பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

தொடர்ந்து உயரும் அமெரிக்க வட்டி விகிதம்... இந்திய சந்தையை பாதிக்குமா..?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

மாரிமுத்து, ஆலந்தூர், சென்னை.

என் வயது 25. தகவல்தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து வருகிறேன். என் ஓய்வுக் காலத்துக்காக ஐ.டி இ.டி.எஃப்பில் (IT ETF) தொடர்ந்து முதலீடு செய்து வரலாமா, வேறு ஃபண்டு களைக் கவனிக்கலாமா?

த.முத்துகிருஷ்ணன், சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர்.

“செக்டோரல் மற்றும் தீமெட்டிக் சார்ந்த ஃபண்டுகள், இண்டெக்ஸ் ஃபண்டுகள், இ.டி.எஃப் முதலீடுகள் அதிக ரிஸ்க் கொண்டவை என்பதால், அவை உங்களுக்கு சரியாக இருக்குமா என்று பார்த்து முதலீடு செய்வது அவசியம். ஐ.டி இ.டி.எஃப் முதலீடும் அப்படிப் பட்டவையே. எனவே, நல்ல டைவர்சிஃபைட் இண்டெக்ஸ் ஃபண்டைத் தேர்வு செய்து மாதம்தோறும் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், நீண்ட காலத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புண்டு.”

தொடர்ந்து உயரும் அமெரிக்க வட்டி விகிதம்... இந்திய சந்தையை பாதிக்குமா..?

ஏழுமலை, விழுப்புரம்.

ஓர் உற்பத்தி நிறுவனத்தின் ஆர்டர்கள் அடிப்படை யில் (Order Book) அந்த நிறுவனப் பங்கில் முதலீடு செய்யலாமா, அப்படிச் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் எவை?

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்.

“ஒரு நிறுவனத்தின் ஆர்டர் புக் (Order book) என்பது அந்த நிறுவனம் பெற்றுள்ள பணி ஆணைகளைக் குறிக்கும். இதை அந்த நிறுவனம், குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். இது குறைந்தது மூன்று மாதங்கள் தொடங்கி பல ஆண்டுகள் வரை தொடரும். ஒரு நிறுவனத்துக்கு அதிக ஆர்டர்கள் இருக்கும்பட்சத்தில் அது அதன் முழு உற்பத்தித் திறனின் செயல்படும்; பொருள்களுக்கான தேவையும் அதிகமாக இருக்கும். அதிக ஆர்டர்கள் என்பது நிறுவனத் தின் வருவாயை நிலையாக அதிகரிக்க உதவும். இதன் தொடர்ச்சியாக பங்கின் விலை அதிகரிக்கக்கூடும். ஆனால், இந்த ஒரு காரணத்தின் அடிப்படையில் மட்டுமே ஒரு நிறுவனப் பங்கை முதலீட்டுக்குத் தேர்வு செய்யக் கூடாது. அந்த நிறுவனத்துக்குள்ள கடன்கள், நிகர லாப வளர்ச்சி எப்படி உள்ளது என்பது போன்ற காரணிகளை அலசி ஆராய்ந்துதான் முடிவு எடுக்க வேண்டும்.”

தொடர்ந்து உயரும் அமெரிக்க வட்டி விகிதம்... இந்திய சந்தையை பாதிக்குமா..?

ச.ஶ்ரீனிவாசன், அரக்கோணம்.

என் வயது 50. சமீபத்தில் விரும்ப ஓய்வு (VRS) பெற்றேன். எனக்கு ரூ.1 கோடி தொகை அந்த நிறுவனத்திடமிருந்து கிடைத்தது. இதற்கிடையே வேறு ஒரு நிறுவனத்தில் மாதச் சம்பளம் ரூ.2 லட்சத்துக்கு வேலை கிடைத்துள்ளது. நான் ரூ.1 கோடியை எனக்கு 60-வது வயதில் பென்ஷன் போல கிடைக்க எதில் முதலீடு செய்தால் லாபமாக இருக்கும்?

எம்.கண்ணன், ஆலோசகர், Radhaconsultancy.blogspot.com

“ஓய்வூதியம் பெறுவதற்காக இப்போது முதலீடு செய்வது நல்லது. பெரும்பாலான அரசு ஓய்வூதியத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு 60 வயது பூர்த்தியாக இருப்பது அவசியம். தங்களது வயது 50 என்பதால், இன்னும் ஒரு பத்தாண்டு காலத்துக்கு கிடைத்த பணத்தை, பத்திரமாக முதலீடு செய்து, பின்னர் ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அதற்கேற்றவாறு நான்கு வகையான முதலீட்டுத் திட்டங்களைச் சொல்கிறேன். சுமார் 25% பணத்தை ஆர்.பி.ஐ ஃப்ளோட்டிங் ரேட் பாண்டில் (RBI Floating rate bond முதலீடு செய்யலாம்). தற்போது வட்டி விகிதங்கள் உயர்ந்துவருவதால், கூடுதல் வட்டி கிடைக்கலாம்; இதன் மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரி உண்டு என்றாலும், மூலதனம் பத்திரமாக இருக்கும். இதன் மூலம் அரையாண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் வட்டியை ஈக்விட்டி ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வரலாம்.

10% பணத்தை போஸ்ட் ஆபீஸின் மன்த்லின் இன்கம் ஸ்கீமில் (Post office monthly Income scheme) முதலீடு செய்யலாம். இதிலும் வட்டிக்கு வரி உண்டு. வரும் மாதாந்தர வட்டியை ஈக்விட்டி ஃபண்டில் எஸ்.ஐ.பி-ஆக முதலீடு செய்யலாம். சுமார் 40 சதவிகிதத்தை கன்சர்வேட்டிவ் ஹைபிரிட் ஃபண்டில் (Conservative Hybrid fund) அல்லது ஓய்வூதிய ஃபண்டில் (Retirement fund) முதலீடு செய்யலாம். மீதியுள்ள 25 சதவிகிதத்தை பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் (Balanced advantage fund) முதலீடு செய்யலாம்.

