Published:Updated:

முதலீட்டைப் பரவலாக்கம் செய்யப் போறீங்களா? இந்த அம்சங்களை அவசியம் கவனியுங்கள்..!

முதலீடு

பிரீமியம் ஸ்டோரி

முதலீட்டின் மீதான ரிஸ்க்கைக் குறைத்து நியாயமான வருமானம் பெற ஒருவர் தனது முதலீட்டில் பரவலாக்கத்தை (Diversification) மேற்கொள்ள வேண்டும். முதலீட்டுப் பரவலாக்கம் என்பது, பல்வேறு சொத்துப் பிரிவுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்வதாகும். பல சொத்துகளில் பிரித்து முதலீடு செய்வதன்மூலம், உங்களின் முதலீட்டுக் கலவையை ‘ரிஸ்க் புரூப் போர்ட் ஃபோலியோ’வாக (Risk-proof portfolio) மாற்றலாம். அதாவது, ஒரு பிரிவு முதலீடு வருமானம் தரவில்லை என்றாலும், இன்னொரு பிரிவு முதலீடு வருமானம் கொடுக்கும் என்பதாகும்.

கா.ராமலிங்கம் 
நிதி ஆலோசகர், 
Holisticinvestment.in
கா.ராமலிங்கம் நிதி ஆலோசகர், Holisticinvestment.in

பங்கு சார்ந்தது (நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு கள்), கடன் சந்தை சார்ந்த முதலீடுகள் (ஃபிக்ஸட் டெபாசிட்டுகள், கடன் ஃபண்டு கள்), தங்கம் (தங்கக்கட்டிகள், நாணயங்கள், கோல்டு இ.டி.எஃப், கோல்டு சேவிங்ஸ் ஃபண்டுகள்), ரியல் எஸ்டேட் (மனை, வீடு, வர்த்தகக் கட்டடங்கள், ரெய்ட்ஸ்) போன்றவை முக்கியமான சொத்துப் பிரிவு களாகும். இந்த நான்கு வகை சொத்துகளும் ஒரே நேரத்தில் ஏற்றம் அல்லது இறக்கம் காண வாய்ப்பு இல்லை.

பொதுவாக, பங்குச் சந்தை வீழ்ச்சியில் இருக்கும்போது தங்கத்தின் விலை உயர்வில் இருக்கும். அதே நேரத்தில், தங்கத்தின் விலை இறங்கியிருக்கும் காலத்தில் பங்குச் சந்தை ஏற்றத்தில் இருக்கும். எனவே, அனைத்து வகை சொத்துப் பிரிவுகளையும் கொண்ட முதலீட்டுக் கலவை எப்போதும் பணவீக்க விகிதத்தைத் தாண்டி 12 சதவிகிதத்துக்குமேல் வருமானம் தருவதாக இருக்கும்.

முதலீட்டைப் பரவலாக்குவது எப்படி?

பொதுவாக, பல வகைப்பட்ட முதலீடு களைக் கொண்டிருக்கும் போர்ட் ஃபோலியோவாக இருப்பது ரிஸ்க்கைக் குறைக்க உதவுகிறது. முதலீட்டுக் கலவையில் எத்தனை திட்டங்கள் இருக்கின்றன என்பதைவிட, தரமான திட்டங்கள் எத்தனை இருக்கின்றன என்பது முக்கியம். மிகக் குறைவான அல்லது அதிகப்படியான முதலீட்டுப் பரவலாக்கம், முதலீட்டாளர் எதிர்பார்க்கும் அதிக வருமானத்தைக் கொடுக்காது. சிறந்த வருமானத்துக்காக நீங்கள் ஒரு சமநிலையான மற்றும் நல்ல பரவலாக்க முதலீட்டுக் கலவையை வடிவமைக்க வேண்டும்.

பரவலாக்கம் ஏன் கட்டாயம்?

முதலில், முதலீட்டுப் பரவலாக்கம் ரிஸ்க் அளவைக் கணிசமாகக் குறைக்கிறது. இரண்டாவதாக, வெவ்வேறு சொத்துப் பிரிவுகளின் வருமானம் வெவ்வேறு கட்டங்களில் வேறுபடுகிறது. இந்த ஆண்டு ஒரு சொத்துப் பிரிவு நெகட்டிவ் வருமானத்தைத் தந்திருக்கிறது எனில், மற்ற முதலீடுகள் லாபத்தில் சிறப்பாகச் செயல்பட்டிருக்க வாய்ப்புண்டு. முதலீட்டுக் கலவையின் இந்தப் போக்கு முதலீட்டாளரின் இழப்பு மற்றும் ரிஸ்க்கைக் குறைத்திருக்கும்.

