``நேரடியாகப் பங்குச் சந்தையில் ஈடுபட நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. எனக்கு அதற்கு நேரம் இல்லை. ஆனால், பங்குச் சந்தை தரும் வருமானம் என்னைக் கவர்ந்திழுக்கிறது. என்ன செய்யலாம்?” என்று கேட்பவர்களுக்காகவே இருப்பதுதான் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட். வங்கிகள், கடன் ஃபண்ட்கள் தரும் வருமானத்தைவிட இவை தரும் வருமானம் அதிகம். ஆனால், சந்தை சார்ந்த முதலீடு என்பதால் ரிஸ்க்கும் அதிகம்.

பல விதமான ஈக்விட்டி ஃபண்டுகள்
லார்ஜ் கேப் ஃபண்டுகள் பெரிய கம்பெனிகளில் மட்டுமே முதலீடு செய்யும். ரிஸ்க் குறைவு.
ஸ்மால் மற்றும் மிட்கேப் ஃபண்டுகள் பெயருக்குத் தகுந்தாற்போல் சிறிய மற்றும் நடுத்தரக் கம்பெனிகளில் முதலீடு செய்கின்றன. இதில் லார்ஜ் கேப் ஃபண்டைவிட ரிஸ்க் அதிகம்.
ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டுகள் எல்லாவிதக் கம்பெனிகளிலும் முதலீடு செய்கின்றன.
செக்டார் ஃபண்டுகள் ஃபார்மா, பேங்கிங், ஐ.டி போன்ற செக்டாரைச் சேர்ந்த கம்பெனிகளில் முதலீடு செய்கின்றன. இவற்றில் ரிஸ்க் அதிகம். ஏனெனில், அந்த செக்டார் வீழ்ச்சி அடைந்தால் அந்த ஃபண்டும் வீழ்ச்சி அடையும்.
தீமாடிக் ஃபண்டுகள் கிராமப்புறம் (Rural), மல்டிநேஷனல் கம்பெனிகள் போன்ற தீம்களைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யும். இவற்றிலும் ரிஸ்க் அதிகம்.
இ.எல்.எஸ்.எஸ். (Equity Linked Savings Scheme) எனப்படும் ஃபண்டுகள் வரி சேமிப்புக்கு உதவுகின்றன. 80சியின் கீழ் ரூ.1.50 லட்சம் வரை இவற்றுக்கு வரிச் சலுகை உண்டு.
இவை தவிர, முப்பதே முப்பது கம்பெனிகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யும் ஃபோகஸ்ட் ஃபண்டுகள், வேல்யூ இன்வெஸ்டிங் முறையைப் பின்பற்றும் கான்ட்ரா ஃபண்டுகள், இண்டெக்ஸைப் பின்பற்றி முதலீடு செய்யும் பேஸிவ் ஃபண்டுகள் ஆகியவையும் உண்டு.