10 வருடங்கள் முடிந்த பின் உங்களுக்கு வயது 60 ஆகும்போது, இதில் கிடைக்கும் பணத்தை, அன்றைய தேதியில் உள்ள ஓய்வூதியத் திட்டங்களில் முதலீடு செய்துகொள்ளலாம். உதாரணமாக, பிரதமரின் ஓய்வூதியத் திட்டம் (PMVVY), வயதானவர்களுக்கான ஓய்வூ தியத் திட்டம் (SCSS) போன்ற வற்றில் முதலீடு செய்யலாம்.

ஆயுள் காப்பீட்டு எண்டோவ் மென்ட் இன்ஷூரன்ஸ் திட்டங் களில் கிடைக்கும் லாபம் குறைவு; தவிர, இன்ஷூரன்ஸ் திட்டங்கள் முதலீட்டுக்கானவை அல்ல. எனவே, அவற்றை நான் உங்களுக்குத் தரவில்லை. தெரிந்த வர்கள் மற்றும் உறவினர்களுக்கு கடன் கொடுப்பது, நிலங்கள், வீடுகளில் முதலீடு செய்ய நினைப்பது உள்ளிட்ட செயல் களைக் கட்டாயம் தவிருங்கள். அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் எப்போதும் ஓய்வூதிய வாழ்க்கைக்கு ஏற்றவாறு அமைவ தில்லை.”

தொடர்ந்து உயரும் அமெரிக்க வட்டி விகிதம்... இந்திய சந்தையை பாதிக்குமா..?

எஸ்.கே.பிரசன்னா, இ-மெயில் மூலம்.

தற்சமயம் ரஷ்ய போர் பதற்றம் காரண மாக உலக நாடுகள் அனைத்தும் வட்டி விகிதங்களை உயர்த்திக்கொண்டே இருக்கின்றன. அமெரிக்கா ஃபெட்டும் வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறது. இதனால் இந்தியப் சந்தையில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

என்.ஜெயகுமார், சர்டிஃபைட் ஃபைனாஷியல் அனலிஸ்ட் (CFA)

“மேற்கத்திய நாடுகள் வட்டி விகிதத்தை உயர்த்த இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த. இரண்டு, சாத்தியமான மந்த நிலையின் (Recession) விளைவைக் குறைக்க. ரஷ்ய - உக்ரைன் போருக்கும், அமெரிக்காவில் அதிகரித்துவரும் வட்டி விகிதங் களுக்கும் நேரடித் தொடர்பு இல்லை. இதனால், அமெரிக்க டாலர் மேலும் வலுவடையும். இந்திய ரூபாயின் மதிப்பு குறையும். இதன் காரணமாகத் தற்காலிகமாக அந்நிய நிறுவன முதலீடுகள் நம் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்புகள் அதிகம். அதன் காரணமாக இந்தியப் பங்குச் சந்தை குறையவும் செய்யும்.

ஆனால், இவை அனைத்தும் தற்காலிகமானதே. ஏனென்றால், அமெரிக்காவில் மந்தநிலை (Recession) தவிர்க்க முடியாதது. அதே சமயம், இந்தியாவில் எதிர் பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சி மற்ற நாடுகளை விட குறிப்பாக, அமெரிக்காவைவிட பிரகாசமாக உள்ளதால், வெளியேறும் அந்நிய முதலீட்டைவிட புதிய முதலீடுகள் கண்டிப்பாக இந்தியாவுக்கு வரும். எனவே, நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது, இந்த வட்டி விகித உயர்வு குறித்து கவலைப்படத் தேவையில்லை.”

ஜெகவர் குமார், கூடுவாஞ்சேரி.

வயது 35. முதலீட்டுக் காலம் 15 ஆண்டுகள். எனக்கு ஏற்றது நேரடி ஈக்விட்டி ஃபண்டுகளா, ஈக்விட்டி பண்ட் ஆஃப் ஃபண்டுகளா? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

ஶ்ரீகாந்த் மீனாட்சி, இணை நிறுவனர், Primeinvestor.in

“ஈக்விட்டி ஃபண்டுகள் பங்குச் சந்தையில் முதலீடு நேரடியாகச் செய்வன; ஈக்விட்டி ஃபண்ட் ஆஃப் ஃபண்டு கள் இத்தகைய ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வன - இவை இரண்டுக்குமான அடிப்படை வித்தியாசம் இதுதான். ஒவ்வொரு ஈக்விட்டி ஃபண்டுக்கும் ஒரு கட்டணம் அதாவது, செலவு விகிதம் உண்டு. ஃபண்ட் ஆஃப் ஃபண்டைப் பொறுத்தவரை, அதனுள் இருக்கும் ஃபண்டுகளுக்கான கட்டணங்களுக்கு அப்பால் மேலும் ஒரு கட்டணம் உண்டு. ஆகையால், ஃபண்ட ஆஃப் ஃபண்டுகளில் முதலீடு செய்ய மேலும் கூடுதல் கட்டணம் கட்ட வேண்டி வரும். நீங்கள் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும் நினைக்கும்போது, நேரடியாக ஈக்விட்டி ஃபண்டு களைத் தேர்வு செய்து அவற்றில் முதலீடு செய்வதே சரி. அந்த வகை ஃபண்டுகளில் எவை உங்கள் ரிஸ்க்குக்கு ஏற்றதாக இருக்குமோ, அவற்றில் முதலீடு செய்யலாம்.”