Published:Updated:

செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் கடன் வாங்க முடியுமா?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் கடன் வாங்க முடியுமா?

கேள்வி - பதில்

Published:Updated:
கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

அருண்குமார், வந்தவாசி.

என் பெண் குழந்தைக்காக செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் (சுகன்யா சம்ருதி யோஜனா) கடந்த மூன்று ஆண்டுகளாக முதலீடு செய்து வருகிறேன். அவசரத் தேவைக்காகக் கட்டியுள்ள பணத்திலிருந்து கடன் வாங்க முடியுமா?

தெய்வானை ராஜ்பாண்டியன், அரசு அங்கீகாரம் பெற்ற தபால் நிலைய முகவர்.

“செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்கு எதிராக கடன் வாங்க முடியாது. கணக்கை முன்கூட்டியே முடிக்க முடியுமா எனில், மூன்று வருடங்களில் இந்தக் கணக்கை முன்கூட்டியே முடிக்க முடியாது. ஐந்து வருடங்கள் கழித்து செல்வமகள் திட்டத்தின் கணக்கை முன்கூட்டியே முடிக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்வதற்கு கணக்கு ஆரம்பிக்கப்பட்டவரின் இறப்பு, கார்டியன் அல்லது வருமானம் ஈட்டும் பெற்றோர் இறப்பு, கணக்கு ஆரம்பிக்கப்பட்டவருக்கு தீவிர நோய் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து, இடையில் பணத்தை எடுக்க முடியும்.’’

செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில்
கடன் வாங்க முடியுமா?

பாலமுருகன், புதுக்கோட்டை.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு மூலம் நீண்ட கால மூலதன ஆதாயமாக ரூ.15 லட்சம் கிடைத்திருக்கிறது. இதில் ரூ.1 லட்சம் வரி விலக்குப் போக ரூ.14 லட்சத்துக்கு 10% வரி கட்ட வேண்டும். இந்த நிலையில், 54F பிரிவின் கீழ், இந்தத் தொகையை வீடு கட்ட வாங்கினால் வரி கட்ட வேண்டாம் என்பது உண்மையா?

ஆடிட்டர் ஜி.கே.சீனிவாஸ், கோவை.

“உண்மைதான். இருப்பினும், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் மூலம் கிடைத்த நீண்ட கால மூலதன ஆதாயத்தை 54F பிரிவின் கீழ் மறுமுதலீடு செய்வதற்குமுன் அதைப் பற்றி அறிவது அவசியம். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு54F-ன் விதிமுறைகள், புதிய வீடு வாங்குவதற்கோ, கட்டுவதற்கோ முதலீடு செய்யப்படும்போது, நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு (குடியிருப்பு வீட்டைத் தவிர) விலக்கு அளிக்கிறது. அதாவது, நீங்கள் பெற்ற நீண்ட கால மூலதன ஆதாயம், குடியிருப்பு சொத்தை விற்பதன் மூலம் பெற்றதாக இருக்கக் கூடாது.

உங்களுக்கு ஏற்கெனவே நீண்ட கால மூலதன சொத்துகளை மாற்றும் தேதியில் ஒன்றுக்கு மேற்பட்ட வீடு இருக்கக் கூடாது. முதலீடு செய்யப்படும் சொத்து இந்திய எல்லைக்கு உட்பட்ட குடியிடுப்பு சொத்தாக இருக்க வேண்டும். அத்தகைய முதலீடு, பரிமாற்றத் தேதிக்கு ஒரு வருடத்துக்கு முன்பு அல்லது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு செய்யப்பட வேண்டியது கட்டாயமாகும் அல்லது வீட்டைக் கட்டுகிறீர்கள் எனில், மூன்று ஆண்டுகளுக்குள் இந்தத் தொகை முதலீடு செய்யப்பட வேண்டும்.

54F பிரிவின்கீழ் விலக்கு கோரப்பட்டு, அந்தக் கால கட்டத்துக்குள் மற்றொரு குடியிருப்பு வீட்டை வாங்கவோ, கட்டவோ செய்தால், விலக்கு அளிக்கப்பட்ட தொகை, புதிய வீடு மாற்றப்பட்ட ஆண்டின் நீண்ட கால மூலதன ஆதாயத்தின் மூலம் வருமானமாகக் கருதப்படும். அல்லது ‘வீட்டுச் சொத்திலிருந்து வருமானம்’ என்ற தலைப்பின் கீழ் வரி விதிக்கப்படும்.

இந்த நிபந்தனைகளைக் கருத்தில்கொண்டு உங்கள் மூலதனத்தை முதலீடு செய்யலாம்.”

அர்ஜூன், இ-மெயில் மூலம்.

நான் சன் டிவி நிறுவனப் பங்கை ரூ.680-க்கு வாங்கினேன். விலை ரூ.515-க்கு இறங்கியுள்ளது. மீண்டும் பங்கின் விலை ஏற்றம் காணுமா?

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்.

“பங்கு விலை ஏற்றத்தை எதிர்பார்த்து வாங்கியிருக்கிறீர்கள். தொலைக்காட்சி சேனல்கள் முன்பைவிட இப்போது அதிக போட்டியைச் சந்தித்து வருகின்றன. ஓ.டி.டி (OTT) சினிமா வருகையுடன், சினிமா ரசிகர்களின் ரசிப்பு முறைகளும் விருப்பங்களும் மாற்றத்துக்கு உட்பட்டுள்ளன. அதாவது, தொலைக்காட்சிகளில் சினிமாக்களைப் பார்ப்பதற்கு பதில் செல்போன், லேப்டாப் போன்றவற்றைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இது தொலைக்காட்சி நிறுவனங்களின் விளம்பர வருவாயை பாதிக்கிறது. மேலும், கோவிட் பாதிப்பால் ரியால்டி ஷோக்கள் நடத்துவது முன்பைவிடக் குறைந்திருக்கிறது. இதனாலும் சன் டிவியின் வருமானம் குறைந்திருக்கிறது.

இது நிலையாக டிவிடெண்ட் வழங்கி வரும் ஒரு பங்கு நிறுவனம் ஆகும். ஓரிரு ஆண்டுகள் காத்திருந் தால் இந்தப் பங்கு மூலம் நல்ல லாபம் பார்க்க முடியும். நீங்கள் அடுத்து வரும் காலாண்டு நிதிநிலை முடிவுகளுக்காகக் காத்திருக்கலாம். அதுவரைக்கும் இதில் நீங்கள் செய்துள்ள பங்கு முதலீட்டைத் தொடரவும்.”

தெய்வானை ராஜ்பாண்டியன், ஆடிட்டர் ஜி.கே.சீனிவாஸ், ரெஜி தாமஸ், பா.பத்மநாபன், ஷியாம் சுந்தர்
தெய்வானை ராஜ்பாண்டியன், ஆடிட்டர் ஜி.கே.சீனிவாஸ், ரெஜி தாமஸ், பா.பத்மநாபன், ஷியாம் சுந்தர்

முருகேஷ் குமார், கொல்லம்.

என்னிடம் ரூ.10 லட்சம் இருக்கிறது. இந்தப் பணம் எனக்கு நான்கு மாதம் கழித்துதான் தேவை. இந்தப் பணத்தை நான் எந்த வகையான மியூச்சுவல் ஃபண்டில் போட்டு வைக்க வேண்டும்?

பா.பத்மநாபன், நிதி ஆலோசகர், Fortuneplanners.com

“உங்களுக்கு நான்கு மாதம் கழித்து இந்தப் பணம் தேவை எனில், நீங்கள் வங்கி சேமிப்புக் கணக்கில் வைத்திருப்பது தான் சரியான முடிவாக இருக்கும். இந்தக் குறுகிய காலத்தில் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் பெரிதாக வருமானம் எதையும் எதிர்பார்க்க முடியாது.”

சாவரின் உமா மகேஸ்வரி, சென்னை - 44

கோல்டு பாண்ட் ஒரு கிராம் தங்கத்தின் விலை, கடை விலையைவிட அதிகமாக இருக்கிறதே. சாவரின் கோல்டு பாண்ட் விலை எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது என விளக்கிச் சொல்ல முடியுமா?


ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்.

“சாவரின் கோல்டு பாண்ட் ஒரு யூனிட் விலை, 24 காரட் தங்கத்தின் விலைக்கு கிட்டத்தட்ட நிகராக இருக்கும். சாவரின் கோல்டு பாண்ட் (SGB) விலை, அட்டவணைப் படுத்துவதற்கு முந்தைய மூன்று நாள்களின் சந்தை விலையை அடிப்படையாக வைத்துக்கொண்டு, அதன் சராசரி விலையாக ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்கிறது. இந்த விலை இந்தியன் புல்லியன் அண்ட் ஜுவல்லர்ஸ் அசோசியேஷனிலிருந்து (IBJA) பெறப்படுகிறது.

இதன் விலை, கடை விலையைவிட அதிகமாக இருப்பதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். 1. எஸ்.ஜி.பி பத்திரங்களுக்கு வட்டி விகிதம் உண்டு. அதனால் விலை சற்று அதிகமாக இருக்கும். 2. கடையில் தங்கம் வாங்கும்போது செய்கூலியாக 3% முதல் 15% வரை வாங்குபவர்கள் செலுத்த நேரிடுகிறது. அதனால், கடைக்காரர்களால் விலையை 1 கிராம் விலையில் சற்றுக் குறைத்து சலுகை தர முடிகிறது. இதனால், எஸ்.ஜி.பி பாண்ட் விலையோடு ஒப்பிடும்போது கடையில் வாங்கும்போது சற்றுக் குறைவாக இருக்கிறது. தங்கத்தைக் கடையில் வாங்கினாலும், எஸ்.ஜி.பி வாயிலாக வாங்கினாலும், விற்கும்போது கிடைக்கும் ஆதாயத்தை சதவிகித அடிப்படையில் ஒப்பிட்டால், பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism