Published:Updated:

அஸெட் அலொகேஷன் Vs டைவர்சிஃபிகேஷன்... புரிந்துகொண்டு முதலீடு செய்தால் லாபம்..!

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

முதலீடு

அஸெட் அலொகேஷன் Vs டைவர்சிஃபிகேஷன்... புரிந்துகொண்டு முதலீடு செய்தால் லாபம்..!

முதலீடு

Published:Updated:
முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

முதலீட்டில் அஸெட் அலொகேஷன் (Asset Allocation), டைவர்சிஃபிகேஷன் (Diversification) இடையேயான வித்தியாசம் பல முதலீட்டாளர்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. இந்த இரண்டும் ஒன்றுதான் எனப் பலரும் நினைத்துக்கொண்டிருக் கிறார்கள். ஆனால், இரண்டும் வேறுவேறு என்பது சிலருக்கு மட்டுமே தெரியும். இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னென்ன?

சிவகாசி மணிகண்டன்  
நிதி ஆலோசகர், 
Aismoney.com
சிவகாசி மணிகண்டன் நிதி ஆலோசகர், Aismoney.com

அஸெட் அலொகேஷன்...

பொதுவாக, சொத்துப் பிரிவுகள் (Asset Classes) என்று எடுத்துக்கொண்டால், கடன் சந்தை சார்ந்தது, பங்குச் சந்தை சார்ந்தது, தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் என நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

ஒருவர் அவரின் ரிஸ்க் எடுக்கும் திறன், வயது, முதலீட்டுக் காலம், நிதி இலக்கு ஆகிய வற்றின் அடிப்படையில் மேற்கண்ட நான்கு சொத்துப் பிரிவுகளில் முதலீட்டுத் தொகையைப் பிரித்து முதலீடு செய்வதுதான் ‘அஸெட் அலொகேஷன்’ என்பதாகும். இதைத் தமிழில் முதலீட்டைப் பிரித்து மேற்கொள்ளுதல் என்று சொல்லலாம்.

இதை ஓர் எளிய உதாரணம் மூலம் பார்ப்போம். 30 வயதாகும் ஒருவர், இன்னும் 15 வருடம் கழித்து தன் மகனின் உயர்கல்விக்கு முதலீடு செய்ய வேண்டும் என வைத்துக்கொள்வோம். இவர் எவ்வளவு தொகையை பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு ஓர் எளிய ஃபார்முலா உள்ளது. அதாவது, 100 என்கிற எண்ணிலிருந்து அவரின் வயதைக் கழித்து வரும் எண்ணை சதவிகிதமாக பாவித்து அந்த அளவு தொகையை பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து வரலாம். இங்கே வயது 30 என்கிற போது (100 - 30 = 70) 70% தொகையை பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்துவரலாம்.

அவர் பிள்ளையின் உயர்கல்விக்கு மாதம் ரூ.10,000 முதலீடு செய்கிறார் என வைத்துக்கொள்வோம். இதில் 7,000 ரூபாயைப் பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம். இங்கே பங்கு சார்ந்த திட்டங்கள் எனில், நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களாகும்.

இதைப் நிறுவனப் பங்குகளில் மட்டும் அல்லது ஃபண்டுகளில் மட்டும் அல்லது இரண்டிலும் கலந்துகூட முதலீடு செய்யலாம். அது முதலீட்டாளரின் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களைப் புரிந்து வைத்திருப்பதில் இருக்கிறது.

அஸெட் அலொகேஷன் Vs டைவர்சிஃபிகேஷன்... புரிந்துகொண்டு முதலீடு செய்தால் லாபம்..!

மீதமுள்ள 30% தொகையைக் கடன் சந்தை ஃபண்டுகளில் தலா 10% கடன் சந்தை சார்ந்த திட்டங்கள், தங்கம், ரியல் எஸ்டேட் திட்டங்களில் முதலீடு செய்து வரலாம். தங்கத்தின் தேவை அதிகமாக இருக்கும்பட்சத்தில், அதற்கான முதலீட்டுத் தொகையை 15%, 20 சதவிகிதமாக அதிகரித்துக்கொள்ளலாம். இந்த சதவிகிதங்கள் சுமார் 5% முன்பின் இருக்கலாம்; அதில் எந்தத் தவறும் இல்லை.

இங்கே கடன் சந்தை சார்ந்த திட்டங்கள் என்பது ஃபிக்ஸட் டெபாசிட், கடன் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைக் குறிக்கும். தங்கம் என்கிற போது நகை, நாணயத்துக்கு பதில் டிஜிட்டல் கோல்டில் (கோல்டு இ.டி.எஃப், கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட், கோல்டு பாண்ட்) முதலீடு செய்யலாம். ரியல் எஸ்டேட் என்கிறபோது ரெய்ட் (REIT) என்கிற ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்டில் முதலீடு செய்யலாம்.

அஸெட் அலொகேஷன் Vs டைவர்சிஃபிகேஷன்... புரிந்துகொண்டு முதலீடு செய்தால் லாபம்..!

