நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

வேல்யூ ஃபண்டுகளில் யாரெல்லாம் முதலீடு செய்யலாம்? எவ்வளவு வருமானம் எதிர்பார்க்கலாம்?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

கேள்வி - பதில் - Q & A

ஆர்.ராஜன், தூத்துக்குடி

வேல்யூ ஃபண்டுகள் யாருக்கு ஏற்றவை? இவற்றின் மூலம் எவ்வளவு வருமானம் எதிர்பார்க்கலாம்?

த.முத்துகிருஷ்ணன், சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர்

“ஒருவரின் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக் கலவையில் வேல்யூ ஃபண்ட் இடம்பெறுவது நல்லது. இந்த ஃபண்டின் பெயருக்கேற்ற மாதிரி, அதில் முதலீடு செய்யப்பட்டுள்ள பணத்துக்கு நல்ல மதிப்பை வழங்குவதாக உள்ளது. உதாரணமாக, ரூ.100 மதிப்புள்ள ஒரு பொருளை ரூ.50-க்கு வாங்குவதுதான் வேல்யூ பையிங். அதாவது, தள்ளுபடி விலையில் பொருள்களை வாங்குவது போன்றது.

நீங்கள் பராக்பரிக் ஃபிளெக்ஸிகேப் போன்ற வேல்யூ ஃபண்டுகளை முதலீட்டுக்குக் கவனிக்கலாம். இந்த ஃபண்ட் அனைவருக்கும் ஏற்றதாக உள்ளது. நீண்டகாலத்தில் இந்த ஃபண்டின் மூலம் ஆண்டுக்குச் சராசரியாக சுமார் 12% வருமானம் எதிர்பார்க்கலாம்.”

கலைச்செல்வன், குன்னக்குடி

நாங்கள் அண்ணன், தம்பிகள் மொத்தம் மூன்று பேர். எங்கள் கடைசித் தம்பி 15 ஆண்டுகளுக்கு முன் கோயில் திருவிழாவில் அவனுக்கு 8 வயது இருக்கும்போது காணாமல் போய்விட்டான். இதற்கு இடையில் எங்கள் அப்பா அவருடைய சொத்துகளை இரண்டு மகன்களுக்கும் கொடுக்க எண்ணி, எங்கள் இருவருக்கும் சமமாகப் பிரித்து எழுதிக் கொடுத்தார். இதற்கிடையில் கடைசித் தம்பி கடந்த மாதம் திரும்ப வந்துவிட்டான். சொத்தில் தனக்குப் பங்கு வேண்டும் என்று கேட்டு எங்களிடம் சண்டை போடுகிறான். எங்கள் அப்பா இப்போது உயிருடன் இல்லை. நாங்கள் எப்படி தம்பிக்குப் பங்கு கொடுப்பது?

டி.ஜீவா, வழக்கறிஞர், சென்னை

“மூவரும் சுமுகமாகப் பேசி சொத்தைப் பிரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் தம்பிக்கு உண்டான பாகத்தை செட்டில்மென்ட் மூலம் கொடுக்கலாம். அதற்கு பத்திரப் பதிவு கட்டணம் அதிகம் இல்லை. ஒவ்வொரு பாகத்துக்கும் முத்திரைக் கட்டணம் சொத்தின் மதிப்பில் 1% அல்லது அதிகபட்சம் ரூ.25,000 செலுத்த வேண்டிவரும். மேலும், ஒவ்வொரு பாகத்துக்கும் பதிவுக் கட்டணம் சொத்தின் மதிப்பில் 1% அல்லது அதிக பட்சம் ரூ.4,000 செலுத்த வேண்டிவரும்.”

கமலநாதன், மயிலாடுதுறை

நான் எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்டில் மாதம் ரூ.30,000 முதலீடு செய்யலாம் என இருக்கிறேன். என் நண்பர் ஒருவர் அந்தப் ஃபண்டில் மாதம் ரூ.25,000 மட்டும்தான் முதலீடு செய்ய முடியும் என்கிறார். இது உண்மையா, எதற்கு இப்படி வரம்பு வைத்திருக்கிறார்கள்?

சி.பாரதிதாசன், ஆலோசகர், https://www.wmsplanners.com/

“உங்கள் நண்பர் சொல்வது உண்மைதான். இந்த ஃபண்டின் மூலம் நிர்வகிக்கப் படும் தொகை மிகவும் அதிகரித்துள்ளதால் (சுமார் ரூ. 7,500 கோடி), இப்படியொரு கட்டுப்பாட்டைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஸ்மால்கேப் ஃபண்டுகளில் ரிஸ்க் அதிகம் என்பதாலும் முதலீட்டுத் தொகைக்கு கட்டுப்பாடு கொண்டு வரப் பட்டிருக்கிறது. 2020 செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு, இந்த ஃபண்டில் மொத்த முதலீட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது. அப்போது ஒரு பான் நம்பருக்கு மாதம் ரூ.5,000 மட்டுமே முதலீடு செய்ய முடியும் எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இது இப்போது ரூ.25,000 அதிகரிக்கப்பட்டிருக்கிறது.”

