Published:Updated:

கரடி Vs காளை... சரியும் சந்தையிலும் சக்சஸ் ஃபண்டுகள்!

கரடி Vs  காளை
பிரீமியம் ஸ்டோரி
கரடி Vs காளை

கவர் ஸ்டோரி

கரடி Vs காளை... சரியும் சந்தையிலும் சக்சஸ் ஃபண்டுகள்!

கவர் ஸ்டோரி

Published:Updated:
கரடி Vs  காளை
பிரீமியம் ஸ்டோரி
கரடி Vs காளை

இந்தியப் பங்குச் சந்தை 2022-ல் இவ்வளவு மோசமாக இருக்குமென்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கொரோனா நெருக்கடிக் காலத்திலேயே நல்ல வளர்ச்சியைக் கண்ட நம் பங்குச் சந்தை, 2022 ஆரம்பித்ததில் இருந்தே சரிவின் பாதையில்தான் இருந்து வருகிறது.

ஜனவரி 2022-ல் 61000 என்ற நிலையிலிருந்த சென்செக்ஸ், தற்போது 52500 என்ற நிலையில் வர்த்தகமாகிறது. அதாவது, ஏறக்குறைய 8,500 புள்ளிகள் அல்லது 15% அளவுக்கு சந்தை சரிவைச் சந்தித்திருக்கிறது.

கரடி Vs  காளை... சரியும்  சந்தையிலும் சக்சஸ்  ஃபண்டுகள்!

இதற்குக் காரணம், கடந்த ஆறு மாதங்களில் பங்குச் சந்தைக்குச் சாதகமான நிகழ்வுகளைவிட எதிர்மறையான நிகழ்வுகள் அதிகம் நடந்தது தான். அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் (8.1%) உயர்ந்து உள்ளது. இதனால் அமெரிக்க ஃபெட் அமைப்பு அங்கு வட்டி விகிதத்தை உயர்த்தும் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், உலகப் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பும் தொடர்ந்து ஏமாற்றத்தை அளிப்பதாக இருக்கிறது. வேலைவாய்ப்பு உருவாக்கம் பெரிய அளவில் இல்லை.

இதற்கிடையில், ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரம் சர்வதேச விநியோகச் சந்தையிலும் உலகப் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதுபோன்ற காரணங்களால் பங்குச் சந்தை தொடர்ந்து கரடியின் ஆதிக்கத்திலேயே இருந்துவருகிறது. இந்தச் சூழலில் முதலீட்டாளர் கள் தங்களுடைய முதலீடுகளை எப்படித் திட்டமிடலாம், என்னென்ன ஃபண்டுகள் சரியும் சந்தையிலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி நல்ல லாபத்தைத் தருகின்றன என்பதை மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தலைவர் சொக்கலிங்கம் பழனியப்பனிடம் கேட்டோம். அவர் விளக்கமான பதிலைத் தந்ததுடன், புதிய முதலீட்டுக்கு கவனிக்க வேண்டிய சில ஃபண்டுகளையும் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

சொக்கலிங்கம் பழனியப்பன்
சொக்கலிங்கம் பழனியப்பன்

சந்தை சரிவுக்கான காரணங்கள்...

“சந்தை சரிவில் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதில் எதிர்பாராமல் நடந்த ஒன்று, ரஷ்யா-உக்ரைன் போர். இன்னமும் முடிவுக்கு வராத இந்த விவகாரத்தால் சர்வதேச பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. கச்சா எண்ணெய் உள்ளிட்ட கமாடிட்டிகளின் விநியோகத்தில் பாதிப்பு உண்டானது.

இன்னொரு முக்கியமான காரணம், பணவீக்கம். இது எதிர்பார்த்த ஒன்றுதான். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய சூழலுக்கு மத்திய வங்கிகள் ஆளாகின்றன. கச்சா எண்ணெய் உள்ளிட்ட கமாடிட்டிகளின் விலை உயர்வு பணவீக்க உயர்வுக்கு முக்கியமான காரணமாக அமைந்திருந்த நிலையில், இன்னொரு முக்கியமான காரணம், நாடுகள் பலவும் பல நூறு பில்லியன் டாலர்களில் அச்சிட்டு வழங்கியது. இந்த ‘ஹெலிகாப்டர்’ பணத்தால் பணவீக்கம் வரலாற்று உச்சத்துக்கு வந்து இப்போது கழுத்தை நெரிக்கிறது.

