Published:Updated:

நாளை வெளியாகும் பர்கர் கிங் IPO... முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை என்ன?

பர்கர் கிங்
பர்கர் கிங்

இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் ஃபாஸ்ட் ஃபுட் நிறுவனமான பர்கர் கிங் இந்தியப் பங்குச் சந்தையில் ஐ.பி.ஓ வெளியிடுவது வரவேற்கத்தக்க வளர்ச்சி என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

பல்வேறு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் புதிய பங்குகளை வெளியிட்டாலும், ஒரு சில நிறுவனங்களின் ஐ.பி.ஓ வெளியீட்டுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு இருக்கும்.

அப்படியான ஐ.பி.ஓ-க்கள் எப்போது வெளியிடப்படும் என முதலீட்டாளர்கள் எதிர்நோக்கி காத்திருப்பார்கள். அப்படி எதிர்நோக்கி காத்திருந்த 'பர்கர் கிங்' நிறுவனத்தின் ஐ.பி.ஓ நாளை (டிசம்பர்-2, 2020) புதன்கிழமை அன்று வெளியாகவிருக்கிறது.

share market
share market

இந்த ஐ.பி.ஓ மூலம் பர்கர் கிங் நிறுவனம் சுமார் 13.5 கோடி பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. இதில் 7.5 கோடி பங்குகள் புதிய பங்கு வெளியீட்டின் மூலமும், பர்கர் கிங் பிராண்டின் புரொமோட்டர் நிறுவனமான க்யூ.எஸ்.ஆர் ஆசியா பி.டி.இ நிறுவனம் 6 கோடி பங்குகளை சலுகை விலையிலும் (ஆஃபர் ஃபார் சேல்) விற்பனை செய்யவுள்ளது.

இந்த நிறுவனம் 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்குகளுக்கு 59 - 60 ரூபாய் என விலை நிர்ணயம் செய்திருக்கிறது. இந்த ஐ.பி.ஓ-வின் மூலம் சுமார் 810 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்க்க பர்கர் கிங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த ஐ.பி.ஓ வெளியீட்டில் ஒரு லாட்டுக்கு 250 பங்குகளை வாங்க முடியும். 250 மடங்குகளில் அதிகபட்சமாக 3,250 பங்குகளை வாங்க முடியும் என்பதையும் ரீடெய்ல் முதலீட்டாளர்கள் நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.

ஐ.பி.ஓ வெளியிட்ட UTI AMC... யார் முதலீடு செய்யலாம்?

'பர்கர் கிங்' ஐ.பி.ஓ வெளியீட்டில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன, இந்த நிறுவனத்தில் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பது குறித்து பங்குச் சந்தை ஆலோசகர் ரெஜி தாமஸிடம் கேட்டோம்.

"இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பாஸ்ட் புட் நிறுவனமான பர்கர் கிங் இந்திய பங்குச்சந்தையில் ஐ.பி.ஓ வெளியிடுவது வரவேற்கத்தக்க வளர்ச்சியாகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

நுகர்வோர் பொருளுகளுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருப்பதால், பர்கர் கிங் ஐ.பி.ஓ-வுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய இளைய தலைமுறையினரின் பிடித்த பிரத்யேக உணவாக மாறியிருக்கிறது பர்கர். அந்த வகையில் இந்த நிறுவனத்தின் விற்பனை எதிர்வரும் காலங்களில் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ரெஜி தாமஸ்
ரெஜி தாமஸ்

கே.எஃப்.சி மற்றும் மெக்டொனால்டு மாதிரியான வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டி போட்டு, மிகக் குறுகிய காலத்தில் நல்ல வருமானத்தை சம்பாதிக்கும் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது பர்கர் கிங். இதனால் இந்த ஐ.பி.ஓ வெளியீடு வெற்றி பெறுவதற்கே அதிக வாய்ப்புகள் இருக்கிறது. விலையும் கவர்ச்சிகரமானதாக இருப்பதால் முதலீட்டாளர்களிடயே அதிக வரவேற்பை பெறும். இந்தப் பங்கு விற்பனை மூலம் இந்தியாவில் பர்கர் கிங் தனது வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடியும்" என்றார்.

இந்தப் புதிய பங்கு வெளியீட்டின் மூலம், ஏற்கெனவே பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் ஜுபிலண்ட் ஃபுட் வர்க்ஸ் (டாமினோஸ் பீட்சாவின் ஆப்பரேடர்) மற்றும் வெஸ்ட் லைஃப் டெவெலப்மெண்ட் (மெக் டொனால்ட்சின் ஃப்ராஞ்சைசி) போன்ற கம்பனிகளோடு பர்கர் கிங் நிறுவனம் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு