Published:Updated:

20 ஆண்டுகளில் ரூ.1 கோடி... எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

ராஜ்குமார், திருச்சி

நான் 20 ஆண்டுகள் கழித்து என் ஓய்வுக் காலத்துக்கு ரூ.1 கோடி தேவை. அதற்கு மாதம் ரூ.5,000 வீதம் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்தால் போதுமா?

சி.பாரதிதாசன், நிதி ஆலோசகர், Wmsplanners.com

“நீங்கள் மாதம் ரூ.5,000 வீதம் 20 ஆண்டு களுக்கு முதலீடு செய்தால், நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 15% வருமானம் கிடைத்தால்கூட சுமார் ரூ.75 லட்சம்தான் கிடைக்கும். இதுவே மாத முதலீட்டை 6,700 ரூபாயாக அதிகரித்தால், ரூ.1 கோடி கிடைக்கும். இதற்கு நீங்கள் அக்ரசிவ் ஈக்விட்டி ஃபண்டு களில் முதலீடு செய்து வருவது அவசியம். இந்த அளவுக்கு ரிஸ்க் வேண்டாம் எனில், அக்ரசிவ் ஹைபிரிட் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். அந்த ஃபண்டுகள் நீண்ட காலத்தில் சராசரியாக ஆண்டுக்கு 12% வருமானம் தரும்பட்சத்தில் உங்களின் முதலீட்டுத் தொகை ரூ.5,000 என்பதற்குப் பதிலாக, ரூ.10,000 என இரு மடங்காக அதிகரிக்கப்பட வேண்டும். மேலும், ஆரம்பத்தில் குறைவாக எஸ்.ஐ.பி தொகை இருந்தாலும், சம்பளம் கூடும்போது அந்தத் தொகையை அதிகரித்து வந்தால், இலக்கு தொகையான ரூ.1 கோடியை விரைவிலேயே அடைந்துவிடலாம்.”

20 ஆண்டுகளில் ரூ.1 கோடி... எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

அ.சதீஷ், மதுரை

என்.டி.பி.சி நிறுவனப் பங்கில் முதலீடு செய்யலாமா?

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்.

“என்.டி.பி.சி பங்கின் புத்தக மதிப்பு ரூ.133 ஆகவும், அதன் தற்போதைய பங்கு விலை சுமார் 144 ஆகவும் இருக்கிறது. இதை வைத்து பார்க்கும்போது பங்கின் தற்போதைய விலை என்பது நியாயமான மதிப்பீடாகும். நிலக்கரிப் பற்றாக்குறை காரணமாகக் குறுகிய காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையில் ஏற்ற இறக்கம் காணப்படும். ஆனால், நீண்ட காலத்தில் இந்தப் பங்கில் செய்யப்படும் முதலீடு லாபகரமாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது.”

சி.பாரதிதாசன், ரெஜி தாமஸ், த.முத்துகிருஷ்ணன், எஸ்.ராமலிங்கம், ஶ்ரீகாந்த் மீனாட்சி
சி.பாரதிதாசன், ரெஜி தாமஸ், த.முத்துகிருஷ்ணன், எஸ்.ராமலிங்கம், ஶ்ரீகாந்த் மீனாட்சி

கே.கார்த்திக், விழுப்புரம்.

வீட்டுக் கடன் வட்டி 7%, விருப்ப பி.எஃப் (VPF) வட்டி 8.5%. எனக்குக் கிடைக்கும் கூடுதல் தொகையைக் கொண்டு கடனை அடைப்பதா அல்லது முதலீடு செய்வதா, எது லாபகரமாக இருக்கும்?

த.முத்துகிருஷ்ணன், சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர்.

“இங்கே எது லாபகரமானது என்பதைவிட மன அமைதியை அளிப்பது எது என்பதைப் பார்க்க வேண்டும். விருப்ப பி.எஃப்-லிருந்து உங்கள் நீண்டகால சேமிப்பை நீங்கள் திரும்பப் பெறும்போது, அதை வீட்டுக் கடனை அடைக்கப் பயன் படுத்துவது புத்திசாலித் தனமே. அதைக் கொண்டு முதலீடு செய்வது அதிக ரிஸ்க்கானது.”

ராமசாமி, பெருமாள்புரம், திருநெல்வேலி.