பணவீக்கத்தைக் கட்டுப் படுத்த இந்திய ரிசர்வ் வங்கி இந்த ஆண்டில் இதுவரை யிலும் 0.9% வட்டியை உயர்த் தியிருக்கிறது. தொடர்ந்து உயர்த்தப்படவும் வாய்ப் புள்ளது எனத் தெரிகிறது. இந்தியாவில் மட்டுமல்ல, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் வட்டி விகித உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் விளைவுதான், சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்து வருகின்றன.

காரணம், வட்டி விகிதம் உயர்த்தப்படும்போது நிறுவனங்களின் லாப வளர்ச்சி குறையும். அதாவது, கடன் வாங்கிய நிறுவனங் களுக்கு வட்டிச் செலவுகள் அதிகமாக இருக்கும் என்ப தால், லாபம் குறையும். கடன் வட்டி அதிகமாக இருப்பதால், நிறுவனங்கள் தொழில் விரிவாக்க நடவடிக்கை களைக் குறைத்துக்கொள்ளும். விலைவாசி ஏற்றத்தால் சந்தையில் தேவை (Demand) குறையும். இதனால் விற்பனை கணிசமாகக் குறைந்து நிறுவனங்களின் லாபத்தில் சரிவை உண்டாக்கும். இதனால் அந்த நிறுவனப் பங்குகளின் விலை குறையும். பங்கு விலை குறைந்தால் பங்குச் சந்தை குறியீடுகள் சரிவைச் சந்திக்கும். இதனால் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு களின் என்.ஏ.வி மதிப்பும் குறையும்.

கரடி Vs  காளை... சரியும்  சந்தையிலும் சக்சஸ்  ஃபண்டுகள்!

இந்த ஆண்டில் இது வரையில் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளின் மதிப்பும் கணிசமாகக் குறைந் துள்ளது. இதனால் முதலீட் டாளர்களின் முதலீடுகள் நெகட்டிவ்வாக இருக்கவே வாய்ப்புள்ளது. இதுபோன்ற நிலையற்ற தன்மையில் சந்தை இருக்கும்போது ஃபண்டு களில் முதலீடு செய்பவர்கள் எவ்வாறு தங்களுடைய முதலீடுகளைத் திட்டமிடலாம் என்பது அவசியம் ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். சந்தை இப்போது சரிவில் இருப்பதால் முதலீட்டாளர்கள் தங்களுடைய போர்ட் ஃபோலியோவை மறுஆய்வு செய்துகொள்வதற்கு சரியான தருணமாகும். ஃபண்டு களை மாற்ற விரும்புபவர்கள் இந்தச் சமயத்தில் அதைச் செய்யலாம்.

சந்தை இறக்கத்தில் இருப்பதால், பெரும்பாலான ஃபண்டுகளின் முதலீட்டு மதிப்பு குறைவாக இருக்கும். லாபம் குறைவு என்பதால், வரியும் குறைவாக இருக்கும். எனவே, இந்தச் சமயத்தில் ஏற்கெனவே உள்ள ஃபண்டுகளிலுள்ள முதலீடுகளை வெளியே எடுத்து, புதிய ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்துகொள்ளலாம். முதலீட்டில் அஸெட் அலொ கேஷன், போர்ட்ஃபோலியோ ரீபேலன்ஸிங் போன்றவற்றை இந்தச் சமயத்தில் மேற்கொள்ளலாம்.

தற்போதைய சந்தையின் சூழலில், முதலீடுகளைத் திட்டமிடுவதற்கு முன் நீங்கள் எந்த வகையான முதலீட்டாளர் என்பதில் தெளிவு தேவை. முதலீடு விஷயத்தில் பொதுவான உத்தி என்று எதுவும் இல்லை. ஒவ்வொருவரின் தேவை, ரிஸ்க் எடுக்கும் திறன், முதலீட்டு அளவு, முதலீட்டுக் காலம் அதன் அடிப்படையில்தான் முதலீட்டு உத்திகள் திட்ட மிடப்பட வேண்டும்.

அந்த வகையில், முதலீட்டாளர்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம். முழுவதுமாக கன்சர் வேட்டிவாக இருப்பவர்கள், ஓரளவு ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்கள் என்பவர்கள்தான் அந்த மூன்று வகை முதலீட்டாளர்கள் இவர் களுக்கான முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என இனி பார்ப்போம்.

கரடி Vs  காளை... சரியும்  சந்தையிலும் சக்சஸ்  ஃபண்டுகள்!

முழுவதுமாக கன்சர்வேட்டிவாக இருப்பவர்கள்...

இவர்கள் பெரும் பாலும் தங்களுடைய முதலீடுகள் வங்கி களிலேயே வைத்திருக்க நினைப்பார்கள். அல்லது பாதுகாப்பான திட்டங்களில் மட்டுமே பணத்தை முதலீடு செய்ய நினைப்பார்கள். இவர்களுக்குத் தற்போதுள்ள நல்ல செய்தி என்னவெனில், வட்டி விகித உயர்வு காரணமாக வங்கி வைப்புத் திட்டங்களுக்கு வட்டி உயர்த்தப் படும். கடந்த 3 - 4 வருடங்களாகப் பெரிதாக வட்டி உயர்த்தப்படவில்லை என்ற வருத்தத்தில் இருந்தவர்களுக்குத் தற்போது வட்டி உயர்த்தப் படுவது மகிழ்ச்சிதரக்கூடியதாக இருக்கும்.

மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக ‘AAA’ ரேட்டிங் உள்ள வங்கிசாரா நிதி நிறுவனங்கள் 7.7% வரை வட்டி தருகின்றன. ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளில் 7.35% அளவுக்கு வட்டி வழங்குகின்றன. இவை போக, ரிசர்வ் வங்கியின் அரசுக் கடன் பத்திரங்கள் 7.15% அளவுக்கு வட்டி தருவதாக உள்ளன.

இவற்றில் கவனிக்க வேண்டிய ஒரே விஷயம் என்னவெனில், இந்த வகையான முதலீடுகளின் மீது வரும் வருமானம் வரிப் பிடித்தத்துக்கு உள்ளாகும் என்பதுதான். அதிக வருமானம் இருந்தால், அதிக வரியைச் செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, 30% வரி வரம்பில் உள்ளவர்கள் அதிக வரி செலுத்த வேண்டி யிருக்கும். குறைவான வரி வரம்பில் இருப்பவர்களுக்குப் பெரிதாக வரி இருக்காது. ரிஸ்க் எடுக்கத் தயாராக இல்லாதவர்கள் வங்கி வைப்பு நிதி, கடன் பத்திரங்கள் ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்தலாம். தற்போதுள்ள சந்தைச் சூழலில் பங்குச் சந்தையிலிருந்து விலகி இருப்பது நல்லது.

கரடி Vs  காளை... சரியும்  சந்தையிலும் சக்சஸ்  ஃபண்டுகள்!

ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்கள்...

