Published:Updated:

பிக்பாஸாக மாறும் ‘பிட்காயின்!’ மாயவலையா... மாபெரும் லாபமா?

பிட்காயின்
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்காயின்

கவர் ஸ்டோரி

ஒரு பிட்காயின் வர்த்தக மதிப்பு 2017-ல் ரூ.3 லட்சம். இன்று (20.10.2021) ஒரு பிட்காயின் வர்த்தக மதிப்பு ரூ.49 லட்சத்துக்கு மேல். இவ்வளவு குறுகிய காலத்தில் வேறெதிலும் இந்த அளவுக்கு லாபம் கிடைத்திருக்காது. இந்த பிரமாண்டமான லாபம்தான் இன்றைக்கு இளைஞர்கள் முதல் நடுத்தர வயதினர் வரை பிட்காயினில் பணத்தைப் போடுவதற்கான ஆர்வத்தைத் தூண்டியிருக் கிறது. குறிப்பாக, இந்தியா முழுக்க உள்ள இளைஞர்கள் இதில் முதலீடு செய்ய துடியாய்த் துடித்து வருகிறார்கள்.

கிரிப்டோகரன்சிகளில் ஒரு வகையான பிட்காயின்களை இந்தியா உட்பட பல நாட்டு அரசுகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை என்றாலும், அதன் வர்த்தகம் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. நம் நாட்டில் 2018-ல் ‘பிட்காயின் வர்த்தகப் பரிவர்த்தனை சேவைகளை வழங்கக் கூடாது’ என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியது. ஆனால், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் பிட்காயினுக்கு விதிக்கப்பட்ட தடையை மார்ச் 2020-ல் ரிசர்வ் வங்கி விலக்க உத்தரவிட்டது. இதனால், பிட்காயின் வர்த்தகம் முன்பைவிட அதிகமாக சூடுபிடித்திருக்கிறது.

இன்றைக்கு இளம் வயதினர் முதல் நடுத்தர வயதினர் வரை அனைத்துத் தரப்பினரும் ‘இதில் கொஞ்சம் பணத்தைப் போட்டுத்தான் பார்ப்போமே’ என்று நினைத்து, கிரிப்டோ கரன்சிகளில் பணத்தைப் போட்டு வருகின்றனர்.

பிக்பாஸாக மாறும் ‘பிட்காயின்!’
மாயவலையா... மாபெரும் லாபமா?

ஆர்வம் காட்டும் இளைஞர்கள்!

அண்மையில் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில், மத்திய நிதி அமைச்சகத் தின் வழிகாட்டுதலின்படி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, பி.எஸ்.இ மற்றும் சி.டி.எஸ்.எல் அமைப்பும் இணைந்து நடத்திய முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் செபியின் முழுநேர உறுப்பினர் (Whole Time Member) ஜி.மகாலிங்கம் கிரிப்டோகரன்சி முதலீடு குறித்துப் பேசினார்.

“இன்றைய காலகட்டத்தில் அனைவரும் உற்றுநோக்கும் ஒரு விஷயமாக மாறியிருக்கிறது கிரிப்டோகரன்சி. குறிப்பாக, 20 முதல் 35 வயதுள்ள இளைஞர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவது போல, கிரிப்டோகரன்சியிலும் பணம் போடுவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், கிரிப்டோகரன்சி பற்றி அவர்களுக்கு முழுமையான புரிதல் இருக்கிறதா, இல்லையா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இந்திய அரசானது இந்த முதலீட்டை இன்னும் முழுமை யாக அங்கீகரிக்கவில்லை என்பதை கிரிப்டோகரன்சியில் பணம் போடுகிறவர்கள் அனைவரும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதே போல, பங்குச் சந்தையின் செயல்பாடுகளைக் கண்காணித்து, கட்டுப்படுத்த செபி இருப்பது போல, கிரிப்டோகரன்சிக்கென எந்தவொரு கட்டுப்பாட்டு அமைப்பும் இந்தியாவில் இன்னும் உருவாக்கப்படவில்லை. பங்கு சார்ந்த நிறுவனம் மோசடி செய்தால் செபியில் புகார் செய்யலாம். ஆனால், கிரிப்டோகரன்சியில் ஏதும் மோசடி நடந்தால், அதை யாரிடம் புகார் அளிப்பது என்பதில் தெளிவு இல்லை. இப்படி இருக்கும்போது, இதில் பணத்தைப் போடுவது ஆபத்தானது.

