Published:Updated:

வங்கிகளில் தங்க நாணயங்களை அடமானம் வைத்து கடன் வாங்க முடியுமா?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

அன்பு செல்வி, காரைக்குடி.

ங்கிகளில் தங்க நாணயங்களை (Gold Coins) அடமானம் வைத்து கடன் வாங்க முடியுமா? இதற்கு ஏதாவது வரம்பு, கடன் தொகை, அடமானம் வைக்கும் காயின்களின் எடை போன்றவற்றில் கட்டுப்பாடு இருக்கிறதா?

வி.தியாகராஜன், ஆடிட்டர், www.bizlane.in

“தங்க நாணயங்களில் இரண்டு வகை உள்ளன. ஒன்று, நகைக் கடைகளில் வாங்கும் தங்க நாணயங்கள். மற்றொன்று, வங்கிகள் மூலமாக வாங்கப்படும் தங்க நாணயங்கள். இதில் நகைக் கடைகளில் வாங்கும் தங்க நாணயங்களின் மீது எந்த வங்கியும் தங்க நகைக் கடன் தருவதில்லை. வங்கிகள் மூலம் வாங்கப்பட்ட தங்க நாணயங்கள் மீது எந்த வங்கியின் மூலம் வாங்கப் பட்டதோ, அந்த வங்கி 50 கிராம் வரை ஒருவர் தங்க நகைக் கடன் தரலாம் என்ற ஆர்.பி.ஐ விதிமுறை உள்ளது.

தங்க நாணயங்களை செயினில் மாட்டுவது போன்ற வளையம் அமைப்பு இருந்தால் (அதுவும் தங்கத்தில் செய்யப்பட்டிருக்க வேண்டும்!), ஒரு சில வங்கிகள் அவற்றின் மீது தங்க நகைக் கடன் தருகின்றன.”

வங்கிகளில் தங்க நாணயங்களை 
அடமானம் வைத்து கடன் வாங்க முடியுமா?

கணேஷ் முருகன், சரவணம்பட்டி, கோயம்புத்தூர்.

நான் ஒரு கார்பென்டர். எனக்கு நிரந்தர வருமானம் கிடையாது. ஆனால், என்னால் மாதம் ரூ.7,000 வரை சேமிக்க முடியும். எனக்கு 20 வருடம் கழித்து ரூ.50 லட்சம் வேண்டும். நான் எந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் எப்படி முதலீடு செய்ய வேண்டும்?

எம்.கண்ணன், ஆலோசகர், Radhaconsultancy.blogspot.com

“வருங்கால வளமான வாழ்வுக்கு சேமிக்க வேண்டும் என்ற தங்களது முனைப்புக்கு, வாழ்த்துகள். மாதம்தோறும் ரூபாய் 7,000 வீதம். 20 வருடம் சேமித்து, பின் ரூபாய் 50 லட்சம் ருபாய் பெற உங்களுக்குக் கிடைக்க வேண்டிய வட்டி அல்லது வருமானம் ஆண்டுக்கு 9.5%.

20 வருட முதலீட்டில். இந்த வருமானம் பெற நல்ல டைவர்சிஃபைட் ஈக்விட்டி ஃபண்டுகளில் (Diversified equity fund) முதலீடு செய்து வரலாம். ரிஸ்க் எடுக்க தயக்கம் எனில், ஹைபிரிட் வகையான அக்ரசிவ் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகளில் (Aggressive balanced advantage fund) முதலீடு செய்யலாம்.

உங்களுக்கு நிரந்தர வருமானம் இல்லாத காரணத்தால், நீங்கள் ஓரிரு மாதங்கள் முதலீட்டுத் தொகையைக் கட்டாமல் விட்டாலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் எந்தச் சிக்கலும் கிடையாது.

அதே சமயம், நீங்கள் மூன்று மாதம் தொடர்ந்து முதலீட்டுத் தொகையைக் கட்டாமல் இருந்தால், உங்களது எஸ்.ஐ.பி முதலீட்டு முறை நின்று போய் விடும். அப்படி நடக்காமல் பார்த்துக்கொண்டால், நீங்கள் எதிர்பார்க்கும் ரூ.50 லட்சம் தொகுப்பு நிதியை சுலபமாகச் சேர்த்துவிட முடியும்.”

வி.தியாகராஜன், எம்.கண்ணன், ஆர்.வெங்கடேஷ், சுரேஷ் பார்த்தசாரதி
வி.தியாகராஜன், எம்.கண்ணன், ஆர்.வெங்கடேஷ், சுரேஷ் பார்த்தசாரதி

கே.சேகர், மானாமதுரை.