என் வயது 54. அரசு ஊழியர். ஒரே மகன் (வயது 26) சாஃப்ட்வேர் துறையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணிபுரிகிறார். பல ஆண்டுகளாக நான் பொதுத்துறை வங்கியில் 5 ஆண்டு வைப்பு நிதி மற்றும் ஆர்.டி போட்டு வந்தேன். தற்போது ரூ.14.5 லட்சம் முதிர்ச்சித் தொகையாகக் கிடைக்கும். மகனுடைய அலுவலக நண்பர்களுடன் சேர்ந்து பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருகிறார். தற்போது அவனுடைய கல்யாண செலவுக்காக (3-4 வருடங்கள் கழித்து) நான் சேர்த்து வைத்துள்ள பணத்தில் ஒரு கணிசமான தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வற்புறுத்தி வருகிறார். நான் அப்படிச் செய்யலாமா?

எஸ்.ராமலிங்கம், பார்ட்னர் என்.ஜே.இந்தியா.

“வங்கி எஃப்.டி, ஆர்.டி ஆகிய வற்றில் மட்டுமே பணத்தைப் போட்டு வைப்பது புத்திசாலித் தனமான முடிவல்ல. விலைவாசி ஏற்றம், வரிக்குப் பின் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், இவற்றின்மூலம் 4 - 5% ஆண்டு வருமானம் மட்டுமே கிடைக்கும். முதியோர்களுக்கு வங்கி வைப்பு நிதி ஆண்டு வட்டி 9.75% இருந்த காலம் போய் படிப்படியாகக் குறைந்து தற்போது 5.50% எனும் நிலையில் உள்ளது. வரும் ஆண்டு களில் இன்னும் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே, நீங்களும் முதலீட்டுக்கு வங்கி எஃப்.டி மற்றும் ஆர்.டி.க்கு மாற்றாக உள்ள மியூச்சுவல் ஃபண்டுகளான ஈக்விட்டி சேவிங்ஸ், பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகளைத் தேர்வு செய்யலாம்.

பங்குச் சந்தை இப்போது உச்சத்தில் இருந்தாலும், ஏற்றம் தொடருமா, இல்லையா எனத் துல்லியமாகச் சொல்ல முடியாது. ஆனால், பயத்தின் காரணமாகப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யாமல் இருப்பதும் தவறு, குறுகிய காலத்தில் அதிக அளவில் பணம் ஈட்ட முடியும் என உங்கள் மகன் அதீத பேராசையுடன் பங்குச் சந்தையை அணுகுவதும் தவறு.

உங்கள் முதலீட்டுக் காலம் 3 - 4 ஆண்டுகள் இருப்பதால், உங்கள் மகனுக்கு ரூ.1.5 லட்சம் மட்டும் தந்துவிட்டு, மீதமுள்ள பணத்தை எடெல்வைஸ் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டிலும் நிப்பான் இந்தியா பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டிலும், எஸ்.பி.ஐ பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டிலும், ஹெச்டிஎஃப்.சி பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டிலும், என்.ஜே இந்தியா பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டிலும், ஆக்ஸிஸ் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டிலும், அவசரத் தேவைக்காக ரூ.1 லட்சம் ஆக்ஸிஸ் லிக்விட் ஃபண்டிலும் முதலீடு செய்வது நல்லது.”

கலைமதி, சிவகங்கை.

நான் தலா ரூ.5,000 வீதம் ஒரே ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறேன். வரிச் சேமிப்புக்கு அந்த நிறுவனத்தின் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டிலும் முதலீடு செய்கிறேன். நான் இப்படி ஒரே நிறுவனத்தின் ஃபண்டுகளில் மொத்த முதலீட்டையும் மேற்கொள்வதால், சிக்கல் வர வாய்ப்புள்ளதா?

ஶ்ரீகாந்த் மீனாட்சி, இணை நிறுவனர், Primeinvestor.in

“ஒரே நிறுவனத்தின் ஃபண்டு களில் முழுக்கவும் முதலீடு செய்வது அத்தனை சரியான முடிவாக இருக்காது. இதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏதும் இல்லையென்றாலும், உங்கள் முதலீட்டுத் தொகுப்பின் ஒட்டு மொத்த ரிஸ்க் இதனால் அதிகரிக் கிறது. மேலும், ஒரு நிறுவனத்தில் ஒரே வகையான முதலீட்டு ‘பாணி’ பின்பற்றப்படவே வாய்ப்பு அதிகம். அதனால், உங்கள் முதலீட்டின் லாபமும் பாதிக்கப்படலாம். குறிப்பாக, ஸ்மால் மற்றும் மிட்கேப் ஃபண்டுகளில் இரண்டு மூன்று மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் களின் ஃபண்டுகளில் பரவலாக முதலீடு செய்வதே சரி.”