பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

45 வயதில் ஓய்வு... பென்ஷன் வருமானத்துக்கு என்ன வழி?

கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில்

கேள்வி பதில்

ராஜன், சென்னை.

என் வயது 30. ஐ.டி துறையில் வேலை பார்க்கிறேன். நான் வீட்டுக்கு எடுத்து வரும் சம்பளம் மாதம் ரூ.1 லட்சம். என் 45 வயதில் பணி ஓய்வு பெற விரும்புகிறேன். என் ஓய்வுக் காலத்தில் பென்ஷன்போல் நிலையான தொகை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

சுரேஷ் பார்த்தசாரதி, நிதி ஆலோசகர், Myassetsconsolidation.com

“மருத்துவத் துறையின் முன்னேற்றத்தால் மக்கள் ஆயுள் காலம் நீண்டு வருகிறது. சராசரியாக 85 வயது வரை வாழக்கூடும். அடுத்த 15 ஆண்டுகளில் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு 40 ஆண்டுகள் வாழ வேண்டும்.இது மிகவும் கடினமான விஷயம். ஏனென்றால், சராசரியாக இப்போது கணவன் - மனைவி இருவருக்கும் சேர்ந்து ரூ.40,000 மாதம் செலவாகும் எனில், அது 15 ஆண்டுகள் கழித்து 88,300 ரூபாயாக இருக்கும் (தோராயமாகப் பணவீக்கம் 7% எனக் கணக்கிட்டால்).

இந்தத் தொகை மாதம்தோறும் நமக்கு கிடைக்க வேண்டுமெனில், 45 வயதில் ஓய்வு பெறும்போது உங்களிடம் இருக்க வேண்டிய தொகை ரூ.4.34 கோடி. அதை அடுத்த 15 ஆண்டுகளில் சேர்க்க வேண்டும் எனில், மாதம் ஒன்றுக்கு நீங்கள் ரூ.87,000 சேர்த்து வர வேண்டும். அப்படிச் சேரும் தொகைக்கு 12% வருமானம் கிடைத்தால், உங்களது இந்த ஓய்வுக்கால இலக்கை அடைய முடியும்.

உங்களுக்கு இப்போதைக்குக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு இந்தத் தொகையைச் சேர்ப்பது கடினம். நீங்கள் 50 வயதில் ஓய்வு பெற நினைத்தால், உங்களிடம் ஓய்வுக்கான தொகை ரூ.5.46 கோடி இருக்க வேண்டும். அதை அடைவதற்கு மாதம்தோறும் நீங்கள் ரூ.55,200 முதலீடு செய்ய வேண்டும். அல்லது தற்போது மாதம்தோறும் ரூ.30,000 செய்யத் தொடங்கி, அதை ஆண்டுக்கு 10% அதிகரித்து, அதற்கு ஆண்டுதோறும் 12% வருமானம் கிடைத்தால், உங்கள் ஓய்வுக் காலத்துக்குத் தேவையான தொகுப்பு நிதி கிடைக்கும். அப்போது நீங்கள் 50 வயதில் ஓய்வு பெறலாம்.”

45 வயதில் ஓய்வு... பென்ஷன் வருமானத்துக்கு என்ன வழி?

சுப்பிரமணியன், கடலூர்.

அதிக டிவிடெண்ட் தரும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். இதன் மூலம் எனக்கு மாதம்தோறும் குறிப்பிட்ட தொகை கிடைக்குமா?

த.முத்துகிருஷ்ணன், சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர்.

“நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு நிறுவனத்தின் லாபத்திலிருந்து டிவிடெண்ட் தரப்படுகிறது. ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில், டிவிடெண்ட் என்பது மூலதனம் அல்லது மூலதன அதிகரிப்பிலிருந்து எடுத்துத் தரப்படுகிறது. இதனால், டிவிடெண்ட் தரப்பட்டதும் யூனிட்டின் நிகர சொத்து மதிப்பு (NAV), வழங்கப்பட்ட டிவிடெண்ட் அளவுக்கு குறைந்துவிடும். மேலும், மாதம் தோறும் டிவிடெண்ட் அதுவும் குறிப்பிட்ட அளவுக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் கிடைப்பது மிக மிகக் கடினம். குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்டின் வளர்ச்சிக்கு ஏற்பவே டிவிடெண்ட் வழங்கப்படும். இதனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் நிலையான தொகை மாதம்தோறும் தேவை எனில், சிஸ்டமேட்டிக் வித்ட் ராயல் பிளான் (எஸ்.டபிள்யூ.பி) முறையில் மாதம்தோறும் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட தொகையை வங்கிக் கணக்குக்கு மாற்றும் வசதி இருக்கிறது. இப்படிச் செய்யும்போது, மூலதன ஆதாயத்துக்குக் குறைவான வரி கட்டினால் போதும்.”

45 வயதில் ஓய்வு... பென்ஷன் வருமானத்துக்கு என்ன வழி?

ரங்கநாதன், நாணயம் விகடன் யூடியூப் சேனல் மூலம்.

என் ஆண்டு சம்பளம் ரூ.1.5 லட்சம். எனக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் தர முடியாது என இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் சொல்கின்றன. நான் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க என்ன வழி?

ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர், Wealthladder.co.in

“பொதுவாக, டேர்ம் இன்ஷூ ரன்ஸ் என்பது ஆண்டு வருமானத்தில் 10 மடங்கு இருப்பது குறைந்தபட்சமாகும். ஒரு சில நிறுவனங்கள் குறைந்த பட்ச டேர்ம் இன்ஷூரன்ஸ் காப்பீட்டுத் தொகை ரூ.25 லட்சத்திலிருந்து மட்டுமே தரும். ஆகவே, உங்களது சம்பளத்துக்குக் கண்டிப்பாக டேர்ம் இன்ஷூரன்ஸ் கிடைக்க வாய்ப் புள்ளது. உங்கள் பாலிசியை எந்த நிறுவனம் நிராகரித்துள்ளது மற்றும் என்ன காரணத்துக்காக நிராகரித்தது என்று தெரியவில்லை. அந்தக் காரணத்தைத் தெரிந்து கொண்டு வேறு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை அணுகி பாலிசி எடுத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.’’

ஆர்.லோகநாதன், பொள்ளாச்சி.

என் மகன் மைனர். மைனர் பெயரில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முடியுமா? அதற்கு மைனர் பெயரில் வங்கிக் கணக்கு இருக்க வேண்டுமா?

வி.ஶ்ரீனிவாசன், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், சீனு இன்வெஸ்ட்மென்ட்ஸ், திருவாரூர்.

“மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய மைனர் பெயரில் வங்கிக் கணக்கு அவசியம் வேண்டும். மைனர் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி, தாய் அல்லது தந்தை, கார்டியன் வங்கிக் கணக்கை நிர்வகிக்க வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் விண்ணப்பத்தில் தாய் அல்லது தந்தை அல்லது கார்டியன் கையொப்பம் இடவேண்டும். மைனருடைய பிறப்புச் சான்றிதழ், ஆதார் எண், தாய் அல்லது தந்தை, கார்டியனின் ஆதார் எண், பான் கார்டு, மைனர் உடைய பான் கார்டு இருந்தால், அதையும் இணைக்க வேண்டும். மைனர் 18 வயது அடையும்வரை தாய் அல்லது தந்தை அல்லது கார்டியன் வங்கிக் கணக்கு வாயிலாக முதலீடு செய்யலாம். 18 வயது முடிந்தவுடன் மைனர், மேஜர் ஆகிவிடுவார். ஆகையால் அவருடைய கையொப்பத்தை வங்கி அதிகாரி சான்றிதழ் பெற்று பணத்தைத் திரும்பப் பெறலாம்.’’

கார்த்திக், மெயில் மூலம்.

என் வயது 37. நான் கடந்த நான்கு வருடங்களாக, மாதம் தோறும் ரூ.1,000 வீதம் டி.எஸ்.பி இந்தியா டைகர் ஃபண்ட், டாடா ஹைபிரிட் ஈக்விட்டி ஃபண்ட், எல்.ஐ.சி லார்ஜ்கேப் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்து வருகிறேன். தற்போது என் முதலீட்டு தொகையை ரூ.1,000–லிருந்து ரூ.2,000 முதல் 3,000 வரை அதிகரிக்க விரும்புகிறேன். இந்த மூன்று ஃபண்டுகளின் வளர்ச்சி எவ்வாறு இருக்கும்? நான் இதே ஃபண்டுகளில் முதலீட்டைத் தொடரலாமா அல்லது வேறு ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா?

ஶ்ரீகாந்த் மீனாட்சி, இணை நிறுவனர், Primeinvestor.in

“நீங்கள் தற்போது முதலீடு செய்து வரும் மூன்று ஃபண்டு களுமே சுமாரான தேர்வுகள்தான். இப்போது நீங்கள் ரூ.3,000 முதலீடு செய்து வருகிறீர்கள். இதை நீங்கள் ரூ.6,000 அல்லது ரூ.9,000 என்று அதிகரிக்கும்போது, நல்ல ஃபண்டு களைத் தேர்வு செய்து முதலீடு செய்வது அவசியமாகும். இதுவரை நீங்கள் முதலீடு செய்த பணம் அதே ஃபண்டுகளில் இருக்கலாம். ஆனால், இனிமேல் முதலீடு செய்வதை ஆக்ஸிஸ் நிஃப்டி 100 ஃபண்ட், கோட்டக் ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட், டி.எஸ்.பி மிட்கேப் ஃபண்ட் மற்றும் யு.டி.ஐ ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட் ஆகியவற்றில் சமமாகப் பிரித்து முதலீடு செய்யவும். இவை தொடர்ந்து நீண்ட காலத்துக்கு முதலீடு செய்வதற்கு உகந்த ஃபண்டுகளாகும்.”

தொகுப்பு: சி.சரவணன்“நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு நிறுவனத்தின் லாபத்திலிருந்து டிவிடெண்ட் தரப்படுகிறது. ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில், டிவிடெண்ட் என்பது மூலதனம் அல்லது மூலதன அதிகரிப்பிலிருந்து எடுத்துத் தரப்படுகிறது!”