இந்த ஃபண்டுகளின் மற்ற அம்சங்கள்:
ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம் 60 சதவிகிதத்துக்கு மேல் கம்பெனிகளின் பங்குகளில் முதலீடு செய்யும். மீதி இருக்கும் நாற்பது சதவிகிதத்தை கடன் பத்திரங்களில் அல்லது மணி மார்க்கெட் திட்டங்களில் முதலீடு செய்வது ஃபண்ட் மேனேஜரின் விருப்பம்.
பொதுவாக பங்குச் சந்தையில் பல வருடங்களாக முங்கி, முழுகி அனுபவம் வாய்ந்தவர்கள் அதிகம் லாபம் சம்பாதிக்க முடிவதைப் பார்க்கிறோம். அத்தகையவர்கள் ஃபண்ட் மேனேஜர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவதால் நமக்கும் அந்த லாபம் கிட்டுகிறது.
அடிக்கடி பங்குகளை வாங்கி விற்பது கமிஷனை அதிகப்படுத்தி, முதலீட்டாளரின் லாபத்தைக் குறைக்கும் என்பதால் செபி (Securities and Exchange Board of India) 2.5 சதவிகிதத்துக்கு அதிகமாக எக்ஸ்பென்ஸ் ரேஷியோ இருக்கக் கூடாது என்று வரையறுத்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பயன்பெறுகிறார்கள்.
நாம் நேரடியாகப் பங்குகளில் முதலீடு செய்வதைவிட ஈக்விட்டி ஃபண்டின் மூலம் முதலீடு செய்யும்போது குறைந்த அளவு பணத்திலேயே அதிக கம்பெனிகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு கிட்டுகிறது. இப்படி முதலீடு பரவலாவதால் ரிஸ்க் குறைந்து, லாபம் அதிகரிக்கிறது.
வரி விதிப்பிலும் ஈக்விட்டி ஃபண்டுகள் சிறப்பிடம் பெறுகின்றன. இதில் ஒரு வருடத்துக்கு அதிகமாக முதலீடு செய்தால் நீண்ட கால முதலீட்டு லாப வரி 10 சதவிகிதம் மட்டுமே. அதிலும் ரூ.1 லட்சம் வரை வரி இல்லை. ஒரு வருட காலத்துக்குக் குறைவாக முதலீடு செய்தால் வரி, லாபத்தில் 15 சதவிகிதம்.
ஈக்விட்டி ஃபண்டுகள் டிவிடெண்ட் தரும்போது பத்து சதவிகிதம் வரிப்பிடித்தம் செய்கின்றன.
ஈக்விட்டி லிங்க்ட் சேவிங் ஸ்கீம் (E.L.S.S.) செக்.80 சியின் கீழ் ரூ.1.50 லட்சம் வரை வரி விலக்கு கிடைக்க உதவுகிறது. மற்ற வரி சேமிப்பு திட்டங்களைவிட இதன் லாக்-இன் பீரியட் குறைவு. (மூன்று வருடங்கள்).

லாபத்தை அதிகரிப்பது எப்படி?
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது நம் அனைவர் மனதிலும் பிறக்கும் கேள்வி ஒன்று உண்டு. கையிருப்பை மொத்தமாக இறக்கலாமா அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் முதலீடு செய்யும் SIP (Systematic Investment Plan) முறையைப் பின்பற்றலாமா என்பதே அது. சந்தை மிகுந்த இறக்கத்தில் இருக்கும்போது மொத்தமாக முதலீடு செய்வது அபரிமிதமான லாபத்தைத் தரும்.
ஆனால், இதற்கு டைமிங் ரொம்ப முக்கியம். இதைக் கணிப்பது அவ்வளவு சுலபம் அல்ல; சந்தை இறக்கத்துக்காக கடந்த மூன்று வருடங்களாகக் காத்திருப்போர் உள்ளனர். ஆகவே, சாதாரண நாள்களில் SIP முறையைப் பின்பற்றி, மிகுந்த இறக்கம் வரும்போது சிப் தொகையை அதிகரிப்பதே ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்ய சரியான முறையாகும்.
முதலீட்டை ஐந்து முதல் ஏழு வருடங்கள் வரை வெளியே எடுக்காமல் இருந்தால் மிகச் சிறந்த லாபம் (வருடாந்தர ஆவரேஜ் வளர்ச்சி 10% - 12%) கிடைக்கும். பிஜிஐஎம் இந்தியா ஃப்ளெக்ஸி கேப் (ஒரு வருட வளர்ச்சி 66.70%), ஆக்ஸிஸ் மிட்கேப் (ஒரு வருட வளர்ச்சி 55.80%) போன்ற அதீத வளர்ச்சியையும் பார்க்கிறோம். புதிதாக சந்தைக்கு வருபவர்கள் லார்ஜ் கேப் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்புடன் கூடிய வளர்ச்சி பெறலாம். சந்தை பற்றி முன்பே அறிந்தவர்கள், ஏற்ற இறக்கம் நிறைந்த மல்டி கேப், ஃப்ளெக்ஸி கேப் ஈக்விட்டி ஃபண்டுகளைத் தேர்வு செய்யலாம்.