.வி.யில் பணத்தைத் திருப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.

Investment
Investment
Image by Tumisu from Pixabay
கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு; சரியான நேரமா இது? - பணம் பண்ணலாம் வாங்க - 33

முதலீட்டின் அடிப்படையிலும் இரு வகை உண்டு. ஓப்பன் டைப் மியூச்சுவல் ஃபண்டுகளில் எப்போது வேண்டுமானாலும் யூனிட்டுகளை வாங்கலாம்; விற்கலாம். க்ளோஸ்ட் டைப் ஃபண்டுகளில் அந்த ஃபண்ட் ஹவுஸ் அனுமதிக்கும்போது மட்டுமே வாங்கவோ, விற்கவோ முடியும்.

ஸ்கீம்கள் நான்கு

மியூச்சுவல் ஃபண்டில் பல ஸ்கீம்கள் உள்ளன. இவற்றை ஈக்விட்டி, கடன், ஹைப்ரிட், மற்றவை என்று நான்கு விதமாகப் பிரிக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்வது பங்குச் சந்தை போன்றே ரிஸ்க் நிறைந்தது. ஆனால் அதிக லாபம் தரக்கூடியது.

கடன் ஃபண்டுகள், அரசு, வங்கிகள், பெரிய கார்பொரேட் கம்பெனிகள் தரும் பாண்டுகளில் முதலீடு செய்யும். பாதுகாப்பு அதிகம்; லாபம் குறைவு.

ஹைப்ரிட் ஸ்கீம்கள் ஈக்விட்டி, கடன் என்ற இரண்டிலும் முதலீடு செய்வதால், பாதுகாப்பு, லாபம் இரண்டுமே ஓரளவு கிடைக்கும்.

Investment
Investment
Image by Nattanan Kanchanaprat from Pixabay
எஃப் அண்ட் ஓ; இளம் முதலீட்டாளர்களின் டார்லிங்காக மாறக் காரணம் என்ன? பணம் பண்ணலாம் வாங்க - 32

மற்ற ஸ்கீம்கள், தங்கம், ரியல் எஸ்டேட், கமாடிடீஸ் போன்றவற்றில் முதலீடு செய்கின்றன. இவற்றிலும் பாதுகாப்பும், லாபமும் ஓரளவு கிடைக்கும்.

செபி (Securities and Exchange Board of India) என்கிற அமைப்பு, ஃபண்ட் மேனேஜர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகளை வகுத்து, கண்காணிக்கிறது. ஆகையால் ரிஸ்க்கின் அளவு குறைகிறது. வங்கிகள் 5 - 6 சதவிகிதம் வட்டி தரும்போது மியூச்சுவல் ஃபண்டுகள் 10 – 12 சதவிகித வருமானம் தருவதால் மக்களின் பார்வை இதன் பக்கம் திரும்பியுள்ளது. ஆகவே இனி வரும் கட்டுரைகளில் மியூச்சுவல் ஃபண்ட் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

- அடுத்து வெள்ளி காலை 9 மணிக்கு சந்திப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு