Published:Updated:

வரலாறு காணாத உச்சத்தில் பிட்காயின்... ஒரே நாளில் 10.5% ஏற்றம்!

பிட்காயின்
பிட்காயின்

பிட்காயின் முதலீட்டில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதன் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது!

விர்ச்சுவல் கரன்சி என்று சொல்லப்படுகிற 'பிட்காயின்' மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து, வரலாறு விலையைத் தற்போது எட்டியிருக்கிறது.

பிட்காயின் விலை முதன்முறையாக 20,000 டாலரைக் கடந்து, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அதாவது கடந்த வியாழக்கிழமை (17.12.2020) அன்று ஒரே நாளில் 10.5% ஏற்றம் கண்டு 23,655 டாலருக்கு வர்த்தகமானது பிட்காயின்.

பிட்காய்ன்
பிட்காய்ன்

நடப்பு 2020-ம் ஆண்டில் மட்டும் பிட்காயின் முதலீடு 220% வளர்ச்சியை, தனது முதலீட்டாளர்களுக்கு வழங்கியிருக்கிறது. இதனால் இந்திய முதலீட்டாளர்களின் கவனம் இப்போது பிட்காயின் முதலீட்டின் பக்கம் திருப்பியிருப்பதாகத் தெரிகிறது.

பல்வேறு நாடுகளில் இந்த விர்ச்சுவல் கரன்சியைத் தடை செய்துள்ள நிலையிலும், இதன் வளர்ச்சி ஏற்றம் கண்டு வருவதால், தற்போது பல நாடுகளும் பிட்காயினை அனுமதிக்கத் தொடங்கியுள்ளன. இந்தியாவும் பிட்காயினை செயல்பட அனுமதி தர மறுத்து, அதற்குத் தடை விதித்தது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த மார்ச் மாதத்தில் உச்ச நீதிமன்றம் இந்தத் தடையை நீக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Vikatan

பிட்காயின் மதிப்பு நாளுக்கு நாள் வளர்ந்து வருவதாலும், அது தொடர்ந்து ஏற்றத்தில் வர்த்தகமாகி வருவதாலும், பிட்காயின் முதலீட்டில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே, பிட்காயின் மதிப்பும் அதிகரிக்கத் தொடங்கியிக்கிறது என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

பங்குச்சந்தையை விடவும், அதிக ஏற்ற இறக்கத்தை பிட்காயின் முதலீடு சந்திக்கும் என்பதால், இதன் முதலீட்டாளர்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதும் அவர்களின் கருத்தாக இருக்கிறது.

பிட்காயின்
பிட்காயின்

மேலும், தங்கத்திலிருந்து முதலீட்டாளர்கள் பணத்தை வெளியில் எடுத்து, அதைப் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்துவருவது போல, பிட் காயின் முதலீட்டிலும் முதலீடு செய்கிறார்கள் என்றும், கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்தே, தங்கத்திலிருந்து பணம் எடுப்பது அதிகரித்திருப்பதாகவும், அதே சமயம் பிட்காயின்களில் செய்யப்படும் முதலீடுகள் அதிகரித்து வருவதாகவும் தரவுகள் கூறுகின்றன.

இனி ஒரு பிட்காயினின் விலை 40,000 டாலரை அடைந்தாலும் ஆச்சர்யமில்லை என்கிறார்கள். அதே சமயம், இது ஆபத்தான முதலீடு என்பதையும் நாம் கவனிக்கத் தவறக்கூடாது!

அடுத்த கட்டுரைக்கு