த.முத்துகிருஷ்ணன்,  சி.பாரதிதாசன்,  வி.சீனிவாசன், டி.ஜீவா, அனிதா மோகன், வி.எஸ்.சரண்சுந்தர்
த.முத்துகிருஷ்ணன், சி.பாரதிதாசன், வி.சீனிவாசன், டி.ஜீவா, அனிதா மோகன், வி.எஸ்.சரண்சுந்தர்

எஸ்.தேவி, கல்லிடைக்குறிச்சி

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு முத்திரைக் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதனால், லாபம் குறைந்துவிடாதா?

வி.சீனிவாசன், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், சீனு இன்வெஸ்ட்மென்ட்ஸ், திருவாரூர்

‘‘முத்திரைக் கட்டணம் (Stamp duty) என்பது அனைத்து வகையான மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கும் விதிக்கப்படுகிறது. இது மொத்த முதலீட்டுத் தொகையில் 0.005 சதவிகித மாக இருக்கிறது. அதாவது, ரூ. 1 லட்சம் முதலீடு செய்யப் படும்போது ரூ.5 முத்திரைக் கட்டணமாக எடுத்துக் கொள்ளப்படும்.

இது ஒரு மியூச்சுவல் ஃபண்டிலிருந்து இன்னொரு ஃபண்டுக்கு முதலீட்டை மாற்றுதல், சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் மூலம் முதலீட்டை ஒரு ஃபண்டிலிருந்து மற்றொரு ஃபண்டுக்கு மாற்றுதல் செய்யும்போதும் இந்த முத்திரைக் கட்டணம் உண்டு. இந்தச் சின்ன தொகையால் உங்களின் லாபம் குறைந்து விடாது. இது சட்டப்படியான கட்டணம் என்பதால், நாம் இதைத் தவிர்க்க முடியாது.”

அ.காளிமுத்து, மீனாட்சிபுரம், மதுரை

என் வயது 30. என் ஓய்வுக் காலத்துக்கு மாதம் ரூ.10,000 முதலீடு செய்ய விரும்புகிறேன். ஆக்டிவ் ஃபண்ட் அல்லது பேசிவ் ஃபண்ட் எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எந்தெந்தத் திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்பதையும் சொல்லவும்?

அனிதா மோகன், நிதி ஆலோசகர், www.investmentsolution.co.in

“உங்களின் ஓய்வுக் காலத்துக்கு இன்னும் கிட்டத் தட்ட 30 ஆண்டுகள் இருக் கின்றன. அந்த வகையில், முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுப்பதன் மூலம் அதிக வருமானம் பெற முடியும்.

பேசிவ் ஃபண்டுகளைவிட ஆக்டிவ் ஃபண்டுகளில் ரிஸ்க் அதிகம். கூடவே, அதிக வருமானத்துக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, ஆக்டிவ் ஃபண்டுகளில் முதலீடு செய்து வாருங்கள்.

ஸ்மால் மற்றும் மிட்கேப் ஃபண்டுகளில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகளில் முதலீடு செய்யுங்கள். கோட்டக் ஸ்மால்கேப் ஃபண்ட், கோட்டக் எமெர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட், யு.டி.ஐ மாஸ்டர் ஷேர் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்து வரலாம்."

ஆ.வேலுசாமி, சென்னை - 23

வரிச் சேமிப்பு திட்டங்களில் 80சி பிரிவின் கீழ் எந்த முதலீட்டுக்கு என்ன லாக்இன் பிரீயட் எனச் சொல்ல முடியுமா?

வி.எஸ்.சரண்சுந்தர், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்

“பி.எஃப், வங்கி எஃப்.டி, என்.எஸ்.சி, ஆயுள் காப்பீடு பாலிசி, யூலிப் பாலிசி, வீட்டுக் கடன் அசல், மூத்தக் குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஆகியவை ஐந்து ஆண்டுகள் லாக்இன் காலம் கொண்ட திட்டங்களாகும். பி.பி.எஃப் 15 ஆண்டுகள் லாக்இன் காலம் கொண்ட திட்டமாகும். இ.எல்.எஸ்.எஸ் மியூச்சுவல் ஃபண்டுக்கு மூன்று ஆண்டுகள் ஆகும். ஒற்றை பிரீமிய ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கு இரண்டு ஆண்டுகள் எனவும் லாக்இன் பீரியடு இருக்கிறது. நீங்கள் எந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதாக இருந்தாலும், அதில் லாக் இன் பீரியடு ஏதும் உள்ளதா, உள்ளது எனில் எத்தனை ஆண்டுகள் என்பதைத் தெரிந்துகொண்டு முதலீடு செய்வது அவசியம்.”

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. navdesk@vikatan.com