சமீபத்தில் நடந்துமுடிந்த ஐ.பி.எல் கிரிக்கெட் மேட்சுகள் இடையே போடப்பட்ட விளம்பரங்களில் கிரிப்டோகரன்சி விளம்பரங்களை அதிகம் பார்க்க முடிந்தது. இணையத்தைத் திறந்தாலும், சமூக வலைதளங்களைத் திறந்தாலும், அங்கும் கிரிப்டோகரன்சி சார்ந்த விளம்பரங்கள் வந்துநிற்கின்றன. இவை முதலீட்டாளர்களில் குறிப்பாக, இளைஞர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைகிறது. அதனால்தான் அவர்கள் இதில் பணத்தைப் போட களமிறங்குகிறார்களோ என்கிற கேள்வியும் எழுகிறது. இளைஞர்களுக்கு ரிஸ்க் எடுக்கும் தகுதி இருந்தாலும், முறைப்படுத்தாத, கட்டுப்பாடு களற்ற, கண்காணிக்கும் அரசு அமைப்புகள் எதுவும் இல்லாத கிரிப்டோகரன்சியில் பணம் போடும்முன் எச்சரிக்கையுடன் இருப்பது மிக மிக அவசியம்.

கிரிப்டோகரன்சி பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல், நண்பர்கள் சொல்வதையோ, உறவினர்கள் சொல்வதையோ கேட்டு யாரும் இதில் பணம் போட வேண்டாம். குறிப்பாக, 60 வயதைக் கடந்த வர்கள் இதில் பணம் போடாமலே இருப்பது நல்லது. வெகு சீக்கிரமாகவே இந்த முதலீட்டுக்கென்று தனியாக ஒரு கட்டுப்பட்டு அமைப்பை அரசு உருவாக்கும் என எதிர் பார்க்கிறோம்’’ என்றார்.

பிட்காயின் ஒரு தனிப்பட்ட வர்த்தகப் பொருள்!

சின்ஷியர் சிண்டிகேட் (http://www.sinceresyndication.com/) நிறுவனத்தின் நிறுவனர் சிவராமகிருஷ்ணனிடம் இது குறித்துப் பேசியபோது, “இன்றைய நிலையில் பிட்காயின் முதலீடு பல மடங்கு விலை ஏற்றத்தைச் சந்தித்திருப்பதால், இதில் முதலீடு செய்யலாமா என்கிற கேள்வி அனைத்துத் தரப்பினருக்குள்ளும் எழுந்திருக் கிறது. இந்தக் கேள்விக்கான பதிலைப் பார்க்கும்முன், கிரிப்டோகரன்சியைப் பற்றிய சில விவரங்களை நாம் பார்க்கலாம்.

‘அந்தந்த நாட்டில் உள்ள கரன்சி அந்தந்த நாட்டில் மட்டுமே செல்லும். ஒருவேளை, குளோபல் கரன்சி என்று ஒன்று இருக்கு மானால் அந்த கரன்சியை வைத்து, எந்த நாட்டுக்கு போனாலும் அந்த நாட்டிலுள்ள பொருள்களை வாங்க முடியும்’ என்கிற விஷயத்தை அடிப்படையாக வைத்துதான் கிரிப்டோகரன்சி உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஆரம்பித்த நோக்கம் நிறைவேறாமல், தனிப்பட்ட வர்த்தகப் பொருளாக (Tradable Objest) கிரிப்டோகரன்சி மாறிப் போயிருக்கிறது என்பதுதான் உண்மை. ஏனெனில், கிரிப்டோ கரன்சியைக் கொண்டு நினைத்த பொருள்களை நம்மால் தற்போது வாங்க முடியவில்லை. உதாரணத் துக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்காவில் கிரிப்டோகரன்சி குறித்த கான்ஃப்ரன்ஸ் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததால், அந்த நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்தேன். அந்த நிகழ்ச்சி முழுவதும் கிரிப்டோ கரன்சி பற்றிய விவாதங்கள், கலந்துரையாடல்கள் குறித்துதான். ஆனால், அங்குள்ள ஒரு காபி ஷாப்பில் கிரிப்டோகரன்சியைக் கொடுத்து ஒரு காபிகூட வாங்க முடியவில்லை.

