Published:Updated:

சி.கே.பிரஹலாத் கற்றுத்தந்த இரண்டு மேனேஜ்மென்ட் மந்திரங்கள்!

சி.கே.பிரஹலாத் மேனேஜ்மென்ட் உலகின் மாமேதை. ஆகஸ்ட் 8, 1941-ல் பிறந்து, 2010-ல் அமரரான அவருக்கு இன்று 78 வது பிறந்த நாள். பிசினஸ் நிர்வாகத்தின் மாமேதைக்கு இந்தக் கட்டுரை ஓர் அஞ்சலி...

சி.கே.பிரஹலாத்
சி.கே.பிரஹலாத்

சி.கே.பிரஹலாத் மேனேஜ்மென்ட் உலகின் மாமனிதர். அமெரிக்காவின் புகழ்பெற்ற ராஸ் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்டில் (Ross School of Management) வியூகப் (Strategy) பேராசிரியராக இருந்தார். இவர் உருவாக்கிய 'மையத் திறமை' (Core Competence), 'பிரமிடின் அடிப்பக்கத்தில் அதிர்ஷ்டம்’ (Fortune at the bottom of the Pyramid) ஆகிய சித்தாந்தங்கள் உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான நிறுவனங்களுக்கு வேதம். இங்கிலாந்தின் பிரபல `டைம்ஸ்’ நாளிதழ் பிரஹலாதை உலகத்தின் தலைசிறந்த மேனேஜ்மென்ட் சிந்தனையாளராக இரண்டு வருடங்கள் தேர்ந்தெடுத்துள்ளது.

The Fortune At The Bottom Of The Pyramid
The Fortune At The Bottom Of The Pyramid

தமிழர்கள் நம் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டிய சாதனை இது. ஏன் தெரியுமா? சி.கே.பிரஹலாத் என்பதன் விரிவாக்கம் - கோயம்பத்தூர் கிருஷ்ணாராவ் பிரஹலாத். ஆமாம், இவர் நம் கொங்குநாட்டுக்காரர்!

பிரஹலாத்தின் முன்னோர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பிற்பாடு, கோவை நகருக்குப் புலம்பெயர்ந்தார்கள். அப்பா கிருஷ்ணாராவ், நீதிபதியாகப் பணியாற்றினார். அவருக்கு ஒன்பது குழந்தைகள். பிரஹலாத் கடைக்குட்டி.

அப்பாவுக்கு அறிவுத் தேடலிலும், அதைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளுதலிலும் தணியாத தாகம். சம்ஸ்கிருத மொழியைக் கற்றுத் தேர்ந்தார். 40 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். தன் குழந்தைகளிடம் அடிக்கடி சொல்லுவார், ‘‘உலகத்தில் பிறருக்குக் கொடுக்கக் கொடுக்க அதிகமாகும் செல்வம் ஒன்றே ஒன்றுதான். அது அறிவு.”

தன் வாரிசுகள் ஒவ்வொருவரும் படிப்பில் உச்சம் தொட வேண்டும், வெவ்வேறு துறைகளில் டாக்டரேட் பட்டம் வாங்க வேண்டும் என்று கிருஷ்ணாராவ் ஆசைப்பட்டார். என்ன காரணம் என்று தெரியவில்லை. கடைக்குட்டிக்கு, இயற்பியல் (Physics) துறை என்று முடிவு செய்தார். இந்தப் பாதையில் தொடங்கியது பிரஹலாத்தின் வாழ்க்கைப் பயணம்.

கோவையில் பள்ளிப் படிப்பையும், புகுமுக வகுப்பையும் முடித்தபின், சென்னை லயோலா கல்லூரியில் பி.எஸ்ஸி இயற்பியல் படித்தார். அடுத்து, அப்பாவின் கனவை நனவாக்க, எம்.எஸ்ஸியும், டாக்டரேட்டும் படிக்கும் திட்டம். ஆனால், அதில் வந்தது ஒரு மாற்றம்.

அமெரிக்காவின் 'யூனியன் கார்பைட்' நிறுவனத்தின் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை சென்னையில் இருந்தது. இங்கே, பிரஹலாத்துக்கு சூப்பர்வைசர் வேலை கிடைத்தது. 19 வயதில் கை நிறையச் சம்பளம். சில வருடங்கள் வேலை பார்த்துவிட்டுப் படிப்பைத் தொடருவதாக அப்பாவிடம் சொன்னார். அவரும் சம்மதித்தார். பிரஹலாத் வேலைக்குச் சேர்ந்தார். அங்கே, அவர் இயற்பியலை மறந்தார்; அப்பாவுக்குக் கொடுத்த வாக்குறுதியையும் மறந்தார்.