நான் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறேன். என்னால் மாதம் ரூ,10,000 முதலீடு செய்ய முடியும். நான் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய விரும்புகிறேன். அதே நேரத்தில், இடையில் இந்த முதலீட்டை சிறிது காலத்துக்கு நிறுத்தி வைத்துவிட்டு, மீண்டும் தொடரும் வசதி இருக்கிறதா, இது எனது முதலீட்டு வளர்ச்சியைப் பாதிக்குமா?

ஆர்.வெங்கடேஷ், நிறுவனர், www.gururamfinancialservices.com

“முதலீட்டை இடையில் நிறுத் தும் சூழ்நிலையைக் கண்டு இப்போதே பயப்படத் தேவை யில்லை. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைப் பொறுத்தவரை, செபி அமைப்பும் ஆம்ஃபி அமைப்பும் பல்வேறு வசதிகளை முதலீட்டாளர்களுக்குச் செய்து கொடுத்துள்ளது. நீங்கள் எஸ்.ஐ.பி முதலீட்டைக் குறிப்பிட்ட காலத்துக்கு (உதாரணமாக, 1 மாதம் முதல் 6 மாதம் வரை) நிறுத்தி வைக்கும் வசதி இருக்கிறது.

இதற்கு நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்கு சுமார் 30 நாள்களுக்கு முன் தெரிவிக்க வேண்டும். இதை நீங்கள் முதலீடு செய்ய உதவிய மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் மூலமே மேற்கொள்ளலாம். உங்களால் இத்தனை மாதங்களுக்கு மட்டும் தான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை மேற்கொள்ள முடி யாது எனில், இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

எவ்வளவு மாதங்கள் என சரியாகக் கணிக்க முடியவில்லை எனில், எஸ்.ஐ.பி முதலீட்டு முறையை நிறுத்திவிடலாம். பின்னர் உங்களால் எப்போது முதலீட்டை மேற்கொள்ள முடியுமோ, அப்போது பழைய ஃபோலியோ எண்ணைக் கொடுத்து அதே கணக்கில் முதலீட்டைத் தொடர முடியும். இடையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை நிறுத்தும்போது, உங்களின் தொகுப்பு நிதி குறைவதுடன், வளர்ச்சியும் பாதிக்கக்கூடும்.

பழைய ஃபோலியோ எண்ணைக் குறிப்பிட்டு இடை இடையே குறிப்பாக சந்தை இறக்கத்தில் இருக்கும்போது கூடுதல் முதலீட்டை மேற்கொள்வது மூலம் இதைத் தவிர்க்க முடியும்.

எனவே, எஸ்.ஐ.பி முதலீட்டை இடையில் நிறுத்த வேண்டியிருந்தால், என்ன செய்வது என்கிற கவலை இல்லாமல் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீட்டை ஆரம்பியுங்கள்.”

தினேஷ் கிருஷ்ணன், திண்டுக்கல்.

ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் பற்றிச் சொல்ல முடியுமா? அவர்கள் அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறார்கள். அங்கு முதலீடு செய்வது பாதுகாப்பானதா? தயவு செய்து தெளிவுபடுத்தவும்.

சுரேஷ் பார்த்தசாரதி, நிதி ஆலோசகர், Myassetsconsolidation.com

“ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் என்பது ஏனைய தனியார் வங்கி போல் செயல்படுகிறது. அதிகபட்ச வித்தியாசம் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் மூலம் தனிநபர் அல்லது கம்பெனிக்கு அதிகபட்சமாக 100 கோடி ரூபாய் வரை கடன் கொடுக்கப்படும் ஆனால், தனியார் வங்கிகளுக்கு அத்தகையைக் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை.

ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் தாரர்களுக்கு ஏன் அதிக வட்டி கொடுக்கின்றன எனில், அந்த நிறுவனங்கள் கடன் கொடுக்கும் தொகையில் 50% முதல் 65% வரை சிறு குழுக்களுக்கு கடன் கொடுக்கின்றன. அந்த வகையான கடன்களுக்கு அதிக வட்டி வசூலிக்கப் படுவதாகும்.

ஆகையால், உங்களுக்கு அதிக வட்டி கிடைக்கிறது. விஷயம் அவ்வளவுதான். ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளில் செய்யும் டெபாசிட்க்கு அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரை காப்பீடு உள்ளது அதன் அடிப்படையில் நீங்கள் ரூ.5 லட்சம் வரை எந்த வித தயக்கமும் இன்றி முதலீடு செய்யலாம்.

கோவிட் காரணமாகச் செயல்பாட்டில் சிறிது தொய்வு இருந்தாலும், நீங்கள் பயமில்லாமல் ரூ.5 லட்சம் வரை இந்த ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் முதலீடு செய்யலாம்.”