ஜி.மகாலிங்கம், சிவராமகிருஷ்ணன், மெய்யா நாகப்பன், ஶ்ரீகாந்த் மீனாட்சி
ஜி.மகாலிங்கம், சிவராமகிருஷ்ணன், மெய்யா நாகப்பன், ஶ்ரீகாந்த் மீனாட்சி

யார் வெளியிடுகிறார்கள்?

கிரிப்டோகரன்சி விஷயத்தில் கவனிக்க வேண்டிய முக்கியமான இன்னொரு விஷயம், யார் அதை வெளியிடுகிறார்கள் என்பது தான். இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய் தாள்களை அச்சிட்டு வெளியிடுகிறது. அதே போல, அந்தந்த நாட்டின் மத்திய வங்கிகள் அந்தந்த நாட்டு கரன்சிகளை அச்சிட்டு வெளியிடுகிறது. அப்படி கிரிப்டோகரன்சியை யார் வெளியிடுகிறார்கள் என்று பார்த்தால், அதற்குப் பொறுப்பாக யாரும் இல்லை.

‘செயற்கையான முறையில் உருவாக்கப்படும் கரன்சிக்கு மதிப்பு எப்படி வருகிறது?’ என்று நீங்கள் கேட்கலாம். சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு வீட்டின் மதிப்பு ஒரு கோடி என்று சொல்லும்போது, அந்த வீட்டின் மதிப்புக்கு சில காரணங்கள் இருக்கும். உதாரணமாக, அந்த வீடு அமைந்திருக்கும் இடம், அந்த வீட்டை வாடகைக்கு விட்டால் சம்பாதிக்க கிடைக்கும் வருமானம் எனப் பல காரணங்களை வைத்து ஒரு வீட்டின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. அதே போல, ஒரு நிறுவனத்தின் பங்கு விலையும் அந்த நிறுவனம் சம்பாதிக்கும் லாபத்தை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுகிறது. அந்த வகையில் அது ஒரு சொத்தாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால், கிரிப்டோகரன்சியில் மதிப்பு டிமாண்ட் மற்றும் சப்ளை ஆகிய இரண்டு காரணங்களைக் கொண்டு மட்டுமே கணக்கிடப்படுவதால், அதை ஒரு சொத்தாகக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில், கிரிப்டோகரன்சியில் இருந்து வருமானமோ, வட்டியோ, டிவிடெண்டோ வருவதில்லை. அதனால் கிரிப்டோகரன்சி சொத்து என்கிற வரையறைக்குள் வராது. அமெரிக்க நிறுவனமான டெஸ்லா, பிட்காயினில் முதலீடு செய்த பிறகு, அதைத் தங்களுடைய நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட்டில் சொத்தாகக் கணக்கில் காட்டியது. ஆனால், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை.

பிட்காயினில் பணம் போடலாமா?

பிட்காயினில் பணம் போடலாமா என்று என்னிடம் கேட்டால், நீங்கள் எவ்வளவு ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கிறீர்கள் என்பதை வைத்து முடிவு செய்யுங்கள் என்று சொல்வேன். ‘என்னிடம் பணம் இருக்கிறது. பிட்காயினில் பணத்தைப் போடுகிறேன். ஒன்று, மிகப் பெரிய லாபம் கிடைக்கும்; இல்லாவிட்டால், போட்ட பணம் மொத்தமாக போய்விடும் என்பதைத் தெரிந்துகொண்டுதான் பணத்தைப் போடுகிறேன்’ என்று நீங்கள் பணத்தைப் போடத் தயாராக இருந்தால், பிட்காயினில் பணம் போடுங்கள். ஆனால், லாபம் வரும் என்பதற்காக இந்த ரிஸ்க்கை எல்லாம் என்னால் எடுக்க முடியாது என்கிறவர்கள், பிட்காயின் பக்கமே வராமல் இருப்பது நல்லது. இதற்குப் பதிலாக, பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகள், பாண்டுகளில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்து, ஓரளவு லாபம் பார்க்கலாம்” என்றார்.

கவனமாக இருங்கள்...

நிதிஷ் தேசாய் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் டாக்ஸ் மற்றும் ஸ்பெஷல் ஃபைனான்ஸ் பிரிவின் தலைவர் மெய்யா நாகப்பன், பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சியில் பணம் போடுபவர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி விளக்கினார்.