அவர் வாழ்க்கை தலைகீழாக மாறியது. மாற்றியது யார்? ஆணோ, பெண்ணோ இல்லை. ரப்பர் கையுறைகள் (Rubber Gloves). ஆமாம், சாதாரண ரப்பர் கையுறைகள்தான்!

Rubber Gloves
Rubber Gloves

தொழிற்சாலையைச் சுற்றி வந்து, தொழிலாளர்களின் பணியை மேற்பார்வை செய்வது பிரஹலாத்தின் வேலை. தொழிற்சாலையில் அவர் தினமும் கண்ட ஒரு காட்சி அவர் மனதில் பல கேள்விகளை எழுப்பியது. ஒரு சில தொழிலாளிகள் புத்தம் புதிய கையுறைகள் அணிந்திருந்தார்கள். பலர், நைந்துபோன, கிழிந்த கையுறைகளோடு எப்போதும் இருந்தார்கள். இவர்களில் ஏராளமானோர், உடலுக்குத் தீங்கு தரும் ரசாயணங்களைக் கையாள்பவர்கள். இதனால், இவர்கள் கைகளில் நிரந்தரக் காயங்கள்.

பிரஹலாத் மனிதநேயம் கொண்டவர். தொழிலாளிகளின் துயரம் அவரைக் காயப்படுத்தியது. தீர்வு காண விரும்பி, தன் மேனேஜரிடம் பேசினார். அவர் சொன்ன பதில் பிரஹலாத் மனதை இன்னும் கலக்கியது.

‘‘கையுறைகள் வாங்குவதற்கு, கம்பெனியில் மாதாந்தர பட்ஜெட் இருக்கிறது. ஆனால், அதன்மூலம் எல்லாத் தொழிலாளிகளுக்கும் புதுக் கையுறைகள் தர முடியாது. யூனியனோடு பேச்சுவார்த்தை நடத்தி, சீனியாரிட்டி முறையில் கையுறைகள் அளிக்கிறோம்.’’

தயாரிப்பு
தயாரிப்பு

சீனியர்கள், அபாயகரமான கெமிக்கல்களைக் கையாளாவிட்டாலும், அவர்களுக்குப் புதிய கையுறைகள் கிடைக்கும். ஆனால், ஜூனியர்கள் எப்படிப்பட்ட கெமிக்கல்களைக் கையாள்பவராக இருந்தாலும், தன் முறை வரும்வரை, கிழிந்த கையுறைகளோடு சமாளித்தாக வேண்டும்.

பிரஹலாத்துக்கு இது அநியாயமாகத் தெரிந்தது. வேலையில் கேடு விளைவிக்கும் தன்மைக்கேற்ப கம்பெனி பாதுகாப்புச் சாதனங்கள் தர வேண்டுமே தவிர, சீனியாரிட்டி அடிப்படையில் அல்ல என்று போராடினார் பிரஹலாத். 20 வயதிலேயே இத்தனை லட்சிய வேகம், மனிதநேயம்.

Vikatan

பிரஹலாத்தின் வாதத்தில் இருந்த நியாயத்தை கம்பெனி உயர் அதிகாரிகளும் தொழிற்சங்கமும் உணர்ந்தன. கையுறைகள் விநியோக முறை மாறியது. இதுவரை பாதிக்கப்பட்ட தொழிலாளிகளின் கைகளுக்கும் மனங்களுக்கும் மெல்லிய மயில்தோகை வருடல். அவரைத் தங்களுள் ஒருவராக, நண்பராக, வழிகாட்டியாக மதிக்கத் தொடங்கினார்கள். வேலையில் அர்ப்பணிப்பு அதிகமானது. பிரஹலாத்தின் ஷிஃப்ட்டில் உற்பத்தி அதிகரித்தது. அவர் அணுகுமுறையின் சிறப்பை உயர் அதிகாரிகள் உணர்ந்தார்கள்.

பிரஹலாத்தின் செயல், ஹெச்.ஆர். (Human resource) என்னும் ஒருவித பிசினஸ் மேனேஜ்மென்ட் என்று அவர் மேனேஜர் விளக்கினார். மேனேஜ்மென்ட் தொடர்பான புத்தகங்கள் தந்து படிக்கச் சொன்னார். பிரஹலாத்துக்குப் புதிய உலகத்தின் கதவுகள் திறந்தன. இதுவே தன் வாழ்க்கைப் பாதை என்று முடிவு செய்தார். யூனியன் கார்பைட் வேலையும் அவருக்குப் பிடித்தமானதாக இருந்தது. ஆகவே, வேலையா, மேற்படிப்பா என்று மனதில் கேள்விகள்.

