Published:Updated:

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்பெஷல் ஹெல்த் பாலிசி ஏதும் உள்ளதா..?

கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில்

கேள்வி பதில்

கிருத்திகா, சென்னை - 20

மியூச்சுவல் ஃபண்டுகளில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (NRI) முதலீடு செய்யும்போது இந்தியர்களுக்கு வழங்கப்படும் அனைத்துச் சலுகைகளும் வழங்கப்படுகிறதா? ஈக்விட்டி ஃபண்டு களுக்கு எப்படி, வரி விதிக்கப்படுகிறதா?

ஆடிட்டர் ஜி.கே.சீனிவாஸ், கோவை.

“என்.ஆர்.ஐ-க்கள் முதலீடு செய்யும்போது, இந்திய முதலீட்டாளர்களைப் போன்றே பெரும்பாலான நன்மைகளையும் வசதி களையும் பெறுகிறார்கள். எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யவும், தங்களின் வசதிக்கேற்ப ‘ஸ்விட்ச்’ செய்துகொள்ளவும், குரோத் அல்லது டிவிடெண்ட் தேர்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் மற்றும் அவர்கள் விரும்பும்போது பணமாக்கிக் கொள்ளவும் முடியும். பரந்த அளவிலான இந்திய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதிலான முழுப் பலனையும் என்.ஆர்.ஐ மற்றும் பி.ஓ.ஐ-க்கள் பெற முடியும்.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு, ஓராண்டு அல்லது அதற்கும் குறைவான முதலீடுகளுக்கு குறுகிய கால மூலதன ஆதாய வரி விதிப்பு விதிகளின்படி 15% வரி விதிக்கப் படும். நீண்ட கால முதலீடுகளுக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிப்பு விதிகளின்படி ரூ.1 லட்சம் போக மீதமுள்ள லாபத்துக்கு பணவிக்க விகித சரிகட்டல் இல்லாமல் 10% வரி விதிக்கப்படுகிறது.”

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்பெஷல் ஹெல்த் பாலிசி ஏதும் உள்ளதா..?

கரிகாலன், சென்னை.

மாற்றுத்திறனாளிப் பிள்ளை (special child) மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவக் காப்பீடு ஏதாவது இருந்தால் சொல்லவும்.

எஸ்.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர், Wealthladder.co.in

‘‘மாற்றுத்திறனாளிகளுக்கு நிர்மயா ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்ட (NIRAMAYA Health Insurance Scheme) பாலிசியை அறிமுகம் செய்து அதிகபட்சமாக ரூ.1,00,000 வரை கவரேஜ் கிடைக்க மத்திய அரசாங்கம் வழிசெய்துள்ளது. மாதம் ஒன்றுக்கு ரூ.15,000-க்கு குறைவாக வருமானம் இருக்கும்பட்சத்தில், நிர்மயா பாலிசியில் ரூ.250 வருடாந்தர பிரீமியமாக வசூலிக்கப்படும். இதுவே ஆண்டு வருமானம் ரூ.15,000-க்குமேல் இருந்தால், ஆண்டு ஒன்றுக்கு ரூ.500 பிரீமியமாக வசூலிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு https://www.thenationaltrust.gov.in/content/scheme/niramaya.php பார்க்கவும்.

இது தவிர, தனியார் நிறுவன பாலிசிகளில் ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம் மட்டுமே மாற்றுத்திறனாளிகளுக்கான பாலிசிகளை வழங்கி வருகிறது. இதில் அதிக பட்சமாக ரூ.3 லட்சம் வரை கவரேஜ் கிடைக் கும். குடும்ப உறுப்பினர்கள் இதைத் தனி பாலிசியாக எடுத்துக்கொள்வது நல்லது.”

ஏழுமலை, நாணயம் விகடன் டியூப் மூலம்.

என் வயது 30. எனக்கு இன்னும் 16 ஆண்டுகள் கழித்துதான் பணம் தேவை. மாதம் ரூ,10,000 முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கிறேன். இதை நிஃப்டிபீஸ் இ.டி.எஃப் (Niftybees ETF) மூலம் மேற்கொள்ளலாமா?

த.முத்துகிருஷ்ணன், சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர்.

“புத்திசாலித்தனமான முடிவை எடுத்திருக் கிறீர்கள். காரணம், எக்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகளில் (ETFs) நிர்வகிக்கும் செலவுகள் மிகக் குறைவு மற்றும் பங்குச் சந்தை கொடுக்கும் வருமானத்தைப் பெறும் சிறந்த வழியாக இந்த முதலீட்டு முறை உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களைப் பொருட்படுத்தாமல் உங்கள் மாத முதலீட்டைத் தொடர்வதை உறுதி செய்வதே. பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டில் நீண்ட காலத்தில் லாபம் ஈட்ட முதலீட்டு ஒழுங்கு மிக முக்கியம் ஆகும்.”