‘‘தற்போது வரை பிட்காயின் வர்த்தகம் குறித்து தெளிவான விதிமுறை எதுவும் இல்லை. இது குறித்த புதிய விதிமுறைகள் எப்படி வரும் என்று தெரியாது. இதை வர்த்தகம் செய் பவர்களை வரித்துறை இப்போது கவனிக்கத் தொடங்கி இருக்கிறது. பங்கு வர்த்தகத்தில் வரக்கூடிய லாப, நஷ்டங் களைக் கணக்கிட்டு வரி கட்டுவதே சிறு முதலீட்டாளர்களுக்கு பெரும்பாடாக இருக்கும்போது, பிட்காயின் வர்த்தகம் தொடர்பான கணக்குகள் இன்னும் கடினமானவை. மேலும், பிட்காயின் முதலீட்டின்மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு அதிகப்படியான வரி விதிக்கப்படும். அதனால் சம்பாதிக்கக் கூடிய லாபத்தில் பெரும் பகுதி வரியாகச் செலுத்த வேண்டிய நிலை உருவாகலாம்.

அதே சமயம், பிட்காயின் வர்த்தகங்களுக்கான வரி விதி முறைகளில் தெளிவு இல்லாமல் இருப்பதால், எப்போது வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் வரும் என்று தெரியாத நிலை இருக்கிறது. அதனால் இதில் பணம் போடும் நபர்கள் மிகக் கவனமாக இருப்பது அவசியம்’’ என்றார்.

பிட்காயினில் லாபம் கிடைக்குமா?

பிட்காயின் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில், இனிவரும் காலத்தில் அதில் லாபம் பார்க்க வாய்ப்பு இருக்கிறதா என நிதி ஆலோசகர் ஶ்ரீகாந்த் மீனாட்சியிடம் கேட்டோம்.

“எந்த விதமான முதலீட்டின் மூலமும் லாபம் பார்க்க முடியும் என்கிறபோது, பிட்காயின் முதலீட்டின் மூலமும் லாபம் பார்க்க முடியும். ஆனால், அந்த லாபம், நீங்கள் எடுக்க நினைக்கும் ரிஸ்க்கின் அளவைப் பொறுத்தது. பங்குச் சந்தை மற்றும் அது சார்ந்த முதலீடுகளில் 100 மடங்கு ரிஸ்க் இருக்கிறது என்றால், பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சியில் 10,000 மடங்கு ரிஸ்க் இருக்கிறது. ஏனெனில், எதன் அடிப்படையில் அதன் விலை ஏறுகிறது, இறங்குகிறது என்பதை இப்போது வரை யாராலும் கணிக்க முடியவில்லை. அதனால் அந்த முதலீட்டின் மீது யாராலும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.

பிட்காயினில் பிரமாண்டமாக கிடைத்த லாபம் ஒரு சில நாள் களில் காணாமல் போயிருக்கிறது. கடந்த காலத்தில் அடிக்கடி நடந்த இந்த விஷயம், இனிவரும் நாள்களிலும் நடக்கலாம். ஆனால், ஒன்று நிச்சயம். கிரிப்டோகாயின் சார்ந்த தொழில்நுட்ப விஷயங்களும், நுணுக்கங்களும் அழிவதற்கு வாய்ப்பில்லை. மற்றொரு ரூபத்தில் புதிய முதலீட்டு வாய்ப்புகளுடன் மீண்டும் வரலாம். எனவே, கிரிப்டோகரன்சி சார்ந்த விஷயங்களை இளைஞர்கள் கற்றுக்கொள்வது நல்லது. சில ஆயிரம் ரூபாயை இதில் போட்டு, முதலீடு செய்து பிராக்டிக்கல் அறிவை வளர்த்துக் கொள்ளலாம். ஆனால், லட்சங் களில் பணம் போட்டு காத்திருக்க வேண்டாம்.

முக்கியமாக, நாற்பது வயதைக் கடந்தவர்களிடம் நிச்சயமாக லட்சங்களில் பணம் இருக்க வாய்ப்புண்டு. அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு, அளவுக்கு மீறி எடுத்து, இதில் பணத்தைப் போடும் முயற்சியில் இறங்க வேண்டாம். என்னைப் பொறுத்த வரை, பிட்காயின் என்பது ஒரு மாயை. அந்த மாயவலையில் சிக்கித் தவிப்பதைவிட, முறைப் படுத்தப்பட்ட முதலீடுகளில் பணம் போடுவது புத்திசாலித் தனம்’’ என்றார் தெளிவாக.

பிக்பாஸாக மாறும் ‘பிட்காயின்!’
மாயவலையா... மாபெரும் லாபமா?

கிரிப்டோகரன்சிக்குத் தடை...

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், சவுதி அரேபியா உள்ளிட்ட 10 நாடுகள் கிரிப்டோ கரன்சியைத் தடை செய்துள்ளன. சீனா, இந்தோனேசியா, நேபாளம் உள்ளிட்ட சில நாடுகளில் கிரிப்டோகரன்சியை வைத்திருக் கலாம். ஆனால், வணிகப் பயன் பாட்டுக்கோ வேறு வகையான நேரடிப் பணப் பரிமாற்றங் களுக்கோ பயன்படுத்தத் தடை விதித்திருக்கின்றன. ஆனால், ஜப்பான், சிங்கப்பூர், இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 15 நாடுகள் கிரிப்டோ கரன்சியைக் கொண்டு பொருள் களை வாங்க அனுமதி அளித் துள்ளன. நம் நாட்டைப் பொறுத்த வரை, இதை அங்கீகரிக்கவும் செய்யாமல், தடையும் விதிக்காமல் இருக்கிறது. புதிய கிரிப்டோ கரன்சியை உருவாக்கி வெளியிடும் முயற்சியில் இந்திய அரசாங்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த கிரிப்டோகரன்சி எப்படிப்பட்டதாக இருக்கும், அந்த கரன்சி எப்போது புழக்கத்துக்கு வரும், அப்படி வந்தால், பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளின் நிலை என்னவாகும் என்கிற கேள்விகளுக்கெல்லாம் இப்போதைக்கு எந்தப் பதிலும் இல்லை.

பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சியை உருவாக்கியவர்கள் இதை முதலீட்டுக் கருவியாகப் பார்க்கவில்லை. தற்போது நடைமுறையில் இருக்கும் பணத்துக்கு மாற்றாகவே பார்த்தனர். ஆனால், மக்களின் போக்கு இதை ஒரு வர்த்தகக் கருவியாக மாற்றி, பணம் பண்ணும் விஷயமாக மாற்றிவிட்டனர். ரியல் எஸ்டேட், தங்கம், பணம் போன்று பிட்காயின் என்பது ஒரு பொருளோ, சொத்தோ கிடையாது. அதனால் முறையாக அரசு அமைப்புகள் இதை ஒழுங்குபடுத்தினால் மட்டுமே மக்களுக்கு இதன்மீது நம்பிக்கை வரும். கிரிப்டோ கரன்சிகளைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் மத்திய அரசாங்கம் கூடிய விரைவில் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாத வரை பிட்காயின் என்பது ரிஸ்க்குக்கு அஞ்சாமல் பணத்தைப் போட்டு, ஜெயிக்க நினைப்பவர்களின் விருப்பம் மிகுந்த தேர்வாகவே இருக்கும்.

நீங்கள் ரிஸ்க் எடுத்து பிட்காயினில் பணம் போடப் போகிறீர்களா அல்லது ரிஸ்க்கே வேண்டாம் என்று நினைத்து ஒதுங்கி இருக்கப்போகிறீர்களா என்பதுதான் முக்கியமான விஷயம்!

பிட்காயினில் பணம் போட்ட 1.5 கோடி இந்தியர்கள்!

சமீபத்தில் ‘BrokerChooser’ நிறுவனம் வெளி யிட்டிருக்கும் புள்ளிவிவரங்களின்படி, உலக நாடு களின் மக்கள் தொகையின்படி எத்தனை பேர் முதலீடு செய்துள்ளனர் என்பதை தெரிவித்துள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் உக்ரைன் நாட்டில் 12.73% மக்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து முதலிடத்தில் இருப்பதாகவும், அடுத்தடுத்த இடங்களில் ரஷ்யா (11.91%), கென்யா (8.2%) மற்றும் அமெரிக்கா (8.31%) ஆகிய நாடுகள் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறது. இந்தியாவில் சுமார் 1.5 கோடி பேர் இதில் பணம் போட்டிருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள். நம்மவர்களில் பலரும் இதில் ரகசியமாக பணம் போட்டு வருகிறார்கள்!