வேலையில் தொடர இன்னொரு காரணம், அப்போது இந்தியாவில் முதுகலை மேனேஜ்மென்ட் படிப்பு இருக்கவில்லை. அமெரிக்கா போய்ப் படிக்க பிரஹலாத்திடம் பண வசதியும் இல்லை.

Vikatan

1964. அகமதாபாதில், அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் கூட்டுறவோடு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட், பிசினஸ் நிர்வாக முதுகலைப் படிப்பு ஆரம்பம். பிரஹலாத் விண்ணப்பித்தார். அட்மிஷன் கிடைத்தது.

பிரிவு எத்தனை சோகமானது என்பதை பிரஹலாத் உணர்ந்தார். வேலையை அவர் ராஜினாமா செய்யப்போகிறார் என்றவுடன், தொழிலாளிகள் கனத்த நெஞ்சம், பனித்த கண்களுடன், அவருக்கு நினைவுப் பரிசாகத் தங்கச் சங்கிலியைத் தந்தார்கள்.

அகமதாபாதில் முதுகலைப் படிப்பை முடித்த பிரஹலாத் அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் டாக்டரேட் முடித்தார். அப்பாவின் கனவை நிறைவேற்றிய ஆத்ம திருப்தி. ஃபிசிக்ஸ் இல்லை, மேனேஜ்மென்ட் என்னும் ஒரே ஒரு வித்தியாசம்தானே? கிருஷ்ணாராவும் செம ஹேப்பி.

Vikatan

மேனேஜ்மென்ட் பேராசிரியராகவும் ஆலோசகராகவும் வெற்றிநடை போட்ட பிரஹலாத்தின் தலையில் ஆயிரம், ஆயிரம் கிரீடங்கள். மலையெனக் குவிந்த புகழ்மாலைகள். ஆனால், இவை அனைத்தையும்விட அவர் போற்றிப் பாதுகாத்தது, யூனியன் கார்பைட் தொழிலாளிகள் தந்த தங்கச் சங்கிலி. ஏனென்றால், அது, அவர்களின் உழைப்பு, வியர்வு, உன்னதமான அன்பின் அடையாளம், பிரஹலாத் வாழ்வின் திருப்புமுனை!

பிரஹலாத்தின் சித்தாந்தங்களில் இரண்டு மிக முக்கியமானவை.

மையத் திறமை (Core Competence):

எல்லா நிறுவனங்களுக்கும் தனித்துவமான மையத் திறமைகள் என்று சில இருக்கும். ஒரு நிறுவனம் வெற்றிபெற வேண்டுமானால், இந்தத் திறமைகளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, ஒரு நிறுவனத்துக்கு உற்பத்தி செய்யும் திறமை அபரிமிதமாக இருந்தால், அந்த வேலையைச் சிறப்பாக செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு, மார்க்கெட்டிங்கையும் செய்வேன் என்று கிளம்பி, நேரத்தை வீணடிக்கக் கூடாது.

The new age of innovation
The new age of innovation

பிரமீடின் அடிப்பக்கத்தில் அதிர்ஷ்டம் (Fortune at the bottom of the Pyramid)

சாதாரணமாக, பொருளாதாரத்தில் உயர்மட்டத்தில் இருப்பவர்களையும் நடுத்தர வர்க்கத்தினர்களையும் குறிவைத்தே பொருள்களை நிறுவனங்கள் தயாரிக்கின்றன. ஆனால், இவர்களின் எண்ணிக்கையைவிட அடிமட்டத்தில் உள்ள மக்களின் எண்ணிக்கை மிக அதிகம். அப்படிப்பவர்களை இலக்காக வைத்து பொருள்களைத் தயாரித்து விற்றால், நல்ல லாபம் பெற முடியும். உதாரணமாக, 10 ரூபாய் கொண்ட ஒரு பொருளை ஒருவரிடம் விற்பதைவிட, அதை பத்துப் பாக்கெட்டுகளாகப் பிரித்து 1 ரூபாய்க்கு எளிதில் விற்றுவிடலாம்.

சி.கே.பிரஹலாத்தின் பிறந்த நாளான இன்று, அவரது பிசினஸ் மேனேஜ்மென்ட் பாடங்களை நாமும் கற்றுத் தேர்வோம்!