ஓர் உதாரணத்துடன் பார்த்தால் எளிதில் விளங்கும். கடந்த ஆண்டு வரை தங்கம் நல்ல வருமானத்தைத் தந்தது. ஆனால், சமீப காலமாக நெகட்டிவ் வருமானம் தரத் தொடங்கியிருக்கிறது. அதேசமயம், பங்குச் சந்தை, ஈக்விட்டி ஃபண்ட் முதலீடுகள் கணிசமான வருமானத்தைத் தரத் தொடங்கி இருக்கின்றன. முதலீட்டைப் பங்கு, கடன், தங்கம், ரியல் எஸ்டேட் சார்ந்தது எனப் பிரித்து மேற்கொண்ட முதலீட்டாளர்கள் இப்போது பணவீக்க விகிதத்தைத் தாண்டிய நல்ல வருமானத்துடன் உள்ளனர். எனவே, முதலீட்டுப் பரவலாக்கம் ஒவ்வொருவருக்கும் கட்டாயம் தேவை.

முதலீட்டைப் பரவலாக்கம் செய்யப் போறீங்களா? இந்த அம்சங்களை அவசியம் கவனியுங்கள்..!

முதலீட்டை எப்படிப் பரவலாக்கம் செய்வது?

பல்வேறு துறைளைச் சார்ந்த நிறுவனப் பங்குகளை வாங்குவதன்மூலம் பங்குகளில் முதலீட்டுப் பரவலாக்கத்தை எளிதாகச் செய்ய முடியும். அதே நேரத்தில், ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாத துறைகளைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். இப்படிச் செய்யும்போது, ஒரு துறையின் வீழ்ச்சி என்பது பங்கு முதலீட்டுக் கலவையின் வருமானத்தை அதிகம் பாதிக்காது. உதாரணமாக, உள்கட்டமைப்பு நிறுவனப் பங்குகள் மற்றும் (Infrastructure stocks), பார்மா பங்குகளில் (Pharmacy stocks) முதலீடு செய்திருந்தால், ஒரே நேரத்தில் இரு துறைகளும் அவற்றின் நிறுவனப் பங்குகளும் மோசமாகச் செயல்பட வாய்ப்பு மிகக் குறைவு. அதே நேரத்தில், ரியல் எஸ்டேட் மற்றும் சிமென்ட் துறைகளில் ஒன்று பாதிப்படைந்தால், மற்றதும் பாதிப்படையும். ஒரே நேரத்தில் பாதிப்பு ஏற்படும் இரண்டு துறைகளில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் வேலைபார்க்கும் துறைசார்ந்த பங்குகளில் முதலீடு செய்வதையும் தவிர்க்கலாம்.

இதேபோல், ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு என்று வரும்போது, மல்ட்டிகேப், ஃபிளெக்ஸிகேப், லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால் கேப் ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்வதன்மூலம் ரிஸ்க்கைப் பரவலாக்கம் செய்து, அதைக் குறைத்து, கூடுதலான வருமானத்தைப் பெற முடியும்.

அஸெட் அலொகேஷன் எவ்வாறு உதவுகிறது?

பல்வேறு சொத்துப் பிரிவுகளில் முதலீடு செய்வது முதலீட் டாளர்களின் நிதி இலக்குகளை நிறைவேற்ற உதவுகிறது.

கடன் பத்திரம்: நிலையான, உறுதியான வருமானத்துக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

நிறுவன பங்குகள் / ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்: முதலீட்டுக் கலவையின் வருமான வளர்ச்சிக்கு உதவுகிறது. நீண்ட காலத்தில் செல்வம் சேர்க்க, பெரிய நிதி இலக்குகளை நிறைவேற்ற உதவுகிறது.

எளிதில் பணமாக்கக்கூடிய முதலீடு: வங்கி எஃப்.டி-கள், லிக்விட் ஃபண்டுகள் போன்றவை எளிதில் பணமாக்கக்கூடிய முதலீடுகளாக இருப்பதால், அவை முதலீட்டாளரின் சுலப பணப் புழக்கத்துக்கு உத்தரவாதம் அளிக்கின்றன.

இன்கம் மியூச்சுவல் ஃபண்டுகள்: வருமான ஸ்திரத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஓரளவுக்கு நிலையான வருமானம் கிடைக்க உதவுகிறது.

பரவலாக்கப்பட்ட போர்ட் ஃபோலியோவின் நன்மைகள்...

* இது முதலீட்டுக் கலவையின் வருமானத்தைப் பெருக்க உதவுகிறது.

*முதலீட்டுப் பரவலாக்கம் என்பது ரிஸ்க்கைப் பரவலாக்கம் செய்வது என்று பொருள். இது முதலீடு மீதான ரிஸ்க்குகளைக் குறைக்க உதவுகிறது.

* இது உங்கள் போர்ட்ஃபோலி யோவில் பணப் புழக்கத்தை அதிகரிக்க உதவுகிறது.

* சில நேரங்களில் ஒரே ஒரு திட்டத்தில் முதலீடு செய்திருப் பது அதிக ரிஸ்க் மற்றும் குறைந்த வருமானத்தைக் கொடுக்கக் கூடும். பரவலாக்கப்பட்ட போர்ட்ஃபோலியோ விரும்பிய வருமானம் கிடைக்கும் என்பதை உறுதி செய்வதாக இருக்கிறது.