டைவர்சிஃபிகேஷன்..!

இதுவரைக்கும் முதலீட்டுத் தொகையை எப்படிப் பல்வேறு சொத்துப் பிரிவுகளில் பிரித்து முதலீடு செய்வது என்று பார்த் தோம். சரி, இனி டைவர்சிஃபி கேஷன் என்றால் என்ன, அஸெட் அலொகேஷனில் இருந்து டைவர்சிஃபிகேஷன் எப்படி வேறுபட்டது என்று பார்ப்போம். அதாவது, ஒரு குறிப்பிட்ட சொத்துப் பிரிவில் செய்யப்படும் தொகையை பல்வேறு திட்டங்களில் பரவலாக்குவதாகும்.

இதையும் ஓர் எளிய உதாரணம் மூலம் பார்ப்போம். உதாரணமாக, பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் நிறுவனப் பங்குகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளை எடுத்துக் கொள்வோம்.

நிறுவனப் பங்கு என்கிற போது மொத்தத் தொகையை யும் ஒரே பங்கில் போடாமல் பல்வேறு துறை நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்வது டைவர்சிஃபிகேஷன் ஆகும்.

தகவல் தொழில்நுட்பம் (டி.சி.எஸ், இன்ஃபோசிஸ்), வாகனம் (டி.வி.எஸ் மோட் டார்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப்.), வங்கி (எஸ்.பி.ஐ, ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க்), எஃப்.எம்.சி.ஜி (ஹெச்.யூ.எல், ஐ.டி.சி), ரியல் எஸ்டேட் (டி.எல்.எஃப், ஓபராய் ரியால்டி) எனப் பல்வேறு துறை நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்வதை டைவர் சிஃபிகேஷன் எனக் குறிப்பிடு கிறோம்.

பங்குகளில் லார்ஜ்கேப், மிட் கேப், ஸ்மால் கேப் பங்குகள் என பணத்தைப் பிரித்துப் போடுவதும் டைவர்சிஃபிகேஷன்தான்.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் என்கிறபோது லார்ஜ்கேப் ஃபண்ட், மல்ட்டிகேப் ஃபண்ட், ஃபிளெக்ஸிகேப் ஃபண்ட், லார்ஜ் & மிட்கேப் ஃபண்ட், மிட்கேப் ஃபண்ட், ஸ்மால்கேப் ஃபண்டுகளில் பணத்தைப் பரவலாகப் பிரித்து போடுவதை டைவர்சிஃபிகேஷன் எனலாம்.

அஸெட் அலொகேஷன் என்பதை சொத்து களில் முதலீட்டைப் பிரித்துப்போடுதல் எனவும் டைவர்சிஃபிகேஷனை சொத்து பிரிவுக்குள் முதலீட்டைப் பரவலாக்குதல் எனவும் குறிப்பிடலாம்.

இப்படி முதலீட்டைப் பல்வேறு சொத்துப் பிரிவுகளில் பிரித்து செய்தல் மற்றும் பரவலாக்கம் செய்வதன் மூலம் முதலீட்டுக் கலவையின் (போர்ட்ஃபோலியோ) ரிஸ்க்கை வெகுவாகக் குறைக்க முடியும். காரணம், எப்போதும் அனைத்து முதலீட்டுப் பிரிவுகளும் லாபத்துடன் செயல்படாது. உதாரணமாக, பொருளாதார வளர்ச்சி நன்றாக இருந்து பங்குச் சந்தை ஏற்றத்தில் இருக்கும் காலத்தில் தங்கத்தின் விலை பெரிதாக ஏற்றம் காணாது. இதற்கு மாறாக, பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருந்து பங்குச் சந்தை வீழ்ச்சியில் இருந்தால், தங்கத்தின் விலை ஏற்றத்தில் இருக்கும். அண்மையில் கோவிட் பாதிப்பு மற்றும் ரஷ்யா – உக்ரைன் போரின்போது பங்குச் சந்தைகள் வீழ்ச்சி அடைந்ததையும் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டதையும் நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்.

இந்த நிலையில், ஒருவரின் நீண்ட கால முதலீட்டுக் கலவையில் ஈக்விட்டி, டெஃப்ட், கோல்டு, ரியல் எஸ்டேட் முதலீடுகள் கலந்திருக் கும்பட்சத்தில் அது 10 - 12% நல்ல வருமானமும் கொடுத்திருக்கும்.

மேலும், ஒரு குறிப்பிட்ட நிறுவனப் பங்கில் மொத்தமாக முதலீடு செய்யும் ரிஸ்கை டைவர் சிஃபிகேஷன் செய்கிறது. இது ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கும் பொருந்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே, ஒருவரின் முதலீட்டுக் கலவை எப்போதும் அஸெட் அலொகேஷன்படியும் டைவர்சிஃபிகேஷன்படியும் இருப்பது மிக அவசியமாகும். உங்கள் முதலீடும் அப்படி இருக்கிறதா என்பதை ஒருமுறை நீங்கள் பரிசோதித்துக்கொள்வது நல்லதுதானே!