ஜி.கே.சீனிவாஸ், எஸ்.ஶ்ரீதரன், த.முத்துகிருஷ்ணன், ரெஜி தாமஸ், ஶ்ரீகாந்த் மீனாட்சி, ஆர்.வெங்கடேஷ்
ஜி.கே.சீனிவாஸ், எஸ்.ஶ்ரீதரன், த.முத்துகிருஷ்ணன், ரெஜி தாமஸ், ஶ்ரீகாந்த் மீனாட்சி, ஆர்.வெங்கடேஷ்

கே.குமார், சென்னை.

என்னிடம் டாடா மோட்டார்ஸ் பங்குகள் இருக் கின்றன. இந்தப் பங்குகளை வைத்திருக்கலாமா, விற்றுவிடலாமா?

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்.

“எதிர்காலத்தைப் பார்க்கும்போது, சுற்றுச் சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத மின்சார வாகன உற்பத்தியில் ஈடுபடுவது அவசியமாகும். இதைப் புரிந்துகொண்டு, டாடா மோட்டார்ஸ் செயல்பட்டு வருவது ஆரோக்கியமானதே. எனவே, இந்த நிறுவனப் பங்குகளை விற்காமல் தக்கவைத்துக்கொள்வது நல்லது.”

ஜெய்சிங், மயிலாப்பூர், சென்னை.

மியூச்சுவல் ஃபண்டுகளில் கடன் திட்டங்களில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். எனக்கு பணம் மூன்றாண்டுகளுக்குப் பிறகுதான் தேவை. மொத்த முதலீடு அல்லது எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யலாமா?

ஶ்ரீகாந்த் மீனாட்சி, இணை நிறுவனர், Primeinvestor.in

“மூன்றாண்டு முதலீட்டுக் காலத்துக்கு கடன் ஃபண்டுகள் உகந்தவை. மூன்றாண்டுகளைக் கடந்த கடன் ஃபண்ட் முதலீடுகளுக்கு வரி அனுகூலம் உண்டு என்பதால், உங்கள் லாபம் சற்றே அதிகமாக இருக்கும். அதாவது, கடன் ஃபண்டு களில் மூன்றாண்டுகள் கழித்து யூனிட்டுகளை விற்று கிடைக்கும் நீண்ட கால மூலதன ஆதாயத்துக்குப் பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு 20% வரிக் கட்டினால் போதும் என்பதால், ஃபிக்ஸட் டெபாசிட்டுடன் ஒப்பிடும்போது, வரிக்குப் பிந்தைய வருமானம் அதிகமாக இருக்கும். கடன் ஃபண்டுகளில் மொத்த முதலீடாகச் செய்வதில் தவறில்லை. பங்கு சந்தையைப்போல், அதிக ஏற்ற இறக்கங்கள் கடன் சந்தையில் இல்லாததால், இதில் எஸ்.ஐ.பி முறையில் அதிக பலன் இல்லை.”

கே.அன்பழகன், கோவில்பட்டி.

எஸ்.ஐ.பி முதலீட்டுக்கான ஃபண்ட் வேறு, மொத்த முதலீட்டுக்கான ஃபண்ட் வேறு என என் நண்பன் சொல்கிறான். உண்மையா?

ஆர்.வெங்கடேஷ், நிறுவனர், www.gururamfinancialservices.com

‘‘சிலர், எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் வேறு, மொத்தமாக முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் வேறு என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் பலனை எஸ்.ஐ.பி முறை முதலீடு அல்லது மொத்த முதலீடு அல்லது இரண்டு முறையிலும் கலந்து பெறலாம்.

இதை ஓர் எளிய உதாரணம் மூலம் பார்ப்போம். மூன்று நண்பர்கள் தொலைக்காட்சி வாங்க கடைக்குச் செல்கிறார்கள். ஒருவர், மொத்தப் பணம் தந்து வாங்குகிறார்; இன்னொருவர், பாதி பணம் தந்துவிட்டு, மீதியைக் கடனாகத் தருவதாகச் சொல்கிறார். இன்னொருவர், இ.எம்.ஐ முறையில் வாங்குகிறார். ஆக, பொருள் ஒன்றுதான்; அதை வாங்கும் முறை வேறு வேறு.

அதேபோல, மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் ஒன்றுதான், முதலீட்டு முறைகள் வேறுவேறு. எல்லாவற்றிலும் ஒரே விதமான நன்மைகளே கிடைக்கும்.”