இவர்கள் வழக்கமான பாதுகாப்பான முதலீட்டுத் திட் டங்களைவிட சற்றுக் கூடுதலாக வருமானம் எதிர்பார்ப்பவர்கள். கொஞ்சமாவது ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். இது மாதிரியான சிந்தனை கொண்ட வர்கள், கணிசமான வருமானம் தரும் திட்டங்களைத் தேர்வு செய்யலாம். அந்த வகையில் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் என்ற ஹைபிரிட் ஃபண்டுகளைத் தேர்வு செய்யலாம். இந்தப் பிரிவில் நிறைய ஃபண்டுகள் உள்ளன. இவற்றில் வழக்கமாக 40 - 50% வரை ஈக்விட்டியும் 50 - 60% வரை பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படும். சந்தையின் சூழலைப் பொறுத்து இந்த விகிதங்களில் மாற்றங்கள் இருக்கும். அதிகபட்சமாக 80% வரை ஈக்விட்டி முதலீடுகளை இந்த ஃபண்டுகள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. சந்தை இறக்கத்தில் இருக்கும்போது ஈக்விட்டியில் முதலீட்டை அதிகரிக்கும். சந்தை உச்சத்தில் இருக்கும்போது முதலீட்டை 30% அளவுக்கு குறைக்கவும் செய்யும்.

ஐந்து ஆண்டுகளுக்குத் தேவைப்படாமல் உபரியாக உள்ள பணத்தை இவற்றில் முதலீடு செய்யலாம். இந்த ஃபண்டுகள் மூலம் மாதம்தோறும் பென்ஷன் வருகிற மாதிரி யான வருமானத்தைப் பெறலாம். இந்த ஃபண்டுகள் கணிசமாக பங்குச் சந்தை முதலீடு களை மேற்கொள்வதால், ஈக்விட்டி ஃபண்டுகளாகவே இவற்றைக் கருதி வரிக் கணக்கீடு செய்யப்படும். அதன்படி, இந்த ஃபண்டுகளில் ரூ.1 லட்சம் வரை நீண்டகால மூலதன ஆதாய வரி இல்லை. அதற்கும் மேலான லாபத்துக்குக்கூட குறைவாகவே (10%) வரி இருக்கும். இந்த ஃபண்டுகளில் சிஸ்டமிக் வித்ட்ராவல் பிளான் (SWP) மூலம் மாதம்தோறும் பணம் எடுத்துக் கொள்ளலாம்.

கரடி Vs  காளை... சரியும்  சந்தையிலும் சக்சஸ்  ஃபண்டுகள்!

பெரிய அளவில் ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்கள்...

சந்தையில் நல்ல அனுபவம் உள்ள, சந்தையின் போக்கு குறித்து தெளிவான பார்வை உள்ளவர்கள். சந்தையின் மீது வலுவான நம்பிக்கை இருப்பவர்கள், இளவயதில் இருப்பவர்கள் பங்குச் சந்தையில் முழுமையாக முதலீடு செய்யும் ஈக்விட்டி ஃபண்டுகளைத் தேர்வு செய்யலாம். அந்த வகையில் தேர்ந்தெடுக்கும்போது லார்ஜ்கேப் பங்குகள் அதிகமுள்ள ஃபண்டுகளை செய்துகொள்ளலாம். அப்படியான ஃபண்டுகளாக ஃபிளெக்ஸிகேப் ஃபண்டுகள் உள்ளன.

சந்தை இறங்கும்போது ஸ்மால், மிட்கேப் ஆகியவற்றில் இவை தங்களுடைய முதலீடுகளைச் செய்யும். மொத்தமாக முதலீடு செய்ய நினைப்பவர்கள் ஃபிளெக்ஸிகேப் ஃபண்டுகளில் எஸ்.டி.பி (STP) என்கிற சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் மூலமாகவும் முதலீடுகளை மேற் கொள்ளலாம். அவ்வாறு முதலீடு செய்யும்போது சந்தை ஏற்றம் அடையும்போது லாபம் சிறப்பாக இருக்கும்’’ என்றவர், தற்போதைய சந்தை சூழலில் சிறப்பான வருமானம் தரக்கூடிய ஃபண்டுகள் என்னென்ன என்பதை அட்டவணைகளில் கொடுத்துள்ளார். இந்த ஃபண்டுகளை நன்கு அலசி ஆராய்ந்து, உங்கள் ரிஸ்க் எடுக்கும் நிலைக்கு உகந்ததாக இருக்கும்பட்சத்தில் இவற்றில் முதலீடுகளை மேற்கொண்டு சரியும் சந்தையிலும் சிறப்பான வருமானத்தை ஈட்டலாமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism