Published:Updated:

விற்பனை செய்த கார்... பெயர் மாற்றாவிட்டால் பிரச்னை வருமா..?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

விற்பனை செய்த கார்... பெயர் மாற்றாவிட்டால் பிரச்னை வருமா..?

கேள்வி - பதில்

Published:Updated:
கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

சுரேஷ் கிருஷ்ணா, இ-மெயில் மூலம்.

ஆறு மாதங்களுக்கு முன் என் காரை ஒருவருக்கு விற்றேன். காரை அவர் பெயருக்கு மாற்றி இன்னும் பதிவு செய்யவில்லை. இதனால், எனக்கு ஏதாவது சிக்கல் வர வாய்ப்பிருக்கிறதா?

வி.எஸ்.சுரேஷ், வழக்கறிஞர்.

“கண்டிப்பாக, உங்களுக்கு பல பிரச்னைகள் வரக்கூடும். அந்த கார் யார் மீதாவது மோதி சிக்கல் ஏற்பட்டாலும், உங்களுக்குத்தான் போலீஸ் நோட்டீஸ் வரும். காரை மற்றவர்களுக்கு விற்பனை செய்தாலும், வாகனப் பதிவுச் சான்றில் உரிமையாளர் பெயர் மாற்றப்படாமலிருந்து விபத்து ஏற்பட்டால், காரை ஏற்கெனவே வைத்திருந்த பழைய உரிமையாளரே பாதிக்கப் பட்டவருக்கு நஷ்டஈடு தர வேண்டும் என உச்ச நீதிமன்றம் வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியுள்ளது.

வாகனம் விற்பனை செய்யப்பட்டதும் வாகனப் பதிவுச் சான்றிதழில் (ரிஜிஸ்ட்ரேஷன் சர்டிஃபிகேட்) அதை வாங்கிய உரிமையாளர்களின் பெயர் மாற்றப்பட வேண்டும். இல்லை எனில், சிக்கல்தான்.

மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 2 (30)ன் படி, யார் பெயரில் கார் உள்ளதோ அதாவது, காரின் உரிமையாளராக வாகனப் பதிவுச் சான்று ஆவணத்தில் யார் பெயர் உள்ளதோ, அவர்தான் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஒருவர் தனது காரை மற்றவர்களுக்கு விற்றால், வாகனப் பதிவுச் சான்றில் காரை வாங்கியவர் தனது பெயரை மாற்ற வேண்டும். அவ்வாறு பெயர் மாற்றப்படாமல் பழைய உரிமையாளரின் பெயரே நீடித்தால், விபத்தின்போது பழைய உரிமையாளரே பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்’’ என்று நீதிபதிகள் தீர்ப்பில் சொல்லி யிருக்கிறார்கள்.

எனவே, விரைந்து செயல்பட்டு உங்கள் காரை வாங்கி யுள்ளவரின் பெயரில் ரிஜிஸ்ட்ரேஷன் சர்டிஃபிகேட்டை மாற்றிப் பதிவு செய்வது நல்லது.”

விற்பனை செய்த கார்... பெயர் மாற்றாவிட்டால் பிரச்னை வருமா..?

டாக்டர் சௌந்தரராஜ் நல்லசாமி, இ-மெயில் மூலம்.

நான் முதலீடு செய்திருக்கும் ஃபண்டின் வருமானம் மிகவும் குறைவாக இருக்கிறது. இதே நிலை நீடித்தால் எவ்வளவு காலத்துக்குப் பிறகு, இந்த ஃபண்டிலிருந்து வேறு ஃபண்டுக்கு முதலீட்டை மாற்ற வேண்டும் என்று விளக்கிச் சொல்லவும்.

ஶ்ரீகாந்த் மீனாட்சி, இணை நிறுவனர், Primeinvestor.in

“நீங்கள் முதலீடு செய்துள்ள ஃபண்ட் கடன் வகையா அல்லது ஈக்விட்டி வகையா என்று குறிப்பிடவில்லை. அது மிகவும் முக்கியம். கடன் வகையாக இருந்தால் வருமானம் சற்றுக் குறைவாகத்தான் இருக்கும். வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியைவிட அதிகம் கிடைத்தால், நன்மையே என்று முதலீட்டைத் தொடரவும்.

அதே சமயம், ஈக்விட்டி வகையில் வருமானம் மிகவும் குறைவாக இருந்தால், அது சற்றுக் கூர்ந்து பார்க்க வேண்டிய விஷயமே. தாங்கள் முதலீடு செய்துள்ள ஃபண்டில் வருமானம் மிக மிகக் குறைவாக இருந்தால், அதற்கான காரணத்தை அறிந்துகொள்ள முயல வேண்டும். அதே வகை யான ஃபண்டுகள் சந்தையில் குறைந்த வருமானம் தந்துவந்தால், அதில் கவலைப்பட ஏதுமில்லை. அந்த வகை ஃபண்டு கள் உங்களுக்குப் பொருத்தமாக இருப்பதாக நீங்கள் நினைத்தால் அதைத் தொடரலாம்.

அதே சமயம், நீங்கள் முதலீடு செய்திருக்கும் ஃபண்ட் வகையில், மற்ற ஃபண்டுகள் மிக அதிக வருமானம் தந்தால், ஏன் நமது ஃபண்ட் மட்டும் குறைந்த வருமானம் தருகிறது, எத்தனை வருடமாகக் குறைந்த வருமானம் தருகிறது என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

3 அல்லது 4 வருடங்கள் தொடர்ந்து குறைவாகவே வருமானம் தந்துவரும் பட்சத்தில், அதைச் சற்று மாற்றிக்கொள்ளலாம். இது தொடர்பாக யோசித்து முடிவு செய்யவும். அவசரப்பட்டு அடிக்கடி ஃபண்டுகளை மாற்று வதில் எந்தவித பலனும் இல்லை.”

வி.எஸ்.சுரேஷ், ஶ்ரீகாந்த் மீனாட்சி, தி.ரா.அருள்ராஜன், ஆர்.செல்வகுமார்
வி.எஸ்.சுரேஷ், ஶ்ரீகாந்த் மீனாட்சி, தி.ரா.அருள்ராஜன், ஆர்.செல்வகுமார்

ரவி, வேலூர்.

நான் என்.ஐ.எஸ்.எம் ஈக்விட்டி டெரிவேட்டிவ்ஸ் படிப்பு முடித்திருக் கிறேன். எனக்கு எந்த மாதிரி வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என விளக்கிச் சொல்லவும்.

தி.ரா.அருள்ராஜன், பங்குச் சந்தை பயிற்சியாளர், www.ectra.in

“ஈக்விட்டி டெரிவேட்டிவ் சந்தையில் ஈடுபடுபவர்கள் அனைவரும் என்.ஐ.எஸ்.எம் ஈக்விட்டி டெரிவேட்டிவ் தேர்வு எழுதியோ, என்.ஐ.எஸ்.எம் நடத்தும் பயிற்சி வகுப்பில் பங்கெடுத்து, தேர்வு பெற்று இருக்க வேண்டும் என்பது செபி அமைப்பின் விதிமுறை ஆகும். டெரிவேட்டிவ் மார்க்கெட்டில் அதிகம் ஈடுபடுவர்கள் பங்குச் சந்தை புரோக்கர்கள் ஆவார்கள். மேலும், புரோக்கர்களிடம் இணைந்து வியாபாரம் செய்யும் சப்-புரோக்கர்களும் இந்தத் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும் அல்லது தகுதி பெற்றவர்களை வைத்து வியாபாரம் செய்ய வேண்டும்.

அதே போல, டெரிவேட்டிவ் மார்க்கெட்டில் ஈடுபடும் அனைத்து நிதி நிறுவனங்களும், என்.ஐ.எஸ்.எம் டெரிவேட்டிவ் சான்றிதழ் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இருந்தாலும், இந்தச் சான்றிதழ் மட்டுமல்லாது, இந்தத் துறையில் அனுபவம் கூடுதலாக இருந்தால்தான் வேலை கிடைப்பது எளிது. மேற்சொன்ன துறை சார்ந்த நிறுவனங்களிடம் வேலை கேட்டு முயற்சி செய்யலாம்.”

மணிகுமார், சென்னை இ-மெயில் மூலம்.

நான் மாத வருமானம் பெறும் ஊழியன். ஜூலை 2020-ல் வீட்டுக் கடன் ரூ.35,10,000 வாங்கினேன். அதற்கான மாதத் தவணை ரூ.24,000 (வட்டி 7.5%, திரும்பக் கட்டும் காலம் 30 ஆண்டுகள்). வருமான உயர்வால் எனது மாதத் தவணையை ரூ.1,000 - ரூ.1,500 உயர்த்தினால், அது லாபகரமான முடிவாக இருக்குமா? மாதத் தவணையை உயர்த்துவதைவிட வேறு எதில் லாபகரமாக முதலீடு செய்யலாம்?

ஆர்.செல்வகுமார், நிதி ஆலோசகர், www.finselva.com

“உங்கள் மாதத் தவணையை அதிகரிக்க வேண்டாம்; அதற்குப் பதிலாக, அந்தத் தொகையை முதலீடு செய்யலாம். அதாவது, 1 அல்லது 2 லட்சம் போன்ற மொத்தத் தொகை கிடைத்தவுடன் பகுதித் தொகையை மட்டும் வீட்டுக் கடனாகக் கட்டிவிட்டு, மீதமுள்ள தொகையை நல்ல நிறுவனப் பங்குகள் அல்லது நல்ல ஈக்விட்டி ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவந்தால், ஆண்டுக்கு சுமார் 12% வருமானம் கிடைக்கக்கூடும்.

பொதுவான விதிமுறை: உங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தைவிட வரிக்குப் பிந்தைய வருமானத்தை அதிகமாக உங்களால் ஈட்ட முடியும் என்று நீங்கள் நினைத்தால், வீட்டுக் கடனுக்கான மாதத் தவணையை விரைவாகத் திருப்பிச் செலுத்த வேண்டாம்.”