போர்ட்ஃபோலியோ பரவலாக்கம் செய்த பிறகும் ரிஸ்க்குகள் என்ன?

பரவலாக்கப்பட்ட போர்ட் ஃபோலியோ சில ரிஸ்க்குகளைக் கொண்டுள்ளன. உதாரணமாக, குறுகிய காலத்தில் நிறுவனப் பங்குகளின் / ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் வருமானம் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்.

போர்ட்ஃபோலியோவை எவ்வளவுதான் பரவலாக்கியிருந்தாலும், நாடுகளுக்கு இடையேயான போர், கொரோனா கிருமி பரவல், பொருள்களின் விலை மிக அதிகமாக ஏற்றம் காணுதல், பன்னாட்டு நிதிச் சிக்கல்கள், சமூக பொருளாதாரச் சிக்கல்கள் போன்ற சூழ்நிலைகளில் பங்குச் சந்தையில் ஏற்படும் மாற்றம் மூலம் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு எப்போதும் உண்டு.

அதிக முதலீட்டுப் பரவலாக்கத்தால் வரும் ஆபத்துகள்...

உதாரணமாக, ஏகப்பட்ட துறைகளிலும் பங்கு களிலும் முதலீடு செய்து முதலீட்டுக் கலவையை மிகவும் பரவலாக்கினால், பங்குகளை நிர்வகிப்பதில் சிக்கல் ஏற்படக்கூடும். ஐந்தாறு துறைகளில் சுமார் 10 - 15 பங்குகளில் முதலீடு செய்வது சரியாக இருக்கும். முதலீட்டுத் தொகை குறைவாக இருக்கும்பட்சத்தில் 2 - 3 துறைகள், 5 - 6 பங்குகள் என இருந்தால் அவற்றைக் கண்காணிக்க எளிதாக இருக்கும்.

அதிகப்படியான பரவலாக்கம் முதலீடுகளைப் பராமரிப்பது மற்றும் நிர்வகிப்பதில் சிக்கலை உருவாக்குகிறது. ஒரு போர்ட்ஃபோலியோவில் அதிகப்படியான பங்குகள் இடம்பெற்றிருந்தால், முதலீடுகளுக்குக் குறிப்பிடத்தக்க மதிப்பை அளிக்காது. மேலும், பல்வேறு முதலீடுகளைத் தொடர்ந்து கண்காணிப்பது கடினமாக இருக்கும்.

அதிகப்படியான பரவலாக்கம் முதலீட்டுக் கலவையைப் பராமரிக்கும் செலவை அதிகரிக்கிறது. பொதுவாக, வங்கிக் கட்டணம், நிதி மேலாளர் கட்டணம், பங்குத் தரகுக் கட்டணம், டீமேட் பராமரிப்புக் கட்டணம் போன்ற பரிவர்த்தனை செலவுகளை அதிகரிக்கிறது. அதிகப்படியான முதலீட்டுப் பரவலாக்கம் வருமானத்தைக் குறைத்து விடும். ஒரு சில சிறந்த முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, அதிக திட்டங்களில் முதலீடு செய்யும்போது சுமாராகச் செயல்படும் முதலீட்டுத் திட்டங்களும் போர்ட் ஃபோலியோவில் இடம்பெறக்கூடும். இது ஒட்டுமொத்த போர்ட்ஃ போலியோவின் வருமானத்தைக் குறைத்துவிடும்.

மிகவும் குறைவாகப் பரவலாக்கம் செய்தால்...

நீங்கள் உங்கள் போர்ட்ஃபோலியோவைப் பரவலாக்கம் செய்யவில்லை எனில், மூலதனம் மற்றும் வருமானத்தை இழக்கும் ரிஸ்க் அதிகரிக்கும். மேலும், குறைவான பரவலாக்கம் அதிக ரிஸ்க்குக்கு வழிவகுக்கும். போர்ட்ஃபோலியோ பரவலாக்கம் செய்வதற்குப் பின்னால் உள்ள முக்கியமான குறிக்கோள் ரிஸ்க்கைப் பரவலாக்குதல் ஆகும். குறைந்த ஏற்ற இறக்கத்துடன் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைத் தாண்டி நல்ல வருவாயைப் பெறுவது தான் முதலீட்டுக் கலவையைப் பரவலாக்குவதுதான் முக்கிய நோக்கம்.

புதிதாக முதலீட்டுக் கலவையை உருவாக்கப்போகீறீர்கள் எனில், மேற்கண்ட அம்சங்களை அலசி ஆராய்ந்து அதன்படி செயல்படுங்கள். ஏற்கெனவே முதலீட்டுக் கலவை இருக்கிறது எனில், அவற்றை மேற்கண்ட அம்சங்களுடன் பொருத்திப் பாருங்கள்; தேவைப்பட்டால் மாற்றங்களை மேற்கொண்டு ரிஸ்க்கைக் குறைத்து அதிக லாபம் ஈட்டத் தவறாதீர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு