
கேள்வி - பதில்
கீர்த்தனா, கீழக்கடையம், திருநெல்வேலி.
பணி ஓய்வுக்காலத்துக்குத் திட்டமிடும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன?
ஜி.சோலை, நிறுவனர், பசிபிக் வேலி ஃபைனான்ஷியல் சர்வீஸ், கோயம்புத்தூர்.
“பணி ஓய்வுக்காலத்துக்கான முதலீட்டை எவ்வளவு சீக்கிரம் தொடங்குகிறோமோ, அவ்வளவு நல்லது. நீங்கள் இன்னும் ஆரம்பிக்க வில்லை எனில், உடனே ஆரம்பித்துவிடுங்கள். செலவுகளைக் குறைத்து முடிந்தவரை அதிகமாக முதலீடு செய்து வாருங்கள்.
ஓய்வுக்காலத் தேவைக்கான பணம் சேர்க்க செய்யும் முதலீடுகள், வருமான வரிச் சேமிப்பு திட்டங்களாக இருந்தால், முதலீடு செய்யும் போது வரி சேமிக்கப்படுவதுடன், கணிசமான தொகுப்பு நிதியும் சேர வாய்ப்புண்டு.
ஓய்வுக்காலத்துக்கான முதலீடு என்று வரும்போது, உங்களுக்குப் புரியாத எந்தத் திட்டத்திலும் பணத்தைப் போடாதீர்கள். மாதம்தோறும் மிக அதிக வருமானம் தருகிறோம் என்கிற பொன்ஸி திட்டங்களிலும் முதலீடு செய்யாதீர்கள். இதில் முதலுக்கே மோசம் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.
நெறிமுறைப்படுத்தப்பட்டிருக்கும் வங்கி, தபால் அலுவலகச் சேமிப்பு, நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றில் ரிஸ்க் எடுக்கும் திறன், பணி ஓய்வுக்கு இன்னும் எவ்வளவு காலம் இருக்கிறது என்பதைப் பொறுத்து கலந்து முதலீடு செய்து வரலாம். முக்கியமாக, தொடர்ந்து முதலீடு செய்துவருவது மிக அவசியமாகும்.”

@ சு.சிவ சண்முகவேல்.
என் வயது 63. நான் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முறையில் மாதம் 6,000 ரூபாயை 5 வருடங்களுக்கு சேமிக்க எண்ணியுள்ளேன். எந்தெந்தத் திட்டங்களில் முதலீடு செய்யலாம்? நேரடியாக நான் டீமேட் கணக்கு மூலம் டைரக்ட் பிளானில் முதலீடு செய்ய திட்ட மிட்டுள்ளேன். இப்படிச் செய்வது லாபகரமாக இருக்குமா?
வி.கோபாலகிருஷ்ணன், நிறுவனர், www.moneyavenues.in
“உங்களின் வயதைக் கணக்கில் கொண்டு பார்க்கும்போது மிக அதிகப்படியான ரிஸ்க் இல்லாத, தரமான புளூசிப் பங்குகளைக் கொண்ட லார்ஜ்கேப் ஈக்விட்டி திட்டங்களில் எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்வது நீண்ட காலத்தில் நல்ல பலனைத் தரும். விநியோகஸ்தர் மூலம் முதலீடு செய்யாமல் நேரடியாக முதலீடு செய்யும் டைரக்ட் பிளானில் முதலீடு செய்வது நல்ல அணுகுமுறைதான். இதில் செலவு விகிதம் 0.5 - 1% குறைவாக இருக்கும். இருந்தாலும், ஓர் அனுபவம்மிக்க முதலீட்டு ஆலோசகரின் துணைகொண்டு முதலீடு செய்வது சிறப்பாக இருக்கும். முதலீடு செய்வதுடன், நின்றுவிடாமல் அவ்வப்போது அந்த முதலீடுகளின் போக்கை ஆறு மாதம், ஆண்டுக்கு ஒரு முறை ஆராய்வது முக்கியமாகும்.”

@ பத்மநாபன், சிங்கப்பூர்.
நான் வெளிநாட்டில் வசித்து வரும் என்.ஆர்.ஐ (NRI). என் மகனை என்.ஆர்.ஐ கோட்டாவில் இந்தியாவில் தனியார் கல்லூரியில் சேர்த்துள்ளேன். அதற்கான கல்விக் கட்டணத்தை எனது வெளிநாட்டு வங்கிக் கணக்கிலிருந்து டாலரில் கட்டியுள்ள நிலையில், வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்போது கல்லூரிக் கட்டணத்தை வருமான வரி பிரிவு 80C–யில் வரிச் சலுகை பெற முடியுமா? முடியும் எனில், அதிகபட்சமாக எவ்வளவு க்ளெய்ம் செய்ய முடியும்?
வி.தியாகராஜன், ஆடிட்டர், www.bizlane.in
“நீங்கள் உங்களின் என்.ஆர்.ஐ வருமான வரிப் படிவத்தைத் தாக்கல் செய்யும்போது உங்களின் மகனுக்காக இந்தியா வின் தனியார் கல்லூரியில் செலுத்தும் கல்விக் கட்டணத்தை (Tuition fees) வருமான வரிப் பிரிவு 80சி-யின்கீழ் உங்களின் மொத்த வருமானத்தில் இருந்து கழித்துக்கொள்ளலாம். நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை கழித்துக் கொள்ளலாம். கல்விக் கட்ட ணத்தை டாலரில் செலுத்தியதால், மேற்சொன்ன வருமான வரிச் சலுகையில் எவ்வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை.”
சுதா, திருவான்மியூர், சென்னை.
நாங்கள் மூன்று சகோதரர்கள். எங்கள் தந்தை நாங்கள் வசித்து வந்த வீட்டை எங்கள் மூவருக்கும் உயில் எழுதி வைத்திருக்கிறார். எங்கள் தாய் மற்றும் தந்தை இப்போது உயிருடன் இல்லை. இந்த வீட்டை என் தந்தை 1981-ம் ஆண்டு அவருடைய சுய சம்பாத்தியத்தில் வாங்கியுள்ளார். இதன் விலைவாசிக் குறியீடு (Cost of Indexation) மதிப்பு ரூ.5 லட்சம் எனக் கணக்கிட்டுள்ளோம். நாங்கள் வேறு ஊர்களில் வசிப்பதால், இந்த வீட்டை 2023 பிப்ரவரியில் ரூ.75 லட்சத்துக்கு விற்கத் திட்டமிட் டுள்ளோம். நாங்கள் வருமான வரி கட்ட வேண்டி வருமா?

கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர், சென்னை.
“உங்கள் தந்தையிடமிருந்து உங்களுக்கு வந்த சொத்தை நீங்கள் (வாரிசுகள்) விற்கும்போது வருமான வரியைக் கட்டவேண்டி வரும். 01.04.2001 தேதிப்படி, விலைவாசி குறியீடு 100 ஆகும். விற்பனை மதிப்புக்கான குறியீடு 331 ஆகும். 01.04.2001 தேதிப்படி அதாவது, உங்கள் சொத்தின் விலைவாசி குறியீடு மதிப்பு ரூ.5 லட்சம். விற்பனை விலை ரூ.75 லட்சம் ஆகும். இப்போது பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு சொத்து வாங்கிய விலை (Indexed Cost of Asset) - 5,00,000/100 X 331 = 16,55,000.
மூலதன ஆதாயம் = 75,00,000 - 16,55,000 = 58,45,000.
ஒருவருக்கான மூலதன ஆதாயம் 58,45,000 / 3 = ரூ.19,48,333 ஆகும். இந்தத் தொகைக்கு நீண்ட கால மூலதன ஆதாயம் 20% அதாவது, ரூ.3,89,667 ஆகும். இதற்கு கல்வி மற்றும் ஆரோக்கியத் தீர்வை 4% என ரூ.15,587 கட்ட வேண்டும். அதாவது, ஒருவர் மொத்தம் ரூ.4,05,254 நீண்ட கால மூலதன ஆதாய வரியாகக் கட்ட வேண்டும்.இந்த வரியைத் தவிர்க்க வருமான வரிப் பிரிவு 54EC-யின் கீழ் என்.ஹெச்.ஏ.ஐ மற்றும் ஆர்.இ.சி நிறுவனங்கள் வெளியிடும் உள் கட்டமைப்பு கடன் பத்திரங்களில் (Infrastructure Bonds) முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டின் ‘லாக்இன் பீரியட்’ ஐந்தாண்டு காலம் ஆகும். வட்டி வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும்.”
கே.பாலகிருஷ்ணன், சென்னை.
பங்குச் சந்தையில் டாடா மோட்டார்ஸ் பங்குக்கும் டாடா மோட்டார்ஸ் டி.வி.ஆர் பங்குக்கும் உள்ள வித்தியாசம் என்ன, இன்றைய சூழலில் எதில் முதலீடு செய்யலாம்?
எல்.அர்ஜூன், செபி பதிவு பங்குச் சந்தை ஆலோசகர், https://flyingcalls.com
“மாறுபட்ட வாக்குரிமை (Differential Voting Right - DVR) பங்குகளை வெளியிட்ட முதல் இந்திய நிறுவனம் டாடா மோட்டார்ஸ் ஆகும். மேலும், இவை வேறுபட்ட டிவி டெண்ட் உரிமைகளுடன் வழங்க அனுமதிக்கப்படும் பங்குகள். டி.வி.ஆர் பங்குகள் இரண்டு விதத்தில் சாதாரண பங்குகளிலிருந்து வேறுபட்டவையாக உள்ளன. முதலா வதாக, அவை சாதாரண பங்குகளுடன் ஒப்பிடும்போது குறைந்த வாக்குரிமையை வழங்குகின்றன. அதாவது, 10 பங்குகளுக்கு 1 வாக்குரிமைதான் உண்டு. நிறுவனத்தின் உரிமை குறித்த கட்டுப்பாடு நீர்த்துப் போகாமல் பங்குச் சந்தையில் பணம் திரட்ட விரும்பும் நிறுவனங்களுக்கு டி.வி.ஆர் பங்கு வெளியீடு பயனுள்ளதாக இருக்கும்.
இரண்டாவதாக, குறைந்த வாக்களிக்கும் உரிமையை ஈடுசெய்ய இந்த டி.வி.ஆர் பங்குகளுக்கு வழக்கமான பங்குகளுக்குத் தரப்படும் டிவிடெண்டைவிட, 10% - 20% அதிக டிவிடெண்ட் வழங்கப்படுகிறது. டி.வி.ஆர் பங்கு தாரர்களுக்கு சாதாரண பங்குதாரர்களைப் போலவே, நிறுவனத்தின் சொத்துகள், பொறுப்புகள், லாபங்கள், இழப்புகளில் சம உரிமை உண்டு. நீங்கள் அதிக டிவி டெண்ட் தொகை பெற விரும்பினால் டாடா மோட்டார்ஸ் டி.வி.ஆர் பங்குகளிலும், ரிஸ்க் எடுக்கும்பட்சத்தில் டாடா மோட்டார்ஸ் வழக்கமான பங்குகளிலும் முதலீடு செய்யலாம்.”